கொரோனா வைரஸ்: தெற்காசியர்களிடம் அதிகம் காணப்படும் கொரோனா பாதிக்கும் ஜீன் - பாதுகாத்துக் கொள்வது எப்படி?

ஊசி செலுத்தப்படும் காட்சி - கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஊசி செலுத்தப்படும் காட்சி - கோப்புப் படம்
    • எழுதியவர், ஸ்மிதா முண்டசாட்
    • பதவி, சுகாதார செய்தியாளர்

நுரையீரல் செயலிழப்பது மற்றும் கொரோனாவால் மரணம் ஏற்படும் அபாயங்களை இரண்டு மடங்காக அதிகரிக்கும் ஒரு மரபணுவை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தெற்காசிய பின்புலம் கொண்டவர்களில் 60 சதவீதத்தினர், ஐரோப்பிய மூதாதையர்களைக் கொண்டவர்களில் 15 சதவீதத்தினருக்கு இந்த அபாயத்தை அதிகரிக்கக் கூடிய மரபணு உள்ளது.

இந்த அபாயத்தை கணிசமாக குறைக்க கொரோனா தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கொரோனாவால் பிரிட்டனில் உள்ள சில சமூகங்கள் மற்றும் தெற்கு ஆசியா ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்று 'நேச்சர் ஜெனடிக்ஸ்' ஆய்வு புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. ஆனால் முழுமையான விளக்கங்களைக் கொடுக்கவில்லை.

அபாயங்களை அதிகரிக்கும் சரியான மரபணுவைக் கண்டுபிடிக்க, முந்தைய மரபணு ஆராய்ச்சிப் பணிகளோடு, ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் மூலக்கூறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினர். அந்த மரபணுவின் பெயர் LZTFL1. இது தான் கொரோனா தொடர்பான அபாயங்கள் அதிகரிக்க காரணம்.

இந்த மரபணு ஆப்பிரிக்க கரீபியப் பின்புலம் உள்ளவர்களில் இரண்டு சதவீதம் பேருக்கு இருப்பதாகவும், கிழக்கு ஆசிய மூதாதையர்களைக் கொண்டவர்களில் 1.8 சதவீதம் பேருக்கு இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த அபாயகரமான மரபணு எல்லா மக்களையும் ஒரே போல பாதிப்பதில்லை என கண்டுபிடித்துள்ளதாக இந்த ஆய்வின் தலைவர் பேராசிரியர் ஜேம்ஸ் டேவிஸ் கூறியுள்ளார்.

குறிப்பாக வயது உட்பட பல சிக்கலான காரணிகள், ஒவ்வொரு நபரின் அபாய அளவுக்கு காரணமாக அமைகின்றன என்று அவர் கூறினார்.

"ஏன் சில சமூகங்கள் மட்டும் அதிகம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது என்பதை விளக்க, சமூக பொருளாதார காரணிகள் கூட முக்கியமாக இருக்கலாம்" என்று கூறினார்.

"நம்மால் மரபணுக்களை மாற்ற முடியாது, கொரோனாவால் பாதிப்பை அதிகப்படுத்தும் அபாயமுள்ள மரபணுவைக் கொண்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசியால் அதிக பலன் கிடைக்கலாம் என எங்கள் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன." என்கிறார்.

பாதுகாப்பு அவசியம்

கொரோனா வைரஸ் -கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா வைரஸ் -கோப்புப் படம்

இந்த அதிக அபாயமுள்ள மரபணுவைக் கொண்ட மக்களின் நுரையீரல், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மரபணு, நுரையீரலை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் செல் வரிசையை செயல்படவிடாமல் தடுக்கிறது.

நுரையீரலை பாதுகாக்கும் செல் வரிசை, கொரோனா வைரஸை நேரடியாக எதிர்கொள்கிறது. அச்செல்கள் கொரோனா வைரஸை குறைந்த பிரத்யேகத் தன்மை கொண்டவைகளாக மாற்றி, வைரஸை எதிர்கொள்கிறது.

வைரஸை குறைந்த பிரத்யேக தன்மை கொண்டதாக மாற்றும் செயல்பாடு, ACE-2 என்கிற முக்கிய புரத பரப்பின் மீது படியும் செல்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. இந்த ACE-2 தான் கொரோனா வைரஸ் செல்களோடு இணைய முக்கிய காரணியாக இருக்கின்றன.

LZTFL1 என்கிற மரபணு கொண்டவர்களுக்கு இந்த செயல்பாடே நடப்பதில்லை என்பதால், நுரையீரல் செல்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் நோயெதிர்ப்பு மண்டலத்தில் எந்தவித தாக்கத்தையும் இது ஏற்படுத்துவதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதாவது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் கூட, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு பாதுகாப்பைப் பெறலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்த கண்டுபிடிப்பு, பிரத்யேகமாக நுரையீரலை இலக்கு வைத்து பாதுகாக்கும் மருந்துகளைத் தயாரிக்க வழிவகுக்கும். தற்போதுள்ள மருந்துகள் பெரும்பாலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை இலக்கு வைத்தே தயாரிக்கப்படுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :