கேரளாவில் பினராயி விஜயன், ஆரிஃப் கான் மோதல் வலுக்கிறது - இப்போது என்ன பிரச்னை?

ஆளுநர் ஆரிஃப் கான் பினராயி விஜயன்

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கேரளாவில் மாநில நிதியமைச்சர் பேசிய பேச்சு ஒன்றுக்காக அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

கேரளாவின் நிதியமைச்சர் கே.என். பாலகோபால் சமீபத்தில் வெளியிட்ட ஒரு கருத்து பிராந்தியவாதத்தைத் தூண்டுவதாகவும் இந்தியாவின் ஒற்றுமைக்குப் பாதகமாக இருப்பதாகவும் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் குற்றம்சாட்டிநார். பாலகோபால் பதவியில் நீடிப்பதற்கான தன் விருப்பத்தை விலக்கிக்கொண்டிருப்பதாகவும் அதனால், அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்குக் ஆளுநர் கடிதம் எழுதியிருக்கிறார்.

கேரளாவில் ஏற்கெனவே மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் மாநில அரசுக்கும் இடையே பல விவகாரங்களில் மோதல்கள் தொடரும் நிலையில், இந்த விவகாரம் இரு தரப்பு இணக்கமற்ற நிலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது குறித்து ஆளுநருக்கும் கேரள மாநில அரசுக்கும் இடையில் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கேரள பல்கலைக்கழகத்தின் கார்யவட்டம் வளாகத்தில் நடந்த ஒரு விழாவில் இது குறித்துப் பேசிய மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால், "உத்தர பிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு கேரளாவின் கல்வி அமைப்பு எப்படிச் செயல்படுகிறது எனத் தெரியாது" என்று கூறினார்.

சில வருடங்களுக்கு முன்னாள் உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு வன்முறையில் மாணவர்கள் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டி இதுபோல பேசியிருந்தார் பாலகோபால்.

ஆளுநரின் கோபத்துக்கு என்ன காரணம்?

கேரளாவின் ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, கேரளாவின் ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

"யார் சுட்டது தெரியுமா? துணை வேந்தரின் பாதுகாவலர்தான் சுட்டார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கு 50 முதல் 100 பாதுகாவலர்கள் உண்டு. அங்கிருக்கும் பல பல்கலைக்கழகங்களில் அப்படித்தான். பல்கலைக்கழகங்கள் இதுபோல செயல்படும் மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வருபவர்களுக்கு இங்குள்ள நிலைமையைப் புரிந்துகொள்வது கடினம். கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஜனநாயக அமைப்புகள். கல்வி ரீதியான விவாதங்களை நடத்தி, குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. இந்தியாவிலேயே மிகவும் வளர்ந்த பிராந்தியமான இந்த மாநிலம், கல்வியமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்" என்றார் பாலகோபால்.

பாலகோபாலின் இந்தப் பேச்சுதான் ஆளுநரை கடுமையாக எதிர்வினையாற்றத் தூண்டியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் பாலகோபாலனின் பேச்சு இடம்பெற்ற பத்திரிகை செய்திகளைத் தொகுத்த ஆளுநர், "ஆளுநர் பதவியின் கண்ணியத்தையும் ஆளுநரின் நன்மதிப்பையும் சிதைக்கும் நோக்கம் கொண்ட பேச்சு அது" என குறிப்பிட்டு கடிதம் ஒன்றை முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதினார்.

அந்தக் கடிதத்தில், "நிதியமைச்சர் பேசிய பேச்சு, கேரளாவுக்கும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மேலும், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான கல்வி அமைப்பைக் கொண்டிருக்கிறது என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது" என்று குறிப்பிட்டார். மேலும், தான் பதவியேற்கும்போது எடுத்துக்கொண்ட வாக்குறுதிக்கு மாறாக பாலகோபால் செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார் ஆளுநர்.

ஆகவே, பாலகோபால் அமைச்சர் பதவியில் நீடிப்பது தொடர்பாக தனது "விருப்பத்தைத் திரும்பப்பெறுவதால்" (Withdrawn his pleasure) அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும்படி கோரியிருந்தார்.

கேரளாவின் நிதியமைச்சர் கே.என். பாலகோபால்

பட மூலாதாரம், Facebook / KN Balagopal

படக்குறிப்பு, கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 164ன்படி, முதலமைச்சரின் ஆலோசனைப்படி ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார். ஆளுநர்களின் விருப்பம் உள்ளவரை அவர்கள் அமைச்சர்களாக நீடிப்பார்கள் என்று குறிப்பிடுகிறது. இந்த அடிப்படையிலேயே ஆளுநர் தனது கடிதத்தை எழுதியிருக்கிறார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கையை ஆளும் கட்சியான சி.பி.எம்மும் எதிர்க்கட்சியான காங்கிரசும் கடுமையாக விமர்சித்துள்ளன. ஆளுநரின் விருப்பம் என குறிப்பிடப்பட்டிருப்பதைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு, தான் விரும்பும்படி அமைச்சர்களை நீக்க வலியுறுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் சி.பி.எம்மின் மாநிலச் செயலரான எம்.வி. கோவிந்தன்.

"முதல்வரின் விருப்பமே முக்கியம்"

மேலும், "பாலகோபாலின் சமீபத்திய பேச்சில், தனிப்பட்ட முறையில் ஆளுநரைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஒருவர் அமைச்சரவையில் நீடிப்பதற்கு ஆளுநரின் தனிப்பட்ட விருப்பம் தேவையில்லை என முதலமைச்சர் பதிலளித்திருக்கிறார். முதல்வரின் விருப்பமே இதில் முக்கியமானது. சட்டத்தில் 'விருப்பம்' என குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து உச்ச நீதிமன்றம் பல முறை விளக்கிவிட்டது" என்று கூறியிருக்கிறார் கோவிந்தன்.

மாநில எதிர்க்கட்சித் தலைவரான வி.டி. சதீசனும் ஆளுநரைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். "கேள்வியே கேட்கக்கூடாது என்பதற்கு அவர் ஒன்றும் கடவுளில்லை" என்று சொல்லியிருக்கிறார் அவர்.

ஆளுநர் சங்க பரிவாரங்களின் திட்டங்களை கேரள பல்கலைக்கழங்களில் புகுத்தப் பார்ப்பதால் அவரை எதிர்த்து மாநிலம் முழுவதும் நவம்பர் 15ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஆளும் இடது ஜனநாயக முன்னணி அறிவித்திருக்கிறது. தலைநகரில் ஆளுநர் மாளிகைக்கு முன்பாகவும் மற்ற இடங்களில் மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும் என கூறப்பட்டிருக்கிறது.

கேரள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக மாநில அரசுக்கும் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே மோதல் இருந்து வருகிறது.

கேரளாவில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ராஜஸ்ரீ என்பவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது நியமனம் முறைப்படி நடக்கவில்லை என கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீன் பி.எஸ். ஸ்ரீஜித் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் குழுவானது, "பரிசீலனைக்காக 3 முதல் 5 பேர் கொண்ட பட்டியலைத் தர வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் கூறுகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் அப்படிச் செய்யாததால், அந்த நியமனம் செல்லாது" என்று கூறியது.

தேர்வுப் பட்டியலில் முதலில் ஸ்ரீஜித்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது. பிறகு, டாக்டர் ராஜஸ்ரீயின் பெயர் மட்டும் கொண்ட பரிந்துரை கடிதம் அப்போதைய ஆளுநர் சதாசிவத்திற்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் ராஜஸ்ரீயை துணைவேந்தராக நியமித்தார். இதனை எதிர்த்துத்தான் பி.எஸ். ஜித் வழக்குத் தொடர்ந்தார்.

கேரளாவின் பல பல்கலைக்கழகங்களில் இது போல துணை வேந்தர் நியமனங்கள் நடந்திருந்ததால், அந்த 9 பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்களும் தங்களுடைய பதவிகளை திங்கட்கிழமைக்குள் ராஜினாமா செய்ய வேண்டுமென தற்போதைய ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் கடிதம் அனுப்பினார். அவர்கள் ராஜினாமா செய்யாத நிலையில், தனது கடிதத்தை விளக்கம் கோரும் கடிதமாகக் கருதி நவம்பர் 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமெனத் தெரிவித்திருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்த 9 பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்களைத் தேர்வுசெய்யும் தேர்வுக் குழுக்கள் ஒரே ஒரு பெயரை மட்டும் ஆளுநருக்கு அனுப்பியது. சில தேர்வுக் குழுக்களில் தலைமைச் செயலர் இடம்பெற்றது போன்றவை பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் ராஜிநாமா கோரியிருப்பதாக ஆளுநர் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் பல்கலைக்கழகம் சார்ந்த மற்றொரு நடவடிக்கையாக கேரளப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களை நீக்கிவிட்டு, புதிய உறுப்பினர்களை நியமிப்பதாகவும் ஆளுநர் அறிவித்திருக்கிறார். கேரள பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவை உருவாக்க ஆட்சி மன்றக் குழு கூட்டத்தைக் கூட்டவேண்டுமென பல முறை வலியுறுத்தியும் அந்தக் கூட்டம் நடைபெறாததால், இந்த நடவடிக்கையை ஆளுநர் மேற்கொண்டிருக்கிறார்.

அரசியலமைப்பின் 164ஆவது விதி என்ன சொல்கிறது?

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

பட மூலாதாரம், Screengrab

படக்குறிப்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டம்

அமைச்சரை நீக்கும் விவகாரத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 164ஐ மேற்கோள்காட்டுகிறார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான். அந்தப் பிரிவு முதலமைச்சரின் நியமனம் பற்றியும் அமைச்சர்களின் நியமனம் பற்றியும் கூறுகிறது.

164வது பிரிவின் முதல் விதி இதுதான்: முதலமைச்சரை ஆளுநர் நியமிப்பார். மற்ற அமைச்சர்களை முதலமைச்சரின் பரிந்துரையின்பேரில் ஆளுநர் நியமிப்பார். ஆளுநரின் விருப்பமுள்ளவரை அமைச்சர்கள் பதவி வகிக்க முடியும்

(The chief Minister shall be appointed by the Governor and the other Ministers shall be appointed by the Governor on the advice of the Chief Minister, and the Ministers shall hold office during the pleasure of the Governor.)

"இதில் ஆளுநரின் விருப்பம் என்பது முதலமைச்சரின் விருப்பம்தான். எதற்காக இந்த விதி இருக்கிறதென்றால், ஒருவர் ஒரு முறை அமைச்சரான பிறகு, ஐந்தாண்டுகளும் தான் அமைச்சராகத்தான் இருப்பேன் என சொல்ல முடியாது. முதல்வர் விரும்பும்வரையில்தான் இருக்க முடியும் என்பதை உணர்த்தத்தான் இந்த விதி இருக்கிறது. இங்கு pleasure of Governor என்பதை முதல்வரின் விருப்பம் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்தில் ஒரு அமைச்சர், மன்னரால் நீக்கப்பட்டிருக்கிறார். நவீன ஜனநாயகத்தில் அதற்கெல்லாம் இடமே கிடையாது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான கே. வெங்கடரமணன்.

காணொளிக் குறிப்பு, பினராயி விஜயன் - கைத்தறி நெசவாளர் முதல் கேரளத்தின் முதல்வர் வரை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: