உலக ஆட்டிசம் தினம்: குறைபாட்டை கையாள எளிய மருத்துவ ஆலோசனைகள்

ஆட்டிசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆட்டிசம் ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. இதை மருத்துவத்துறையில் "ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்" என அழைக்கின்றனர்.
    • எழுதியவர், சௌமியா குணசேகரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்தியாவில் 125 சிறாரில் ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல் 2ஆம் தேதி உலக ஆட்டிசம் தினமாக சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் உலக அளவில் ஆட்டிசம் உள்ளவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆட்டிசம் என்பது என்ன, அது ஒரு நிரந்தர நோயா அல்லது குறைபாடா என்பது குறித்து நம் மனதில் எழும் சில கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் குழந்தைகள் நரம்பியல் துறை மருத்துவர் கமலிடம் முன்வைத்தோம். அவர் அளித்த பதில்கள் இதோ.

ஆட்டிசம் என்றால் என்ன?

இது ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. இதை மருத்துவத்துறையில் "ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்" என அழைக்கின்றனர். இது ஒரு குழந்தையின் தொடர்பாற்றல், கருத்துப்பரிமாற்றம் ஆகியவற்றை பாதிக்கிறது. இந்த வகை குழந்தைகளின் பேச்சாற்றலில் சிரமம் காணப்படும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள இயலாமை, தன் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த இயலாமை போன்றவை இதில் அடங்கும். ஆட்டிசம் ஒரு நோய் அல்ல. அது ஒரு குறைபாடு என்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியம். இதை முழுமையாக குணப்படுத்த இயலாது. சில மருத்துவ முறைகள் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ இயலும்.

ஆட்டிசம் அறிகுறிகள் என்னென்ன?

இதை குழந்தையின் ஆரம்பகால செயல்பாடுகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும். குழந்தைகள் பொதுவாக நம்முடைய முகபாவனைகளுக்கு ஏற்றாற்போல் தானும் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும். உதாரணமாக இயல்பான நிலையில் இருக்கக் கூடிய ஒரு ஆறு மாத குழந்தையை பார்த்து புன்னகைத்தால் அந்த குழந்தையும் அதே உணர்வை பிரதிபலிக்கும். குரலை சற்று கடுமையாக்கினால் அழத் தொடங்கும். ஆனால் ஆட்டிசம் அறிகுறி உள்ள குழந்தைகள் இதுபோன்ற உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய தனி உலகில் இருப்பார்கள். பெயரை அழைத்தவுடன் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். மூன்று அல்லது நான்கு முறை அழைத்த பின்பு மட்டுமே திரும்பிப் பார்ப்பார்கள். அதிகமாக பேச மாட்டார்கள், தனிமையை அதிகம் விரும்புவார்கள். எதிரில் பேசுபவரின் கண்ணப் பார்த்து பேச மாட்டார்கள். சிலர், கையில் கிடைத்த பொருட்களைப் போட்டு உடைப்பார்கள். இவர்களுக்கு 'மூட் ஸ்விங்ஸ்' அதிகமாக இருக்கும். சில நாட்களில் அதீத மகிழ்ச்சியாக இருப்பார்கள். சில நாட்களில் சோகமாக காணப்படுவார்கள். "எக்கோலாலியா" - அதாவது சொன்ன வார்த்தையையோ வாக்கியத்தையோ திரும்பத் திரும்ப கூறுவார்கள். இந்த வகை பழக்கம் கிட்டத்தட்ட ஆட்டிசம் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளிடையேயும் காணலாம். மிக முக்கியமாக குழந்தை அதன் ஆரம்ப மாதங்களில் நடப்பதிலும் பேசுவதில் தாமதம் காணப்படலாம்.

ஆட்டிசத்தை கண்டறிவது எப்படி?

இதற்கு என தனியாக குறிப்பிட்ட முறைகள் ஏதும் இல்லை. குழந்தையின் செயல்பாடுகளை வைத்து பெற்றோர், உறவினர்கள் அல்லது மருத்துவர்களே கூட இதை அறியலாம். நரம்பியல் தொடர்பான ஆட்டிச குறைபாட்டை சிடி ஸ்கேன் மற்றும் எம். ஆர்.ஐ ஸ்கேன் மூலமும் அறியலாம். 

ஆட்டிசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆட்டிசச்துக்கு இதுதான் காரணம் என்பது இதுவரை துல்லியமாக கண்டறியப்படவில்லை. ஆனால் எவை எல்லாம் ஆட்டிசம் குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்ற பொதுவான கணிப்பு உள்ளது.

குறைபாட்டிற்கான அடிப்படை என்ன ?

ஆட்டிசத்துக்கு இதுதான் காரணம் என்பது இதுவரை துல்லியமாக கண்டறியப்படவில்லை. ஆனால் எவை எல்லாம் ஆட்டிசம் குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்ற பொதுவான கணிப்பு உள்ளது. மரபணுவில் உள்ள பிரச்னைகள் மூலம் இது ஏற்படலாம். குழந்தையின் தாய் அவரது கர்ப்ப காலத்தில் சரியான மருத்துவ சிகிச்சை பெறாதது, குழந்தையின் எடை பிறக்கும்போது மிக குறைவாக இருப்பது, வயதான காலத்தில் குழந்தைப் பெறுவது, கர்ப்ப காலத்தில் தவறான மருந்துகளை உட்கொள்வது அல்லது குழந்தை வயிற்றில் இருக்கும்போது குழந்தை மற்றும் தாய் வைரஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாவது போன்றவை சில வகை காரணங்களாக கருதப்படுகின்றன. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் முன்னெச்சரிக்கையுடன் சரியான தரமான மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியம்.

ஆட்டிசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆட்டிசம் குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை சில முறை அல்லது பலமுறை கூடுதலாக விவரிக்க வேண்டும். படங்கள் மற்றும் பொருட்களை அவர்கள் கையில் கொடுத்து உணர வைக்க வேண்டும்.

ஆட்டிசம் உள்ள குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும் ?

ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பெற்றோரின் கவனிப்பு மற்ற சாதாரண குழந்தைகளை விட கூடுதலாக தேவைப்படும். சரியான நேரத்திற்கு அவர்கள் தூங்க மாட்டார்கள், சில குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்களை பெற்றோர்கள் பொறுமையுடன் கையாள வேண்டும். மற்ற குழந்தைகளுடன் பழகுவதை ஊக்குவித்து உதவி செய்ய வேண்டும். ஸ்பீச் தெராபி எனப்படும் பேச்சுப் பயிற்சி அளிக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை சில முறை அல்லது பலமுறை கூடுதலாக விவரிக்க வேண்டும். படங்கள் மற்றும் பொருட்களை அவர்கள் கையில் கொடுத்து உணர வைக்க வேண்டும். இது அவர்களின் கற்றல் ஆற்றல் மேம்பட உதவும். ஆட்டிசம் குழந்தைகளுக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டது என்றால் அதை மிகுந்த ஆர்வத்துடன் திரும்பத்திரும்ப செய்வார்கள். உதாரணமாக இவர்களுக்கு ஒரு பாடல் பிடித்து விட்டது என்றால் எப்போது அந்த பாடலை கேட்டாலும் உடனே மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். உடனே அந்த இடத்திற்கு வந்து விடுவார்கள். எனவே அவர்களுக்கு பிடித்த திறன் என்ன என்பதை கண்டறிந்து அதில் பயிற்சி அளிக்கலாம்.

ஆட்டிசத்தை தடுக்க முடியுமா?

இதற்கு தடுப்பு முறைகள் என குறிப்பாக எதுவும் இல்லை, ஆட்டிசம் குறைபாட்டை எவ்வளவு சீக்கிரமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் அந்த குழந்தைகளின் செயல்திறனை மேம்படுத்தி இயல்பாக அவர்களின் வேலையை சுயமாக செய்ய வைக்கலாம். தற்போதைக்கு இதுவே ஒரே வழி.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :