#INDvAUS: நாக் அவுட் போட்டிகளும், இந்திய கிரிக்கெட் அணியும் - தொடரும் ஏமாற்றங்கள் - காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி20 பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இறுதிப்போட்டி வரை மிக சிறந்த பேட்டிங் வரிசை, அசர வைக்கும் பந்துவீச்சாளர்கள் என வெற்றிகரமாக வலம்வந்த இந்தியா, இதுவரை விளையாடிய இந்திய பெண்கள் அணிகளில் சிறந்த அணி என்றும், கனவு அணி என்றும் புகழப்பட்டது.
டி20 பெண்கள் உலகக் கோப்பையில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய அணி, கோப்பையை வெல்ல முடியாததற்கு காரணம் என்ன என்பது இனிவரும் நாட்களில் பெரும் விவாதப்பொருளாக இருக்கக்கூடும்.
ஆனால், இந்த போட்டி என்றில்லை, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி போன்ற நாக்அவுட் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
2013 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வென்றதுதான் ஐசிசி தொடரில் இந்தியா சாதித்த கடைசி தருணம்.
இதில் 2018-இல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்தியா வென்றது ஒரு விதிவிலக்கு என கூறலாம். அதேவேளையில் இந்தாண்டு (2020) தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேசத்திடம் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது.
விமர்சனங்களை சந்தித்த இந்தியாவும், யுவராஜ் சிங்கும்
2014 டி20 உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் சந்தித்தன.
டாக்காவில் நடைபெற்ற இந்த இறுதிபோட்டியில், ரன்கள் குவிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். இதனால் 130 ரன்களை மட்டுமே இந்தியா குவிக்க, இலங்கை எளிதில் வென்றது.

பட மூலாதாரம், Scott Barbour/Getty images
குறிப்பாக இந்தியாவின் இரு உலகக்கோப்பை (2007 மற்றும் 2011) கதாநாயகனாக திகழ்ந்த யுவராஜ் சிங் இந்த போட்டிக்கு பிறகு அதிக விமர்சனங்களை சந்தித்தார்.
மறக்க முடியுமா இந்தியா- ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டி?
மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2015 ஐசிசி உலகக்கோப்பையில் லீக் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடியது.
காலிறுதி போட்டிவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்திவந்த இந்தியா, அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 2003 உலகக்கோப்பை இறுதி ஆட்டம் போல் இமாலய இலக்கை நிர்ணயிக்க, இந்திய பேட்டிங் தடுமாறியது.
அதுவரை நன்றாக பங்களித்துவந்த விராட் கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா தோல்வியடைந்தது.
2016 டி20 உலகக்கோப்பையில் என்ன நடந்தது?
2016 டி20 உலகக்கோப்பையும் இந்த பட்டியலில் அடங்கும். 2016 டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணியை இந்தியா எதிர்கொண்டது.
முதலில் பேட் செய்த இந்தியா 192 ரன்களை குவிக்க, இமாலய வெற்றி இலக்கு மேற்கிந்தியதீவுகள் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நிச்சயம் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன்கள் வடிவில் தோல்வியாக பரிசாக கிடைத்தது.
இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த பாகிஸ்தான்
2017 சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டம் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் எளிதில் மறக்கமுடியாத போட்டியாகும்.
லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் தொடக்கவீரர் ஃபகார் ஜமானின் அதிரடி விளாசலால் 338 ரன்களை அந்த அணி குவித்தது.

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து பேட் செய்த இந்தியா குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்ற பாகிஸ்தான், முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராஃபியை கைப்பற்றியது.
பெண்கள் அணியும் கோட்டைவிட்டது
அதே 2017-இல் மற்றொரு இறுதியாட்டத்தில் மீண்டும் இந்தியா தோல்விடைந்தது. இம்முறை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தோல்வியடைந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா, உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
2019 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா வீழ்ந்தது ஏன்?
2019 உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதும், அந்த போட்டி பரபரப்பான போட்டியாக இருக்கும் என்று காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி அளித்தது நியூசிலாந்து அணி.
இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே அதிர்ச்சியை சந்தித்தது.

பட மூலாதாரம், Getty Images
முதல் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டை இழந்தது இந்திய அணி. இதன்பின்னர் ஜடேஜா மற்றும் தோனி கடுமையாக போராடியபோதும் இந்தியாவால் வெற்றி இலக்கை தொடமுடியவில்லை.
ஏமாற்றமும், சோகமும் கலந்த மனநிலையுடன் இந்திய ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில் இன்று ( மார்ச் 8) நடந்த பெண்கள் டி20 உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியடைந்துள்ளது.
நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தோற்பது ஏன்?
அரையிறுதி மற்றும் இறுதி போட்டி போன்ற நாக்அவுட் போட்டிகளில் தொடர்ந்து இந்தியா தோற்பது குறித்தும் இன்றைய போட்டியில் பெண்கள் அணி தோற்றது குறித்தும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான திருஷ்காமினி பிபிசி தமிழிடன் உரையாடினார்.
''ஆண்கள் கிரிக்கெட் அணி இரு உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்ததால், அவர்கள் சரியாக விளையாடவில்லை என்று கூற இயலாது. ஆனால், இந்தியாவின் ஆண்கள் அணி 2007 மற்றும் 2011 உலகக்கோப்பைகளை வென்றது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
''அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் எப்போதும் அழுத்தம் நிறைந்தவை. எவ்வளவு சிறப்பாக லீக் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், நாக்அவுட் போட்டியில் சூழல் முற்றிலும் மாறுபடும். பெண்கள் அணி இன்றைய இறுதி போட்டியில் ஏன் தோற்றது என்றால், மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளின் பங்களிப்பு எதிர்பார்த்த அளவு கிட்டவில்லை என்பதும், இளைய வீராங்கனைகளால் அழுத்தம் நிறைந்த போட்டியில் சோபிக்க முடியவில்லை என்பதும்தான்'' என திருஷ்காமினி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
''இளைய வீராங்கனைகளை இம்மாதிரியான போட்டிகளால் அனுபவம் வாய்ந்த வீராங்கனைகள் தான் வழிநடத்தி செல்லவேண்டும். சில போட்டிகளில் எதிர்பார்த்தது போல் நடக்கவில்லையென்றால் அப்போது முடிவுகளும் அதிர்ச்சியளிப்பதாக அமைந்துவிடும்'' என்று அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு (2020), ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், அழுத்தம் நிறைந்த அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளை இந்தியா எப்படி கையாளப்போகிறது என்பதும், நாக் அவுட் போட்டிகளில் எவ்வாறான வியூகங்களை இந்திய அணி வகுக்கப்போகிறது என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












