நியூட்ரினோ ஆய்வு மையப் பணிகளுக்கு இடைக்காலத் தடை

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து வைகோ தொடர்ந்து போராடிவருகிறார்.

பட மூலாதாரம், mdmkparty

படக்குறிப்பு, தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து வைகோ தொடர்ந்து போராடிவருகிறார்.

தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிப்புரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்குத் தடைவிதிக்க வேண்டுமெனக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

"இந்தத் திட்டத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளுக்குப் பேரழிவு ஏற்படும். விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும். மனித உயிர்களுக்கு ஆபத்து உண்டாகும். ஆகவே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்" என்று தனது மனுவில் வைகோ கூறியிருந்தார்.

இந்த, மனு மீதான விசாரணை முடியும் வரை, நியூட்ரினோ மையம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி மற்றொரு மனுவையும் வைகோ தாக்கல்செய்திருந்தார். இந்த ஆய்வு மையத்தைக் கட்டுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறவில்லையென்றும் வைகோ கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக, மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி வாதிட்டார். தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பிறகே கட்டுமானப் பணிகள் தொடங்கும். இது ஓர் அடிப்படை அறிவியல் திட்டம் என்று அவர் வாதிட்டார்.

இன்று இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதிகள், இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அது வரை நியூட்ரினோ ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

பிரதான மனு மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த இடைக்காலத் தடை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள வைகோ, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இத்திட்டத்திற்கு அனுமதி தராது என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.