ஐஇஎல்டிஎஸ் மோசடி: அமெரிக்காவில் சிக்கிய குஜராத்தி மாணவர்கள் - வெளிச்சத்துக்கு வந்த ஊழல்

குஜராத் ஐஇஎல்டிஎஸ் மோசடி

பட மூலாதாரம், Dipa Sidana

படக்குறிப்பு, அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த இளைஞர்கள் அனைவரும் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் 'மிகச் சிறந்த' என்ற நிலையை குறிக்கும் எட்டாம் பேண்ட் பெற்றதற்கான சான்றிதழ்களை வைத்துள்ளனர்
    • எழுதியவர், பார்கவ பரிக்
    • பதவி, பிபிசி குஜராத்திக்காக

இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் "ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களுடன்" அமெரிக்க நீதிபதி முன்பு அந்நாட்டு காவல்துறையினரால் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி ஆங்கிலத்தில் விசாரித்தபோது, "நோ இங்க்லீஷ், ஒன்லி பிளஸ்டூ பாஸ்" (எங்களுக்கு ஆங்கிலம் வராது, பிளஸ்டூ மட்டுமே பாஸ் செய்துள்ளோம்) என்று கூறினர்.

அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த இளைஞர்கள் அனைவரிடமும் சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை எனப்படும் 'ஐஇஎல்டிஎஸ்' தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் இருந்தன. ஆனால் அவர்களால் ஆங்கிலத்தை சரியாக பேசவோ புரிந்துகொள்ளவோ ​​முடியவில்லை.

இதையறிந்த நீதிபதி அதிர்ச்சியடைந்து, இது குறித்து மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

பல குஜராத்தி இளைஞர்கள் வெளிநாட்டில் குடியேறி பணம் சம்பாதிக்க ஆர்வமாக உள்ளனர். எதையாவது செய்து வெளிநாட்டில் தங்கள் தொழில் வாழ்க்கையைத் தொடங்கும் எண்ணத்திலும் சிலர் அமெரிக்கா செல்ல விரும்புகின்றனர்.

அமெரிக்க காவல்துறையினரால் பிடிபட்ட நான்கு இளைஞர்களும் கனடாவில் இருந்து செயின்ட் ரெஜிஸ் ஆற்றின் வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது, ​​அவர்களது படகு கவிழ்ந்துள்ளது. இதையடுத்து மயிரிழையில் உயிர் தப்பிய அவர்களை அமெரிக்க காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

போலீசார் அவர்களிடம் ஆங்கிலத்தில் விசாரித்தனர், ஆனால் அந்த இளைஞர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

அப்போதுதான் இவர்கள் ஆங்கிலம் தெரிந்ததாக வைத்திருக்கும் சான்றிதழை முறைகேடாப் பெற பணம் கொடுத்ததும் அதை மோசடியான வகையில் வாங்கித் தர ஒரு கும்பல் இந்தியாவில் இயங்கி வந்ததும் அம்பலமானது.

இந்த இளைஞர்கள் அமெரிக்காவில் தொழில் செய்ய வேண்டும் என்கிற தீவிர ஆசையில் ஐஈஎல்டிஎஸ் சான்றிதழ் பெற்று கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

line
line

'அமெரிக்காவுக்குள் செல்வது கடினம்'

குஜராத் ஐஇஎல்டிஎஸ் மோசடி

பட மூலாதாரம், Dipa Sidana

படக்குறிப்பு, இந்த வழக்கின் விசாரணை அதிகாரி பாவேஷ் ரத்தோர்

இதையடுத்து குஜராத்தில் உள்ள மெஹ்சானா காவல் நிலைய போலீஸாருக்கு இந்த விவகாரத்தை குறிப்பிட்டு விசாரணை நடத்தும்படி அமெரிக்க தூதரகம் கேட்டுக் கொண்டது.

இது குறித்து உள்ளூர் குற்றப்பிரிவின் காவல் ஆய்வாளரும் வழக்கின் விசாரணை அதிகாரியுமான பாவேஷ் ரத்தோட்டிடம் பிபிசி குஜராத்தி பேசியது.

"இந்தி மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் பிடிபட்ட இளைஞர்களின் வாக்குமூலம் அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 22ஆம் தேதி இந்தியாவில் இருந்து கனடா வந்ததாக அந்த இளைஞர்கள் கூறியுள்ளனர். ஏப்ரல் 28ஆம் தேதி அவர்கள் ஒரு முகவர் உதவியுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோது, ​​அவர்கள் சென்ற படகு மூழ்கத் தொடங்கியது. அவர்களை அமெரிக்க போலீசார் மீட்டுள்ளனர்," என்றார் பாவேஷ்.

"அமெரிக்க நீதிபதி இந்த வழக்கை குற்றவியல் மோசடி விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்தார். அதன்பேரில் மும்பையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் இந்த வழக்கை விசாரிக்கும்படி எங்களை கேட்டுக் கொண்டது," என்று அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து இதுவரை நடந்த விசாரணை விவரங்களை பகிர்ந்த ஆய்வாளர் ரத்தோட், "இந்த வழக்கில் திட்டமிட்ட சதி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு இளைஞர்களும் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி தெற்கு குஜராத்தின் நவ்சாரி நகரில் உள்ள ஒரு விடுதியில் நடந்த ஐஇஎல்டிஎஸ் தேர்வில் கலந்து கொண்டனர். தேர்வு அதிகாரிகளின் வாக்குமூலத்தை நாங்கள் பெற்றுள்ளோம். சிசிடிவி காட்சிகளையும் சேகரித்துள்ளோம்" என்றார்.

மேலும் அவர், "குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆமதாபாதில் உள்ள பிளானட் கல்வி நிறுவனம் மூலம் தேர்வெழுதியுள்ளனர். அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளோம். ஐஇஎல்டிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பதாரர்களை தயார்படுத்தும் சில ஆசிரியர்களிடம் பேசியபோது, தொலைதூர மையத்தில் நடைபெறும் ஐஇஎல்டிஎஸ் தேர்வில், தேர்வை எழுதும் நபர் விடைத்தாளின் முதல் பக்கத்தில் மட்டுமே பதிலை எழுதுகிறார். மீதமுள்ள பக்கங்களில் எழுதுவதில்லை. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது," என்று ஆய்வாளர் ரத்தோட் கூறினார்.

இந்த வழக்கை மேலும் விசாரிக்க ஹரியாணாவில் உள்ள குருகிராமுக்கு தனிப்படை அனுப்பப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் கனடாவுக்கு அனுப்பிய மெஹ்சானாவின் இரண்டு முகவர்களையும் போலீசார் கண்டுபிடித்துள்ளதாகவும் ஆய்வாளர் ரத்தோட் கூறினார்.

line
line

இந்த விவகாரத்தில், ஆமதாபாத்தில் இந்தியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் தனியார் ஏஜென்சிகளின் தலையீட்டின் சாத்தியத்தை காவல்துறை நிராகரிக்கவில்லை.

வேறு வழக்கு, வேறு கும்பல்

இதுபோன்ற மற்றொரு வழக்கில், அமெரிக்கா மற்றும் கனடாவில் கல்வி விசா வாங்கியது தொடர்பாக ஆமதாபாதில் உள்ள நவரங்புரா பகுதியில் உள்ள டிராவல் எஜுகேஷன் என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த் சுதர், ரவி சுதர் ஆகிய இரு சகோதரர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த இரு சகோதரர்களும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக 1.5 கோடி ரூபாயை மிரட்டிப் பணம் பறித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர, அமெரிக்கா செல்ல விரும்பிய 32 வயது இளைஞரை மிரட்டி 55 லட்சம் ரூபாய் பறித்ததாக மெஹ்சானாவில் உள்ள வாட் நகரைச் சேர்ந்த டிராவல் ஏஜென்ட் மனோஜ் செளத்ரி மீது நவரங்புரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மகன் வெளிநாடு சென்ற காரணத்தை அறியாத பெற்றோர்

குஜராத் ஐஇஎல்டிஎஸ் மோசடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா செல்ல முயன்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி காப்பாற்றப்பட்டனர்

மெஹ்சானாவில் உள்ள மங்கனாஜ் கிராமத்தில் இருந்து அமெரிக்கா சென்ற துருவ் படேல் என்ற இளைஞனின் பெற்றோரை பிபிசி குஜராத்தி தொடர்பு கொண்டது.

தொலைபேசி மூலம் நடந்த அவர்களுடனான உரையாடலில், துருவின் தந்தை ரசிக்பாய் படேல் பேசினார்.

"நான் ஒரு சிறு விவசாயி. என்னிடம் பணம் ஏதும் இல்லை. என் மகன் என்னிடம் பணம் கேட்டதில்லை. அமெரிக்காவுக்கு படிக்கப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றதில் இருந்து என் மகனுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் இன்று வரை ஒரு போன் கூட செய்யவில்லை," என்று ரசிக்பாய் படேல் கூறினார்.

துருவின் தாய் தக்ஷாபஹேன் படேல் கூறுகையில், "எனது மகன் படிக்க வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வமாக இருந்தான். அவன் என்ன படிக்கிறான், எங்கு படிக்கிறான் என்று எங்களுக்கு எதுவும் தெரியாது. எப்படி வெளிநாடு போனான், யாருடன் போனான் என்றும் தெரியாது. தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். ஆனால் என்ன படிக்கிறார் என்பது கூட எங்களுக்குத் தெரியாது," என்கிறார்.

தமது அடையாளத்தை வெளியிட விரும்பாத ஆசிரியர் பிபிசி குஜராத்தியிடம் பேசும்போது, "எங்கள் கிராமத்தில், சிறுவர்களின் கல்வியறிவு விகிதம் 93% ஆகும். துருவ் ஒரு ஏழை விவசாயியின் மகன். கிராமத்தில் தனது ஆரம்பக் கல்விக்குப் பிறகு, மேல் கல்விக்காக ஆமதாபாத் சென்றார். துருவுக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவர் பல முகவர்களை சந்தித்தார். வெளிநாடு செல்வதற்கு தேவையான ஆவணங்களை சொந்தமாக தயாரித்து வைத்திருந்தார். அவருக்கு ஆங்கிலம் குறைவாக இருந்ததால் வெளிநாடு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினேன். துருவ் எப்படி வெளிநாடு சென்றார் என்று தெரியவில்லை," என்றார்.

அந்த ஆசிரியர், "வடக்கு குஜராத்தில் இருந்து பல இளைஞர்கள் உள்ளூர் முகவர்கள் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்கிறார்கள். அவர்கள் சம்பாதிக்கவே வெளிநாடு சென்றிருப்பர். ஆனால் எப்போது, ​​​​யாருடன் சென்றனர் என்பது தெரியாது," என்றார்.

ஆமதாபாதின் ராணிப் பகுதியில் வசிக்கும் மெஹ்சானாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பயண முகவர் பிபிசி குஜராத்தியிடம் பேசினார்.

"ஆமதாபாதின் நியூ வதாஜ், ராணிப் மற்றும் காட்லோடியா பகுதிகளில் செயல்படும் மெஹ்சானா முகவர்கள் மூலம் ஒரு நபருக்கு 55 லட்சம் ரூபாய் முதல் 60 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள். ஆரம்பத்தில் பாதி பணம் வாங்கப்படும். மீதியை வெளிநாட்டை அடைந்த பிறகு கொடுக்க வேண்டும்," என்கிறார் அந்த முகவர்.

மேலும், "வெளிநாட்டில் உள்ள தனது இலக்கை பாதுகாப்பாக அடைந்து விட்டதாக வீடியோ அழைப்பு மூலம் அந்த நபர் நிரூபித்த பிறகே மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும். அந்த நபர் மீதமுள்ள தொகையை செலுத்த மறுத்தால், அவரது கடவுச்சீட்டு அவருக்கு திருப்பித் தரப்படாது, அதனால் அவர் இந்தியாவுக்குத் திரும்ப முடியாது," என்றும் அந்த முகவர் தெரிவித்தார்.

''இந்த விவகாரத்தில் தொடர்புடைய டிராவல் ஏஜென்ட்கள், 'பாஸ்போர்ட் சிண்டிகேட் வங்கியை' உருவாக்கியுள்ளனர். நிலுவைத் தொகையை செலுத்த மறுப்பவர்களிடம் இருந்து வாங்கப்படும் கடவுச்சீட்டு, அந்த 'வங்கி'யில் வைக்கப்படும். சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நபர், ஹவாலா மூலம் நிலுவைத் தொகையை அனுப்பிய பிறகு, அவர்களது கடவுச்சீட்டு திருப்பித் தரப்படுகிறது," என்கிறார் அவர்.

பிபிசி குஜராத்தியிடம் பேசிய மெஹ்சானாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சமூகவியல் பேராசிரியர் ஜே.டி.படேல், "வடக்கு குஜராத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டவில்லை. கிராம நிலத்தின் விலை உயர்வால் சில இளைஞர்கள் விவசாய நிலத்தை விற்று அந்த பணத்தில் தொழில் தொடங்குகின்றனர். அத்தகைய இளைஞர்களுக்கு திருமணம் ஆவதும் கடினம், ஏனென்றால் அவர்களின் சமூகத்தின் படித்த பெண்கள் அத்தகைய இளைஞர்களை திருமணம் செய்ய தயாராக இல்லை. அதுவே இளைஞன் குறைந்த கல்வியறிவு பெற்றிருந்து வெளிநாட்டில் வசிக்கிறார் என்றால், அவரை பெண்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்கிறார்கள். இதனாலும் ஆட்கள் வெளியூர் செல்வதற்காக விவசாய நிலங்களை விற்கின்றனர்," என்கிறார்.

"சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற இளைஞர்கள் கை நிறைய சம்பாதித்துவிட்டு நாடு திரும்புகிறார்கள். அவர்களைப் பார்த்து மற்ற இளைஞர்களும் வெளிநாடு செல்லத் தூண்டப்படுகிறார்கள்" என்கிறார் படேல்.

લાઇન
காணொளிக் குறிப்பு, ஆந்திராவில் அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசும் அரசுப் பள்ளி மாணவர்கள்
લાઇન

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: