இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் இத்தனை அறைகள், வசதிகளா? - அதிகம் அறியப்படாத தகவல்கள்

குடியரசு தலைவர் மாளிகையின் மைய குவி மாடம்
படக்குறிப்பு, இந்திய குடியரசு தலைவர் மாளிகை
    • எழுதியவர், பரணி தரன்
    • பதவி, பிபிசி தமிழ்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவன், இந்தியாவின் வலிமை, அதன் ஜனநாயக மரபுகள் மற்றும் மதசார்பற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இங்குள்ள விசாலமான அறைகள், நெடுந்தூண்கள், ஆங்கிலேயர் காலத்து வலுவான கட்டடக்கலைக்கும் திறமைக்கும் இப்போதும் சான்றாக உள்ளது.

இந்த ராஷ்டிரபதி பவன் என்பது கற்பனைக்கு உயிரூட்டக்கூடிய மற்றும் தலைசிறந்த கட்டடக் கலைஞர்களாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கருதப்பட்ட சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரின் படைப்பாற்றலால் உருவாக்கப்பட்டது.

330 ஏக்கர் எஸ்டேட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆங்கில எழுத்தில் 'ஹெச்' வடிவில் இந்த கட்டடம் காட்சியளிக்கிறது. இந்த மாளிகையில் மொத்தம் 340 அறைகள், நான்கு தளங்கள், 2.5 கிலோமீட்டர் தூரத்துக்கான நடக்கும் பாதைகள் மற்றும் 190 ஏக்கரில் அழகான தோட்டங்கள் உள்ளன.

இத்தனை கட்டமைப்பையும் கொண்ட இந்த கட்டடம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய வைஸ்ராயின் வசிப்பிடமாக இருக்க வேண்டும் என்பதால், மிக, மிக அதிக கவனத்தை செலுத்தி இந்த கட்டடம் மற்றும் அதன் பிற வசதிகள் உருவாக்கப்பட்டன.

நூற்றுக்கணக்கான கொத்தனார்கள், தச்சர்கள், கலைஞர்கள், சிற்ப வல்லுநர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்பால் 1929ஆம் ஆண்டில் இந்த கட்டட பணிகள் நிறைவுற்றன. இந்தியாவின் வைஸ்ராயின் வசிப்பிடமாக அழைக்கப்பட்டு வந்த இந்த வைஸ்ராய் மாளிகை, ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக விளங்கிய குடியரசு தலைவர் மாளிகையானது.

இந்த கட்டடத்தை இந்திய முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கடராமன், "இயற்கையும் மனுதனும், பாறையும் கட்டடக்கலையும் ஒரு சேர இணைந்து உருவான படைப்பாற்றல் இந்த அற்புதமான ராஷ்டிரபதி பவன்," என்று அழைத்தார்.

ஆரம்பத்தில் வைஸ்ராய்ஸ் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டாலும் 1947, ஆகஸ்ட் 15இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இது 'அரசு மாளிகை' என அழைக்கப்பட்டு நாட்டின் குடியரசு தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவியேற்ற காலத்தில் இதன் பெயர் 'ராஷ்டிரபதி பவன்' என மாற்றப்பட்டது.

ஆடம்பர மாளிகையில் எளிமையை புகுத்திய ராஜகோபாலாச்சாரி

குடியரசு தலைவர் மாளிகை

பட மூலாதாரம், RASHTRAPATHI BHAVAN

படக்குறிப்பு, சர் எட்வின் லுட்யென்ஸ், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பிரமாண்ட கட்டுமானங்களை உருவாக்கிய கட்டடக்கலை நிபுணர்

இந்த ராஷ்டிரபதி பவன் வைஸ்ராய் லார்ட் இர்வின் மற்றும் அதன் பின் இந்தியாவின் மற்ற வைஸ்ராய்களுக்கும் 1947இல் கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராய் மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் மவுன்ட்பேட்டன் வரையும் வைஸ்ராய் மாளிகையாக இருந்தது.

இதைத்தொடர்ந்து 1948, ஜுன் 21ஆம் தேதி சி.ராஜகோபாலாச்சாரியும் மத்திய குவிமாடத்தின் கீழ் இந்திய கவர்னர் ஜெனரலாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, அந்த மாளிகையில் வசிக்கும் முதல் இந்தியர் ஆனார். இந்த கம்பீர மாளிகையின் ஆடம்பரம் மற்றும் பிரமாண்டமான வசதிகளுக்கு, ராஜகோபாலாச்சாரியின் பதவிக்காலத்தில் அவரது எளிமையான செயல்பாடுகளால் முக்கியத்துவம் குறைந்தது.

குடியரசு தலைவர் மாளிகையின் மைய குவி மாடம்

பட மூலாதாரம், Rashtrapathi Bhavan

படக்குறிப்பு, குடியரசு தலைவர் மாளிகையின் மைய குவி மாடம்

வைஸ்ராயின் அறை தங்குவதற்கு மிகவும் ஆடம்பரமாக இருப்பதைக் கண்டு, தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்கென சிறிய அறைகள்(இப்போது ராஷ்டிரபதி பவனின் குடும்பப் பிரிவு என்று இந்த தொகுதி அறைகள் அழைக்கப்படுகின்றன) பகுதிக்கு ராஜகோபாலாச்சாரி மாறினார். இதைத்தொடர்ந்து ராஷ்டிரபதி பவனில் அடுத்தடுத்து அந்தப் பதவிக்கு வந்த நாட்டின் முதல் குடிமகன்கள் இதே நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர்.

இதேவேளை, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வைஸ்ராய் பதவி வகித்தவர்கள் வாழ்ந்த அறைகள், இந்தியாவுக்கு தலைமை விருந்தினராக வருகை தரும் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கக் குழுக்கள் தங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்குமான விருந்தினர் பிரிவாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், இது பெயரளவில் மட்டுமே இருந்தாலும், இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்கள் இந்த மாளிகையில் தங்குவதில்லை. அவர்கள் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளிலேயே தங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவியேற்ற பிறகு 1950ஆம் ஆண்டில் ராஷ்டிரபதி பவனில் வசித்தார்.

சுதந்திரத்துக்கு முன்பே பல முறை சென்று வந்த காந்திஆனால், நமக்குத் தெரியாத சில விஷயங்களும் உள்ளன. இங்கே சுதந்திர இந்தியாவின் தலைவர்கள் வாழத் தொடங்குவதற்கு முன்பே, அப்போது புதிதாக கட்டப்பட்டிருந்த வைஸ்ராய் மாளிகைக்கு ஆரம்பகால பார்வையாளராக சென்று வந்தவர் மகாத்மா காந்தி.

வைஸ்ராய் அவரை ஒரு கூட்டத்திற்கு அழைத்திருந்தார். ஆனால், அதற்கு வின்ஸ்டன் சர்ச்சிலின் எதிர்ப்பும் இருந்தது. ஆயினும்கூட, அந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் விதித்த உப்புக்கு வரி நடவடிக்கைக்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் அடையாளமாக தனக்கு வழங்கப்பட்ட தேநீரில் கலந்து பருகுவதற்காக தன்னுடன் உப்பை எடுத்துச் சென்றார் காந்தி.

மகாத்மா காந்திக்கும் இர்வினுக்கும் இடையேயான தொடர் சந்திப்புகள் இறுதியாக மார்ச் 5, 1931 இல் கையெழுத்திடப்பட்ட புகழ்பெற்ற காந்தி - இர்வின் ஒப்பந்த வடிவில் நிறைவுற்றன. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பாதுகாப்புத்துறை தொடர்புடைய பதக்கம் அணிவிக்கும் நிகழச்சிகள், தலைவர்களின் பதவியேற்பு, வீர, தீர செயல் புரிந்தவர்களுக்கான பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிகள், உலகத் தலைவர்களின் உரைகள், பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வுகள் ராஷ்டிரபதி பவனில் நடந்துள்ளன. இதே மாளிகையில், இந்தியாவின் சுதந்திரம் மற்றும் குடியரசு தின விழாக்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன."ராஷ்டிரபதி பவன் ஒரு முழுமையான, சரியான மற்றும் பிரிக்க முடியாத படைப்புத்திறன் மிக்க டெல்லியின் வாயில்களாக விளங்குகிறது" என்று இதை லுட்யென் அழைத்தார்.

இந்த மாளிகையை பொதுமக்களும் கண்டுகளிக்க வேண்டும் என இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி விரும்பினார். அதன்படியே, 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த மாளிகையின் குடியரசு தலைவர் வாழும் அறை மற்றும் அலுவலக செயலகம் நீங்கலாக பிற பகுதிகள் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளன.

பல சுற்று சுற்றுலா திட்டம்ராஷ்டிரபதி பவனின் கலைப் படைப்பைப் பார்வையிடும் பயணம் மூன்று சுற்றுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

சர்க்யூட் 1: இது ராஷ்டிரபதி பவனின் பிரதான கட்டடம் மற்றும் மையப் பகுதியை உள்ளடக்கியது. இதில் முன்பகுதி, நவசரா எனப்படும் தொழில்நுட்ப புதுமை கண்டுபிடிப்புகளின் அரங்கம், வரவேற்பு மண்டபம், அசோகா மண்டபம் மற்றும் இந்த இரு மண்டபங்களுக்கும் இடையே மேல் தள மாடம், தர்பார் மண்டபம், விழா மண்டபம், அவற்றுக்கான விருந்தோம்பல் அறைகள், லுட்யெனின் பிரமாண்ட படிக்கட்டுகள், புத்தர் சிலை போன்றவை இந்த பார்வையிடல் திட்டத்தில் அடங்கும். இங்குள்ள ஒவ்வோர் பகுதியும் ஒவ்வொரு சிறப்பைத் தாங்கி நிற்கின்றன.

குடியரசு தலைவர் மாளிகை வரவேற்பறை

பட மூலாதாரம், Rashtrapathi Bhavan

படக்குறிப்பு, குடியரசு தலைவர் மாளிகை - பார்வையாளர் வரவேற்பறை
குடியரசு தலைவர் மாளிகையின் பிரமாண்ட படிக்கட்டுகள்

பட மூலாதாரம், Rashtrapathi Bhavan

குடியரசு தலைவர் மாளிகை

பட மூலாதாரம், Rashtrapathi Bhavan

அசோகா மண்டபத்தையடுத்து அமைந்துள்ள விருந்தோம்பல் அறைகள்

பட மூலாதாரம், RASHTRAPATHI BHAVAN

படக்குறிப்பு, அசோகா மண்டபத்தையடுத்து அமைந்துள்ள அரசு விருந்தினர் விருந்தோம்பல் அறை
அசோகா மண்டபத்தையடுத்து அமைந்துள்ள அரசு விருந்தினர் விருந்தோம்பல் அறை

பட மூலாதாரம், RASHTRAPATHI BHAVAN

படக்குறிப்பு, அசோகா மண்டபத்தையடுத்து அமைந்துள்ள அரசு விருந்தினர் விருந்தோம்பல் அறை

மேற்கூரை மையத்தில் பாரசீகத்தின் ஏழு கஜார் ஆட்சியாளர்களில் இரண்டாவது நபரான ஃபத் அலி ஷா, தனது இருபத்து இரண்டு மகன்கள் முன்னிலையில் புலியை வேட்டையாடும் குதிரையேற்ற உருவப்படத்தைக் காட்டும் தோல் ஓவியம் உள்ளது. 5.20 மீட்டர் நீளமும், 3.56 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஓவியம், இங்கிலாந்தின் நான்காம் ஜார்ஜ் என்பவருக்கு ஃபத் ஷா என்பவரால் பரிசளிக்கப்பட்டது.

லார்ட் இர்வின் காலத்தில், இந்த பரிசளிக்கப்பட்ட கலைப் பகுதி லண்டனின் இந்திய அலுவலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, அசோக மண்டபத்தின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டது. இதை ஒளியியல் மாயை, முப்பரிமாண விளைவு அல்லது ஓவியரின் தேர்ந்த கைவண்ணம் என அழைக்கலாம். காரணம், அறையின் எந்த மூலையிலிருந்தும் இந்த ஓவியத்தில் உள்ள ஃபத் அலி ஷாவின் கண்களைப் பார்க்கும்போது, அவை பார்வையாளரை மட்டுமே பார்ப்பது போல தோன்றும்.

குடியரசு தலைவர் மாளிகை

பட மூலாதாரம், RASHTRAPATHI BHAVAN

படக்குறிப்பு, அசோகா மண்டபம்

லேடி வெலிங்டன் இந்த ஓவியம் மட்டும் தனித்து இந்த மண்டபத்தில் விரும்பாமல் 12 இந்திய ஓவியர்களைக் கொண்டு வேட்டையாடும் பிற நான்கு காட்சிகளின் தொகுப்பை இந்த மண்டப மேற்பகுதி சுவரில் தீட்டச் செய்தார்.

அசோகா மண்டபத்தில் இந்திய ஓவியர்களின் கைவண்ணத்தாலான படைப்பு

பட மூலாதாரம், RASHTRAPATHI BHAVAN

படக்குறிப்பு, அசோகா மண்டபத்தில் இந்திய ஓவியர்களின் கைவண்ணத்தாலான படைப்பு

இது தவிர பெர்ஷிய கவிஞர் நிஜாமி கஞ்சாவியின் உருவத்தை பிரதிபலிக்கும் ஆயில் பெயின்ட்டிங், நீளமான பிரிட்டிஷ் கடிகாரம் இந்க மண்டபத்தில் உள்ளன.

குடியரசு தலைவர் மாளிகை

பட மூலாதாரம், RASHTRAPATHI BHAVAN

அசோகா மண்டபம், வெளிநாடுகளின் தூதர்கள், தங்களுடைய பணி நியமன ஆணையை குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியை நடத்தவும் அரசின் முக்கிய விருந்துகள் தொடங்குவதற்கு முன்பு நிகழ்ச்சிக்கு வருகை தரும் பிரதிநிதிகளை முறைப்படி வரவேற்று அறிமுகப்படுத்தும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

குடியரசு தலைவர் மாளிகை

பட மூலாதாரம், RASHTRAPATHI BHAVAN

படக்குறிப்பு, குடியரசு தலைவர் மாளிகையில் அசோகா மண்டபத்துக்கு செல்லும் படிக்கட்டு பாதையில் அமைந்துள்ள ஆயிரம் கரங்களுடைய புத்தர் சிலை

ஆயிரம் கை புத்தர் சிலை: சஹஸ்த்ரபாஹு அவ்லோகிதேஷ்வரா என்று அழைக்கப்படும், புத்தரின் 1,000 கரங்கள் கொண்ட சிலை, இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவராக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு வியட்நாம் அரசு வழங்கிய பரிசாகும். சமஸ்கிருதப் படைப்பான சஹஸ்த்ரபாஹு என்றால் '1,000 கரங்களைக் கொண்டவர்' என்றும், அவ்லோகிதேஷ்வரா என்றால், 'உலகைக் கருணையுடன் பார்க்கும் இறைவன்' என்றும் பொருள்படும். புத்தரின் இந்த அவதாரம் கருணையின் உருவம் மற்றும் ஆயிரக்கணக்கான கரங்கள், புத்தரை அணுகி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உள்ளன என்று நம்பப்படுகிறது.

குடியரசு தலைவர் மாளிகை

பட மூலாதாரம், Rashtrapathi Bhavan

படக்குறிப்பு, தர்பார் மண்டபம்

தர்பார் மண்டபத்தில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள், படை வீரர்களை கெளரவிக்கும் பதக்கம் அணிவிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதேபோல, பதவியேற்கும் அரசாங்கங்களின் பதவியேற்பு விழாக்கள், அமைச்சரவையில் சேருவோரின் பதவியேற்பு நிகழ்ச்சிகள், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ,தேர்தல் ஆணைய தலைமை ஆணையர், தலைமை தகவல் ஆணையர் உள்ளிட்டோரின் பதவியேற்பு நிகழ்ச்சிகள் தர்பார் மண்டபத்தில் நடத்தப்படுகின்றன.

1977 ஆம் ஆண்டு இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்தவும் தர்பார் மண்டபம் பயன்படுத்தப்பட்டது.

மைய பகுதி

பட மூலாதாரம், Rashtrapathi Bhavan

படக்குறிப்பு, குடியரசு தலைவர் மாளிகையின் மைய பகுதி - கழுகுப்பார்வையில்

ராஷ்டிரபதி பவனின் மையக் குவிமாடத்தின் கீழ் அமைந்துள்ள இந்த சடங்கு மண்டபத்தை மூன்று பக்கங்களிலிருந்தும், முன் பக்கப் படிகள் வழியாக ஆறு மீட்டர் உயர தேக்கு கதவு வழியாகவும், தர்பார் ஹாலின் இருபுறமும் உள்ள இரட்டை சாம்பல் சாம்பல் பளிங்கு படிக்கட்டுகள் வழியாகவும் அணுகலாம்.

சர்க்யூட் 2: இது ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியக வளாகத்தின் சுற்றுப்பயணத்தைக் கொண்டது. கிளாக் டவர், கேரஜஸ், தி ஸ்டேபிள்ஸ் ஆகிய மூன்று இடங்களை பார்வையிடும் திட்டத்தைக் கொண்டது.

கிளாக் டவர், 1925 ஆம் ஆண்டு சர் எட்வின் லுடியென்ஸால் கட்டப்பட்ட மணிக்கூண்டு. இது குடியரசு தலைவர் மாளிகையின் பாரம்பரிய கட்டடமாகும். முதலில் பேண்ட் ஹவுஸ் என்று இந்த இடம் அழைக்கப்பட்டது. இது பிரிட்டிஷ் ராணுவத்தின் இசைக்குழு பயிற்சிக்காக கட்டப்பட்டது. கடிகார கோபுரம் குடியரசு தலைவர் மாளிகை தோட்டத்தின் B அட்டவணை பகுதியில் அமைந்துள்ளது. இப்போது இது ராஷ்டிரபதி பவனின் அருங்காட்சியக வளாக (RBMC) வரவேற்பு முகமாக உள்ளது. ஆரம்பத்தில் இந்த இடம், ராஷ்டிரபதி பவனின் தபால் அலுவலகமாகவும், குடியிருப்பு வளாகமாகவும் இருந்தது.

குடியரசு தலைவர் மாளிகை

பட மூலாதாரம், Rashtrapathi Bhavan

படக்குறிப்பு, குடியரசு தலைவர் மாளிகை மணிகூண்டு கட்டடம்

தி கேரஜஸ் - அருங்காட்சியகம்

குடியரசு தலைவர் மாளிகை

பட மூலாதாரம், Rashtrapathi Bhavan

படக்குறிப்பு, தி கேரஜஸ்

மூன்று தளங்களைக் கொண்ட கேரஜிஸில் உள்ள அருங்காட்சியகம் 2014இல் திறக்கப்பட்டது. கலை, கலாசாரம், பாரம்பரியம், வரலாறு போன்றவற்றை அறிய ஆர்வம் கொண்ட பார்வையாளர்கள், இந்த இடத்துக்குச் சென்றால் சுதந்திர இந்தியாவின் காலங்களை கண் முன்னே நிறுத்தும் படங்கள் மற்றும் ஆரம்பகால குடியரசு தலைவர் முதல் இதுநாள் வரை குடியரசு தலைவராக இருப்பவர் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பை பார்வையிடலாம்.

தி ஸ்டேபிள்ஸ் - பரிசுப்பொருட்களின் பொக்கிஷம்

குடியரசு தலைவர் மாளிகை

பட மூலாதாரம், Rashtrapathi Bhavan

ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியக வளாகம் (RBMC) இந்திய சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் ஒற்றுமையின் சின்னமாகும். ஜூலை 25, 2014 அன்று அதிகாரபூர்வமாக திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், இந்திய குடியரசு தலைவர்களாக இருந்தவர்கள் பெற்ற ஏராளமான பரிசுகளை பாதுகாத்து காட்சிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியக சேகரிப்பின் அங்கமாக பரிசுப்பொருளாக வந்த ஆயுதங்கள், மரச்சாமான்கள், சிற்பங்கள், ஜவுளிகள், புகைப்படங்கள், காப்பகப் பொருட்கள் உள்ளன.

சர்க்யூட் 3: இது ராஷ்டிரபதி பவனின் புகழ்பெற்ற தோட்டங்களான முகலாய தோட்டங்கள், மூலிகைத் தோட்டம், இசைத் தோட்டம் மற்றும் ஆன்மிக தோட்டம் போன்றவற்றை கொண்டது.

குடியரசு தலைவர் மாளிகை

பட மூலாதாரம், Rashtrapathi Bhavan

படக்குறிப்பு, முகலாய தோட்டம் அல்லது மொஹல் கார்டன்

இங்கே வட்ட வடிவ தோட்டம், செவ்வக தோட்டம், நீள தோட்டம் என மூன்று வடிவங்களில் தோட்டங்கள் உள்ளன.

குடியரசு தலைவர் மாளிகை

பட மூலாதாரம், Rashtrapathi Bhavan

படக்குறிப்பு, செவ்வக தோட்டம்

செவ்வக தோட்டம் ராஷ்டிரபதி பவன் பிரதான கட்டடத்திற்கு மிக அருகில் உள்ளது. இரண்டு சமதள கால்வாய்கள் வடக்கு மற்றும் தெற்கே ஓடுகின்றன, மேலும் இரண்டு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடுகின்றன. இந்த நீர் கால்வாய்கள் தோட்டத்தை சதுரங்களின் கட்டமாக பிரிக்கின்றன. இந்த கால்வாய்களின் சந்திப்பில், விக்டோரியா ரெஜியா லில்லியால் ஈர்க்கப்பட்ட மணற்கல் நீரூற்றுகள், பன்னிரண்டு அடி வரை நீர் ஜெட் விமானங்களைக் கொண்டுள்ளன. தோட்டத்தைச் சுற்றி மௌல்சிரி மரங்கள் நேர்த்தியாக நடப்பட்டுள்ளன.

இந்த பகுதியின் இரண்டு முக்கிய தோட்டங்களாக கிழக்கு புல்வெளி மற்றும் மத்திய புல்வெளி பகுதிகள் உள்ளன. கிழக்குப் புல்வெளி, கட்டடத்தை ஒட்டி நீள்சதுர வடிவில் இருக்கும். அதே வேளையில், மத்திய புல்வெளி சதுர வடிவத்திலும் அதன் பக்கம் 45 மீட்டர் அளவிலும் உள்ளது. செவ்வக தோட்டத்தின் மத்திய புல்வெளியானது குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் இந்திய ஜனாதிபதியால் நடத்தப்படும் வருடாந்திர 'அட் ஹோம்' விழாவுக்கான முக்கிய இடமாகும்.

குடியரசு தலைவர் மாளிகை

பட மூலாதாரம், Rashtrpathi Bhavan

படக்குறிப்பு, மாடி தோட்டம் - கோப்புப்படம்

செவ்வகத் தோட்டத்தின் இருபுறமும் மாடித் தோட்டங்கள் உள்ளன. இந்த இரண்டு தோட்டங்களின் மையத்திலும் ஒரு நீரூற்று உள்ளது, அது உள்நோக்கி கிணற்றுக்குள் விழுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டங்களின் முடிவில் லுட்யன்ஸ் வடிவமைத்த இரண்டு உயரமான மணல் கல் gazebos நிற்கின்றன. இந்த கஸெபோ, பெரிய திறந்தவெளி பகுதிகளில் தங்குமிடம் மற்றும் நிழலை வழங்குவதற்காக அடிக்கடி கட்டப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். முகலாய தோட்டத்தில் அதன் நான்கு மூலைகளிலும் நடப்பட்ட நான்கு புத்ரஞ்சிவ ராக்ஸ்பர்கி மரங்களால் இயற்கையான நிழல் தரும் இடம் அமைந்துள்ளது.

குடியரசு தலைவர் மாளிகை ஆன்மிக தோட்டம்

பட மூலாதாரம், Rashtrapathi Bhavan

படக்குறிப்பு, ஆன்மிக தோட்டம்

ஆன்மிக தோட்டத்திற்குள் நுழையும் போது, டாக்டர். தேவி சிங் ஷெகாவத்தால் நடப்பட்ட ருத்ராக்ஷ் மரம் பார்வையாளர்களை வரவேற்கும் வகையில் இருக்கும். ஆன்மிக தோட்டத்தில் கேயார், மூங்கில், சந்தனம், ஹீனா, சீதா அசோகா, வெண்ணெய் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சுமார் 40 வெவ்வேறு தாவரங்கள் மற்றும் மரங்கள் உள்ளன. மரம், கோயில் மரம், கடம்ப் மரம், அரச மரம், அத்தி, பேரீச்சம்பழம், கிருஷ்ணா பர்கட், மல்லிகை, ரீத்தா ,ஷமி போன்றவை இங்கு உள்ளன. 2015இல் இங்கு ஒரு குளம் உருவாக்கப்பட்டது. சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்த நீர்நிலையில் தாமரை மற்றும் நீர் அல்லி வகைகள் உள்ளன.

குடியரசு தலைவர் மாளிகை

பட மூலாதாரம், Rashtrapathi Bhavan

படக்குறிப்பு, மூலிகை தோட்டம்

இயற்கை வைத்தியத்தை ஊக்குவிக்கும் அப்துல் கலாமின் தொலைநோக்குப் பார்வை, மத்திய மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் (CIMAP) உதவி மற்றும் மேற்பார்வையுடன் மூலிகைத் தோட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த தோட்டங்களில் சுமார் 33 மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள் நடப்பட்டுள்ளன.

தொற்றுநோய், நரம்புக் கோளாறுகள், பாலுறவு நோய்கள், வாத நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையிலும், அனைத்து வகையான பலவீனங்களுக்கும் டானிக்காகவும், வீரியம் மற்றும் உயிர்ச்சக்தியை மேம்படுத்தவும் அஸ்வங்தா பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது; கால்-கை வலிப்பு, பைத்தியம் மற்றும் நினைவாற்றல் இழப்பு போன்ற மனநல கோளாறுகளின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பிராமி; ஈவினிங் ப்ரிம்ரோஸ், இதன் எண்ணெய் ஒரு உணவு நிரப்பியாகவும், ஒப்பனை நோக்கங்களுக்காகவும், மாதவிடாய் முன் நோய்க்குறியின் அட்டோபிக் அரிக்கும் தோலழற்சிக்கு சிகிச்சையளிக்கவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது; மெந்தோல் புதினா, இது பற்பசைகள், வாய் கழுவுதல், சூயிங்கம், பானங்கள், மிட்டாய்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மெந்தோல் வலி தைலம், வலி நிவாரணி கிரீம்கள் மற்றும் இருமல் சிரப்கள் போன்ற மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகைகளை இங்கே ஒரு சேர காணலாம்.

ஊழியர்களுக்கான வசதிகள்

ராஷ்டிரபதி பவனில் விருந்தினர் தங்குமிட வசதிகள் உள்ளன. அதன்படி ஒரு படுக்கையறை, ஹால், சமையலறை கொண்ட எட்டு அறைகள், இரண்டு படுக்கையறை, ஹால், சமையலறை கொண்ட எட்டு அடுக்குமாடிகளைக் கொண்ட சர்வீஸ்ட் குடியிருப்புகள் உள்ளன. குடியரசு தலைவரின் நேரடி பரிந்திரையின் பேரில் இந்த அறைகளில் தங்க அனுமதி வழங்கப்படும்.

இது தவிர, ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் ஊழியர்கள், சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக ஒரு பொழுதுபோக்கு மன்றம் உள்ளது. குரூப் 4 அரசு ஊழியர்களுக்கான நூறு குடியிருப்பு குடியிருப்புகள் 'பசுமைக் கட்டடங்கள்' என்ற பெயரில் தனியாக உள்ளன. இது தவிர அதிகாரிகளுக்கான மேலும் 50 குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன. ராஷ்டிரபதி பவனை ஒட்டியுள்ள பிரசிடென்ட்ஸ் எஸ்டேட் என்ற பகுதி டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் பின்பக்கவாட்டில் உள்ளது. அங்கு இரட்டை கோபுர குடியிருப்பு வளாகம் உள்ளது. அதில் 72 குடியிருப்புகள் உள்ளன.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :