சென்னையில் 2 நாட்களில் ஐவர் மரணம்: பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறக்கப்படுவது ஏன்?

கழிவுநீர் தொட்டி

பட மூலாதாரம், SUDHARAK

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், ஆ.விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'சென்னையைப் போலவே கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளன. வேலைவாய்ப்பின்மை காரணமாகத்தான் பலரும் இந்தத் தொழிலுக்கு வருகின்றனர். இவர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை'' என்கின்றன தொழிலாளர் சங்கங்கள்.

தொடரும் மரணங்கள்

சென்னை, மாதவரம் 3-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட முத்து மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணியில் கடந்த 27ஆம் தேதி நெல்சன் (26), ரவிக்குமார் (40) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிவுநீர்த் தொட்டியின் மூடியைத் திறந்தபோது விஷவாயு தாக்கி நெல்சன் என்பவர் உள்ளே விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற ரவிக்குமாரும் விஷவாயுவால் தாக்கப்பட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மெட்ரோ வாரிய ஊழியர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு முயற்சியில் உயிரிழந்த நிலையில் நெல்சன் மீட்கப்பட்டார். மற்றொரு ஊழியரான ரவிக்குமாரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரவிக்குமாரும் இறந்து விட்டார்.

இந்த விவகாரத்தில், மெட்ரோ வாரியத்தின் ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து இறந்துபோன நெல்சனின் குடும்பத்துக்கு 15 லட்ச ரூபாயை நிவாரணமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் துயரம் அடங்குவதற்குள் சென்னை, பெருங்குடியில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெருங்குடி அதிர்ச்சி

பெருங்குடியில் உள்ள காமராஜர் நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 20 அடி ஆழமுள்ள கழிவுநீர்த் தொட்டியில் கடந்த 29-ஆம் தேதியன்று இரவு பள்ளிக்கரணையைச் சேர்ந்த பெரியசாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் இறங்கினர். அப்போது விஷவாயு தாக்கியதில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதில் நிகழ்விடத்திலேயே பெரியசாமி இறந்துவிட்டார். மற்றோர் ஊழியரான தட்சிணாமூர்த்தி, மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.

இது தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், மடிப்பாக்கத்திலும் ஆவடியிலும் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின்போது இரண்டு பேர் உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையைப் போலவே, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை எனப் பல மாவட்டங்களில் சாக்கடைக் குழிகளில் இறங்கி இறந்து போனவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்தபடியே உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் தனியார் குடியிருப்பு ஒன்றில் செப்டிக் குழிக்குள் இறங்கிய மூன்று தூய்மைப் பணியாளர்கள் இறந்துபோன சம்பவம் நடந்தது. அதேபோல், ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது வீட்டின் உரிமையாளர் உள்பட ஆறு பேர் இறந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

100 பேரில் 35 பேர் யார்?

சாக்கடை குழி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

''சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியின்போது மரணமடையும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பணியை பட்டியலின சமூகத்தினர் செய்வதாகத்தான் பொதுவான பார்வை இருக்கிறது. ஆனால், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்தில் பிற்படுத்தப்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பலரும் இந்த வேலையைச் செய்து வருகின்றனர். இந்தப் பணி செய்கிறவர்களில் 100 பேரில் 35 பேர் பி.சி, எம்.பி.சியாக உள்ளனர். இடஒதுக்கீடு குறித்தெல்லாம் பேசினாலும் இந்தப் பணியைச் செய்யும் பிரிவினரை முறைப்படுத்தும் வேலைகள் நடக்கவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆவடியில் இறந்துபோனவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் தான். கிராமப்புறங்களில் வேலையில்லாமல் நகரத்தை நோக்கி வேலைக்காக வருகின்றனர். இவர்களுக்கு எந்தவித வேலையும் கிடைப்பதில்லை; இந்த வேலைதான் கிடைக்கிறது. அதனாலேயே செப்டிக் குழிகளைச் சுத்தப்படுத்துவதற்கு எந்தவித உபகரணமும் இல்லாமல் இவர்களை இறக்கிவிடுவதால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன,'' என்கிறார், சி.பி.எம் கட்சியின் மதுரவாயல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பீமாராவ். இவர் சென்னை மெட்ரோ குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.

இது ஒரு சமூகக் குற்றம்

பிபிசி தமிழுக்காக சில தகவல்களை பீமாராவ் விவரித்தார்.

''மலக் குழிக்குள் இறங்குவதால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் வகையில் நவீன இயந்திரங்களை மெட்ரோ குடிநீர் வாரியம் கொண்டு வந்தது. ஆனால், தனியார் குடியிருப்புப் பகுதிகளில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால் சில தனியார் ஏஜென்சிகள், தொழிலாளர்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன. இவ்வாறு குழிக்குள் இறங்கக் கூடாது என்று 2013-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது சட்டமாகவும் உள்ளது. மனிதனை சாக்கடைக்குள் இறக்கி விட்டால் தண்டனை கொடுக்க வேண்டும் என்பது சட்டமாக இருந்தாலும் அது முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை',' என்கிறார்.

மாதவரத்தில் சாக்கடைக்குள் இறங்கிய நபர் இறந்தது தொடர்பாகப் பதிவான முதல் தகவல் அறிக்கையில் (FIR No: 433/2022) சட்டப்பிரிவு 337, 304(ஏ) ஆகிய பிரிவுகளில் தற்செயலாக நடந்த விபத்தாகத்தான் பதிவு செய்துள்ளதாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் 'மூச்சுத் திணறல்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், இதைக் கொலை வழக்காகப் பதிவு செய்யவில்லை எனக் குறிப்பிடும் பீமாராவ், ''இதுபோன்ற மரணங்களின்போது அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்," என்றார்.

கோவை, மதுரை போன்ற வளர்ந்து வரக்கூடிய பெருநகரங்களில் இதுபோன்ற பிரச்னைகள் வருகின்றன. மாதவரத்தில் உயிரிழந்த நெல்சன் என்ற நபரின் வயது 26 தான். அவருக்கு சிறு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது அந்தக் குடும்பம் நிர்கதியாகிவிட்டது. மற்றோர் ஊழியரான ரவிக்குமாரின் குடும்பமும் தவிக்கிறது.

கழிவுநீர் தொட்டி

பட மூலாதாரம், GETTY IMAGES/SUDHARAK OLWE

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கடந்த 29ஆம் தேதி சென்னை, வானுவம்பேட்டையில் கழிவுநீர் குழாயை சுத்தப்படுத்தும்போது ஒருவர் இறந்துவிட்டார். கடந்த 2 நாள்களில் மட்டும் சாக்கடை குழிக்குள் இறங்கிய வகையில் 5 பேர் இறந்துவிட்டனர். இது மனித சமூகமே வெட்கப்படக் கூடிய ஒன்று. விலங்குகளை வதைப்படுத்தினால் சட்டம் தண்டிக்கிறது. சக மனிதன் மரணிக்கும்போது அதை வேடிக்கை பார்ப்பது என்பது சமூகக் குற்றம். இதுபோன்ற விவகாரங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் யாரும் தண்டிக்கப்படுவது இல்லை. இந்த வழக்குகளை நீர்த்துப் போக வைக்கும் வேலைகளே நடக்கின்றன,'' என்கிறார்.

மேலும், ''சென்னையில் 50, 100 வருடங்களாக இதே வேலையை பல தலைமுறைகளாகப் பார்த்து வருகிறவர்களும் உள்ளனர். இதை நவீன சமூகத்தின் அவலமாகத்தான் பார்க்கிறோம். இது வேலைவாய்ப்போடு பின்னப்பட்டது என்பதால் அரசுதான் உரிய தீர்வைக் கொடுக்க வேண்டும்,'' என்கிறார்.

''சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் என்பது குறைவாக உள்ளது. நாளொன்றுக்கு 414 ரூபாய் சம்பளமாகக் கிடைக்கிறது. அதுவும் சரியான முறையில் கிடைப்பதில்லை. அதனால் பணிநேரம் போக வேறு எங்காவது வேலை கிடைத்தால் அதை ஏற்றுக் கொண்டு செல்கிறார்கள். அதைத் தவறு எனக் கூறினாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. போதிய வருமானம் இல்லாததால் மது அருந்திவிட்டு வேலைக்குச் செல்கின்றனர். அவர்களை அறிவுறுத்தினாலும் எங்களைத் தவறாக நினைக்கும் போக்கு உள்ளது,'' என்கிறார், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் சீனிவாசலு.

மெட்ரோ குடிநீர் வாரியம் சொல்வது என்ன?

இதுதொடர்பாக, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரை பிபிசி தமிழுக்காகத் தொடர்பு கொண்டோம். பெயர் குறிப்பிட மறுத்துப் பேசிய அந்த அதிகாரி, '' மாதவரத்தில் மெட்ரோ குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணியின்போது ஒருவர் இறந்துபோனார். அங்கு இறந்த நபருக்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அங்கு பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்த ஒப்பந்ததாரரைக் கைது செய்துவிட்டனர். மாதவரத்தில் கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி யாரும் வேலை பார்க்கவில்லை. ஜெட் ராடார் இயந்திரத்தை வைத்துப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் எட்டிப் பார்த்தபோது அந்த நபர் தவறி விழுந்துவிட்டார். அந்த நபரைக் காப்பாற்றச் சென்ற நபரும் தவறி விழுந்து இறந்துவிட்டார்,'' என்கிறார்.

தொடர்ந்து பேசியவர், '' உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மனிதன் இறங்கும் குழியாக (Man hole) இருந்ததை இயந்திரக் குழி (Machine hole) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இப்போது யாரும் குழிக்குள் இறங்கி வேலை பார்ப்பதில்லை. அவ்வாறு இயந்திரம் பயன்படுத்தும்போது போதிய உபகரணங்களை அணிந்து கொண்டு வேலை பார்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். சென்னைக்குள் மனிதர்கள் யாரும் சாக்கடைக்குள் இறங்கி வேலை பார்ப்பதில்லை. சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்படவில்லை. இதுபோன்ற இடங்களில் மலக் குழிகளை சுத்தப்படுத்துவதற்கு முன் அதன் மூடியைத் திறந்துவிட்டு 15 நிமிடம் காத்திருக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கியுள்ளோம். அதற்காகப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. சில தனியார் ஏஜென்சிகள் மூலமாக சுத்தப்படுத்தும் பணிக்கு ஊழியர்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால்தான் பிரச்னை ஏற்படுகிறது,'' என்கிறார்.

''போதிய சம்பளம் இல்லாததும் ஒரு காரணம் என்கிறார்களே?'' என்றோம்.

''சம்பளத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு வேலைக்கும் அடிப்படை சம்பளத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் தான் நிர்ணயிக்கின்றன. அதன்படியே கொடுக்கப்படுகிறது. ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. மாதவரத்தில் நடந்த சம்பவம் என்பது ஒரு விபத்து. தவிர, பாதாள சாக்கடை குழிக்குள் யாரும் இறங்குவதில்லை. அதைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்,'' என்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: