பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய சொத்து மதிப்பு வெளியீடு - 'அசையா சொத்துகள் ஏதும் இல்லை'

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இன்று (10.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

பிரதமர் நரேந்திர மோதியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் ரூ. 26.13 லட்சம் அதிகரித்து, 2022, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ. 2 கோடி 23 லட்சத்து 82 ஆயிரத்து 504 ஆக உள்ளது என்று 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் அலுவலக இணையதளத்தில், பிரதமர் நரேந்திர மோதியின் சொத்து விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது,

பிரதமர் மோதி, குஜராத் முதல்வராக இருந்தபோது, கடந்த 2002-ம் ஆண்டு வீட்டு மனை ஒன்றை, நான்கு பேருடன் சேர்ந்து வாங்கினார். அதில் இவரது பங்கு 25 சதவீதம். ரூ.1.1 கோடி மதிப்பிலான அந்த இடத்தை பிரதமர் மோதி தானமாக அளித்துவிட்டார். அதனால் அவரிடம் தற்போது அசையா சொத்துகள் எதுவும் சொந்தமாக இல்லை.

பிரதமரிடம் ரொக்கம் ரூ.35 ஆயிரத்து 250 உள்ளது. அவர் தபால் அலுவலகத்தில் வைத்துள்ள தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் மதிப்பு ரூ.9 லட்சத்து 5 ஆயிரத்து 105. அவர் வைத்திருக்கும் ஆயுள் காப்பீடுகளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 305.

இதேபோல் மத்திய அமைச்சர்கள் சிலரும் தங்கள் சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ரூ.2.54 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.2.97 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளன.

மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜோதிர் ஆதித்யா சிந்தியா, ஆர்.கே.சிங், ஹர்தீப் சிங் பூரி, பர்சோத்தம் ரூபாலா மற்றும் ஜி.கிஷன் ரெட்டி ஆகியோரும் தங்களின் கடந்த நிதியாண்டு சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் மின்சார கட்டணங்கள் 75 சதவீதம் அதிகரிப்பு

இலங்கையில் மின் கட்டணம் உயர்வு

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் புதிய மின்சார கட்டணங்கள் 75 சதவீதம் அதிகரிப்பதற்கான அனுமதியை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு வழங்கியுள்ளதாக 'வீரசேகரி' இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. இந்த புதிய மின்சார கட்டணங்கள் இன்று முதல் (ஆக்ஸ்ட 10) அமுல்படுத்தப்படும்.

மேலும், நாட்டில் டாலரின் கையிருப்பை அதிகரிப்பதன் நோக்கில் மின்சார கட்டணத்தை டாலரில் செலுத்தினால் 1.5 சதவீத தள்ளுபடி கொடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

உண்மையிலேயே, 229 வீதம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சார சபையால் முன்மொழியப்பட்ட யோசனையை நாம் 75 வீதமாக மட்டுப்படுத்த தீர்மானித்தோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த புதிய கட்டண அளவீட்டு முறையில் வீட்டில் பயன்படுத்துவோருக்கு 120 அலகுகள் வரையில் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 0 முதல் 30 வரையிலான அலகுகளை பயன்படுத்துபவர்களுக்கு 264 சதவீதமும், 31 தொடக்கம் 60 வரையிலான அலகுகளை பயன்படுத்துபவர்களுக்கு 211 சதவீதமும், 61 தொடக்கம் 90 வரையிலான அலகுகளை பயன்படுத்துபவர்களுக்கு 125 சதவீதமும், 91 தொடக்கம் 120 வரையிலான அலகுகளை பயன்படுத்துபவர்களுக்கு 89 சதவீதமும், 121 தொடக்கம் 180 வரையிலான அலகுகளை பயன்படுத்துபவர்களுக்கு 79 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு தலைவரால் மட்டும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது - மோகன் பகவத்

மோகன் பகவத்

பட மூலாதாரம், Getty Images

ஓர் அமைப்பு, ஒரு கட்சி, ஒரு தலைவரால் மட்டும் நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் தெரிவித்துள்ளதாக 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் விதர்பா சாகித்திய சங்கம் என்ற மராத்திய இலக்கிய அமைப்பின் நூற்றாண்டு விழாவில் செவ்வாய்க்கிழமையன்று அவர் பேசியதாவது:

நாட்டில் உள்ள அனைத்து சவால்களையும் ஒரு தலைவரால் மட்டுமே சமாளிக்க முடியாது. அவா் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அவரால் அதைச் செய்ய முடியாது.

ஓர் அமைப்பு, ஒரு கட்சி, ஒரு தலைவரால் மட்டும் நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. மாற்றத்தைக் கொண்டுவர அமைப்பு, கட்சி மற்றும் தலைவரால் உதவி செய்யப்படுகிறது. சாமானிய மனிதன் எழுந்து நிற்கும்போதுதான் மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை - தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியமாக 1,000 ரூபாய் வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு

இலங்கை தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாவை வழங்குமாறு தீர்ப்பளித்துள்ளது இலங்கை ​மேல் முறையீட்டு நீதிமன்றம். உரிமையாளர்கள் சம்மேளத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்துள்ளதாக 'தமிழ் மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது.

1000 ரூபாய் சம்பளம் வழங்கும் இலங்கை அரசின் யோசனையை ரத்து செய்யக் கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாளிகள் சம்மேளனம் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவே, செவ்வாய்கிழமையன்று (ஆக்ஸ்ட் 9) தள்ளுபடி செய்யப்பட்டது.

அத்துடன், நாள் சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை 22 நிறுவனங்களும் கடைப்பிடிக்கவேண்டும். தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியம் 1000 ரூபாயை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: