ஆந்திரா விபத்து - அணில் ஏறினால் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விடுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஷங்கர் வடிசேட்டி
- பதவி, பிபிசி தெலுங்கு சேவைக்காக
ஆந்திராவில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மின் கம்பத்தில் அணில் ஏறியதால் மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டு உயர் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விலங்குகள், பறவைகள் உண்மையாகவே மின் கம்பிகளை சேதப்படுத்துகின்றனவா?
ஏதேனும் காரணத்தால் மின்சார கம்பி அறுபட்டால், மின்சாரம் தடைபடுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், சத்தியசாயி மாவட்டம் தாடிமரி மண்டலத்திலுள்ள சில்லகொண்டையப்பள்ளியில் ஜூன் 30-ஆம் தேதி எப்படி ஐவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது? இதுபோன்ற சூழல்களில் மின்சாரத்தைத் துண்டிக்கக்கூடிய பிரேக்கர் கட்டமைப்புகளுக்கு என்ன ஆனது?
இது அணிலின் தவறா?
இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பிறகு, ஆந்திர பிரதேச தெற்கு மின் விநியோக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹரிநாத ராவ் காணொளி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார்.
"அணில் ஒன்று மின்கம்பத்தில் ஏறி கம்பியை அறுத்து விட்டதால், அந்த வழியாகச் சென்ற ஆட்டோ மீது மின் கம்பி விழுந்தது. அப்போது தீ பிடித்த ஆட்டோவில் இருந்தவர்கள் உயிரிழந்தனர். அனந்தபூரம் மூத்த பொறியாளரை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளோம். தொழில்நுட்பக் குழுவிடம் விரிவாக அறிக்கையை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளோம்," என்று அவர் தெரிவித்தார்.
மேலும் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தார்.
அதன்பிறகு, சம்பவ இடத்திலிருந்த காவல்துறை அதிகாரிகளும் தர்மாவரம் சட்டமன்ற உறுப்பினர் கேதிரெட்டி வெங்கடாமிரெட்டியும் இதே கருத்தை மீண்டும் கூறினர்.
"ஆட்டோவுக்கு மேலிருந்த படுக்கையின் மீது மின் கம்பி விழுந்ததால் இவை அனைத்தும் ஏற்பட்டன," என்று அவர் கூறினார்.
அரசு அதிகாரிகளும் ஆளும் கட்சித் தலைவர்களும் சாக்குப்போக்கை முன்னிறுத்திய விதம் குறித்து எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், தவறான வயரிங் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக விபத்து நடந்ததாகக் குற்றம்சாட்டினர்.

பட மூலாதாரம், Getty Images
துணை மின் நிலைய பராமரிப்பின்மை காரணமா?
ஆட்டோவில் பயணித்த 13 பேரில் 5 பேர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், உயர் அழுத்த மின்கம்பிகள் அணில்களால் அறுந்து விழுவது அரிது என்பது மின்சாரத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டி.வி.ராவின் கருத்து.
"அணில்களால் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விழும் சம்பவங்களை நான் பார்த்ததில்லை. ஆனால், வயர்களைச் சரிசெய்யும் போது பாம்பு, அணில்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. அந்தச் சூழ்நிலைகளில், அவற்றைச் சரிசெய்யும் பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதுபோன்ற விபத்துகளைக் கட்டுப்படுத்த பிரேக்கர்கள் சமீபகாலமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அங்கு விபத்து ஏற்பட்டதற்கு அணில் காரணம் என்று கூறுவது முரணாக உள்ளது. அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் அணில் தான் காரணம் என்று கூறியது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இதற்கு துணை மின்நிலைய நிர்வாகத்தின் பராமரிப்பின்மை தான் காரணம். அந்தப் பிரச்னை அடையாளம் காணப்பட வேண்டும்," என்று பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
பிரேக்கர்களுக்கு என்ன ஆனது? ஏன் வேலை செய்யவில்லை?
இயற்கையாகவே காகம், சிட்டுக்குருவி போன்ற பறவைகள் மின் கம்பங்களில் அமர்வதையும் அணில் போன்ற உயிரினங்கள் மின் கம்பங்களில் ஏறிச் செல்வதைக் காணலாம். இதுபோன்ற நேரங்களில் ஏதும் பிரச்னை ஏற்பட்டால், மின் விநியோகத்தைத் தடை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, அவற்றைச் சரி செய்வது இயற்கையான செயல்முறையாகும். அதன்படி, சில்லகொண்டையப்பள்ளி விபத்தில் அணில் பாய்ந்து கம்பி அறுந்தால் மின் விநியோகத்தை நிறுத்த வேண்டும். அதற்காக நிறுவனப்பட்டிருக்கும் பிரேக்கர்கள் வேலை செய்ய வேண்டும்.
பன்னாட்டு நிறுவனத்தில் மின்சக்தி பொறியாளராகப் பணியாற்றும் என்.ராம் மோகன், போதிய அளவு பிரேக்கர்கள் இல்லாததும் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்ததற்கு முக்கியக் காரணம் என்று கருத்து தெரிவிக்கிறார்.
11 கிலோ வாட் துணை மின்நிலையத்தில் உள்ள பிரேக்கர்கள் ஏதேனும் சிறிய பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக வேலை செய்யும். ஏதேனும் பிரச்னையெனில், 33 கிலோவாட் துணை மின் நிலையத்தில் பிரேக்கர்கள் வேலை செய்ய வேண்டும். இரண்டிலும் ஏதாவது ஒன்றிலாவது வேலை செய்திருந்தால் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டிருக்காது. ஏன் பிரேக்கர்கள் வேலை செய்யவில்லை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். சமீபகாலமாக பிரேக்கர்களை தேவைக்கேற்ப பயன்படுத்துவதில்லை. மூன்று லைன்களுக்கு தனித்தனி பிரேக்கர்கள் இருக்க வேண்டிய இடத்தில் அதற்கு எதிர்மாறாக நடக்கிறது. சில இடங்களில் அவை இருக்கிறதா என்றே தெரியவில்லை. இதுபோன்ற விபத்துகள் நடக்கும்போது, உண்மையில் பிரேக்கர்கள் இருக்கின்றனவா இல்லையா என்ற சந்தேகம் ஏற்படுகிறது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
ராம் மோகன், சாலையிலுள்ள உயர் அழுத்த மின் கம்பிகளில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அபாயத்தைக் கட்டுப்படுத்தப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
தரத்தில் குறைபாடுகள்
மின்சார விநியோகத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் தரம் பற்றியும் கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக உயர் அழுத்த கம்பிகளுக்குப் பதிலாகக் குறைந்த அழுத்த கம்பிகளைப் பதித்துள்ளதாகச் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
"மாநிலத்தின் பல இடங்களில் மின்சாரத் துறை பயன்படுத்தும் கருவிகள் குறித்துப் பல புகார்கள் வந்துள்ளன. ஆனால், மின்சாரத் துறை அதில் கவனம் செலுத்தவில்லை. தனியார் ஒப்பந்ததாரர்கள் தன்னிச்சையாகச் செயல்படுவதால், அதிகாரிகளைக் கண்டு கொள்வதில்லை. தரம் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.
ஊழியர்களும் இதனால் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் மின் கடத்தில் மிகவும் மோசமாக இருப்பதால் திருப்பி அனுப்பப்படுகின்றன. இன்னும் மின் கம்பிகள், மின் கடத்திகள், மின் கடத்தா பொருட்களின் தரம் குறித்து சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்," என்றார் மின்வாரிய தொழிலாளர் சங்கத் தலைவர் எல்.ராகவராவ்.
1104 சங்கத்தின் தலைவரான ராகவ்ராவ் பிபிசியிடம் பேசியபோது, ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் பணி அழுத்தம் போன்ற பிரச்னைகளை அவர்கள் அனைவரும் எதிர்கொள்கின்றனர். விதிகளின்படி, குறைந்தது 1000 இணைப்புகளுக்கு ஒரு மெயின் லைன் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 5000 இணைப்புகளுக்கு ஒரு மெயின் லைன் தான் இருக்கிறது," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
"கட்டண உயர்வில் தான கவனம் உள்ளது, பராமரிப்பில் அல்ல" - பவன் கல்யாண்
இரண்டு மாதங்களுக்கு முன், ஏலூரு மாவட்டம், ஜங்காரெட்டி குடேம் அருகே இத்தகைய விபத்து நடந்தது. பைக்கில் சென்ற போது மின்சார கேபிள் அறுந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சமீபத்திய சம்பவத்தில் 5 பேர் உயிருடன் எரிந்து கருகினர். இதுபோன்ற விபத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் கோரிக்கை விடுத்துள்ளார்.
"மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், மின் கம்பிகளைப் பராமரிப்பதில் அக்கறை காட்டவில்லை. இவ்வளவு பெரிய விபத்துக்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். இதை மூடி மறைக்க முயல்வது ஏற்புடையதல்ல. அணில் என்ற பெயரில் ஏற்படும் தோல்வி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக, விபத்துகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசின் அலட்சியமே விபத்துக்குக் காரணம். நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்," என்றார்.
அறுந்து விழுந்த மின் கம்பியால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என முன்னாள் அமைச்சரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் மாவட்டத் தலைவருமான மு.சங்கரநாராயணா தெரிவித்தார். விபத்து குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது அர்த்தமற்றது என்றார்.
"விபத்து நடந்த உடனேயே முதலமைச்சர் வெளிநாட்டில் இருந்தாலும் உடனடியாக பதிலளித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்தார். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அடிப்படையில் விபத்து ஒரு பெண்ணால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. அந்தப் பெண்ணும் மின் கம்பத்தில் காணப்பட்டார். கண்காணிப்பு குழுக்கள் மற்றும் மூத்த பொறியாளரின் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று பிபிசியிடம் விளக்கினார்.
மின்சார விநியோகத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதைச் சரிசெய்து மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்குத் தமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆந்திர பிரதேச தெற்கு மின் விநியோக நிறுவனத்தின் பதில்
ஆந்திர பிரதேச தெற்கு மின் விநியோக நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர், மின் வாரியம் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மேற்கொண்ட திட்டங்கள் குறித்தும் விசாரித்து வருவதாகவும் தாடிமரி மண்டலத்தில் விபத்து நடந்த இடத்தை அவர் ஆய்வு செய்ததாகவும் கூறினார். விசாரணைக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு பல விவரங்களைச் சேகரித்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடம் பேசி விவரங்களைச் சேகரித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷீத், "இந்தப் பகுதியில் மின்வாரிய பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அனைத்து கோணங்களிலும் விவரங்களைச் சேகரித்து வருகிறோம். இறுதி அறிக்கையில் எங்களுடைய கவனத்திலுள்ள விஷயங்களைக் குறிப்பிடுவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும்," என்று கூறினார்.
அணிலுக்குச் செய்யப்பட்ட உடற்கூராய்வு
விபத்துக்கு காரணமான அணில் இறந்துவிட்டதாகவும் அந்த அணிலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தாடிமரி மண்டல கால்நடை அலுவலர் மேற்பார்வையில் பிரேத பரிசோதனை நடந்தது. உயர் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சிஐ மன்சூருத்தீன் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












