இந்தியா - பாகிஸ்தான்: 75 ஆண்டுகளுக்கு பிறகு பேரனால் இணைந்த இரு குடும்பங்கள் - நெகிழ்ச்சிக்கதை

பட மூலாதாரம், BBC/Kavita Puri
- எழுதியவர், கவிதா புரி
- பதவி, பிபிசி நியூஸ்
75 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் இந்தியா, இந்தியா மற்றும் பாகிஸ்தானாகப் பிரிந்தது. அப்போது, தங்கள் வீடுகளை விட்டுவிட்டு வெளியேறிய லட்சக்கணக்கான குடும்பங்களில், ஸ்பர்ஷ் அஹுஜாவின் குடும்பமும் ஒன்று.
சிறுவயதில் அவருடைய குடும்பம், எங்கிருந்து இந்தியாவுக்குள் குடிபுகுந்தது என்பது பற்றிக் கூறுமாறு ஸ்பர்ஷ் அஹுஜா வலியுறுத்தும் வரை, அவருடைய தாத்தா அது குறித்து வாய் திறக்கவே இல்லை.
மதம், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை ஆகியவற்றால் பல தசாப்தங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த இரண்டு குடும்பங்கள் மீண்டும் சேருவதற்கு இது வழிவகுத்தது.
ஸ்பர்ஷ் தனது உள்ளங்கையில் மூன்று சாம்பல் நிற கூழாங்கற்களை வைத்துள்ளார். அவை அவருக்கு விலைமதிப்பற்றவை. அவருடைய முன்னோர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்த நிலத்தோடு அவருக்கு இருக்கும் ஒரே தொடர்பு அந்தக் கூழாங்கற்கள் தான்.
தன்னுடைய தாத்தா இஷார் தாஸ் அரோராவை பார்க்க ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பர்ஷ் இந்தியா வந்திருந்தார். அப்போது தான் அந்தக் கற்களுக்கான அவருடைய பயணம் தொடங்கியது.
அந்த முதியவர், உருது மொழியில் தனது குறிப்புகளை எழுதுவதை ஸ்பர்ஷ் கவனித்தார். பாகிஸ்தானின் அதிகாரபூர்வ மொழியாக உருது இருந்தது. அவருடைய தாத்தா பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர் என்பதை ஸ்பர்ஷ் நன்கு அறிந்திருந்தார். ஆனால், அதைப் பற்றிய விவரங்கள் அவருக்குப் பெரிதாகத் தெரியாது. அந்தக் காலகட்டத்தைப் பற்றி குடும்பத்தில் யாரும் அதுவரை பேசவில்லை என்கிறார் ஸ்பர்ஷ்.
"தொலைக்காட்சியிலோ நாங்கள் விளையாடும் போர்ட் கேம் விளையாட்டின்போதோ, எதிலாவது பாகிஸ்தான் பற்றி ஏதாவது பேச்சு வந்தால், குடும்பத்தில் உடனே ஓர் அமைதி நிலவும்."
தாத்தாவின் கடந்த காலம்
ஸ்பர்ஷ் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஒரு மாலை வேளையில், சதுராங்க விளையாட்டின்போது, அவர் தனது தாத்தாவிடம் அவருடைய குழந்தைப் பருவத்தைப் பற்றியும் யாரும் வாய்விட்டுப் பேசாத அந்த பூர்விக இடத்தைப் பற்றியும் கேட்கத் தொடங்கினார்.


"தாத்தா மிகவும் தயங்கினார். இரண்டாவது முறை கேட்டதற்கு அவர் 'இது முக்கியமில்லை. அதைப் பற்றி உனக்கென்ன கவலை?' என்று கேட்டார்."
ஆனால், மெல்ல மெல்ல, ஸ்பர்ஷ் ஒருவராவது ஆர்வம் காட்டுகிறாரே என்ற மகிழ்ச்சியில் அவருடைய தாத்தா மனம் திறந்து பேசினார்.
அழகான வெள்ளைச் சட்டையை அணிந்து, தலைமுடியை நேர்த்தியாகச் சீவிக்கொண்டு, இஷார் அவருடைய குடும்ப வரலாறு குறித்து நிலவிய அமைதியைத் தனது பேரனிடம் உடைத்தார்.
திருப்பத்தை ஏற்படுத்திய தாத்தாவின் கதை
ஸ்பர்ஷ் 20-களின் மத்திய வயதில் இருக்கிறார். அவர் சிந்தனைமிக்கவர், தனது வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்துப் பேசுபவர். அன்று அவருடைய தாத்தாவுடன் நடந்த உரையாடல் அவருடைய வாழ்வையே மாற்றியது.
கிழக்கு லண்டனில் உள்ள பிரேக் லேனில் அவருடைய வீட்டில் அவரைச் சந்தித்தேன். 1940ஆம் ஆண்டு பஞ்சாபில் ஜாண்ட் அருகே இருக்கும் முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட கிராமமான பெலாவில் தான் பிறந்ததாகத் தனது தாத்தா கூறியதை ஸ்பர்ஷ் விளக்கினார். தாத்தாவின் பெற்றோர் சாலையோரத்தில் கடலை விற்கும் சிறு கடை ஒன்றை நடத்தி வந்தனர்.
பிரிவினையின்போது இஷாருக்கு ஏழு வயது. அப்போது கிராமத்தின் மீது தாக்குதல்கள் நடந்தன.
- 1947ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா மத அடிப்படையில் பிரிக்கப்பட்டது. இந்து பெரும்பான்மை இந்தியா மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை உள்ள மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான் (பிறகு வங்கதேசம்).
- இந்தப் பிரிவினை போர் மற்றும் பஞ்சம் தவிர்த்து, வரலாற்றில் மிகப்பெரிய இடப்பெயர்வை உருவாக்கியது. சுமார் 1-1.2 கோடி மக்கள் இரு தரப்பிலிருந்தும் புலம்பெயர்ந்தனர்.
- வன்முறையில் சுமார் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்துக்களான இஷார் மற்றும் அவருடைய குடும்பத்தினர், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரான கிராமத் தலைவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் கும்பல் இந்துக்களைத் தேடி கதவைத் தட்டியபோது, கிராமத் தலைவர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். அங்கிருந்து இன்று அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் டெல்லிக்கு இஷாரின் குடும்பம் எப்படிக் குடிபெயர்ந்தது என்பது அவருக்கு நினைவில் இல்லை.
இந்தக் கதையை முழுமையாகக் கேட்டபோது, பாகிஸ்தானில் தனது தாத்தாவின் குழந்தைப் பருவம், அவருடைய இந்து தாத்தா ஒரு முஸ்லிம் மனிதரால் காப்பாற்றப்பட்டது மற்றும் இந்தியாவுக்கு இடையே புதிதாக உருவான அந்தப் புதிய எல்லைத் தாண்டி இடம் பெயர்ந்தது ஆகியவை ஸ்பர்ஷ் மீது ஏதோவொரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் தனது தாத்தாவை நன்றாகத் தெரிந்துகொண்டது அதுவே முதல் முறை என்று உணர்ந்தார்.
ஆனால், அது அவரை மற்றுமொரு வேலையைச் செய்யத் தூண்டியது. "நான் அந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று எனக்கு உடனடியாகத் தோன்றியது. எங்களில் ஒருவர் திரும்பிச் சென்று, அந்த இடத்தை மீண்டும் பார்க்காமல் எங்கள் குடும்பத்தின் கதை முழுமையடையாது என்று எனக்குத் தோன்றியது."

பட மூலாதாரம், Sparsh Ahuja
பிறகு, ஸ்பர்ஷ் தனது தாத்தாவிடம் தான் பெலா செல்ல விரும்புவதாகக் கூறினார். இஷார், "இல்லை, இது பாதுகாப்பானதல்ல. இங்கேயே இரு. அங்கே என்ன இருக்கிறது?" என்று கூறியுள்ளார்.
ஆனால், அது ஸ்பர்ஷை தடுக்கவில்லை. சொல்லப்போனால், அவருக்கு ஆர்வம் இன்னும் கூடியது. ஏனெனில், இஷார் தனது பேரன் அங்கு சென்றுவிட்டுத் திரும்பி வருவாரா என்று அஞ்சியிருந்தபோது, ஸ்பர்ஷ் ஒன்றைக் கவனித்தார். அவருடைய தாத்தா பெலா கிராமத்தை இன்னமும் தனது "வீடு" என்றே அழைத்தார்.
ஸ்பர்ஷ் பாகிஸ்தானுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். "என்னில் ஒரு பகுதி அங்கு இருக்கிறது. நான் இந்தியாவில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்து, பிரிட்டனில் பல்கலைக்கழகப் படிப்பு மற்றும் பணி என்று பல நாடுகளில் வாழ்ந்துள்ளேன். ஆனால், இங்கிருந்து தான் நான் வருகிறேன் என்று சொல்லும் அளவுக்கு ஓர் இடம் இருப்பதாக நான் உணரவில்லை. அதனால் என் வாழ்கைப் புதிரில் ஒரு பகுதியைக் காணாததைப் போல் நான் உணர்ந்தேன்."
மூதாதையர் வீட்டுக்குப் பயணம்
மார்ச் 2021இல், ஸ்பர்ஷ் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லமாபாதில் இருந்தார். 100 கிமீ தொலைவில் உள்ள அவருடைய மூதாதையர் வீட்டிற்கான பயணத்தை, ஒரு நாள் அதிகாலையில் தொடங்கினார். அவர் பாரம்பர்ய நீல நிற சல்வார் கமீஸ் மற்றும் ஒரு வெள்ளை தலைப்பாகை அணிந்திருந்தார். அவர் தனது கொள்ளு தாத்தாவான, இஷாரின் தந்தையின் படத்தைப் பார்த்துள்ளார்.
ஆகவே, தனது கொள்ளு தாத்தாவைப் போலவே அங்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார். இரண்டு நபர்களோடு டாக்சியில் புறப்பட்டார். டாக்சியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஸ்பர்ஷ், தனது தாத்தா பழைய நினைவுகளை வைத்து வரைந்து கொடுத்த வரைபடத்தைக் கையில் வைத்திருந்தார்.

பட மூலாதாரம், Sparsh Ahuja
"என் தாத்தா ஒரு மசூதி, ஒரு நதி மற்றும் 'எதிரொலி மலை' என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்பட்ட ஒரு மலையை வரைந்தார். அவர்கள் அங்கு சென்று தங்கள் பெயரைக் கத்துவார்கள். அந்த மலை மீண்டும் அதை எதிரொலிக்கும். ஆனால், அந்தத் தகவலை என் கூகுள் மேப்பில் குறிப்பிட்டுத் தேட முடியாது," என்று நினைவுகூர்ந்தபடி ஸ்பர்ஷ் சிரிக்கிறார்.
நீண்ட பயணத்தில் ஸ்பர்ஷ் அமைதியாக இருந்தார். "அங்கு சென்று பார்க்கையில் அங்கு எதுவும் இல்லையென்றால் என்ன செய்வது என்று நான் மிகவும் பயந்தேன். அப்படியிருந்திருந்தால், நான் மிகவும் உடைந்து போயிருப்பேன்," என்று அதுகுறித்துக் கூறுகிறார்.
படிப்படியாக, மலைகள் அதிகமாகின, சாலைகள் சீரற்றவையாக மாறின. இஷார் விவரித்ததைப் போலவே பூமி சிவப்புக் களிமண்ணாக மாறியது. பின்னர், ஜன்னல் வழியாக, ஒருமுறை அவருடைய கொள்ளுப் பாட்டி செய்ததைப் போல சாலையோரத்தில் மக்கள் வேர்க்கடலை விற்பதைக் கண்டார்.
அவர்கள் ஓடும் நதியைக் கொண்ட ஓர் அழகிய பசுமையான பள்ளத்தாக்கை அடைந்தனர். பழ மரங்கள், உலவும் மாடுகள், மண் குடிசைகள் இருந்தன. ஒரு பலகையில் பெலா என்று எழுதப்பட்டிருந்தது.
காரை விட்டு இறங்கிய ஸ்பர்ஷ், தனது பஞ்சாபி மொழியில், ஒரு வயதான பெண்மணியிடம், தான் அங்கு வந்துள்ள காரணத்தை விளக்கினார். "அந்தப் பெண்மணி, 'ஓ எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் கிராமத் தலைவரால் உங்களுக்கு வழிகாட்ட முடியும்' என்றார்."

பட மூலாதாரம், Sparsh Ahuja
அவர்கள் கிராமத்திற்குள் சென்றபோது, அதிகமான உள்ளூர்வாசிகள் ஸ்பர்ஷை கவனித்தனர். "அவர்கள், 'ஏன் இந்த கார் இங்கு வருகிறது?' என்பதைப் போல் பார்த்தனர். மேலும், இந்த விஷயம் மிக விரைவாகப் பரவியது. கிராமம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. நான் மூன்றாம் பகுதிக்கு வந்தபோது, யாரோ ஒருவர் ஊருக்குள் காரில் உலவிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து மக்கள் ஒருவரையொருவர் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்."
ஸ்பர்ஷ் கிராமத் தலைவரைக் கண்டுபிடித்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பெலாவை சேர்ந்த ஒருவர் தனது தாத்தாவின் உயிரை கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு காப்பாற்றியதை விளக்கினார்.
"அவர் மிகவும் அமைதியாகிவிட்டு, பிறகு, 'நீங்கள் என் தந்தையைப் பற்றிப் பேசுகிறீர்கள்' என்று கூறினார்."
கிராமத் தலைவர் வயதானவர். பிரிவினையின்போது அவர் சிறுவனாக இருந்தார். அவர் ஸ்பர்ஷின் தாத்தா மற்றும் அவருடைய குடும்பத்தை நினைவில் வைத்துள்ளதாக ஸ்பர்ஷிடம் கூறினார். உணர்ச்சிவசப்பட்ட ஸ்பர்ஷ், "உங்கள் அப்பா இல்லையென்றால், நான் இங்கு இல்லை," என்று அவரிடம் கூறினார்.
அந்த கிராமத் தலைவர், அவருடைய மகன் மற்றும் பேரனைச் சந்திக்க ஸ்பர்ஷை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் ஒன்றாகத் தேநீர் அருந்தினர். ஸ்பர்ஷ் தனது குடும்பம் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பதைப் பற்றிய கதையைக் கேட்டார். ஏற்கெனவே கேட்ட கதை தான், ஆனால் இந்த முறை, அவர்களைக் காப்பாற்றிய சந்ததியினரின் கண்ணோட்டத்தில்.
அப்போது அவர்கள் ஸ்பர்ஷிடம் காட்டுவதற்கு ஏதோவொன்று இருப்பதாகச் சொன்னார்கள்.

பட மூலாதாரம், Sparsh Ahuja
இஷாரை காப்பாற்றியவரின் பேரனும் கொள்ளுப் பேரனும் ஸ்பர்ஷின் கைகளைப் பிடித்துக்கொண்டும் கிராமம் முழுவதும் நடந்தனர். அவர்கள் ஒரு முற்றத்தை அடைந்தபோது, அதன் விளிம்பில் ஒரு கட்டடம் இருந்தது. அப்போது பேரன் ஸ்பர்ஷிடம், "உன் தாத்தா இந்த மசூதிக்குப் பக்கத்தில் தான் வாழ்ந்துகொண்டிருந்தார்," என்று கூறினார்.
உணர்ச்சிமிகுந்த தருணம்
பிறகு, ஒரு மண் செங்கல் வீட்டைக் காட்டி, அந்த இடத்தில் தான் இஷார் வாழ்ந்ததாக விளக்கினார். ஸ்பர்ஷ் அதன் மையத்தை நோக்கிச் சென்று, தனது தலையையும் இரண்டு உள்ளங்கைகளையும் தூசி படிந்த பூமியில் வைத்தார். இறுதியில், அவர் எழுந்து நின்றபோது, ஒரு இந்து, ஒரு முஸ்லீம், அந்த இரண்டு பேரன்களும் கட்டித் தழுவினர்.
அந்தத் தருணத்தை நினைத்துப் பார்க்கையில் இப்போதும் ஸ்பர்ஷின் உடல் சிலிர்க்கிறது. அது தனக்கு மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்ததாகவும் அவர் கண்ணீர் விட்டு அழுததாகவும் கூறுகிறார்.
"நான் என் பூர்விகத்தை இறுதியாக வந்து சேர்ந்ததைப் போல் உணர்ந்தேன். இரண்டு நாடுகளும் இருக்கும் நிலையில், இது என் வாழ்நாளில் சாத்தியமாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை."
பெலாவுக்கு செல்வதற்கு முன், எதையோ இழந்ததைப் போன்று கோபமாக உணர்ந்துள்ளதாகக் கூறுகிறார். ஆனால், ஒருமுறை தனது பூர்வீக நிலத்தைப் பார்த்தபிறகு, "அந்த நாளுக்குப் பிறகு அந்த நெருப்பு தணியத் தொடங்கிவிட்டது," என்கிறார்.
"தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளியால் ஏற்பட்ட மன அழுத்தத்தை" ஓரளவுக்கு விட்டுவிட முடிந்ததாக ஸ்பர்ஷ் கூறுகிறார்.
"ஏனெனில், என் குழந்தைகளுக்கு நான் சொல்லும் கதை 'இங்கிருந்துதான் நாங்கள் வந்தோம். எங்களால் திரும்பிப் போக முடியவில்லை' என்பதல்ல. 'இந்த நிலத்தை இழந்தோம். ஆனால், பிறகு நாங்கள் திரும்பிச் சென்றோம்' என்று அந்தக் கதையைக் கூறும்போது, அந்தக் கதைக்கு ஒரு முடிவு இருக்கிறது."

பட மூலாதாரம், BBC/Kavita Puri
அவர் கிராமத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், ஸ்பர்ஷ் தனது முன்னோர்கள் வாழ்ந்த இடத்திலிருந்து சில சாம்பல் கூழாங்கற்களை எடுத்துத் தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.
அன்றிரவு இஸ்லமாபாத்துக்கு திரும்பியவர் தனது தாத்தாவுக்கு வாட்ஸ் ஆப் செய்தார். இஷார், "நான் உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன். நீன் என் தாய்மண்ணைத் தொட்டுள்ளாய், அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது," என்று பதிலளித்தார்.
பிரிவினையின் இந்த அதிர்ச்சிகரமான கதையை மீண்டும் எழுத மூன்று தலைமுறைகள் தேவைப்பட்டன.
தற்போது இந்தியா, பாகிஸ்தானில் உள்ள இரண்டு குடும்பத்தினரும் வாட்ஸ் ஆப்பில் இணைந்துள்ளனர். தங்கள் முன்னோர்கள் ஒன்றாக வாழ்ந்த கிராமத்தில் இருந்தபோது செய்ததைப் போலவே, அவர்கள் அவரவர் பண்டிகைகளின் போது ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
ஆனால், அரசியல் ரீதியாக விஷயங்கள் பதட்டமாக இருக்கும்போது, அவரது தாத்தா வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொள்வதை நிறுத்திக் கொள்வதாக ஸ்பர்ஷ் கூறுகிறார்.
கடந்த ஆண்டு, ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியது இஸ்லாத்திற்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டு பெலாவிலுள்ள கிராமத் தலைவரின் இளைய உறவினர் ஒருவர் பதிவிட்டிருந்த சமூக ஊடக பதிவை நினைவுகூர்ந்தார். ஸ்பர்ஷ் அவருக்கு, "உங்கள் பதிவைப் பார்த்து நான் மிகவும் வருந்தினேன் சகோதரரே. இதுபோன்ற தீவிரவாதத்திலிருந்து தப்பிக்கவே என் நானா(தாத்தா) கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது," என்று எழுதினார்.
பாகிஸ்தானில் உள்ள கிராமத் தலைவரின் குடும்ப உறுப்பினர், அது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இல்லையென்று கூறி மன்னிப்பு கேட்டார். "இது சிக்கலானது," என்று ஸ்பர்ஷ் கூறுகிறார். மேலும் சிக்கலானது, ஸ்பர்ஷின் குடும்பத்திலுள்ள சிலர் முஸ்லீம் விரோத மனப்பான்மையைக் கொண்டுள்ளனர் மற்றும் ஆளும் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கின்றனர்.

பட மூலாதாரம், Sparsh Ahuja
ஆனால், குறைந்தபட்சமாக இரு தரப்புக்கும் இடையே ஓர் உரையாடல் நிகழ்கிறது.
தனது தாத்தாவுடனான அனுபவம், ஸ்பர்ஷையும் சில பல்கலைக்கழக நண்பர்களையும் ஒரு படி மேலே செல்லத் தூண்டியது. அவர்கள் பிராஜெக்ட் தஸ்தானை அமைத்தனர். இது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் புலம்பெயர்ந்தோர் வரலாற்றில் தொலைந்து போன இடங்களை மீண்டும் பார்வையிடுவதற்கு, விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. சமீபத்தில், ஸ்பர்ஷ் இஷாருக்கு ஹெட்செட் போட்டுவிட்டு, ஒரு மெய்நிகர் சுற்றுலாவில் பெலாவுக்கு அழைத்துச் சென்றார். அவருடைய பழைய வீட்டிற்கு அருகிலுள்ள மசூதி, ஒரு காலத்தில் அவரது வீடு இருந்த நிலம் மற்றும் அந்த எதிரொலிக்கும் மலையைக் காட்டினார்.
இப்போது 82 வயதில், இஷார் மீண்டும் பெலாவுக்கு நேரில் செல்ல நினைக்கிறார். ஆனால், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் என்பதால், பாகிஸ்தான் எல்லையைக் கடப்பது மிகவும் கடினம்.
ஸ்பர்ஷ் விலைமதிப்பற்ற பெலா கூழாங்கற்களில் ஒன்றைத் தனது தாத்தாவிடம் கொடுத்தார். அவர் அதைத் தனது படுக்கைக்கு அருகில் வைத்திருந்தார். மற்ற இரண்டு கூழாங்கற்களையும் வைத்து இரண்டு நெக்லஸ்களை செய்தார். அதில், ஒன்று இஷாருக்கு, மற்றொரு ஸ்பர்ஷுக்கு.
ஸ்பர்ஷ் தனது நெக்லஸை தனது வருங்கால குழந்தைகளிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.
"ஒரு தெற்காசியனாக, உங்கள் மண், உங்கள் தாயகம் என்பது முழுக்கவே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. இது நம்மைப் பிரித்துக் கொள்ளக்கூடிய விஷயமல்ல. அந்தக் கூழாங்கற்கள் என் முன்னோர்கள். நான் பத்திரமாக வைத்துக்கொள்ளக்கூடிய எனது கடந்த காலத்தின் ஒரு பகுதி."


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













