45 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலான திருமண ஒப்பந்தம்

திருமண புகைப்படம்

பட மூலாதாரம், WEDLOCK_PHOTOGRAPHY_ASSAM

பொதுவாக திருமண ஒப்பந்தம் என்பது நகைச்சுவை விஷயமல்ல. ஆனால் அசாமில் ஒரு தம்பதியினர் தங்களின் திருமணத்தின்போது கையெழுத்திட்ட ஒரு நகைச்சுவையான திருமண ஒப்பந்தம் வைரலாகியுள்ளது.

அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட செய்யவேண்டியவை செய்யக் கூடாதவை பட்டியல்தான் அந்த வீடியோ வைரல் ஆவதற்கு காரணம்.

திருமணம் நடந்த அடுத்த நாளான ஜூன் 22 ஆம் தேதி அந்த காணொளி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுவரை அந்த காணொளியை 45 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இதற்கு முன்பு இம்மாதிரியான சில திருமண ஒப்பந்தங்கள் வைரலாகியுள்ளன. ஆனால் இந்த திருமண ஒப்பந்தம் வைரலானதற்கு முக்கிய காரணம் அதில் செய்ய வேண்டியவை பட்டியலில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயம்.

'அதில் மாதத்திற்கு ஒரே ஒரு பீட்சா மட்டுமே; என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவுரை 24 வயது மணப்பெண்ணான ஷாந்தி பிரசாத்திற்கானது. ஏனென்றால் பிசா என்றால் அவருக்கு அத்தனை பிரியம் என்கின்றனர் அவரது நண்பர்கள். இவர் 25 வயது மிண்டு ராயை அசாம் மாநிலம் கெளஹாத்தியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒன்றாக ஒரே கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அங்கு இருவரும் ஒரே வாட்சப் குரூப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். பின்பு ஷாந்தி ஒருநாள் வகுப்பிற்கு விடுமுறை எடுக்கவே வாட்சப் குரூப்பில் பாடம் குறித்து உதவி கோரியுள்ளார். அப்போது மிண்டுதான் அவருக்கு உதவியுள்ளார்.

அதன்பின் இருவரும் 2018ஆம் ஆண்டிலிருந்து பழக தொடங்கினர்.

"அவர் எப்போதும் பீட்சா குறித்தே பேசிக் கொண்டு இருப்பார். எங்களது கடைசி நாள் வகுப்பிற்கு நாங்கள் செல்லாமல் இருவரும் வெளியே சென்றோம். ஆனால் அவரை ஒரு பீட்சா கடைக்குதான் நான் அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்," என்கிறார் மிண்டு.

இவர் தற்போது மின்சார சாதனங்கள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

"எனக்கு பீட்சா என்றால் மிகவும் பிடிக்கும். நாங்கள் இருவரும் எப்போது வெளியே சென்றாலும் பீட்சா சாப்பிட செல்லலாம் என்றுதான் நான் சொல்லுவேன்.ஆனால் நாட்கள் கழிந்த பிறகு மிண்டுவுக்கு பீட்சா பிடித்திருந்தாலும் அவரால் தினமும் அதை உண்ண முடியவில்லை. அதுகுறித்து சலித்து கொள்ள தொடங்கிவிட்டார்," என்கிறார் மணப்பெண் சாந்தி.

திருமண புகைப்படம்

பட மூலாதாரம், WEDLOCK_PHOTOGRAPHY_ASSAM

"அவர் நீ எத்தனை பீட்சாக்களை சாப்பிடுவாய்? வேறு ஏதேனும் சாப்பிடலாம் வா, என்று கூறுவார். எங்களது நண்பர்களிடமும் இதுகுறித்து சலித்து கொள்வார். நாளடைவில் இதை வைத்து அவர்கள் எங்களை பகடி செய்ய தொடங்கிவிட்டனர்," என்கிறார் ஷாந்தி.

"ஷாந்தி தூங்கும்போதுகூட பீட்சா பற்றியே நினைத்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன்," என தம்பதியனரின் நண்பரும் இந்த ஒப்பந்தம் குறித்த யோசனையை முதலில் வெளிப்படுத்தியவருமான ராகவ் தாக்கூர் தெரிவிக்கிறார்.

"நாங்கள் 2017ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த போதிலிருந்து நண்பர்களாகவுள்ளோம். அவர்களின் காதல் மலர்ந்த தருணத்தை நாங்கள் கண்டிருக்கிறோம். அவர்களுக்கு என தனித்துவமாகவும், மறக்க நிலையாத பரிசாகவும் ஏதேனும் வழங்க வேண்டும் என்று நினைத்தோம்," என பிபிசியிடம் தெரிவித்தார் ராகுல்.

"எங்கள் நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து அந்த ஒப்பந்தத்தை தயாரித்தோம். ஷாந்திக்கு பீட்சா மிகவும் பிடிக்கும் என்பதால் அதை பட்டியலில் முதலில் சேர்த்தோம்." என்கிறார் ராகுல்

பீட்சா தவிர்த்து வேறு சில விஷயங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

"ஞாயிறு வேளைகளில் மிண்டுதான் சமைக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஷாந்தியை ஷாப்பிங் கூட்டிச் செல்ல வேண்டும். பார்ட்டிகளுக்கு மனைவியுடன் மட்டுமே செல்ல வேண்டும். ஷாந்தி தினம் ஜிம்மிற்கு செல்ல வேண்டும். ஷாந்தி புடவையில் அழகாக இருப்பார் என்று மிண்டு அடிக்கடி கூறுவதால் ஷாந்தி தினமும் புடவை அணிய வேண்டும், இதுமாதியான விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன," என்கிறார் ராகுல்

"எங்களின் நண்பர்கள் எங்களை நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்பது எங்களுக்கு தெரியும் ஆனால் இந்த பரிசை நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என்கிறார் ஷாந்தி.

நண்பர்களுக்குள் நகைச்சுவையாக கொடுக்கப்பட்ட ஒரு பரிசு குறித்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதும் அது வைரலானது.

திருமண புகைப்படம்

பட மூலாதாரம், COURTESY: SHANTI RAI

ஆனால் தாங்கள் திருமண கொண்டாட்டங்களில் இருந்ததால் இதுகுறித்து இரண்டு மூன்று நாட்கள் கழித்தே தங்களுக்கு தெரியவந்தது என்கிறார் ஷாந்தி.

இவர்கள் இந்த ஒப்பந்தத்தை ஃப்ரேம் போட்டு வீட்டுச் சுவரில் மாட்ட விரும்புகின்றனர்.

ஆனால் இதில் இருக்கும் விஷயங்களை சாந்தி நிச்சயம் கடைப்பிடிக்க மாட்டார் என்பது தனக்கு தெரியும் என்கிறார் மிண்டு.

"அவர் அதை நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக் கொள்கிறார். ஷாந்தி நிச்சயம் பிசா உண்பதை நிறுத்த மாட்டார் என்கிறார்." மிண்டு

ஷாந்தியும் அதை ஆமோதிக்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: