கால்பந்து ரசிகையை உலக பிரபலமாக்கிய ’ஹனி ஷாட்’
2014 உலகக்கோப்பை போட்டியின்போது மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்து கேமராக்களால் படம் பிடிக்கப்பட்ட நடாலியா பெட்டன்கோர்ட், எதிர்பாராத வகையில் உலக அளவில் பிரபலம் அடைந்தார்.

உலகக்கோப்பை போட்டி ஒன்றில் மக்கள் கூட்டத்தில் இருந்து ”கவர்ச்சிகரமான பெண்” ஒருவர் கேமராக்காளல் படம் பிடிக்கப்படுவது "ஹனி ஷாட்" என்று அறியப்படுகிறது.
இந்த உலகக்கோப்பை நடைபெற தொடங்கியபோது இந்த விவகாரம் விவாதப் பொருளானது.
மக்கள் கூட்டத்தில் ”கவர்ச்சிகரமான பெண்களை” இலக்கு வைத்து ஒளிபரப்பாளர்கள் படம் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று ஃபிஃபா கூறியது.
2014ம் ஆண்டு கொலம்பியாவுக்கும், பிரேசிலுக்கும் இடையில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது, நடாலியா பெட்டன்கோர்ட் "ஹனி ஷாட்" சம்பவம் நிகழ்ந்தது.
அந்த சில வினாடிகள் படம் பிடிக்கப்பட்டு திரைகளில்தெரிந்த தருணம் அவரை மாடல் அழகியாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவும் மாற்றிவிட்டது.
"கேமராக்கள் என்னை இலக்கு வைத்து படம்பிடிக்கும் என்று எனக்கு தெரியாது" என்று 100 பெண்கள் கட்டுரை தொடருக்காக பிபிசியிடம் பேசிய நடாலியா, "அதிலிருந்து தொடங்கி இவ்வாறு எல்லாம் நிகழும் என்று எனக்கு எந்த எண்ணமும் ஏற்படவில்லை" என்று கூறினார்.
இவரது படத்தை பார்த்த பாடகர் ரிஹான்னா, மக்கள் கூட்டத்தில் இருந்த நடாலியாவை "கொலம்பிய அழகி" என்று குறிப்பிட்டு பகிர்ந்தார்.
"அதுவொரு வேடிக்கையான தருணம். அதுவே, அந்த சில வினாடிகளே பிரபலம் அடைவதற்கான தருணமாக அமைந்தன. நான் விரும்புகின்ற பாப் இசை நட்சத்திரமிடம் இருந்து நல்லதொரு டுவிட்டர் செய்தி பரிமாற்றமும் நடைபெற்றது" என்று நடாலியா கூறினார்.

பட மூலாதாரம், Natalia Betancourt
பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இருந்து நடாலியா கொலம்பியாவுக்கு திரும்பியபோது, அடுத்து நடக்க போகும் நிகழ்வுகளுக்கு அவர் தயாராகவே இல்லை.
"அந்த புகைப்படம்தான் ஊடகங்களுக்கான கதவை எனக்கு திறந்தது" என்று அவர் விளக்குகிறார்.
"அதற்கு முன்னால், ஊடகங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய காதலரோடு ஒரு கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தேன்" என்று அவர் குறிப்பிட்டார்.
சில மாதங்களில், ஆண்களுக்கான பத்திரிகைகளின் முன்அட்டை படமாக அவர் புகழ்பெற்றார்.


"டான்ஸிங் வித் த ஸ்டார்ஸ்" என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியின் கொலம்பிய பதிப்பில் நான் பங்கேற்றேன் என்று கூறும் நடாலியா, "அது தான் திருப்புமுனை. அதன் பின்னர் ஊடகங்களின் பார்வையில் இருப்பது வசதியாகவும், பதற்றமில்லாமலும் தோன்ற தொடங்கியது" என்று அவர் குறிப்பிடுகிறார்.
அதுமுதல் பல கொலம்பிய வணிக பிராண்டுகளில் பணிபுரிந்துள்ள இவர், இப்போது சர்வதேச தலைமுடி பராமரிப்பு நிறுவனம் ஒன்றின் மாடல் அழகியாக இருந்து வருகிறார்.
"இன்னும் என்னுடைய காதலரோடு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறேன். 2014ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு என்னோடு வந்ததும் அவர்தான். நாங்கள் 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்" என்று அவர் தெரிவிக்கிறார்.
மக்கள் கூட்டத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்டு பிரபலமானது குறித்து சமூக ஊடகங்களில் சில எதிர்மறை விமர்சனங்களும் எழுந்தன
"நல்ல கருத்துகள் அதிகமாக இருந்தபோதிலும், காயப்படுத்தி எழுதியோரை கண்டுகொள்ளமால் இருப்பது மிகவும் கடினமானது" என்கிறார் நடாலியா.

பட மூலாதாரம், Reuters
எல்லா கால்பந்து போட்டிகளிலும், "கவர்ச்சியான பெண்களை" படம் பிடிப்பதை ஒளிபரப்பாளர்கள் நிறுத்த வேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டுள்ளதாக ஃபிஃபாவின் பன்முகத்தன்மை தலைவர் இந்த வாரம்தான் தெரிவித்திருக்கிறார்.
"இதனை நாங்கள் ஒளிப்பாரப்பாளர்களிடம் தெரிவித்துள்ளோம். போட்டியை நடத்துகின்ற ஒளிபரப்பு சேவைகளிடமும் கூறியுள்ளோம்" என்று ஃபெடெரிகோ அடிடியி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின்போது, புகைப்பட முகமையான 'கெட்டி இமேஜஸ்'(getty images) "உலகக்கோப்பை போட்டிகளில் கவர்ச்சியான ரசிகைகள்" என்ற தலைப்பில் இளம் பெண்களை மட்டுமே கொண்ட புகைப்படத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
"வருத்தத்திற்குரிய தவறான முடிவு" என்று கூறி இந்த நிறுவனம் அதனை அகற்றிவிட்டது. "ஹனி ஷாட்" என்கிற இந்த நிகழ்வு புதிதான ஒன்றல்ல.

பட மூலாதாரம், This Fan Girl
"நான் எப்போதும் ஒரு கால்பந்து ரசிகைதான்" என்கிறார் நடாலியா.
"கால்பந்து போட்டிகளை பார்க்க நான் விரும்புகிறேன். உலகக்கோப்பை விளையாட்டு சூழலை நான் நேசிக்கிறேன். பிரேசிலில்தான் முதல் முறையாக உலகக்கோப்பை விளையாட்டுக்களை பார்த்தேன். அதன் பின்னர் எந்த உலகக்கோப்பை விளையாட்டுக்களையும் பார்க்காமல் விட்டுவிட கூடாது என்று உறுதி எடுத்துள்ளேன்" என்று அவர் கூறுகிறார்,
நடாலியா போல வேறு சில பெண்களும் இவ்வாறான "ஹனி ஷாட்" மூலம் பிரபலம் அடைந்துள்ளனர்.
குறிப்பிடும்படியாக, பமிலா அன்டர்சனை கூறலாம். கனடாவில் உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றில் மக்கள் கூட்டத்தில் இருந்து, கேமரா கண்களால் அவர் படம் பிடிக்கப்பட்டார்.
"ஹனி ஷாட்" என்றால் என்னவென்று எனக்கு தெரியாது" என்கிறார் நடாலியா.
இதனை குற்றம் அல்லது பெண்களை பொருளாக பாவிப்பது என்று கூறமாட்டேன். ஒரு வகையில் இது நல்லது என்று எண்ணுகிறேன். ஆண்களுக்கும், பெண்களுக்குமான விளையாட்டு கால்பந்து என்பதை இது காட்டுகிறது" என்பது அவரது கருத்தாக உள்ளது.
நடாலியாவின் "ஹனி ஷாட்" கதை இதோடு முடியவில்லை.
சில வாரங்களுக்கு முன்னால், உலகக்கோப்பை கால்பந்து வினையாட்டை பார்ப்பதற்கு அவர் ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.
"கொலம்பியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது என்னை படம் பிடித்தனர். அது எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது" என்று அவர் கூறுகிறார்.
பிரேசிலில் நான் புன்னகையோடும், உணர்ச்சி பெருக்கோடும் இருந்தேன். இந்நேரத்தில் நான் கேமராவில் கவலையுடனும், சேகமாகவும் காணப்படுகிறேன்" என்று இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து அரையிறுதியில் வெளியேறியபோது நடாலியா தெரிவித்திருக்கிறார்.
(அமிலியா மற்றும் வலேரியா பெராஸ்சோவால் இந்த கட்டுரை எழுதப்பட்டது)

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












