டிஜிட்டல் உலகம்: உங்களைப் போலவே இருக்கும் செயற்கை நுண்ணறிவு சகோதரர் – விரைவில் நிஜமாகலாம்

டிஜிட்டல் இரட்டையர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உங்களைப் போலவே இருக்கும் டிஜிட்டல் இரட்டையரை உருவாக்கும் தொழில்நுட்பம் இன்னும் 10 ஆண்டுகளில் வரலாம் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.
    • எழுதியவர், ஜேன் வேக்ஃபீல்ட்
    • பதவி, பிபிசி தொழில்நுட்ப செய்தியாளர்

நம்மைப் போலவே ஒருவர் இருப்பதாக நம்மில் பலரிடமும் நம் நண்பர்கள் சொல்லியிருப்பார்கள். அது, நம் தோற்றத்தோடு பெரிதும் ஒத்துப்போகக்கூடிய உருவ அமைப்பைக் கொண்ட, அவர்கள் கடந்து வந்த யாரோ ஒரு நபராக இருக்கலாம்.

ஆனால், இப்படி கற்பனை செய்து பாருங்கள், உங்களுடைய சொந்த இரட்டையரை, உங்களின் சரியான நகலாக, அதேவேளை முற்றிலும் டிஜிட்டலில் வாழக்கூடிய ஒருவரை நீங்களே உருவாக்க முடிந்தால்?

நம்முடைய நகரங்கள், கார்கள், வீடுகள், ஏன் நாம் உட்பட, நிஜ உலகில் உள்ள அனைத்தையும் டிஜிட்டலில் பிரதிபலிக்கக்கூடிய யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பெரியளவில் விளம்பரப்படுத்தப்பட்ட, மெய்நிகர் டிஜிட்டல் உலகம், அங்கு உங்களைப் போலவே ஓர் அவதாரம் சுற்றித் திரியும், மெடாவெர்ஸை போலவே, டிஜிட்டல் இரட்டையர்கள் என்ற புதிய தொழில்நுட்ப டிரெண்டாக, பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.

டிஜிட்டல் இரட்டை என்பது நிஜ உலகிலுள்ள ஏதோவொன்றின் துல்லியமான பிரதி. ஆனால், இதற்கொரு தனித்துவமான பணி உண்டு. அது நிஜ வாழ்க்கையிலுள்ள உங்களை மேம்படுத்துவது அல்லது பிற வழிகளில் உங்களைப் பற்றிய கருத்துகளை வழங்க உதவ வேண்டும்.

ஆரம்பத்தில், அத்தகைய இரட்டையர்கள், அதிநவீன 3D கணினி மாதிரிகளாக, ஆனால் செயற்கை நுண்ணறிவுடன் இணைந்திருக்கும். இதில், இணையத்தோடு நிஜ உலக விஷயங்களை இணைப்பதற்கு சென்சார்களை பயன்படுத்துகிறது. இதன்மூலம், நீங்கள் இணையத்தில், நிஜ உலகிலுள்ள உங்களிடமிருந்து தொடர்ச்சியாகக் கற்றுக்கொண்டு, உங்களை மேம்படுத்திக்கொள்ள உதவக்கூடிய உங்களைப் போன்ற டிஜிட்டல் சகோதரரை உருவாக்கிக் கொள்ள முடியும்.

தொழில்நுட்ப ஆய்வாளர் ராப் எண்டெர்ல், "அடுத்த பத்து ஆண்டுகள் முடிவதற்குள்" சிந்திக்கும் திறனுடைய மனிதனின் டிஜிட்டல் இரட்டையர்களின் முதல் வெர்ஷன் நம்மிடம் இருக்கும் என்று நம்புகிறார்.

"இவற்றை உருவாக்குவதற்கு பெரியளவு சிந்தனை மற்றும் நெறிமுறை கருத்தியல் தேவைப்படும். ஏனெனில், நம்மைப் பற்றிய ஒரு சிந்தனைப் பிரதியை உருவாக்குவது, நாம் பணியாற்றும் நிறுவனங்களுக்கு நம்பமுடியாத அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் நிறுவனம் உங்களில் ஒரு டிஜிட்டல் இரட்டையரை உருவாக்கி, 'நாங்கள் சம்பளம் கொடுக்காத உங்களுடைய இந்த டிஜிட்டல் இரட்டையர் இருக்கும்போது, உங்களை ஏன் நாங்கள் வேலையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறினால் என்ன நடக்கும்?" என்று அவர் கூறுகிறார்.

மேலும், அத்தகைய டிஜிட்டல் இரட்டையர்களுக்கு உரிமை கோருதல் என்பது வரவுள்ள மெடாவெர்ஸ் சகாப்தத்தில் வரையறுக்கப்பட வேண்டிய கேள்விகளில் ஒன்றாக மாறும் என்று எண்டெர்ல் கருதுகிறார்.

ராப் எண்டெர்ல்

பட மூலாதாரம், Intel Free Press

படக்குறிப்பு, "இவற்றை உருவாக்குவதற்கு பெரியளவு சிந்தனை மற்றும் நெறிமுறை கருத்தியல் தேவைப்படும்" என்கிறார் ராப் எண்டெர்ல்

மேலே குறிப்பிடப்பட்ட அவதாரங்களின் வடிவத்தில், மனித இரட்டையரை நோக்கிய பயணத்தை நாம் ஏற்கெனவே தொடங்கிவிட்டோம். ஆனால், இவை தற்போது மிகவும் சிக்கலானவையாக உள்ளன.

உதாரணமாக, மெட்டாவின் (முன்பு ஃபேஸ்புக்) ஹொரைசான் வேர்ல்ட்ஸ் என்ற மெய்நிகர் ரியாலிட்டி பிளாட்ஃபார்ம், உங்கள் அவதாரத்திற்கு உங்கள் முகத்தோடு ஒத்த முகத்தை நீங்கள் கொடுக்கலாம். ஆனால், தொழில்நுட்பம் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், உங்களால் அவற்றுக்குக் கால்களை வழங்கமுடியாது.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவில் மூத்த ஆய்வாளரான பேரா.சாண்ட்ரா வாக்டர், டிஜிட்டல் இரட்டை மனிதர்களை உருவாக்கும் முயற்சியைப் புரிந்துகொள்கிறார், "இது அற்புதமான அறிவியல் புனைக்கதை நாவல்களை நினைவூட்டுகிறது. அதோடு, நாம் இப்போதுள்ள நிலையும் அதுதான்," என்கிறார்.

"யாராவது சட்டக் கல்லூரியில் வெற்றிகரமாக படிப்பை முடிக்கலாம், நோய்வாய்ப்படலாம் அல்லது ஏதும் குற்றத்தைச் செய்யலாம், அது அவர்களுடைய இயல்பு மற்றும் வளர்ப்பைப் பொறுத்தது, அவர்களுடைய நல்ல நேரம், கெட்ட நேரத்தைப் பொறுத்தது, நண்பர்கள், குடும்ப, சமூக-பொருளாதார பின்னணி, சுய முடிவுகள் ஆகியவற்றைப் பொறுத்தது.

ஆனால், இந்தக் குறிப்பிட்ட சமூக நிகழ்வுகளை, அவற்றின் உள்ளார்ந்த சிக்கலான தன்மையின் காரணமாக, செயற்கை நுண்ணறிவுகளால் கணிக்க முடியாது. எனவே, ஒரு நபரின் வாழ்க்கையை ஆரம்பம் முதல் இறுதி வரை புரிந்துகொண்டு, அதன் மாதிரியை உருவாக்கும் வரை, நாம் இந்த விஷயத்தில் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமாக உள்ளது," என்று கூறினார்.

அதற்கு பதிலாக, இதன் தயாரிப்பு வடிவமைப்பு, விநியோகம் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆகிய துறைகளில் உள்ளது. அங்கு டிஜிட்டல் இரட்டையர்களின் பயன்பாடு தற்போது மிகவும் அதிநவீனமாகவும் விரிவாகவும் உள்ளது.

பேரா.சாண்ட்ரா வாக்டர்

பட மூலாதாரம், Sandra Wachter

படக்குறிப்பு, நாம் இந்த விஷயத்தில் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமாக உள்ளது," என்று கூறினார் பேரா.சாண்ட்ரா வாக்டர்

ஃபார்முலா ஒன் போட்டியில், மெக்லாரன் மற்றும் ரெட் புல் அணிகள் தங்கள் ரேஸ் கார்களின் டிஜிட்டல் இரட்டையர்களைப் பயன்படுத்துகின்றன.

இதற்கிடையில், டெலிவரி நிறுவனமான டிஹெச்எல், அதன் கிடங்கு மற்றும் விநியோகச் சங்கிலிகளின் டிஜிட்டல் வரைபடத்தை உருவாக்கி, அவற்றின் செயல்பாடு மிகவும் திறமையாக இருக்க அனுமதிக்கிறது.

மேலும், அதிகளவில் நமது நகரங்கள் டிஜிட்டல் உலகில் பிரதிபலிக்கின்றன. ஷாங்காய், சிங்கப்பூர் ஆகிய இரண்டும் தத்தம் டிஜிட்டல் இரட்டையர்களைக் கொண்டுள்ளன. அவை, கட்டிடங்கள், போக்குவரத்து அமைப்புகள், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில், அந்த நகரத்தினுடைய டிஜிட்டல் இரட்டையரின் பணிகளில் ஒன்று, மாசுபடும் பகுதிகளைத் தவிர்த்து, மக்கள் செல்வதற்குப் புதிய வழிகளைக் கண்டறிய உதவுவதாகும். மற்ற இடங்களில் நிலத்தடிப் பாதைகள் போன்ற புதிய உள்கட்டமைப்பை எங்கு உருவாக்குவது என்று தெரிந்துகொள்ள இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். மத்திய கிழக்கில் புதிய நகரங்கள் நிஜ உலகிலும் டிஜிட்டல் முறையிலும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்படுகின்றன.

பிரெஞ்சு மென்பொருள் நிறுவனமான டசால்ட் சிஸ்டம்ஸ், அதன் டிஜிட்டல் இரட்டையர்கள் தொழில்நுட்பத்தின் மீது ஆர்வமுடைய ஆயிரக்கணக்கான நிறுவனங்களைப் பார்ப்பதாகக் கூறுகிறது.

நிஜ வாழ்வில் முடிவற்ற வகையில் முன்மாதிரிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, முடி பராமரிப்பு நிறுவனம் டிஜிட்டல் முறையில் அதிக நிலையான ஷாம்பு பாட்டில்களை வடிவமைக்க டிஜிட்டல் இரட்டையர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும் அந்த நிறுவனத்தின் பணிகள் உள்ளடக்கியுள்ளது. இது கழிவுகள் அதிகமாக உருவாவதைக் குறைக்கிறது.

ஃபார்முலா ஒன் போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃபார்முலா ஒன் போட்டியில், மெக்லாரன் மற்றும் ரெட் புல் அணிகள் தங்கள் ரேஸ் கார்களின் டிஜிட்டல் இரட்டையர்களைப் பயன்படுத்துகின்றன

ஜெட்பேக்குகள் முதல் மிதக்கும் சக்கரங்களைக் கொண்ட மோட்டார் பைக்குகள் மற்றும் பறக்கும் கார்கள் வரை, புதிய எதிர்கால திட்டங்களை வடிவமைக்க இது மற்ற நிறுவனங்களுக்கு உதவுகிறது.

ஒவ்வொன்றுக்கும் ஒரு நிஜ உலக முன்மாதிரி உள்ளது. ஆனால், அந்தத் தொடக்க மாதிரியில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் டிஜிட்டலில் நடைபெறுகிறது.

டிஜிட்டல் இரட்டையர் தொழில்நுட்பத்தின் உண்மையான மதிப்புமிக்க பயன்பாடு சுகாதாரத் துறையில் உள்ளது.

டசால்ட் நிறுவனத்தின் லிவிங் ஹார்ட் திட்டமானது, மனித இதயத்தின் துல்லியமான மெய்நிகர் மாதிரியை உருவாக்கியுள்ளது. இது பரிசோதனையையும் பகுப்பாய்வையும் செய்யக்கூடியது. அறுவை சிகிச்சை நிபுணர்கள், பல்வேறு நடைமுறைகள், மருத்துவ சாதனங்களைப் பயன்படுத்தி பல்வேறு சிகிச்சை முறைகளைச் செய்துபார்க்க இது அனுமதிக்கிறது.

இந்தத் திட்டம் டாக்டர் ஸ்டீவ் லெவின் என்பவரால் நிறுவப்பட்டது. அவர் டிஜிட்டல் இரட்டையை உருவாக்க விரும்புவதற்குத் தனிப்பட்ட காரணங்களைக் கொண்டிருந்தார். அவருடைய மகள் பிறவியிலேயே இதய நோயுடன் பிறந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர், அவர் 20-களின் பிற்பகுதியில், இதய செயலிழப்பு அபாயத்தில் இருந்தபோது, அவருடைய இதயத்தை மெய்நிகரில் உருவாக்க முடிவு செய்தார்.

ஷாங்காய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷாங்காய், சிங்கப்பூர் ஆகிய இரண்டும் தத்தம் டிஜிட்டல் இரட்டையர்களைக் கொண்டுள்ளன.

பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை இப்போது இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளியின் உண்மையான இதய நிலையைக் கண்டறிந்து வருகிறது. அதேநேரம், லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில், பொறியாளர்கள் குழு மருத்துவர்களோடு இணைந்து அரிதான மற்றும் கடினமான சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவக்கூடிய சாதனங்களைப் பரிசோதித்து வருகிறது.

டிஜிட்டல் இதயத்தில் பரிசோதனை செய்வது, அறிவியல் ஆராய்ச்சியின் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சங்களில் ஒன்றான, விலங்குகளிடம் பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தைக் குறைப்பதற்கும் வழிவகுப்பதாக டசால்ட்டின் உலகளாவிய விவகாரங்களுக்கான இயக்குனர் செவெரின் ட்ரூய்லெட் கூறுகிறார்.

இந்த நிறுவனம் இப்போது, கண், மூளை உட்பட அதிகளவிலான உறுப்புகளின் டிஜிட்டல் இரட்டையர்களை உருவாக்கத் திட்டமிடுகிறது.

"ஒரு கட்டத்தில் நம் அனைவருக்கும் டிஜிட்டல் இரட்டையர்கள் இருப்பார்கள். இதன்மூலம் நீங்கள் மருத்துவரிடம் செல்லும்போது, தடுப்பு மருந்துகளை, ஒவ்வொரு சிகிச்சையையும் தனிபட்ட முறையில் பயனளிக்கும் வகையில் உறுதிப்படுத்த முடியும்," என்கிறார் ட்ரூய்லெட்.

எர்த் 2

பட மூலாதாரம், Nvidia

படக்குறிப்பு, ஐரோப்பிய ஆணையம், இந்த கிரகத்தின் டிஜிட்டல் இரட்டையை உருவாக்கும் தனது திட்டங்களை அறிவித்தது.

மனித உறுப்புகளை நகலெடுப்பதை விட லட்சியம் மிக்கதாக, நம் முழு பூமியினுடைய டிஜிட்டல் பதிப்பை உருவாக்குவதற்கான போட்டி அமையலாம்.

அமெரிக்க மென்பொருள் நிறுவனமான நிவிடியா, மெய்நிகர் உலகங்கள் மற்றும் டிஜிட்டல் இரட்டையர்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆம்னிவெர்ஸ் என்ற தளத்தை இயக்குகிறது.

பூமியின் மேற்பரப்பின் அதிக தெளிவுகொண்ட ஒளிப்படத்தைப் பதிவு செய்து, அதன்மூலம் பூமியினுடைய டிஜிட்டல் இரட்டையை உருவாக்குவது, அதன் லட்சியம் மிக்க திட்டங்களில் ஒன்று.

எர்த்-2 என்ற அந்த டிஜிட்டல் உலகம், நிஜ சூழல்களைப் பிரதிபலிக்க, காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைக் கொண்டு வர, ஆழமான கற்றல் மாதிரிகள் மற்றும் நரம்பியல் தொடர்புகளின் கலவையைப் பயன்படுத்தும்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து, டெஸ்டினேஷன் எர்த் என்றழைக்கப்படும் இந்த கிரகத்தின் டிஜிட்டல் இரட்டையை உருவாக்கும் தனது திட்டங்களை அறிவித்தது.

2024-ஆம் ஆண்டின் இறுதியில், நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள், சுனாமிகள் போன்ற இயற்கைப் பேரிடர்களுடன், வெள்ளம், வறட்சி மற்றும் வெப்ப அலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் டிஜிட்டல் இரட்டையைப் பெறுவதற்குரிய வகையில், நிகழ்நேர அவதானிப்புகள் மற்றும் உருவகப்படுத்தல்களில் இருந்து போதுமான தரவுகள் கிடைக்கும் என்றும் இதன்மூலம் வளர்ந்துவரும் சவால்களை எதிர்கொண்டு உயிர்களைக் காப்பாற்ற உறுதியான திட்டங்களை உருவாக்க முடியும் என்றும் நம்புகிறது.

காணொளிக் குறிப்பு, கடன் செயலிகள் மூலம் மோசடி: தப்பிக்க என்ன வழி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: