தமிழ்நாடு மின் தடை: ஓயாத அணில் சர்ச்சை, செல்லூர் ராஜூவை மிஞ்சினாரா செந்தில் பாலாஜி?

செல்லூர் ராஜூ

பட மூலாதாரம், SELLUR RAJU

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

`அணில் விவகாரம்' தமிழ்நாடு மின் வாரியத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. `மின் தடைக்கு அணில்தான் காரணம்' என அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதாரங்ளை அடுக்கவே, அதற்கு எதிர்மறை விமர்சனத்தை முன்வைத்துள்ளனர் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள். உண்மையில் என்ன நடக்கிறது?

செல்லூர் ராஜுவின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல மாவட்டங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் ஆழ்ந்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடந்த அ.தி.மு.க ஆட்சியில் டிசம்பர் மாதத்துக்குப் பிறகு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை. இதற்காக மாதாந்திர பராமரிப்புப் பணிகளைச் செய்ய வேண்டும். சில இடங்களில் மரங்கள் வளர்ந்து அதன்மூலம் கம்பியில் அணில்கள் ஓடுகின்றன. இதனால் இரண்டு கம்பிகள் ஒன்றாகி மின்சாரம் தடைபடுகிறது," என்றார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

அமைச்சரின் இந்த விளக்கத்தையடுத்து, அணில்களை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறந்தன.

மின்துறை அமைச்சரின் பேட்டிக்குப் பதில் கொடுத்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜூ, "செந்தில் பாலாஜி சொல்வதைப் பார்த்தால் அ.தி.மு.க ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது திரும்பி வந்து மின்தடையை ஏற்படுத்துவது போல உள்ளது. அவரது கண்டுபிடிப்புக்கு ஆஸ்கர் அல்லது நோபல் பரிசுகளை வழங்க வேண்டும். தெர்மாகோல் விட்டதற்காக என்னை நவீன விஞ்ஞானி என்று தி.மு.கவினர் கிண்டல் செய்தனர். தற்போது என்னையும் மிஞ்சி விட்டார் செந்தில் பாலாஜி," என கிண்டல் அடித்தார்.

இதனால் கோபப்பட்ட செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த 26 ஆம் தேதி கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

ஆலங்குளம் ஆதாரம்

அதில், "ஆலங்குளம் துணை மின் நிலையத்தின் மின் பிரச்னைகளுக்கு அணில்கள் காரணமென, 2020ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் அப்போதைய அ.தி.மு.க அரசு அளித்த விளக்கம் இது. பார்க்க படித்தவர் போலிருக்கும் செல்லூர் ராஜூ, இதைப்பற்றி தங்கமணியிடமோ உயர் நீதிமன்றத்திடமோ கேட்டு புத்தி தெளிய வேண்டுகிறேன்," எனப் பதிவிட்டுள்ளார். கூடவே, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அணில்கள் தொடர்பான ஆவணத்தையும் பதிவிட்டிருந்தார். ஆனாலும், அணில் விவகாரம் ஓய்வதாக இல்லை.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

2016ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதனும், 'தற்போதைய மின்வெட்டுக்குக் காரணம், அத்துறையைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததுதான். தி.மு.கவும் மின்வெட்டும் பிரிக்க முடியாதவை. மின்வெட்டுக்குக் காரணம் அணில் என்று சப்பையான காரணங்களைக் கூறி தப்பிக்கப் பார்க்கிறார்கள். ஏழு ஆண்டுகளாக மின்சாரத் துறை அமைச்சராக இருந்த எனக்கே அணில்தான் காரணம் எனத் தெரியவில்லை' என்றார். இதன்பிறகும் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் அணில்களால் மின் தடை ஏற்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

விருத்தாச்சலம், பாலக்கரையில் உள்ள மின்மாற்றியில் 2 அணில்களால் மின் கம்பிகள் உரசியுள்ளது. இதனால் 2 அணில்களும் இறந்துவிட்டன. அப்போது அங்கு வந்த மூன்றாவது அணிலும் மின்சாரம் தாக்கி இறந்தது. இதனால் அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, `விருத்தாச்சலத்தில் அணில்களால் மின் தடை ஏற்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

காகங்களை விரட்டும் அதிகாரிகள்

ஜெயங்கர்
படக்குறிப்பு, ஜெய்சங்கர் - மாநில தலைவர், மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு), தமிழ்நாடு மின்சார வாரியம்

``அணில்களால் மின் தடை ஏற்படுவதை அரசியலாக்குவது ஏன்? உண்மையில் அணில்கள் மட்டும்தான் மின் தடைக்குக் காரணமா?" என மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு) மாநில தலைவர் ஜெய்சங்கரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``அணில்களால் மின்தடை ஏற்படுவது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தவிர வேறு யாரும் பேசவில்லை என்பதுதான் உண்மை. அணில் தவிர, காகம், கீரி, பாம்பு ஆகியவற்றின் மூலமும் மின்தடை ஏற்படுகிறது. இது வழக்கமான ஒன்றுதான். மின்சார வாரியம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே இந்தப் பிரச்னைகள் உள்ளன. அதனால்தான் பெரும்பாலும் மின் தடைகள் ஏற்படுகின்றன. அணில் வந்தது, காகம் வந்தது என மின்வாரிய ஊழியர்களும் காரணங்களை அடுக்கியதில்லை. `மின் தடைக்கு இதுவும் ஒரு காரணம்' என சட்டசபையில் ஆளும்கட்சியும் பேசியதில்லை, எதிர்க்கட்சிகளும் கேட்டதில்லை," என்கிறார்.

தொடர்ந்து பிபிசி தமிழுக்காக மேலதிக விவரங்களைப் பட்டியலிட்டார். ``இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்றும் உள்ளது. அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்களை நடத்தும்போது அதையொட்டியுள்ள துணை மின் நிலையங்களில் காகங்களை விரட்டுவதற்கென்றே பணியாளர்களை நியமிப்பார்கள். இன்றளவும் காகங்களை விரட்டும் பணி நடந்து கொண்டுதான் உள்ளன. துணை மின் நிலையங்களுக்கு ஆய்வுப் பணிக்கு அமைச்சரோ, உயர் அதிகாரிகளோ வருவதாக இருந்தால் கேபிள் போகும் இடங்களில் எல்லாம் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளதா என ஆய்வு செய்வோம். அப்போது பாம்புகள் படமெடுத்து ஆடும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளோம்.

பிரச்னை எங்கே வருகிறது?

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம், SENTHIL BALAJI

பொதுவாக, RYB (Red, Yellow, Blue) எனப்படும் மும்முனை மின்சாரம் செல்லும் பாதைகளில் உள்ள சிவப்பு பாதையில் அணில்களோ, பாம்புகளோ சென்றால் எந்தப் பிரச்னைகளும் இல்லை. அதுவே, சிவப்பு பாதையில் செல்லும்போது நீலப் பாதையில் உடல் உரசினால் அந்த இடத்திலேயே அணிலோ, பாம்போ, கீரியோ உடல் கருகி இறந்துவிடும். மின்சாரம் செல்லும் வேகம் மிக அதிகம். அந்த இடத்தில் பாம்பு, கீரிப்பிள்ளை இருந்தால் இரண்டு பகுதிகளுக்கான இணைப்புகளில் (Jumber) வெடிப்பு ஏற்படும். துணை மின் நிலையங்களில் இன்சுலேட்டர்கள் பலவீனமாக இருந்தாலும் வெடிக்கும். அதன் தாக்கம் நான்கு அல்லது ஐந்து இடங்களில் வெளிப்படும்.

காப்பர் கம்பியில் மின்சாரம் பாயும்போது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் பாயாமல் இருப்பதற்காக பீங்கானில் செய்யப்பட்ட பொருளை இன்சுலேட்டர் என்கிறோம். டவர் பாதைகள், துணை மின் நிலையங்களில் இதனைப் பயன்படுத்துகிறோம். நீண்ட காலம் பயன்படுத்துவதால் இவற்றில் பலவீனம் ஏற்படுவது வழக்கம். அதனைக் கண்டறிந்து எங்கே பிரச்னை வந்தது என பரிசோதித்து சரிசெய்கின்றனர். மேலும், துணை மின்நிலையங்களில் மின் தடைக்கு மரக் கிளைகளும் முக்கியக் காரணமாக உள்ளது. கிளைகளில் ஈரம் உள்ளதால் அவை மின் வயர்களில் விழுவதால் எரிந்துவிடும். இதனால் அடுத்தடுத்த இணைப்புகளிலும் வெடிப்பு ஏற்படும்" என்கிறார்.

தவறவிட்ட பருவகால பராமரிப்புகள்

``சென்னையில் பூமிக்கடியில் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இங்கும் அணில்களால்தான் பிரச்னை ஏற்படுகிறதா?" என்றோம். ``பூமிக்கடியில் மின்சாரம் சென்றாலும் இணைப்புப் பகுதிகளில் சிறிய பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அதில் பூனை, கீரி, அணில் போன்றவை வசிக்கின்றன. அந்தப் பெட்டியில் உள்ள RYB தடத்தில் உடல் உராயும்போது வெடித்துவிடும். சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கம்பத்தில் இருந்துதான் சர்வீஸ் கொடுக்கின்றனர். அங்கெல்லாம் மரங்கள், அணில், கீரி போன்றவை பிரதானமான மின் தடைக்குக் காரணமாக உள்ளன. இவற்றை சரிசெய்வது மின்வாரியத்தின் தொடர்ச்சியான பணிகள்தான்.

குறிப்பாக, தென்மேற்கு பருவமழையையொட்டி மே, ஜூன் மாதங்களில் பருவகால பராமரிப்புகளை (Monsoon maintainance) மேற்கொள்வோம். அப்போது மரக்கிளைகளை வெட்டி விடும் வேலைகள் நடக்கும். இது மிகப் பெரிய வேலையாக இருக்கும். இதன்மூலம் அடுத்த ஒரு வருடத்துக்குக் கம்பிகளை தொட வேண்டிய அவசியம் இல்லை. புது இன்சுலேட்டர்களைப் பொருத்தும் பணிகளும் நடக்கும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியாக பராமரிப்பு செய்யப்படவில்லை. இதற்கு கொரோனா பேரிடர், தடையில்லா மின்சாரம் கொடுக்கும் பணிகள் ஆகியவை பிரதான காரணங்களாக இருந்தன. கூடவே, மின் உற்பத்தியைவிடவும் மின் கொள்முதலில் கடந்த அரசு அதிக அக்கறையை செலுத்தியதும் ஒரு காரணம்," என்கிறார்.

எந்தவகையில் சரி செய்ய முடியும்?

அணில்

பட மூலாதாரம், FACEBOOK

``அணில்கள்தான் காரணம் என மின்துறை அமைச்சராக இருந்தே எனக்கே தெரியவில்லை என்கிறாரே நத்தம் விஸ்வநாதன்?" என்றோம். ``அவரது ஆட்சிகாலத்தில் எத்தனை கிளைகள் முறிந்து மின்தடை ஏற்பட்டது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அதிலும், ஒரு தென்னை மரமே முற்றாக எரிந்து விழுந்த காட்சிகளும் உள்ளன. அரசியலுக்காக அவர் பேசுகிறார். உண்மை நிலவரம் என்ன என்பது மின்துறை ஊழியர்களுக்குத் தெரியும். நாங்கள் செந்தில் பாலாஜியின் கூற்றுக்கு ஆதரவாகப் பேசுவதாகவும் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது. நாங்கள் தினசரி எதிர்கொள்ளக் கூடிய பிரச்னைகள் இவை.

அதேநேரம், இவற்றைத் தவிர்ப்பதற்கும் வழிகள் உள்ளன. மும்முனை மின்சாரம் செல்லும் பாதைகளில் ஒன்றோடு ஒன்று இணைந்தால் மின் தடை ஏற்படும். இதற்கு அணில்கள் உள்ளிட்டவை காரணமாக உள்ளன. ஆனால், ஒன்றுக்கொன்று இணையாமல் இருக்க பிரிப்பான்களை (Seperator) பயன்படுத்துவார்கள். இதனால் எந்தக் காலத்திலும் ஒன்றோடு ஒன்று கம்பிகள் உராய்வதற்கு வாய்ப்பே வரப் போவதில்லை. இவற்றை வெளிநாடுகளில் மிகச் சிறப்பாகச் செயல்படுத்துகின்றனர். இங்கு சில அதிகாரிகள் மட்டுமே தங்களது சொந்த ஆர்வத்தில் சில இடங்களில் பிரிப்பான்களை பயன்படுத்தியுள்ளனர். இவற்றை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தினால் மின் தடையை சரி செய்ய முடியும்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :