பாமாயில் உற்பத்தி மூலம் தெலங்கானா இந்தியாவை நெருக்கடியில் இருந்து காப்பாற்றிய உத்தி

பனம் பழம்
    • எழுதியவர், சுரேகா அப்பூரி
    • பதவி, பிபிசி தெலுங்கு

இந்தியாவின் தென்மாநிலமான தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தின் 80 கி.மீ நீள சாலையின் இருபுறமும் எண்ணெய் பனை மரங்கள் காணப்படுகின்றன. இந்த சீசனில் நாகார்ஜூனா உள்ளிட்ட பல விவசாயிகள் தங்கள் நிலத்தில் எண்ணைய் பனை நடவு செய்துள்ளனர்.

50 வயதாகும் இந்த விவசாயி, தனது நான்கு ஏக்கர் வேளாண் பண்ணையில் கடந்த ஆண்டு நெல் சாகுபடி செய்ததில் பெரும் இழப்பை சந்தித்து பாதிக்கப்பட்டார். எண்ணெய் பனை வளர்ப்பு மீண்டும் லாபத்தை நோக்கி செல்ல உதவும் என்று அவர் நம்புகிறார். தன்னுடைய கிராமத்தை சேர்ந்த சுமார் 50 விவசாயிகள் வரை இதே போல மாறி விட்டதாக கூறினார்.

இந்தியாவை பாமாயில் எனப்படும் பனை எண்ணெய் தொழில் மையமாக மாற்றும் தெலங்கானாவின் லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெரும் அளவிலான விவசாயிகள் அதில் இணைந்துள்ளனர். 2014ஆம் ஆண்டில் 34,000 ஏக்கராக பயிரிடப்பட்ட பனை எண்ணைய் விவசாயம் 2022ஆம் ஆண்டு 72,000 ஏக்கராக உயர்ந்துள்ளது.

நாராயண ராவ் போன்ற எண்ணைய் பனை பயிரிட்டவர்களுக்கு பெரும் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் அதை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர். அண்டை மாநிலமான ஆந்திராவை சேர்ந்த ராவ், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கம்மம் பகுதியில் உள்ள தன்னுடைய 30 ஏக்கர் நிலத்தில் எண்ணைய் பனை பயிரிட்டிருந்தார். தமக்கு 40 லட்சம் ரூபாய்க்கும் (48,705 டாலர், 43,802 பவுண்ட்)அதிகமான லாபம் கிடைத்தாக அவர் கூறுகிறார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

"எண்ணைய் பனையின் வாழ்க்கை காலம் என்பது தோராயமாக 30 ஆண்டுகளாகும். எனக்கு 72 வயது ஆகிறது. என்னுடைய வாழ்நாளில் இந்த மரங்களை நான் அகற்றுவேன் என்று கருதவில்லை," என்றார்.

எண்ணெய் பனை ஒரு அதிசய பயிராகக் கருதப்படுகிறது. தினசரி உபயோகத்தின் ஒவ்வொரு பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. உணவுப் பொருட்கள், அதாவது சாக்லேட், ஐஸ்கிரீம், பிரட் மற்றும் வெண்ணைய் முதல் அழகுசாதனப் பொருட்கள் வரை பயன்படுத்தப்படுகிறது. டீசல் மற்றும் பெட்ரோல், பல்வேறு தொழிற்சாலை செயல்பாடுகளில் உயிரி எரிபொருள் கூறாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் இது 60 சதவிகித சமையல் எண்ணெய் சந்தையை பூர்த்தி செய்கிறது. இந்தியாவில் அதன் தேவையில் 2.7 சதவிகிதம், அதாவது 300000 மெட்ரிக் டன் பனை எண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. தேவையில் 90 சதவிகிதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து 1 கோடி மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்படுகிறது.

முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா அரசில் எண்ணெய் பனையை முன்னெடுக்க விவசாயிகளுக்கு பெரும்அளவு மானியம் வழங்கப்படுகிறது. எண்ணெய் பனை சாகுபடியை ஊக்குவிக்க இந்த ஆண்டு மட்டும் 10 பில்லியன் ரூபாயை மாநில அரசு ஒதுக்கி உள்ளது.

எண்ணெய் பனை சாகுபடி செய்யும் பரப்பளவை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இன்னும் 20 லட்சம் ஏக்கராக அதிகரிக்க வேண்டும் என்றும், சாகுபடி செய்யும் விவசாயிகள் எண்ணிக்கையை 6500ல் இருந்து 35,000 ஆக அதிகரிக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மாநில தோட்டக்கலைத்துறை இயக்குநர் வெங்கட் ரெட்டி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகத்திலேயே எண்ணெய் பனை பயிரிடும் 5வது பெரிய சாகுபடியாளர் என்ற பெருமையை தெலங்கானா பெற்றிருப்பதாக கூறினார்.

பனை எண்ணெய்
படக்குறிப்பு, நெல் பயிரிட்டு நஷ்டத்தை சந்தித்த நாகார்ஜுனா பனை எண்ணெய் சாகுபடிக்கு மாறுகிறார்

"போதுமான பனை எண்ணெயை மாநிலம் விநியோகிக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். ஆகவே இந்தோனேஷியா, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்வது 30-40 சதவிகிதம் குறையும்."

லட்சகணக்கான குடும்பத்தினருக்கு இது பலன் அளிக்கும். தவிர, உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய எண்ணெய் இறக்குமதியை நாடு சார்ந்திருப்பதையும் இது குறைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், சூழலியல் வல்லுநர்கள் பல சந்தேகங்களை எழுப்புகின்றனர். காடுகளை அழிப்பதில் முக்கியமான கருவியாக இந்த மரம் கருதப்படுகிறது என்று அவர்கள் சொல்கின்றனர். உலக அளவில், ஒரு காலத்தில் பல்லுயிர் வெப்பமண்டல காடுகளாக இருந்த நிலங்களில் பெரும்பாலானவற்றில் எண்ணெய் பனை பயிரிடப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பனை எண்ணெய் - பாமாயில் ஏன் தேவை?

இந்தோனேஷியா கடந்த மே மாதம் பனை எண்ணைய் ஏற்றுமதியை நிறுத்தியதால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டது. சமையல் எண்ணெய்களின் விலை கடுமையாக அதிகரித்தது.

இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க, மத்திய அரசு கடந்த ஆண்டு பனை எண்ணெய் இயக்கத்தை தொடங்கியது. 17 மாநிலங்களில் சாகுபடி பரப்பை அதிகரிக்க பட்ஜெட்டில் 110 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

கேரளா, கர்நாடகா, அசாம் மற்றும் அருணாசல பிரதேசம் போன்ற மாநிலங்கள் எண்ணெய் பனை வளர்க்க விவசாயிகளை ஊக்குவிக்கின்றன.

தெலங்கானாவில் விவசாயிகள் எண்ணைய் பனை பயிரிட மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏக்கருக்கு ரூ.50,918 வழங்குகின்றன. நாற்றுகள் வாங்கவும், சொட்டு நீர் பாசன வசதிகள் செய்யவும், எண்ணைய் பனை பலன் தரத் தொடங்கும் நான்கு ஆண்டுகால இடைவெளியில் வேறு பயிர் பயிரிடவும் இந்த தொகை வழங்கப்படுகிறது.வேறு எந்த மாநிலமும் இதுபோன்று பெரிய அளவிலான முன்னெடுப்பை மேற்கொள்ளவில்லை.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

பனை எண்ணெயை நோக்கிய நகர்வு

பனை எண்ணெய் பயிரிடுவதற்கு முன்பு தெலங்கானா நெல் பயிரிடுவதை முன்னெடுத்தது.

ஜார்கண்ட், தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் அரிசியின் தேவை குறைந்து விட்டதால், தெலங்கானா விவசாயிகளிடம் இருந்து உபரி நெல்லை வாங்குவதற்கு மத்திய மாநில அரசுகள் தயக்கம் காட்டின.

குறைந்தபட்ச ஆதார விலையில் வேகவைக்கப்பட்ட நெல்லை அதிக அளவு கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்ததால் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் நேரிட்டது.

மாறாக, பனை எண்ணெய் என்பது விவசாயிகளுக்கும், அரசுக்கும் நன்மையளிப்பதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மூலப்பொருட்களின் செலவு 10 சதவிகிதம் குறைக்கப்பட்ட பின்னர் உற்பத்தி செய்யப்படும் வேளாண் சரக்குகள் சேவைகள் மதிப்பானது எண்ணெய் பனை விவசாயத்தால் மாநிலத்தின் வேளாண் மொத்த மதிப்புக்கூட்டல் (ஜிவிஏ) அதிகரிக்கும் என மாநில தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

நெல் பயிரை விடவும் 25-30 சதவிகிதம் குறைவான தண்ணீரையே எண்ணெய் பனை உபயோகிக்கும். மின்சார மானியத்துக்கான அரசின் செலவுகளையும் குறைக்கும் என தேசிய எண்ணெய் பனை விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கிரந்தி குமார் ரெட்டி கூறுகிறார்.

"உற்பத்தியைப் பொறுத்தவரை, இதர எண்ணெய் வித்து பயிர்களை ஒப்பிடுகையில் எண்ணெய் பனையில் இருந்து அதிக எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது," என்கிறார் ஆய்வாளர் நரசிம்ம மூர்த்தி. "ஒரு ஹெக்டேருக்கு 5000 கிலோ கிடைக்கும் சாத்தியம் உள்ளது" என்றும் கூறுகிறார்.

"அழிக்கும் பயிர்"

ஆனால் விவசாயிகள் நல சங்கங்கள், இந்த திட்டங்களை சந்தேகிக்கின்றனர். குறிப்பாக ஒரு பயிருக்கான தண்ணீர் செலவு மிகவும் அதிகம். ஆண்டு முழுவதும் இறவைப்பாசனம் தேவைப்படக்கூடிய பயிர் என்று அவர்கள் வாதத்தை முன் வைக்கின்றனர்.

பனை எண்ணெய்-தெலங்கானா
படக்குறிப்பு, அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகின் ஐந்தாவது பெரிய எண்ணெய் பனை பயிரிடும் பகுதியாக மாற வேண்டுமென்ற இலக்கோடு தெலங்கானா உள்ளது

"தெலங்கானாவில் நிலவும் கோடை, இந்த பயிருக்கு அதீத வெப்பத்தை கொடுப்பதாக இருக்கும்," என்கிறார் சுயேச்சை விவசாயிகள் அமைப்பான ரிது ஸ்வராஜ்ய வேதிகாவின் பொதுச் செயலாளர் ரவி கன்னகந்தி.

எண்ணெய் பனைகளுக்கு காற்றில் ஈரப்பதம் தேவை. போதுமான மழை அளவைப் பெறாததால் தெலங்கானாவில் உள்ள பெரும்பாலான நிலங்கள் வறண்டு உள்ளன, என்கிறார் நீடித்த வேளாண்மை மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமஞ்சநேயுலு .

" இறைவை பாசனம் மூலம் இது போன்ற பண்ணை நிலங்களுக்கு ஆற்று நீரை கொண்டு வர பெரும் அளவு பணத்தை தெலங்கானா அரசு செலவழிக்கிறது. எவ்வளவு காலத்துக்கு அரசு இந்த செலவினத்தை ஏற்கும்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

தவிர எண்ணெய் பனை பயிரிடுவதற்காக தரப்படும் மானியம் போதுமானது அல்ல. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய குறைந்த பட்ச ஆதார விலையை அரசு தர வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் எண்ணெய் பனை உற்பத்தியில் இப்போது பெரிய உற்பத்தியாளராக இருக்கும் ஆந்திராவில் பல விவசாயிகள் 1990ஆம் ஆண்டில் மத்திய அரசு முதன் முதலில் எண்ணெய் பனையை முன்னெடுக்கத் தொடங்கியது முதல் நெல், தென்னை, மூங்கில் பயிரிடுவதில் இருந்து மாறி விட்டனர். கடந்த சில ஆண்டுகளாக தங்களது எண்ணெய் பனை மகசூலுக்கு போதுமான உறுதியான ஆதரவு விலை கிடைப்பதில் இழப்பு ஏற்பட்டதால் பலர் மீண்டும் பழைய பயிர் சாகுபடிக்கே திரும்பி விட்டனர் என ரெட்டி கூறுகிறார்.

நிலத்தடி நீர்மட்டம் குறைதல், பூச்சி தாக்குதல்கள், தீவிர பருவநிலை காலங்களில் தாக்குப்பிடித்து வளரும் திறன் இன்மை ஆகியவற்றால் பழைய முறைக்கே மாறி விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

பனம் பழம்

தெலங்கானா விவசாயிகள் ஏற்கனவே, நெற் பயிர் விளைச்சலால் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். எனவே மேலும் இழப்பை சந்திக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சந்தையை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு அவசரமாக எண்ணைய் பனை மீது கவனம் செலுத்துவது என மாநில அரசு தீர்மானித்துள்ளதாக டாக்டர் ராமாஞ்சநேயுலு கூறுகிறார்.

எண்ணெய் பனை சாகுபடியுடன் வெட்டி எரித்தல் விவசாயம் என்ற நடைமுறை இணைந்துள்ளது. இந்த முறையானது பல்வேறு ஆசிய நாடுகளில் வனப்பகுதிகள் தீ பற்றுவதற்கும் காற்றில் தீவிர மாசு ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளது.

எண்ணெய் பனை பயிரிடும்போது விஷ தன்மை வாய்ந்த களை மற்றும் பூச்சி கொல்லிகள் பயன்படுத்துவதும் பொதுவானதாக உள்ளது.

"எண்ணெய் பனை பயிரிடும் இதர நாடுகளைப் போல, எப்போதெல்லாம் தேவை அதிகரிக்கிறதோ மற்றும் அறுவடை குறைகிறதோ ரசாயனங்களின் உபயோகம் நிச்சயமாக அதிகரிக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஏற்படுகின்றன," என்கிறார் டாக்டர் ராமாஞ்சநேயுலு.

இந்தோனேஷியா, மலேசியா நாடுகளில் எண்ணெய் பனை பயிரிடும் பரப்பளவு சீராக அதிகரித்ததால், உலகின் பல்லுயிர் காடுகளின் பரந்த பகுதிகள் அழிக்கப்பட்டன. தாவரங்கள் அழிக்கப்பட்டதால், பூர்வீக வனவிலங்குகளுக்கு ஆபத்து நேரிட்டது.

"சாத்தியமான பண இழப்புடன், தெலங்கானா மக்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் இதுபோன்ற சுற்றுச்சூழல் பிரச்னைகளின் விளைவுகளைத் தாங்க வேண்டியிருக்கும்" என்று டாக்டர் ராமஞ்சநேயுலு எச்சரிக்கிறார்.

Banner
காணொளிக் குறிப்பு, குஜராத் தாய்க்கும் பிரேசில் தந்தைக்கும் பிறந்த கன்றுக்குட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: