தீபாவளி: டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன? தற்போது ஏன் அது பிரபலம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அஹ்மீன் கவாஜா
- பதவி, பிபிசி நியூஸ்
ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இந்துக்கள் கொண்டாடும் இந்த பண்டிகை, இந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பண்டிகை கொண்டாயடப்படுகிறது. இந்த சமயத்தில், வழக்கமாக, மக்கள் தங்கத்தை வாங்குவது, பரிசளிப்பது மூலம் செல்வத்தின் கடவுளான லட்சுமியை வணங்குவார்கள்.
திருமணங்களைத் தவிர, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தங்கம் வாங்குவது மிகவும் உகந்த காலமாகக் கருதப்படுகிறது. உலக அளவில் தங்கத்திற்கான முன்னணி சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. உலக தங்க கவுன்சில் (World Gold Council) 2017ஆம் ஆண்டு, மொத்த இந்திய தங்கத்தின் தேவை 727 டன்கள் என மதிப்பிட்டுள்ளது.
இன்று, பல இந்தியர்கள் இந்த தங்க நகைகளை வாங்க கடைகளுக்கு சென்றாலும், இன்றைய இளைஞர்கள் 'டிஜிட்டல் தங்கம்' வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.
டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன?
டிஜிட்டல் தங்கம் என்பது தங்கத்தை நேரடியாக கடைகளுக்கு சென்று வாங்காமல், அதை டிஜிட்டல் அதாவது மெய்நிகர் (virtual) வழியாக வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்குமான ஒரு முறையாகும். இது ஆன்லைனில் வாங்கலாம். இதனை வாங்குபவரின் சார்பாக விற்பனையாளரால் ஒரு பெட்டகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
ஆனால், தங்கத்தை நேரில் வாங்குவது போலவே டிஜிட்டல் தங்கத்திற்கும் 3 சதவீத சரக்கு மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) வரி செலுத்த வேண்டும்.
டிஜிட்டல் தங்கம் 24-கேரட் வடிவத்தில் மட்டுமே வர்த்தகம் செய்யப்படுவதால், அதன் தூய்மைதன்மை விற்பனையாளர்களால் உறுதிப்படுத்தப்படுகிறது. இது தங்கத்தின் அதிகபட்ச தூய்மை நிலையாகும்.
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது யார்?
டிஜிட்டல் தங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, டிஜிட்டல் தங்கத்தின் மீதான ஆர்வம் மக்களுக்கு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
புது டெல்லியைத் தளமாகக் கொண்ட நுகர்வோர் தரவு நுண்ணறிவு நிறுவனமான 'ஆக்சிஸ் மை இந்தியா' 5300 பேரிடம் நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்தியாவின் 15% இளைஞர்கள் (18-24 வயதுடையவர்கள்) டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
'இந்திய முதலீட்டு நிலவரம்' ('India Investment Behaviour') என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, டிஜிட்டல் தங்கம் உட்பட பல்வேறு முதலீட்டு அம்சங்களை அடிப்படையாக கொண்டு நுகர்வோர் நிலைவரத்தை மதிப்பீடு செய்தது.
கணினி வழியாக நடந்த தொலைபேசி நேர்காணல்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
பிரபலமாக இருக்கும் தங்கத்தை நேரடியாக வாங்கும் வழக்கம்
டிஜிட்டல் தங்கத்தின் முதலீட்டாளர்களின் தற்போதைய புள்ளிவிவரங்களின்படி ஆண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று 'ஆக்சிஸ் மை இந்தியா' நிறுவனம் கூறுகிறது. டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்தவர்களில் 55% பேர் ஆண்கள். அதே சமயம், சுப நிகழ்ச்சிகளின் போது, பெண்களிடையே தங்க நகைகள் மீது ஆர்வம் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
ஆனால், இதற்கு ஒரு டிஜிட்டல் தங்க நிறுவனம் ஒரு தீர்வை வழங்குகிறது. தங்களுடைய தங்கத்தை தேவைப்படும் நகைக்கடைக்காரர்களுக்கு குத்தகைக்கு விடுவது மூலம்அதிக பெண் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.
சேஃப்கோல்ட்(Safegold) என்ற இந்திய நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவில் தங்கத்தை வாங்கவும் விற்கவும் அனுமதிக்கும் டிஜிட்டல் தளமாக உள்ளது.
இது குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி, கௌரவ் மாத்தூர் கூறுகையில், நகைகளை குத்தகைக்கு விடுவதால் வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து உள்ளது. ஆனால் அதிக வருமானமும் கிடைக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
"நீங்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இருந்தால், உங்கள் தங்கத்தை குத்தகைக்கு எடுக்கத் தயாராக இருக்கும் சில நகைக்கடைக்காரர்களை நாங்கள் பட்டியலிடுகிறோம். அது வாடிக்கையாளரைப் பொறுத்தது. அவர்கள் தங்கத்தின் மதிப்பில் 5-6% வரை சம்பாதிக்கலாம்.
இது ஒரு புதுமையான விஷயம் என்பதால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது," என்றார்.
"மக்கள் தங்களுடைய தங்கத்தை பெட்டகங்களில் வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் எந்த லாபமும் இருக்காது. ஆனால், எங்கள் 25-30 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு குத்தகைக்கு தருவது ஒரு நல்ல முதலீடு ஆகும். இல்லையெனில், அவர்களின் தங்கம் பெட்டகங்களில் சும்மா இருக்கும்,." என்கிறார்.
"இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் தேவை தோராயமாக 800-1000 டன்களாக உள்ளது. மக்கள் இப்போது தங்களிடம் உள்ள தங்கத்தை நீண்ட கால சேமித்து, பின்னர் அதை மாற்றுகின்றனர் அல்லது நகைக்காகவோ அல்லது லாபத்திற்காக குத்தகைக்கு விடவோ செய்கிறார்கள். அதுதான் அதிகமான பெண்களை ஈர்க்கும் விஷயமாக உள்ளது." என்கிறார்.
டிஜிட்டல் தங்க தளத்தை தொடங்க தூண்டியது எது?
"இந்தியாவில் தங்கம் ஒரு பெரிய சந்தை. இதன் மொத்தத் தொழில்துறையும் 70-80 பில்லியன் டாலர் அளவில் இருக்கலாம். பெரும்பாலும், பெரிய, ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வணிக நிறுவனங்கள் 20% மட்டுமே உள்ளது. மீதமிள்ள 80% ஒழுங்கமைக்கப்படாத சந்தையாக உள்ளது. இந்தியாவில் தங்கத்தின் தொழில்துறை பெரும்பாலும் வரி செலுத்தப்படாத பண அமைப்பில் இயங்குகிறது.
தொழில்நுட்பம் எங்கும் பரவி இருப்பதால், முழு தளத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆன்லைனில் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகப் பார்த்தேன். அதுவே மிகப்பெரிய தேவைக்கான சந்தையாகும், மேலும் தற்போது நேரடியாக கிடைப்பதை விட சற்று சிறந்த தயாரிப்பை மக்களுக்கு வழங்க விரும்பினேன்." என்கிறார்.
ஆகவே, டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images
இதன் நன்மைகள், தீமைகள் என்ன?
2019 ஆம் ஆண்டின் உலக தங்க கவுன்சில் மதிப்பீட்டின்படி, மொத்தமாக இந்திய வீடுகளில் இருக்கும் தங்க இருப்பு சுமார் 25,000 டன்கள். இது சீனாவிற்கு அடுத்தபடியாக தங்கத்திற்கான உலகின் இரண்டாவது பெரிய சந்தையாகும்.
டிஜிட்டல் தங்கத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று அது பாதுகாப்பான சேமிப்பகம் ஆகும். விற்பனையாளர்கள் கூறுவது போல், கூடுதல் செலவில்லாமல் காப்பீடு செய்யப்பட்ட, பாதுகாப்பான வங்கிகளில் சேமிக்கப்படுகிறது. இதன்மூலம் வங்கி லாக்கர் வாடகைக் கட்டணமும் இல்லை.
இதுபற்றி பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகையில், தங்கம் பாதுகாப்பாக இருப்பதற்கான உத்தரவாதம், காப்பீடு செய்யப்பட்டிருப்பதால், பொதுவாக மோசடியான விற்பனை அபாயம் குறைவு. ஆனால், இந்த சேமிப்பக வசதி எப்போதும் இலவசம் அல்ல; ஒரு வேளை நேர வரம்புகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம் என்றார்கள்.
இதிலுள்ள வசதியைத் தவிர, இந்திய நுகர்வோர் மிகச் சிறிய அளவில் முதலீடு செய்யும் திறனிலும் ஈர்க்கப்படுகிறார்கள். நேரடியாக வாங்கப்படும் தங்கம் போலல்லாமல், 0.1 கிராம் அளவுக்கு டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம். மேலும் படிப்படியாக உங்கள் இருப்பை அதிகரிக்கலாம்.
டிஜிட்டல் தங்கத்தை நிகழ்நேர சந்தை விலையில் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம் அல்லது விற்கலாம். நீங்கள் அதை விற்க விரும்பவில்லை என்றால், விற்பனையாளர்கள் உங்கள் டிஜிட்டல் தங்கத்தை எந்த நேரத்திலும் தங்கச் காசுகளாக மாற்றிக்கொள்ளும் வசதியையும் உங்களுக்கு வழங்குகிறார்கள்.
அதே நேரத்தில், இதில் குறைபாடுகளும் உள்ளன. டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதில் உள்ள ஒரு முக்கிய பிரச்சனை என்னவென்றால், அதில் ஒழுங்குமுறை விதிகள் எதுவும் இல்லை. டிஜிட்டல் தங்கப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அல்லது செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) போன்ற அதிகாரப்பூர்வ அரசு நடத்தப்படும் ஒழுங்குமுறை அமைப்பு எதுவும் இல்லை.
"உண்மையாக, ஒவ்வொரு ஒழுங்குமுறை அமைப்புகள் பற்றியும் நாங்கள் சிந்தித்துக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் ஐநூறு பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஒவ்வொரு நிதிக் கட்டுப்பாட்டாளரிடமும், நிதி அமைச்சகத்திடமும் சமர்ப்பித்திருக்க வேண்டும். இந்த தொழில் உண்மையில் வளரவும், அளவிடவும் ஒழுங்குமுறை தேவை," என்று மாத்தூர் கூறுகிறார்.
"என் கருத்து என்னவெனில், இரண்டு காரணங்களுக்காக தங்கம் என்று வரும்போது ஒழுங்குமுறை விதிகள் தேவை. 1) நாட்டிற்கு இது ஒரு பெரிய இறக்குமதிப் பொருளாகும். தங்கத்தின் விற்பனையை அதிகரிப்பதாகக் கருதப்படும் எதுவும்,மிக நுண்ணிய பொருளாதார ரீதியாக நாட்டிற்கு நன்மை பயக்காது. 2) இது மிகவும் கவனமாக கையாளப்படும் துறையாக, இந்தியாவில் தங்கத் தொழிலில் பெரும் பகுதியினர் வரி செலுத்தாமல் அமைப்பு முறைக்கு வெளியே பணமாக பரிவர்த்தனை செய்கின்றனர்.
"அதிகமான நபர்களை டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்குவது இந்தத் துறையை பெரிய அளவில் சுத்தப்படுத்துகிறது. அத்துடன் நாங்கள் வழங்கும் தங்கத்தை குத்தகையிடும் வசதி மூலம் இறக்குமதியைக் குறைக்கிறது என்று இந்த நான் கூறுவேன். ஏற்கனவே இருக்கும் தங்கத்தை மீண்டும் அமைப்பில் வைப்பதால், இறக்குமதி குறையும்," என்கிறார்.
"நாங்கள் மிகவும் சிறிய சந்தையாக இருக்கிறோம். இப்போது 5% க்கும் குறைவாக இருக்கிறோம். டிஜிட்டல் தங்கத்திற்கான தேவை 10%க்கு மேல் வளர்ந்தவுடன், அப்போதுதான் ஒழுங்குமுறை அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்."
வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் டிஜிட்டல் தங்கச் சான்றிதழ்கள், நேரடியான தங்கத்துடன் ஆதரிக்கப்பட்டதா இல்லையா என்பதைச் சரிபார்க்க தற்போது அதிகாரப்பூர்வ முறை இல்லை.

பட மூலாதாரம், Getty Images
2021ஆம் ஆண்டில் ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்திய நிதி அமைச்சகம், செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு (செபி) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆகியவை டிஜிட்டல் தங்கத்தையும், கிரிப்டோ சொத்துக்களுடன், 'சில ஒழுங்குமுறை மேற்பார்வையின் கீழ், கொண்டு வர முயற்சிக்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட பத்திரங்களுக்குப் பொருந்தும் முதலீட்டாளர் பாதுகாப்புகள் இல்லாமல் இத்தகைய முதலீடுகளின் சரிபார்க்கப்படாத வளர்ச்சியைப் பற்றிய கவலைகள் அதிகரிக்கின்றன." என்று குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து பிபிசி செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட்டை தொடர்பு கொண்டது. ஆனால் இந்த கட்டுரையை வெளியிடும் சமயம் வரை அவர்கள் பதில் அளிக்கவில்லை.
நிபுணர்களின் கூற்றுப்படி, டிஜிட்டல் தங்க வர்த்தகம், நேரடியாக வாங்கப்படும் தங்கத்தின் மதிப்புடன் உறுதி செய்ய வேண்டுமே தவிர காகித வர்த்தகம் மூலம் அல்ல. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் முதலீட்டு இழப்புக்கு வழிவகுக்கும்.
இந்த டிஜிட்டல் தங்கம், இந்தியாவில் 1956 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டுள்ள பத்திரங்கள் ஒப்பந்த (ஒழுங்குமுறைகள்) சட்டப்படி, பத்திரங்களின் வரையறையின் கீழ் வராது. 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்வதை நிறுத்துமாறு பங்குச் சந்தைகள் பங்குத் தரகர்களைக் கேட்டன. ஆகவே, பங்கு தரகர்கள் டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டாலும், மொபைல் வாலட்கள் மற்றும் முதலீட்டுத் தளங்கள் தொடர்ந்து விற்பனை செய்கின்றன.
நகைகளாக மாற்ற கூடுதல் செலவு
சில நகைக்கடைக்காரர்கள் வாடிக்கையாளர்கள் தங்களுடைய டிஜிட்டல் தங்கத்தை தேவைப்பட்டால் உண்மையான நகைகளாக மாற்ற அனுமதிக்கின்றனர்.
ஆனால் விலைகள் எப்போதும் டிஜிட்டல் கிராமுக்கும் நேரடிகிராமுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. டிஜிட்டல் தங்கத்தின் விலை எப்போதும் நேரடியாக வாங்கும் நகை விலையை விட குறைவாக இருக்கும்.
இந்த பரிமாற்றத்தின் போது, வாடிக்கையாளர்கள் வரிகளின் அடிப்படையில் கூடுதல் பணத்தை செலுத்த வேண்டியிருக்கும். ஜிஎஸ்டி இரண்டு முறை விதிக்கப்படலாம். முதலில், டிஜிட்டல் தங்கத்தை வாடிக்கையாளருக்கு விற்கும்போது மற்றும் முழுமையடைந்த நகைகள் இறுதியாக மதிப்பிடும்போது.
ஆன்லைனில் விற்கப்படும் ஒவ்வொரு கிராம் டிஜிட்டல் தங்கமும் பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்படுவதாக விற்பனையாளர்கள் உறுதியளிக்கும் அதே வேளையில், வாடிக்கையாளர்கள் தங்களுடைய தங்கம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா எனச் சென்று சரிபார்க்க வழி இல்லை.
ஆகவே, தொற்றுநோய்க்குப் பின், மக்களுக்கு தங்களின் வாழ்வாதாரத்திற்காக செலவுகள் அதிகரிக்கும் அதே வேளையில், தங்க முதலீடு முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தங்க இறக்குமதி 677 சதவீதம் அதிகரித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













