குழந்தைகளுக்கு ஆட்டிசம் இருப்பதை கண்டறிவது எப்படி?

காணொளிக் குறிப்பு, குழந்தைக்கு ஆட்டிசம் இருக்கிறதா? என்ன அறிகுறிகளைப் பார்த்தால் எச்சரிக்கையாக வேண்டும்?
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஆட்டிசம் என்பது நரம்பியல் தொடர்பான ஒரு வளர்ச்சிக் குறைபாடு. ஆனால் சிலர் இதை ஒரு நோய் என்று கருதுகிறார்கள். ஆட்டிசம் குறைபாடு ஒரு குழந்தைக்கு உள்ளது என்பதை எவ்வாறு கண்டறிவது, அத்தகைய குழந்தைகளை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

பெற்றோர்கள் மத்தியில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவும், பலர் ஆட்டிசம் ஒரு குறைபாடு என்று புரிந்துகொள்வதற்குப் பதில் அதை ஒரு நோயாகக் கருதுகிறார்கள் என்றும் கூறுகிறார், சென்னையை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் லட்சுமி பிரசாந்த்.

குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும் பெற்றோர்கள் பலருக்கும், வளர்ச்சி மைல்கற்கள் பற்றி தெரிவதில்லை என்றும் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை விழிப்புணர்வோடு அணுகுவது அவசியம் என்கிறார் லட்சுமி.

ஆட்டிசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்

வளர்ச்சி மைல்கற்கள்

வளர்ச்சி மைல்கற்கள் பற்றி விளக்கிய அவர், ''குழந்தைகள் பேசாமல் இருக்கும்போதுதான் பெற்றோர்கள் வந்து சந்தேகங்களை கேட்கிறார்கள். ஒரு குழந்தை இரண்டு வயதை எட்டும் நேரத்தில், ஏறக்குறைய பெரியவர்களின் எல்லா செயல்களுக்கும் பதில் சொல்வார்கள், செயலில் செய்துகாட்டுவார்கள். உணர்ச்சி வெளிப்பாடு இல்லாத குழந்தையாக ஒரு குழந்தை இருந்தால் எளிதில் கண்டறியலாம்.

முதலில் குழந்தைகள் மூன்று விதமான வளர்ச்சியை அடைய வேண்டும். மனவளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி ஆகிய மூன்றிலும் அவர்கள் வளர்ச்சியை எட்டவேண்டும்.

சமுதாய தொடர்பு, பேச்சு மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு என எளிமையாக புரிந்துகொள்ளலாம். இது போன்ற வளர்ச்சி படிநிலைகளில் ஒரு சில படிநிலைகளை ஒரு குழந்தை எட்டாமல் போகும்போது அந்த குழந்தை ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தையாக வளரும் வாய்ப்புகள் உள்ளன,'' என்கிறார் அவர்.

இலங்கை
இலங்கை

எச்சரிக்கை அறிகுறிகள்

அன்றாட வாழ்வில் பெற்றோர் குழந்தைகளின் வளர்ச்சியில் கவனிக்கவேண்டிய செயல்களை பற்றி குறிப்பிட்ட மருத்துவர் லட்சுமி, ''ஒரு சில எச்சரிக்கை அறிகுறிகளை கொண்டு ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாடு உள்ளதா என்று பெற்றோர்கள் தெரிந்துகொள்ளலாம். அதிகபட்சமாக, ஒரு குழந்தை இரண்டு வயதை எட்டும் நேரத்தில் ஆட்டிசம் உள்ளதா இல்லையா என்று தெளிவாக தெரிந்துகொள்ளலாம். ஆட்டிசம் இருக்கும் குழந்தைகள் தங்களுக்கு பெயருக்கு எந்தவித வெளிப்படும் காட்டமாட்டார்கள். பெயரை சொல்லி அழைத்தால், அவர்களிடம் எந்த பதிலும் கிடைக்காது.

பொதுவாக, ஒரு குழந்தை தனது பெயரை விளையாடிக்கொண்டிருந்தால் கூட, அதை நிறுத்திவிட்டு, திரும்பி பார்க்கும். இந்த வெளிப்பாடு இல்லை எனில் நாம் அந்த குழந்தையை கவனிக்கவேண்டும். பேசக் கூடிய குழந்தையாக இருந்தால், அந்த குழந்தை தனது பெயருக்கு பதில் சொல்லும், திரும்பி பார்த்து சில வார்த்தைகளை மழலை மொழியில் சொல்லும்,'' என்கிறார்.

அடுத்ததாக, ''ஒரு குழந்தை பெரியவர்கள் தன்னிடம் பேசும்போது பதில் செயல் புரியவேண்டும். அதாவது, அந்த குழந்தையை பார்த்து கை தட்டுவது, கொஞ்சுவது உள்ளிட்ட செயல்களுக்கு சிரிக்கும் அல்லது அழும். நாம் கைத்தட்டினால், குழந்தையும் கைத்தட்டும்.

ஒன்றரை வயதில், வீட்டில் தினமும் பெற்றோர்கள், பெரியவர்கள் செய்யும் செய்கைகளை கவனித்து தானும் அதுபோல செய்ய நினைக்கும். அம்மா சமைப்பது போல, வெறும் பாத்திரங்களில் கரண்டியை வைத்து கிளறுவது, போன் பேசுவது போல பாவனை செய்யும். இதுபோன்ற பின்பற்றும் செயல்களை ஆட்டிசம் இருக்கும் குழந்தைகள் செய்யமாட்டார்கள்,'' என்கிறார்.

ஆட்டிசம்

பட மூலாதாரம், Getty Images

ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்து மிகவும் குறைவு என்கிறார். ''ஆட்டிசம் உள்ள குழந்தைகள் தங்களுக்கு பிடித்தவை, பிடிக்காதவை என எந்த செயலுக்கும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதம் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

இயல்பாக, மற்ற குழந்தைகளை போல சிரிப்பது, அழுவது, முகத்தை திருப்பி பார்ப்பது போன்ற செயல்களை செய்யமாட்டார்கள். அவர்களுக்கென தனித்துவமான விதத்தில் அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதால், ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் ஆட்டிசம் உள்ள குழந்தையை பார்த்தால், அவர்களுக்கு புரியாது,'' என்கிறார், மருத்துவர் லட்சுமி.

ஆட்டிசம் உள்ள குழந்தைகள் ஏதாவது ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வார்கள் என்றும் அந்த தொடர் செயல்களை கொண்டும் ஒரு குழந்தைக்கு குறைபாடு உள்ளதா என்று அறியமுடியும் என்கிறார் அவர்.

''ஒரு பறவை பறக்கும் போது சிறகுகளை விரித்து பறப்பது போல, ஆட்டிசம் உள்ள குழந்தைகள் கை அல்லது கால்களை வைத்து, பறப்பது போல செய்துகாட்டுவார்கள். அந்த செயல்களை மீண்டும் மீண்டும் செய்வார்கள். தலையை வேறுவேறு திசையில் திருப்பி காட்டுவது, கைகளை கண்ணனுக்கு அருகில் கொண்டுவந்து வித்தியாசமான செயலை செய்வது உள்ளிட்ட நடத்தைகளை செய்வார்கள்.

இதுபோன்ற செயல்களை ஒரு குழந்தை எந்தவித நோக்கமும் இல்லாமல் தொடர்ந்து செய்துகொண்டிருந்தால், உடனே குழந்தைகள் நல மருத்துவரிடம் பெற்றோர்கள் ஆலோசனை பெறவேண்டும்,'' என்கிறார் அவர்.

காணொளிக் குறிப்பு, "அவர்களுக்கு குழந்தை - எங்களுக்கு பிழைப்பு" - ஒரு வாடகைத் தாயின் கதை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: