சாட்பாட் தொழில்நுட்பத்தில் மோதும் கூகுள் - மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள்

பட மூலாதாரம், Google
- எழுதியவர், சோய் கிளெய்ன்மேன்
- பதவி, தொழில்நுட்ப ஆசிரியர்
சாட்ஜிபிடிக்கு (ChatGPT) போட்டியாக கூகுள் நிறுவனம் தற்போது 'பார்டு' (Bard) எனப்படும் சாட்பாட்டை களமிறக்க உள்ளது.
இந்த சாட்பாட், சோதனை ஓட்டத்திற்குப் பின்னர், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் ஏற்கெனவே உருவாக்கிய 'லாம்டா' (Lamda) எனப்படும் உரையாடல் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லாம்டா தொழில்நுட்பம் மனிதர்களைப் போன்றே உரையாடும் என்றும், மனிதர்களைப் போன்ற உணர்வுகள் அதற்கு இருக்கக்கூடும் என்றும் கூகுள் நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த சாட்பாட், கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்திலும் தகவல்களை தேடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு சாட்ஜிபிடி சிறந்த உதாரணமாக திகழ்கிறது. இந்த தொழில்நுட்பம், இணையத்தில் உள்ள மிகப் பெருமளவிலான தரவுகளைப் பயன்படுத்தி செயலாற்றுகின்றன. எனினும், இத்தொழில்நுட்பத்தில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் தவறான தகவல்களும் இருக்கலாம் என்ற கவலைகளும் எழுந்துள்ளன.
"பார்டு தொழில்நுட்பம் விசாலமான உலக அறிவை ஆற்றல், புத்திசாலித்தனம் மற்றும் படைப்பாற்றலுடன் இணைக்க முயல்கிறது," என, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
கூகுளின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பச் சேவைகள், "உறுதியாகவும் பொறுப்புடனும்" செயலாற்ற வேண்டும் என தான் விரும்புவதாக சுந்தர் பிச்சை அப்பதிவில் கூறியுள்ளார்.
ஆனால், 'பார்டு' தொழில்நுட்பம் ஆபத்தான மற்றும் தவறான தகவல்களை அளிப்பது எப்படி தடுக்கப்படும் என்பது குறித்து அவர் விளக்கவில்லை.
முதல்கட்டமாக, குறைந்த ஆற்றலில் செயல்படும் லாம்டாவில் மட்டுமே 'பார்டு' செயல்படும் என தெரிவித்துள்ள அவர், இதனால் அதிகமானோர் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என தெரிவித்தார்.
இணையத்தில் 2021ஆம் ஆண்டு வரையுள்ள தகவல்களின் அடிப்படையில் சாட்ஜிபிடி கேள்விகளுக்கு பதிலளிக்கும். மேலும், உரைகள், பாடல்கள், செய்திக்கட்டுரைகள், மாணவர்களுக்கான கட்டுரைகள் உள்ளிட்டவற்றையும் இது வழங்கும்.
ஒவ்வொரு முறையும் யாரேனும் இதனை பயன்படுத்தும்போது நிறுவனத்திற்கு சிறிய தொகை செலவாகும் என்றாலும், தற்போதைக்கு இதனை மக்கள் இலவசமாக பயன்படுத்தலாம். இதனை இலவசமாக அணுகுவதற்கு OpenAI நிறுவனம் சமீபத்தில் சந்தா திட்டத்தையும் அறிவித்தது.

பட மூலாதாரம், Getty Images
இணையத்தில் தேடும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே சாட்பாட்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதாவது, இணைய லிங்க்குகளுடன் கூடிய பக்கங்களுக்கு மாறாக, ஒரு உறுதியான பதிலை சாட்பாட் தரலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
மக்கள் முன்பைவிட நுணுக்கமான கேள்விகளை கூகுளில் கேட்பதாக, சுந்தர் பிச்சை கூறுகிறார்.
உதாரணமாக, முன்பு பியானோ குறித்த பொதுவான கேள்வியென்றால், அதில் எத்தனை விசைகள் இருக்கும் என்பதுதான். ஆனால், இப்போது, கிதார் கற்பது கடினமானதா என்பது கூட கேட்கப்படுகிறது, இதற்கு உடனடி உண்மையான பதில் இல்லை.
"இம்மாதிரியான தருணங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். ஒரு சரியான பதில் இல்லாத கேள்விகளுக்கு இது பதில் வழங்கும்," என அவர் தெரிவித்தார்.
"விரைவில், நீங்கள் தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் அம்சங்களைப் பார்ப்பீர்கள். சிக்கலான தகவல்கள் மற்றும் பன்முக பார்வைகளை வடிகட்டி, எளிதான வடிவங்களில் அவை பதிலளிக்கும். இதன்மூலம் உடனடியாக புரிந்துகொள்ளவும் இணையத்திலிருந்து கற்றுக்கொள்ளவும் முடியும்," என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சாட்ஜிபிடியை உருவாக்கியுள்ள OpenAI எனும் நிறுவனத்துடன் பல கோடி டாலர்களை முதலீடு செய்திருந்த நிலையில், தன்னுடைய 'பிங்' (Bing) எனப்படும் தேடுபொறியில் சாட்ஜிபிடியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கொண்டு வரும் என்ற ஊகம் வெளியானது.

பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில், மைக்ரோசாஃப்ட் தனது தேடுபொறியான 'பிங்'-இன் (Bing) புதிய பிரௌசரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சாட்ஜிபிடியை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கூகுள் - மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு இடையேயான போட்டியாக இது கருதப்படுகிறது.
"போட்டி இன்று ஆரம்பிக்கிறது" என, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
மக்களின் கேள்விகள், தேடுதல்களுக்கு இணைய பக்கங்களுக்கான லிங்க் மட்டும் அளிக்காமல், மக்களின் கேள்விகளுக்கு விளக்கமான பதில்களை இந்த 'பிங்' பிரௌசர் அளிக்கும்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தை விடவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை 'பிங்' பயன்படுத்தும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேர்வுகள் மற்றும் சோதனைகளில் தேர்ச்சி பெற மாணவர்களால் பயன்படுத்தப்படும் சாட்ஜிபிடி, இதழியல் உட்பட பல துறைகளில் நம்பமுடியாத அளவுக்கு இடையூறு விளைவிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தவறான பதில்களை அத்தொழில்நுட்பம் அளிப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. இது பொதுவாக 2021ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய காலத்திலிருந்து நீக்கப்பட்ட தரவுத்தொகுப்புகளிலும் வேலை செய்வதால், அதன் பல பதில்கள் காலாவதியானதாக இருக்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













