"ஓபிஎஸ் இனி அதிமுக ஒருங்கிணைப்பாளர் இல்லை" - சி.வி.சண்முகம் அடுக்கும் காரணங்கள்

எடப்பாடி கே. பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எடப்பாடி கே. பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம்
  • அதிகாலை மூன்று மணிக்கு நடந்த வழக்கில் இவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், நாங்கள் பொதுக்குழுவை கூட்ட ஆட்சேபமில்லை என்று சொன்னார்களா, இல்லையா?
  • கட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றி முறைப்படி தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது. அதில் ஓ. பன்னீர்செல்வம் கையெழுத்திட்டிருக்கிறார். அது அவருடைய கையெழுத்து இல்லை என்கிறாரா வைத்திலிங்கம்?
  • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நேற்றோடு காலாவதியாகி விட்டன. ஆகவே இனி ஓ.பன்னீர்செல்வம் கழகத்தின் பொருளாளர். எடப்பாடி கே. பழனிசாமி தலைமைக் கழகச் செயலாளர். இதுதான் இன்றைய நிலை.

அதிமுக பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறப்படாததால், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். மேலும், பல்வேறு காரணங்களை முன்வைத்து, இதையெல்லாம் ஓபிஎஸ் மறுக்கிறாரா என்றும் அவர் சில கேள்விகளை முன்வைத்துள்ளார். ஜூன் 23ஆம் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழு குறித்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் சி.வி. சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியது என்ன?

"நேற்று நடந்த பொதுக்குழு கூட்டம் முறையாகக் கூட்டப்படவில்லை. இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரமில்லை என்று வைத்தியலிங்கம் சொல்லியிருக்கிறார். பொதுக் குழுவானது கூலியாட்களை வைத்தும் அடியாட்களை வைத்தும் நடத்தப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார். தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக முறைப்படி தேர்வுசெய்யப்படவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். கழக அமைப்புத் தேர்தலில் தேர்வுசெய்யப்பட்டவர்களின் பதவிகளை பொதுக் குழு அங்கீகரிக்காததால், தேர்வு செல்லாது என்று வைத்திலிங்கம் கூறியிருக்கிறார். ஆகவே பொதுக் குழு உறுப்பினர்களின் பதவி செல்லாது என்பது அவரது வாதம்.

சி.வி.சண்முகம் அளித்த விளக்கங்கள்

மீண்டும் பொதுக் குழுவைக் கூட்ட அதிகாரமில்லை என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சொல்லியிருக்கிறார். ரவுடித்தனமாக அவர் பேசியிருக்கிறார்.

பொதுக் குழுவை பொதுச் செயலாளர் கூட்டலாம். இப்போது அந்தப் பதவி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என மாற்றப்பட்டிருக்கிறது. ஆகவே அவர்கள் பொதுக் குழுவைக் கூட்டலாம். ஆண்டுக்கு ஒரு முறை பொதுக் குழுவை கூட்டவேண்டும். பிறகு தேவைப்படும் நேரத்தில் கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு உண்டு.

இல்லாவிட்டால், பொதுக் குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர், அதாவது மொத்த உறுப்பினர்களான 2,665 பேரில் ஐந்தில் ஒரு பங்கினர் கையொப்பமிட்டு கட்சி அலுவலகத்தில் கொடுத்தாலே, கொடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் பொதுக் குழுவைக் கட்டாயம் கூட்ட வேண்டும்.

அப்படி கடிதம் கொடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும். எங்கேயுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதியைப் பெற்று கூட்ட வேண்டும் என்று விதிகளில் சொல்லப்படவில்லை. அறிவிப்பு கிடைத்த ஒரு மாதத்திற்குள் கூட்ட வேண்டுமென்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே வைத்தியலிங்கம் சொல்லியிருக்கும் கருத்து முழுக்க முழுக்கத் தவறு.

சி.வி. சண்முகம் எழுப்பும் கேள்விகள்

பொதுக்குழு கூட்டத்தை ஜூன் 23ஆம் தேதி காலை ஸ்ரீ வாரி மண்டபத்தில் கூட்டலாம் எனக் கையெழுத்துப்போட்டுக் கொடுத்தது யார்? இதற்கான கடிதத்தில் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி கே. பழனிச்சாமியும்தான் கையெழுத்திட்டனர். பொதுக் குழு கூடியது செல்லாது என்றால், இந்தக் கடிதத்தில் பன்னீர்செல்வம் தெரியாமல் கையெழுத்துப் போட்டுவிட்டாரா?

நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும்போது அதிகாலை மூன்று மணிக்கு நடந்த வழக்கில் இவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், நாங்கல் பொதுக் குழுவை கூட்ட ஆட்சேபமில்லை என்று சொன்னார்களா, இல்லையா?

அதற்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சில விதிகளைக் கடைப்பிடிக்கச் சொல்லியும் பாதுகாப்பு அளிக்கச் சொல்லியும்கூறி பொதுக் குழுவிற்கு அனுமதி அளித்திருக்கிறது. பொதுக் குழுவுக்கு வந்த உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.

அது வருகைக்கான கையெழுத்து இல்லை. மாறாக, பொதுக் குழுத் தீர்மானங்களை நாங்கள் ஏற்கிறோம் அல்லது நிராகரிக்கிறோம் என்பதற்கான பதிவேடு. 2,263 பொதுக் குழு உறுப்பினர்கள் முறைப்படி வந்தார்கள். வைத்தியலிங்கம் மட்டும்தான் ஓ பன்னீர்செல்வம் காரில் சொகுசாக உள்ளே வந்து விட்டார்.

வைத்திலிங்கம் (இடமிருந்து இரண்டாவது)
படக்குறிப்பு, வைத்திலிங்கம் (இடமிருந்து இரண்டாவது)

அவைத் தலைவரை முறைப்படி தேர்வுசெய்யவில்லை என்று வைத்திலிங்கம் சொல்லியிருக்கிறார். இதற்கு முன்பு அவைத் தலைவரை எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோதான் நியமனம் செய்து அறிவிப்பார்கள். ஆனால், சட்டம் அப்படி சொல்லவில்லை. ஜெயலலிதா அறிவிப்பார். அவர் என்ன சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அடுத்த பொதுக் குழுவில் அதற்கு அங்கீகாரம் பெறப்படும்.

ஆகவே, ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும்தான் அவைத் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமென்பது விதியில்லை. பொதுக் குழுவின் உறுப்பினர்கள் கூடி, தலைமைக் கழகத்தின் அவைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுச் செயலாளரோ, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளரோ தேர்வு செய்ய முடியாது.

தமிழ்மகன் உசேனை தற்காலிக அவைத் தலைவராக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும்தான் கையொப்பமிட்டு அறிவித்தார்கள். இந்தப் பொதுக் குழுவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தமிழ் மகன் உசேனை வழிமொழிந்தாரா இல்லையா?

விதிமீறல் ஏதுமில்லை

இதில் நீதி மன்ற அவமதிப்பு ஏதும் இல்லை. பொதுக் குழுவைக் கூட்டுங்கள், தீர்மானங்களை நிறைவேற்றுங்கள், அல்லது நிறைவேற்றாதீர்கள் என்று நீதிமன்றம் சொன்னது. தீர்மானங்களை நிறைவேற்றாதது நீதிமன்ற அவமதிப்பு என்கிறார்கள். இது தொடர்பாக வழக்குத் தொடரட்டும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

தமிழ் மகன் உசேனின் பெயர் அவைத் தலைவர் பதவிக்கு முறைப்படி முன்மொழியப்பட்டு, ஏக மனதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதில் விதி மீறல் இல்லை.

மேலும் அமைப்புத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்களை பொதுக் குழு அங்கீகரிக்கவில்லை என்கிறார்கள். ஆகவே, இந்தப் பொதுக் குழு உறுப்பினர்களின் பதவி செல்லாது என்கிறார்கள். ஆனால், கட்சித் தேர்தலில் தேர்வுசெய்யப்பட்டவர்களை அங்கீகரிக்க வேண்டுமென்று எந்த விதியும் இல்லை. அவர்கள் தேர்வுசெய்யப்பட்டதை முறைப்படி தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதில் ஓ. பன்னீர்செல்வம் கையெழுத்திட்டிருக்கிறார். அது அவருடைய கையெழுத்து இல்லை என்கிறாரா வைத்தியலிங்கம்? அமைப்புத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, அதனை பொதுக் குழுவில் அங்கீகரிக்க வேண்டுமென்று விதி இருந்தால் காண்பிக்கச் சொல்லுங்கள். நாங்கள் ராஜினாமா செய்கிறோம்.

சி.வி.சண்முகம்

பட மூலாதாரம், Facebook /CVeShanmugam

படக்குறிப்பு, சி.வி.சண்முகம்

பொதுக் குழுவுக்கு எந்த விதியையும் உருவாக்கவும் மாற்றவும் நீக்கவும் அதிகாரம் உண்டு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்வு செய்வது குறித்து பொதுக் குழுவில் அங்கீகாரம் பெற வேண்டும். அதைப் பெறாததால், அந்தப் பதவிகள் நேற்றோடு காலாவதியாகிவிட்டன. ஆகவே இனி ஓ.பன்னீர்செல்வம் கழகத்தின் பொருளாளர். எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமைக் கழகச் செயலாளர். இதுதான் இன்றைய நிலை.

பொதுக் குழு உறுப்பினர்களில் 2550 பேர் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அவர் பக்கம் சுமார் 40 பேர் இருக்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதால் இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்பதற்காக 11 ஜூலை பொதுக் குழு கூட்ட வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம். அதன்படி பொதுக் குழு கூட்டப்படும்," என சி.வி. சண்முகம் பேசியிருக்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: