நடிகர் விஷால் ஆந்திர அரசியலில் குதிக்கிறாரா? அவரே தந்த விளக்கம்

நடிகர் விஷால்

பட மூலாதாரம், Vishal/Twitter

ஆந்திர அரசியலில் நுழையவோ, சந்திரபாபு நாயுடுவை எதிர்த்துப் போட்டியிடவோ தனக்கு எண்ணமில்லை என்றும் தான் ஆந்திர அரசியலில் நுழைவதாகப் பரவும் செய்தி தவறானது என்றும் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாகியுள்ளது.

நடிகர் விஷால் ஆந்திராவில் உள்ள குப்பம் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ட்விட்டர் பதிவை அவர் வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர் ஒய்.எஸ்.ஆர் (YSR) காங்கிரஸ் சார்பில் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்துப் போட்டியிடுவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டதகவும் தகவல்கள் பரவின. ஆனால், இதுவரை தன்னை யாரும் இதுகுறித்துத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் தனக்கு அந்த எண்ணமும் இல்லை என்றும் விஷால் கூறியுள்ளார்.

அவர் தனது பதிவில், ''ஆந்திர அரசியலில் நுழையும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது பற்றி மட்டும்தான் நான் எண்ணுகிறேன்,'' என்று தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஏற்கெனவே, தமிழக அரசியல் களத்தில் காலடி எடுத்து வைக்க விஷால் முயன்றபோது, அவர் மனு தாக்கல் செய்யமுடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆந்திர அரசியலில் அவர் இறங்குவார் என்ற வதந்தி எப்படிப் பரவியது என்பது தெளிவாகவில்லை. அரசியலில் விஷால் நுழைய வாய்ப்புகள் உள்ளனவா? இதுவரை அவரின் நகர்வுகள் என்ன மாதிரி பயன் அளித்தது?.

விஷால், கடந்த 2015-இல் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்வானார். 2017-இல் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் தலைவராகத் தேர்வானார். தற்போது வரை அவர் இரண்டு பதவிகளையும் வகித்து வருகிறார்.

Presentational grey line
Presentational grey line

தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தவரை வேட்பு மனுவோடு அவர் பயணம் நின்றுவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியான ஆர் கே நகர் தொகுதியில் 2017ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். ஆனால் அவர் வேட்பு மனு இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது. வேட்பு மனுவில் 10 நபர்கள் அவரை வழிமொழிந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிலையில், இரண்டு நபர்கள் தங்களது கையெழுத்து போலியாகப் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்ததால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக விஷால் அப்போது தெரிவித்தார்.

அடுத்ததாக, 2018-ஆம் ஆண்டில் தான் நடித்த இரும்புத்திரை படத்தின் 100-ஆவது நாள் கூட்டத்தில் பேசிய நடிகர் விஷால், மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். தான் அநீதியைப் பார்த்து சும்மா இருப்பவன் அல்ல என்றும் கேள்வி கேட்பேன் என்றும் அதிரடியாகப் பேசினார். ஆனால் அதற்குப் பின்னர் அந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

நடிகர் விஷால்

பட மூலாதாரம், Vishal/Twitter

இந்நிலையில், அவர் ஆந்திர அரசியலில் இறங்கியுள்ளதாக வெளியான செய்தி சமூக ஊடகங்களில் பரவியது. அதை அவர் மறுத்துள்ளார்.

விஷால் போலவே, பல்வேறு கட்டங்களில் திரையுலகைச் சேர்ந்த பலரும் அரசியலில் நுழையும் முயற்சிகளை எடுத்துள்ளார்கள். அத்தகைய முயற்சிகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் லட்சுமணனிடம் கேட்டோம்.

''விஷால் உள்பட அனைத்து நடிகர்கள், பிரபலமான நபர்கள், தனிநபர்கள் எனப் பலருக்கும் அரசியலில் வாய்ப்புள்ளது. ஆனால் தேர்தல் காலத்தில், அதாவது தேர்தலுக்கு ஆறு மாதம் முன்னதாக கட்சியைத் தொடங்கி, கொடியை வெளியிட்டு, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதோடு பலர் நின்று விடுகிறார்கள். அரசியல்வாதியாக ஒருவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மக்களிடம் பணியாற்றவேண்டும். பொதுமக்களின் பிரச்னைகள், பாதிப்புகள் குறித்துப் பேசவேண்டும், அவர்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டும். இதுவரை விஷால் அதுபோல எந்த செயலிலும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, நிரூபிக்கவில்லை. இனி அந்த முயற்சிகளில் ஈடுபட்டால், அவருக்கான இடம் அரசியலில் கிடைக்கும்,'' என்கிறார் லட்சுமணன்.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை, பல நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறும் அவர், '' ரஜினிகாந்த் 1991இல் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு பெருமளவு இருந்தது. ஆனால் அவரே ஒரு கட்டத்தில், கட்சி தொடங்கி, கொடியை வெளியிட்டதோடு நிறுத்திவிட்டார். தனக்கு உடல் நலமில்லை என்றும் தனக்கான காலம் குறைவு என்றும் கூறி அரசியல் பயணத்தை நிறுத்திக்கொண்டார். அதுபோல திரையுலகத்தில் சாதிப்பது வேறு. தேர்தல் அரசியலில் நுழைவது வேறு. சமூக அக்கறை இருப்பவர்களுக்கும் தங்களை அரசியல் தளத்தில் நிலைநிறுத்திக்கொள்ள எப்போதும் உழைப்பவர்களுக்கும் மட்டும்தான் இடம் கிடைக்கும்,'' என்கிறார் அவர்.

Presentational grey line
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: