அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவிலுள்ள டெக்சாஸின் சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் இடம்பெயர்ந்து குடியேறியவர்கள் என்று நம்பப்படும் சுமார் 46 பேர் இறந்து கிடந்தனர்.
நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிர் பிழைத்தவர்கள், "தொடுவதற்கே சூடான நிலையில்" இருந்தனர். வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) மற்றும் வெப்ப சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டனர்.
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இருந்து 250கி.மீ தொலைவிலுள்ள சான் அன்டோனியோ, ஆட்கடத்தல்காரர்களுக்கான முக்கியமான போக்குவரத்துப் பாதை.
ஆட்கடத்தல்காரர்கள், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்த பிறகு, அவர்களை தொலைதூரப் பகுதிகளில் அவர்களைச் சந்தித்து, ஏற்றிச் செல்ல அடிக்கடி லாரிகளைப் பயன்படுத்துகின்றனர்.
"அவர்களுக்கு குடும்பங்கள் இருந்தன. அவர்களுக்கான ஒரு சிறந்த வாழ்க்கையைக் கண்டுபிடிக்க முயன்றிருக்கலாம். இதுவொரு பயங்கரமான துயரம்," என்று சான் அன்டோனியோ மேயர் ரான் நிரன்பெர்க் கூறினார்.
அவசரக்கால முதல்நிலை கவனிப்பை வழங்கக்கூடியவர்கள் ஆரம்பத்தில் உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 6 மணியளவில் இறந்தவர்களைப் பற்றிய தகவலறிந்த பின்னர், சம்பவ இடத்திற்கு வந்ததாக சான் அன்டோனியோ தீயணைப்புப் பிரிவின் தலைவர் சார்லஸ் ஹூட் செய்தியாளர்களிடம் கூறினார்.
"ஒரு லாரியைத் திறக்கும்போது அதற்குள் நாங்கள் இறந்த உடல்களின் அடுக்குகளைப் பார்த்திருக்கக்கூடாது. நாங்கள் யாரும் அதைக் கற்பனை செய்துகொண்டு வேலைக்கு வருவதில்லை," என்று அவர் கூறினார்.
டிரைவரால் கைவிடப்பட்ட வாகனத்தில் குளிரூட்டும் வசதியில்லை என்றும் அதற்குள் குடிநீர் இல்லை என்றும் அவர் கூறினார்.
KSAT என்ற உள்ளூர் தொலைக்காட்சி சேனலின்படி, சான் அன்டோனியோவின் தென்மேற்குப் பகுதியில் ரயில் பாதைகளுக்கு அடுத்ததாக வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறை, தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் உட்பட ஏராளமான அவசர உதவியாளர்கள் பெரிய லாரியைச் சுற்றியிருப்பதைக் காண முடிந்தது.

ஒரு பயங்கரமான காட்சி
சான் அன்டோனியோவில் ஏஞ்சலிகா கசாஸ்
இப்போது இருட்டாக உள்ளது. மேலும் சில சட்ட அமலாக்க வாகனங்களும் இருண்ட சாலையைச் சுற்றி வளைத்திருக்கும் காவல்துறையின் சில டேப்புகளும் மட்டுமே இதுவொரு பெரிய உயிரிழப்பு நிகழ்வின் காட்சி என்பதைத் தெளிவாக்குகிறது.
பாதிக்கப்பட்டவர்கள், புலம்பெயர்ந்தவர்களாகக் கருதப்பட்டு, வெப்பச் சோர்வு அல்லது உடலில் நீரிழப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம்.
சற்று தொலைவிலுள்ள ஒரு மரம் வெட்டும் ஆலையின் காவலாளியான எட்வர்ட் ரெய்னா, தனது இரவு பணிக்கு வந்து இதைக் கேட்டபோது, இந்தச் செய்தியைக் கேட்பதில் ஆச்சர்யமில்லை என்றார்.
லாரி கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் செல்லும் ரயிலில் இருந்து புலம்பெயர்ந்தோர் குதிப்பதை எத்தனை முறை பார்த்திருப்பார் என்ற கணக்கையே அவர் இழந்துவிட்டார்.

"விரைவிலோ அல்லது தாமதமாகவோ யாராவது இதில் காயப்படுவார்கள் என்று நான் நினைத்தேன். அவர்களைக் கொண்டு வரும் சட்டவிரோத குழுக்கள் அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை," என்று எட்வர்ட் ரெய்னா கூறினார்.
இந்தக் கதை இதற்கு முன்பு சான் அன்டோனியோவில் நிகழ்ந்துள்ளது, ஆனால் இந்த அளவுக்கு இல்லை.
2017-ஆம் ஆண்டில், நகரின் தெற்குப் பகுதியிலும், வால்மார்ட்டுக்கு வெளியே இதேபோன்ற டிராக்டர் டிரெய்லருக்குள் 10 புலம்பெயர்ந்தோர் இறந்து கிடந்தனர்.
சான் அன்டோனியோவின் தெற்குப் பகுதியானது டெக்சாஸ் எல்லை நகரங்களுடன் இந்த நகரத்தை இணைக்கும் இரண்டு முக்கிய நெடுஞ்சாலைகளைக் கொண்ட ஒரு நடைபாதையாகும்.
சான் அன்டோனியோவின் இந்தப் பகுதியில் பெரும்பாலும் கிராமப்புற சமூகங்கள், ஒரு சில குப்பைத் தொட்டிகள்
குப்பைத் தொட்டிகளும் ஒரு சில வளர்ந்து வரும் சுற்றுப்புறங்களும் பெரும்பாலும் கிராமப்புறமாகவும் இருக்கும் இந்தப் பகுதி, இவ்வளவு பெரிய லாரி யாராலும் கவனிக்கப்படாமல் செல்வதை, இப்படியொன்று நடக்காத வரை, எளிதாக்குகிறது.

அரசியல் பிரச்னையாகவுள்ள புலம்பெயர் குடியேற்றம்
அதே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சான் அன்டோனியோவின் காவல்துறை தலைவர் வில்லியம் மேக்மனுஸ், இதன் விசாரணை திங்கள் கிழமை மாலை, மத்திய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மூன்று பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
மெக்சிகோவின் வெளியுறவு அமைச்சர் மார்செலோ எப்ரர்ட், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் குவாட்டமாலா நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் இருப்பதாகக் கூறினார். பாதிக்கப்பட்ட மற்றவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை தெரிய வரவில்லை.
டெக்சாஸின் குடியரசுக் கட்சி ஆளுநர் கிரெக் ஆப்போட், "அவரது கொடிய திறந்த எல்லைக் கொள்கைகளால் ஏற்பட்ட விளைவு" என்று இதை விவரித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இந்த மரணங்களுக்குக் குற்றம் சாட்டினார்.
ஆப்போட்டுக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பெடோ ஒரௌர்க், இது பெரும் வேதனையைத் தருவதாகவும், "ஆட்கடத்தல் வளையங்களை அகற்றி, சட்டப்பூர்வ இடப்பெயர்வுக்கான விரிவாக்கப்பட்ட வழிகளை மாற்றுவதற்கு" அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
"அமெரிக்க வரலாற்றில் கொடிய சம்பவமாக இருக்கலாம்"
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புச் செயலர் அலெஜாண்ட்ரோ மயோர்காஸ், இதன் விசாரணையைத் தன் துறைக்கு எடுத்துக்கொண்டார். அவர், "ஆட்கடத்தல்காரர்கள், லாபம் ஈட்டுவதற்காக குடியேறுபவர்களைச் சுரண்டி ஆபத்தில் தள்ளக்கூடிய, அவர்களால் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பொருட்படுத்தாத, இரக்கமற்ற நபர்கள்," என்று கூறினார்.
அமெரிக்காவில் மே மாதத்தில் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த பதிவு செய்யப்படாத 239,000 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதில் பலர் மிகவும் ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற பாதைகளில் பயணம் செய்தனர்.

பட மூலாதாரம், Reuters
ஹொண்டுராஸ், குவாட்டமாலா மற்றும் எல் சால்வடார் போன்ற மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்து கடந்து வருவதால், 2021 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட 1.73 மில்லியன் எல்லை கைதுகளின் எண்ணிக்கையை விட அதிகளவிலான எல்லை கைதுகளைச் செய்யும் நிலையில் அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் உள்ளார்கள்.
மத்திய அமெரிக்காவில் வறுமை மற்றும் வன்முறையிலிருந்து தப்பித்து, ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களில் பலர், அமெரிக்க எல்லையைத் தாண்டி வருவதற்காக ஆட்கடத்தல்காரர்களுக்குப் பெரும் தொகையைச் செலுத்துகிறார்கள்.
சமீபத்திய ஆண்டுகளில், புலம்பெயர்ந்தோர் தங்கள் பயணத்தின்போது உயிரிழந்ததற்கு இதேபோன்ற பல உதாரணங்கள் உள்ளன. ஆனால், திங்கள் கிழமையன்று கண்டுபிடிக்கப்பட்டதைப் போல எந்தவொரு கொடிய நிகழ்வும் இதுவரை இல்லை.
இந்தத் துயர சம்பவம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சான் அன்டோனியோவின் கத்தோலிக்க பேராயர் குஸ்தாவோ கார்சியா-சில்லர், "ஆண்டவரே அவர்கள் மீது கருணை காட்டுங்கள். அவர்கள் சிறந்த வாழ்க்கையை எதிர்பார்க்கிறார்கள். மீண்டுமொரு முறை, குடியேற்ற சீர்திருத்தத்தை கையாள்வதற்கான தைரியமின்மை உயிர்களைக் கொன்று அழிக்கிறது," என்று ட்வீட் செய்தார்.
சான் அன்டோனியோவில் இருந்து பிபிசியிடம் பேசிய கென்5 உள்ளூர் செய்தியாளர் மாட் ஹூஸ்டன், "இந்தச் சம்பவத்தைப் பற்றி இப்போது வரையுள்ள புரிதலின்படி, இது மனித கடத்தல் சம்பவமாக இருந்தால், அமெரிக்க வரலாற்றில் மிகவும் கொடிய சம்பவமாக இது இருக்கும்," என்று கூறினார்.
அமெரிக்காவுக்குள் நுழையும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் கடுமையானவை என்று அவர் கூறினார். அதுமட்டுமின்றி, சமீபத்திய நாட்களில் அப்பகுதி வெப்ப அலைகளால் தாக்கப்பட்டது. கோடை மாதங்களில் சான் அன்டோனியோ மிகவும் வெப்பமாக இருக்கும். திங்கள் கிழமையன்று 39.4 டிகிரி செல்ஷியஸ் (103F) வெப்பநிலையை அடைகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













