குழந்தைகளுக்கு நாக்கு இயக்க குறைபாடு எவ்வளவு அபாயகரமானது?

நாக்கு இயக்க குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கமலா தியாகராஜன்
    • பதவி, பிபிசி பியூச்சர் - ஃபேமிலி ட்ரீ

2011ஆம் ஆண்டு ஜானவ் என்ற தன் மகன் பிறந்த பின்னர், அவனுக்கு தாய்பால் கொடுத்தது பற்றி பூர்ணா பர்மர் நினைத்துப் பார்க்கிறார். எப்போதெல்லாம் குழந்தைக்கு தாய்பால் ஊட்டுகிறாரோ அப்போதெல்லாம் தனது மார்பகத்தில் எரிச்சலுடன் கூடிய வலியை உணர்ந்தார். விரைவிலேயே அவரது மார்பு காம்புகளில் புண் ஏற்பட்டன. சிவப்பாக தடிமனாக காணப்பட்டதுடன் ரத்தப்போக்கும் இருந்தது.

"அது தாங்க முடியாத வலியை கொடுத்ததை நான் அறிந்தேன்," என்கிறார் இந்தியாவின் மும்பை நகரை சேர்ந்த வாடிக்கையாளர் சேவை மைய பொறுப்பாளராக பணியாற்றும் பர்மர்.

"இன்னும் கூட, எனது குழந்தைக்காக இந்த அடிப்படையான விஷயத்தைக் கூட என்னால் செய்ய முடியவில்லை என்று எனக்கு மிகுந்த மன வலி நேரிட்டது."

அவரைச் சுற்றிலும் இருந்த உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரும் இந்த பிரச்னையை பொருட்படுத்த வேண்டாம் என்று கூறினர். முதல் முறையாக குழந்தை பெற்றெடுத்த அம்மாக்கள் தாய்பால் கொடுக்கும் போது இது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது இயல்பானது என்று கூறினர். அவரது மகப்பேறு மருத்துவர், வேறு ஒரு முறைக்கு மாறலாம் என்று அறிவுறுத்தினார்.

அதற்கு மாறாக, வலியை பொறுத்துக் கொண்டு, தொடர்ச்சியாக எவ்வளவு சிறப்பாக முடியுமோ அவ்வளவு சிறப்பாக தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினார். சில காலம் கழித்து, ஏதோ ஒன்று தவறாக இருப்பதாக பர்மர் உணர்ந்தார்.

விருந்து உபசார நிகழ்வுகளின்போது அவரது மகன் எப்போதுமே கடைசியாக சாப்பிட்டு முடிப்பதால் ஒரு போதும் இதர குழந்தைகளுடன் விளையாடுவதில்லை. வீட்டில் மதிய உணவு நேரம் முடிந்த பின்னரும், சாப்பிட்டு கொண்டிருப்பான். ஜானவ் நீண்ட நேரம் சாப்பிடுவான். ஒருவேளை உணவை சாப்பிட்டு முடிக்க 2 மணி நேரம் கூட ஆனது.

நாக்கு இயக்க குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

"முதலில் சுறுசுறுப்பு இன்றி மெதுவாக சாப்பிடுவதாக நான் நினைத்தேன்," என்கிறார் பர்மர்.

"அவன் நடப்பது கூட மெதுவாக, தள்ளாடியபடியே நடந்தான். பைக்கில் கூட அவனால் நிலையாக அமர்ந்து வரமுடியவில்லை,"என்றார். அவனை அவசரப்படுத்துவது மேலும் அழுத்தத்தை மட்டுமே உருவாக்கியது. அவனுக்கான உணவை மிக்சியில் போட்டு அரைத்துக் கொடுத்தும்,பெரும்பாலான உணவுகளை அவனால் மென்று மற்றும் விழுங்கி சாப்பிட முடியவில்லை. அவன் தொடர்ந்து சோர்வுற்று இருந்தான்.

2019ஆம் ஆண்டு ஜானவ் 8 வயதாக இருந்தபோது இந்த பிரச்னைக்கு ஒரு வழியாக தீர்வு காணப்பட்டது. ஜானவ், ஆங்கிலத்தில் 'Tongue Tie' எனப்படும் 'நாக்கு இயக்க குறைபாடால்' தீவிரமாகப் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த குறைபாடு ஆன்கிலோக்ளோசியா (ankyloglossia) என்றும் ஆங்கிலத்தில் tongue-tie என்றும் குறிப்பிடப்படுகிறது. ஒரு மரபியல் நிலையான இது உலகம் முழுவதும் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கவனம் பெற்றுள்ளது.

நாக்கு இயக்க குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

நாக்கு இயக்க குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு நாக்கின் அடிப்பகுதி மெல்லிய சிறிய துண்டு போன்ற திசுவால் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் அவர்களது வாய் வழக்கத்துக்கு மாறாக இறுக்கமாக இருக்கும். வாயின் மேற்பகுதியில் நாக்கு ஒட்டுவதற்கு பதில், வாயின் கீழ்பகுதியில் நாக்கு ஒட்டியிருக்கும். இது, குழந்தைகள் தாய்பாலை முறையாக குடிப்பதை தடுக்கிறது.

இந்த நிலை மரபியல் ரீதியானது என்று கருதப்படுகிறது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியப்படுகிறது. இதனை பரிசோதனையில் கண்டறிவது கடினம். 2020ஆம் ஆண்டு வெளியான ஆய்வு ஒன்றின்படி அமெரிக்காவில் ஒரு வயதுக்கு உட்பட்ட 8 சதவிகித குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அண்மைக்கால ஆண்டுகளில் உலகம் முழுவதும் இது குறித்து விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாக வல்லுநர்கள் சொல்கின்றனர். சில நாடுகளில் கண்டறியப்பட்ட பரிசோதனைகள் மூலம் பத்து மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்தது. அமெரிக்காவில் நாக்கு இயக்க குறைபாடு கண்டறியப்படுவதும், அதற்கான அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

எனினும், பர்மர் குடும்பத்தைப்போலவே இன்னும் பெரும்பாலான குடும்பத்தினர், இது நாக்கு இயக்க குறைபாடு என்பதை கண்டறியாமல் பல ஆண்டுகளாக வலியுடனும், மன அழுத்ததுடனும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுகாதார நலன் சேவைகளை வழங்குவோர் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தொற்று நோய்கள் போன்ற தீவிர உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோய்களுக்கு எதிராக கவனம் செலுத்துகின்றனர். நாக்கு இயக்க குறைபாடு கண்டறியப்படாததன் விளைவாக பல ஆண்டுகளாக உரிய சிகிச்சை அளிக்கப்படாத சூழல் உள்ளது. மேலும் அதிக அளவு இந்த பாதிப்பு உள்ளதாக கண்டறியப்படும் நாடுகளில் கூட, கண்டறியப்படாமல் விடப்படலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வட கரோலினாவின் ராலே பகுதியில் வசிக்கும் கேத் கேனாவான் எனும் இரண்டு குழந்தைகளின் தாய், தனது இளைய மகள் அன்னா, தெளிவாக பேசுவதில்லை என்பதை கண்டறிந்தார். அந்த சமயத்தில் அந்த குழந்தைக்கு இரண்டு வயதுதான் ஆகியிருந்தது. அதே நேரத்தில் தனது குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும்போது எந்த வித பிரச்னையையும் அவர் சந்திக்கவில்லை.

இது குறித்து கவலைப்பட தேவையில்லை என அவரது மகப்பேறு மருத்துவர் கூறியுள்ளா். அன்னாவுக்கு நான்கு வயது கூட ஆகாத நிலையில் இன்னொரு மகப்பேறு மருத்துவர், இது ஏதோ ஒரு குறைபாடாக தெரிகிறது என்றும் பேச்சு பயிற்சி சிகிச்சை அளிப்பவரை சந்திக்கும்படியும் பரிந்துரை செய்தார்.

நாக்கு இயக்க குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

"எனது மகளுக்கு உதடு-மற்றும்- நாக்கு இயக்க குறைபாடு உள்ளதாக பேச்சு பயிற்சி சிகிச்சை அளிப்பவர் கூறினார். அவளின் வாய், நாக்கு உள்ளிட்ட பாகங்கள் அவளது பேச்சின் உச்சரிப்பை குறைத்து விட்டது. எனவே இதற்கு சிகிச்சை அளித்து குறைபாடுக்கு தீர்வு காணாவிட்டால், பேச்சு பயிற்சி அளிப்பது மிகவும் பலன் தரும் ஒன்றாக இருக்காது என்று தெரிவித்தார்," என்றார் கேனாவான்.அவரது ம கள் போதுமான அளவு தெளிவாக பேசுவதற்கு அவளது உதடுகள், நாக்கு ஆகியவற்றை இயல்பாக அசைக்க முடியவில்லை என்று கூறினார்.

"பேசுவதைத் தடுக்கிறது"

நாக்கு இயக்க குறைபாடு என்பதன் முதல் அறிகுறி பிரச்னைக்கு உரியதாக இருக்கும். பர்மர் அவரது குழந்தைக்கு தாய்பால் ஊட்டும்போது வலி ஏற்பட்டதுபோல இருக்கும்.

"நாக்கு இயக்க குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களது நாக்கை உதடுகளுக்கு வெளியே நீட்ட முடியாது. இதன் விளைவாக அவர்களால் போதுமான அளவு தாய்பால் குடிக்க முடியாது. தாய்பால் குடிப்பதற்கு தேவையான உறிஞ்சுதல், விழுங்குதல் போன்ற அனைத்து செயல்பாடுகளையும் அவர்களால் மேற்கொள்ள முடியாது," என்கிறார் ஆஸ்திரேலியாவின் ராண்ட்விக் பெண்களுக்கான ராயல் மருத்துவமனையின் மூத்த நியோனாட்டாலஜிஸ்ட்., ஜூ-லீ ஓய்.

குழந்தையானது தனது சிக்கிக்கொண்ட நாக்கை அசைக்க முயற்சித்து, தாயின் மார்பகத்தை கவ்வி பால் குடிக்க முயற்சி செய்யும்போது தாயின் மார்பில் தீவிரமான வலி ஏற்படக்கூடும்.

இதர நபர்களுக்கு, கேனாவான் மகளுக்கு கண்டறியப்பட்டதுபோல இந்த பிரச்னையானது பின்னர் தாமதமாக வெளிப்படும்."

"நாக்கு இயக்க குறைபாடு கொண்ட குழந்தைகள் அதற்கான அறிகுறிகள் இல்லாமல் இருக்கும்," என்கிறார் மின்னஞ்சல் வழியாக பதில் அளித்த செல்சியா குழந்தைகள் மருத்துவமனையின் ஆலோசகர் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர், செல்சியா மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் அறக்கட்டளை மற்றும் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர்களின் ஐரோப்பிய சங்கத்தின் தலைவர் அமுல்யா கே. சக்சேனா.

நாக்கு இயக்க குறைபாடு இருப்பதை கண்டறிவதும் கடினம். வாயின் பின்பகுதியில் இருந்து நாக்கின் நடுபகுதிவரை நீண்டிருக்கும் திசு துண்டு சவ்வு போல காணப்படும். இந்த திசு கட்டுப்படுத்தப்பட்டிருந்தால், நாக்கின் முனையை உதடுகளுக்கு வெளியே நீட்ட முடியாது. நாக்கு இயக்கக் குறைபாடு இருப்பதை தெளிவாக அறியமுடியும். எனினும், நாக்கு இயக்கக் குறைபாடு மேலும் மறைவான வகையில் வாயின் அதிக ஆழமாக உட்புறபகுதியில் இருந்தால் மருத்துவ நிபுணர்கள் மூலமே பரிசோதனை செய்து கண்டுபிடிக்க முடியும் என்கிறார் சக்சேனா.

நாக்கு இயக்க குறைபாடுடன் வாழும் குழந்தைகள், தங்களின் நாக்கை சுதந்திரமாக உபயோகிப்பதற்கு கடினமாக இருக்கும். புல்லாங்குழல் போன்ற கருவிகளை இசைப்பதும், உதடுகளை ஈரப்படுத்திக் கொள்வதும் அல்லது ஐஸ்கிரீம் உண்பதும் அல்லது நாக்கை உபயோகப்படுத்தி பற்களை சுத்தப்படுத்தும் தினசரி செயல்பாடும் கடினமானதாக இருக்கும். "நாக்கின் நடுப்பகுதியில் இருக்கும் சவ்வு போன்ற திசு துண்டுப்பகுதி கீழ்பகுதி வெட்டுப் பற்களுக்கு இடையே மாட்டிக் கொண்டால் , சில குழந்தைகளுக்கு நாக்கின் கீழ்பகுதியில் வெட்டு காயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன," என்றார் சக்சேனா.

நாக்கு இயக்க குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

நாக்கின் விகாரமான நிலை, வலு இல்லாத நாக்கின் தசைகள் காரணமாக நாக்கின் அசைவில் குறைபாடு இருக்கும். வாய் பகுதிக்கு அப்பாற்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடும்.

"நாக்கு இயக்க குறைபாட்டின் போது வாய் பகுதியில் காற்றழுத்த சமநிலை தன்மை பாதிக்கப்படுவது முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. இதனால் மூக்கின் வழியே சுவாசம் பாதிக்கப்படும். இதனால் தூக்கத்தில் குறைபாடு ஏற்படும்," என மும்பையில் உள்ளல தூக்கம் மற்றும் நாக்கு இயக்க குறைபாடு மையத்தின் இயக்குநரும் குழந்தைகளுக்கான பல் மருத்துவருமான அங்கிதா ஷா கூறுகிறார். பர்மர் மகனின் நாக்கு இயக்க குறைபாட்டை கண்டறிந்தவர் இவர்தான்.

நாக்கு இயக்க குறைபாடு உள்ள குழந்தைகள் அடிக்கடி வாயை திறந்தபடி குறட்டை விட்டபடி தூங்குவார்கள். இது அவர்களது தூக்கத்தில் குறைபாடை ஏற்படுத்தி பாதிப்புகளை உருவாக்கும். மூக்கு அடைத்துக் கொள்வதால் சுவாசம் தடைபட்டு அடிக்கடி அவர்கள் தூக்கத்தில் இருந்து விழிக்கக் கூடும். தூங்கும் போது பற்களை அரைப்பது போன்றோ இறுக்கமாக கடித்துக் கொண்டே இருப்பர். இதனால் கழுத்து மற்றும் தோள் பட்டைகள் விறைப்படையும். மற்றும் தலைவலியும் நேரிடும். அவர்களின் அசௌகரிய நிலை, மிகவும் நுட்பமானதாக இருந்தாலும், அவர்களின் தோற்றத்தையும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் அது பாதிக்கலாம்.

"பற்கள், நாக்கு மற்றும் தாடை ஆகியவை சீராக இருப்பது ஒட்டு மொத்த உடலின் செயல்பாட்டில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் உணராமல் இருக்கின்றோம்," என்றார் ஷா.

விரைவாக தீர்வு காணமுடியுமா?

நாக்கு இயக்க குறைபாடு

பட மூலாதாரம், Science Photo Library

லேசான அறிகுறிகள் இருந்தால், இந்த பிரச்னை தானாகவே சரியாகிவிடும், என்கிறார் லண்டனில் உள்ள மருத்துவர் சக்சேனா. இணைக்கும் துண்டுப்பகுதி குழந்தைகளுக்கு உணவு அளிக்கும்போது, நாக்கை இயக்குகிறது. காலப்போக்கில் நாக்கின் இயக்கம் குறைகிறது. சரியான நுட்பங்களில் குழந்தைகளுக்கு தாய்பால் புகட்டுவது, நாக்கின் ஃபிரெனுலம் பகுதிக்கு மாசாஜ் செய்வது, நாக்குக்கு பயிற்சி அளிப்பது ஆகியவை இதுபோன்ற சிறிய அளவிலான பாதிப்பை சரி செய்வதற்கு உதவும் என்பது அவரது கருத்தாக உள்ளது. ஆனால், இது சரிவராத பட்சத்தில் அல்லது நாக்கு இயக்க குறைபாடு காரணமாக தாய்பால் ஊட்டுவதில் மிகவும் பிரச்னை ஏற்பட்டால் நாக்கை விடுவிக்கும் முறையை பரிந்துரை செய்கிறார். ஃபிரெனுலம் பகுதியில் சிறிய அளவில் வெட்டுவது நாக்கு கட்டுப்படுத்தப்படுவது குறைக்கப்படும்.

எனினும், தாய்பால் ஊட்டுதல், உண்ணுதல், சுவாசித்தல், தூக்கம், பேச்சு ஆகிய இந்த பிரச்னைகள் வேறு காரணங்களைக் கொண்டிருக்கலாம். இந்தியா போன்ற நாடுகளில் நாக்கு இயக்க குறைபாடு குறைவாகவே கண்டறியப்படுகிறது. இதர நாடுகளில் உள்ள மருத்துவர்கள் இதை அதிகமாக கண்டறியும் அபாயத்தை காண்கின்றனர்.

"2017ஆம் ஆண்டில் அதிக அளவில் பாதிப்புகளைப் பார்த்தபோது அதனை கவனிப்பது என்று நாங்கள் தீர்மானித்தோம்," என்றார் ஓய். அவர் பணியாற்றும் ஆஸ்திரேலியாவின் ராண்ட்விக் நகரில் உள்ள பெண்களுக்கான ராயல் மருத்துவமனையின் பதிவுகளின்படி சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 4500 குழந்தைகள் பிறக்கின்றன. அந்த ஆண்டு வரை பொதுவாக, ஒவ்வொரு மாதமும் நாக்கு இயக்க குறைபாடு அறுவை சிகிச்சைக்காக 10 குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். "மாதம் 10 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை என்ற நிலையானது வாரம் பத்து குழந்தைகள் என்பதாக மாறியது," என்றார் ஓய்.

அந்த பகுதியில் உள்ள இதர மருத்துவமனைகளில் நாக்கு இயக்க குறைபாடு பாதிப்புக்கு சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த அறுவை சிகிச்சைக்காக சில அறுவை சிகிச்சை நிபுணர்கள் தங்களுக்கான கட்டணங்களை அதிகரித்தனர். தாய் பால் ஊட்டுவதில் உள்ள பிரச்னைகளுக்கு இது விரைவாக தீர்வளிப்பதால் நாக்கு இயக்க குறைபாடு சரி செய்வதற்கான அறுவை சிகிச்சைக்கு அதிக தேவை இருந்ததை நாங்கள் உணர்ந்தோம். எனினும், ஃபிரெனுலம் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து நாக்கை விடுவிப்பது மாயமான முறையில் எல்லா பிரச்னைகளையும் சரி செய்து விடாது," என்றார் அவர்.

உலகளாவிய ஆய்வின் முடிவு 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டபோது சில நாடுகளில் நாக்கு இயக்க குறைபாடு பாதிப்பு 10 மடங்காக அதிகரித்திருப்பது தெரிந்தது. உலகம் முழுவதும் கணிசமாக வேறுபட்டது. நாக்கு இயக்க குறைபாடு சிகிச்சையை தரப்படுத்த அதிக முயற்சிகள் தேவை என்பது தெரியவந்தது.

அப்போது முதல் அவர்களின் மருத்துவமனையில் வழிகாட்டும் நடைமுறைகள் மாற்றப்பட்டன என்கிறார் ஓய். தாயிடம் தாய்பால் குடிக்க சிரமப்படுவதால், நாக்கு இயக்க குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் குழந்தைகள் தாய்பால் ஆலோசகர்களால் மதிப்பிடப்பட்டனர். தாய்பால் ஆலோசகர்களின் ஆலோசனையின் பேரில், குழந்தைகள் தாய்பால் அருந்தும் பிரச்னைகளை தீர்க்க இரண்டு முதல் நான்கு வாரங்கள் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னரும் பிரச்னை சரியாகவில்லை என்றால் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

ஓய் மற்றும் அவருடன் பணியாற்றுவோர், தங்களுடைய ஆய்வில், நாக்கு இயக்க குறைபாடு உடையவர்களுக்கு மேற்கொள்ளப்படும் தொடர்புடைய எளிதான அறுவை சிகிச்சை கூட, இலகுவாக மேற்கொள்ளக்கூடாது என்கின்றனர். "குழந்தைகளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவது, எவ்வளவு சிறியதாக இருந்தாலும், வலி, மன அழுத்தம், நீண்ட கால நரம்பியல் பாதிப்பை ஏற்படுத்துகிறது," என்கின்றனர்.

அறுவை சிகிச்சை மற்றும் நாக்கு பகுதிக்கு யோகா பயிற்சி

லண்டனை சேர்ந்த குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் சக்சேனா, நாக்கு இயக்க குறைபாடு குறித்து பெற்றோர் விழிப்புணர்வு பெறுவது அதிகரித்திருக்கிறது என்கிறார். "நோயாளிகளுக்கு ஆதரவான குழுக்கள், தொழில்முறை சார்ந்த அமைப்புகள் இப்போது சமூக வலைதளங்களில் இது தொடர்பான தகவல்களை தருகின்றனர்," என்றார் அவர்.

இந்தியாவில் வயதான குழந்தைகளை கொண்டுள்ளவர்கள் உட்பட உதவி கேட்டு அணுகும் பெற்றோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை காணமுடிவதாக ஷா கூறுகிறார். "மிக விரைவாக அறுவை சிகிச்சையை நாடுவது நல்லதல்ல," என அவரும் கூட அறிவுறுத்துகிறார்.

தனது கிளினிக் வரும் 10 நோயாளிகளில், தோராயமாக அதில் பாதிப்பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக ஷா கூறுகிறார். நாக்கு இயக்க குறைபாட்டின் தீவிரம், அது சுவாசப்பாதைகள் உள்ளிட்ட உடலில் ஏற்படுத்தும் விளைவுகள், ஆகியவற்றைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. "இந்த நிலையில் வரும் ஒவ்வொரு நோயாளியையும் அவரின் வெவ்வேறான அறிகுறிகளை மதிப்பிடுகின்றோம். இந்த பிரச்னை நாக்கு இயக்க குறைபாடு காரணமாக ஏற்பட்டதா என்று எங்களை நாங்களே கேட்டுக் கொள்கின்றோம். அறுவை சிகிச்சை என்ற வழியை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு முதலில் இதோடு தொடர்புடைய இதர பிரச்னைகளை சரி செய்ய முயற்சிக்கின்றோம்."

நாக்கு இயக்க குறைபாடு

பட மூலாதாரம், PA Media

வயதான குழந்தைகளுக்கு பொதுவாக மயக்கமருந்து தேவைப்படலாம். இளம் வயது குழந்தைகளுக்கு குறிப்பிட்ட பகுதியை மரத்துப் போகச்செய்யும் மயக்கமருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஷா கூறுகிறார். பிறந்து சில நாட்கள் ஆன குழந்தைகளைப் பொறுத்தவரை, மயக்கமருந்து பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் பலனை விட அபாயம் அதிகம் என்பதால் அவர்களுக்கு மயக்கமருந்து உபயோகிக்கப்படுவதில்லை.

எனினும், அறுவை சிகிச்சை என்பது சிகிச்சையின் இறுதியான ஒன்றல்ல என்கிறார் லண்டனை சேர்ந்த ஒரு சுயாதீன மருத்துவச்சி மற்றும் தாய்ப்பால் ஆலோசகர் கார்மெல் ஜென்டில். இவர், தெற்கு லண்டனில் தான அடிப்படையிலான நாக்கு இயக்க குறைபாடு மையத்தை அமைத்திருக்கிறார். துண்டிக்கப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு, பல்வேறு பயிற்சிகள் மூலம் குழந்தைகள் நாக்கைப் பயன்படுத்தவும் வலுப்படுத்தவும் பெற்றோர்கள் அவர்களுக்கு உதவுவது குறித்து பரிந்துரைகள் அளிக்கிறார்.

"குழந்தைகள் புதிய வழியில் தங்களது நாக்கை பயன்படுத்து குறித்து நாங்கள் ஆலோசனை சொல்கின்றோம்," என்றார் அவர். "இது யோகா போன்ற ஒரு பயிற்சியாகும். பயிற்சியின் தொட்டத்தின் போது உங்கள் கால் விரல்களை உங்களால் தொட முடியாது. ஆனால், வழக்கமான தொடர்ச்சியான பயிற்சிகள் மூலம் நீங்கள் அதனை அடையமுடியும்."

சிலருக்கு, அதிகரித்து வரும் விழிப்புணர்வு - மற்றும் சரியான நோயறிதல் - வாழ்க்கையை மாற்றும்.

கேத் கேனாவான் மகள் அன்னாவுக்கு அறுவை சிகிச்சை பலன் அளித்திருக்கிறது. "அவளின் ஃப்ரெனுலம் தடிமனாக தசையாக இருந்தது. அவர் மிகவும் இள வயதினராக இருந்தார். பேச்சு பயிற்சி அளிப்பவர் மற்றும் காது, மூக்கு , தொண்ட நிபுணர் பொது மயக்கமருந்து கொடுத்து அறுவை சிகிச்சை கருவிகளைக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்தார். இந்த வழியில், நாக்கை சுற்றி உள்ள திசுக்கள் சேதம் அடையாமல் நாக்கை விடுவிக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்," என மின்னஞ்சல் வழியே கேனாவான் பதில் அளித்தார்.

15 நிமிட நடைமுறைக்குப் பின்னர் அன்னாவுக்கு எந்த வித வலி குறைக்கும் மருந்துகளும் தேவைப்படவில்லை. எந்தவித பிரச்னையும் இன்றி அவர் சாப்பிடவும், பானங்களை குடிக்கவும் முடிந்தது. அடுத்த நாளே அவர் முன்பருவ பள்ளிக்கு செல்ல முடிந்தது. அறுவை சிகிச்சை முடிவடைந்த ஒருமாதத்துக்குள் அவரது பேச்சில் தீவிர முன்னேற்றம் தென்பட்டது.

பல ஆண்டுகளாக நாக்கு இயக்க குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மகனின் தாயான மும்பையை சேர்ந்த பூர்ணா பர்மரிடம், பாதிப்பின் நிலை பற்றி மருத்துவர் கூறியபோது கண்ணீர் விட்டு அழுதார். "நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதற்கு ஒரு பெயர் இருந்ததால் நான் மிகவும் நிம்மதியடைந்தேன்."

குழந்தைக்கு அறுவை சிகிச்சை தேவை என அவரது குடும்பத்தை சம்மதிக்க வைப்பதற்கு அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. ஆனால், அது மதிப்புக்குரியதாக இருந்தது என்றார் அவர். அவரது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது அவருக்கு உதவியது. இன்றைக்கு ஜானவ், வித்தியாசமான உணவு வகைகளை உண்டு மகிழ்கிறார். அவரால் 20 நிமிடங்களுக்குள் உணவை சாப்பிட முடிந்தது. பின்னர் அவர் தனது பைக்கை ஓட்டிச் சென்றார்.

காணொளிக் குறிப்பு, தீபாவளிக்காக தயாரான பாங்காக்கின் லிட்டில் இந்தியாவின் சிறப்புகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: