அ.தி.மு.க பொதுக்குழு, ஒற்றைத் தலைமை: ஓ.பி.எஸ்.க்கு உள்ள வாய்ப்புகள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன. அ.தி.மு.கவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பது உறுதியாகவிட்டதாக அ.தி.மு.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கான அடுத்தகட்ட வாய்ப்புகள் என்ன?
அ.தி.மு.கவில் அமைப்புரீதியாக உள்ள 75 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் உள்பட கீழ்மட்ட நிர்வாகிகளுக்கான உள்கட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனை பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெறுவதற்காகவும் அப்போது நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்தும் கடந்த 14 ஆம் தேதி அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய வார்த்தைகள், சர்ச்சையை ஏற்படுத்தின.
தொடர்ந்து, ஜெயக்குமாரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. "ஒற்றைத் தலைமை என்பது அம்மாவுக்கு செய்யும் துரோகம். அவர் மட்டுமே நிரந்தரப் பொதுச் செயலாளர்" என்றார் ஓ.பன்னீர்செல்வம். ஆனாலும், 'பொதுக்குழுவை நடத்தியே தீருவது' என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உறுதியாக இருந்தனர். அதற்கு முன்னோட்டமாக மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஓ.பி.எஸ் தரப்புக்கு ஆதரவாக இருந்த மாவட்ட செயலாளர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம் கொண்டு வரப்பட்டனர். இதனால் ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையும் 12 என்பதில் இருந்து ஏழாகக் குறைந்ததாகக் கூறப்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன், முன்னாள் எம்.பி மைத்ரேன், சென்னை அ.தி.மு.க தெற்கு-கிழக்கு மாவட்டச் செயலாளர் வேளச்சேரி அசோக் உள்ளிட்டவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தோல்வியில் முடிந்த முயற்சிகள்
இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கமும் கையொப்பமிட்டிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. 'அவ்வாறு எழுதிய கடிதம் எதுவும் தங்களுக்கு வரவில்லை' என அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியிருந்தார்.
மேலும், 'பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை முன்மொழிந்தால் சட்டச் சிக்கல் ஏற்படும்' எனக் கூறி விரிவான கடிதம் ஒன்றையும் ஓ.பி.எஸ் தரப்பில் வெளியிட்டனர். இதற்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இந்தச் சூழலில், 'பொதுக்குழு நடந்தால் சட்டம் ஒழுங்கு கெடும்' என ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திலும் ஓ.பி.எஸ் மனு கொடுத்திருந்தார். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி திருவேற்காடு காவல் நிலையம் சென்ற முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், 'உள் அரங்கில் கூட்டம் நடைபெறுவதால் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு வாய்ப்பில்லை' எனக் கூறி, வானகரத்தில் நடக்கவுள்ள பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து விவரித்தார்.
இதன் தொடர்ச்சியாக, ஓ.பி.எஸ் கொடுத்த மனுவையும் ஆவடி காவல் ஆணையரகம் நிராகரித்துவிட்டது. இதனால் பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், 'அ.தி.மு.கவில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அம்மாவின் நினைவிடத்துக்குச் சென்ற தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட இணைச் செயலாளர் கேசவன், தீக்குளிக்க முயன்ற சம்பவம் எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும் என்பதை சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கான வாய்ப்புகள் என்ன?
இதையடுத்து, ''ஓ.பி.எஸ் முன்னுள்ள வாய்ப்புகள் என்ன?'' என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். '' ஒற்றைத் தலைமை வருவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. அ.தி.மு.கவின் சொத்து என்பது பெயரும் இரட்டை இலையும் மட்டும்தான். அது ஓ.பி.எஸ் கையில் இருந்தாலும் இ.பி.எஸ் கையில் இருந்தாலும் அதே வாக்குகள்தான் கிடைக்கும். ஓ.பி.எஸ்ஸுக்கான வாய்ப்பு என்பது தனக்குக் கிடைக்கும் பதவியைப் பெற்றுக் கொண்டு அங்கேயே இருக்கலாம். அவருக்குப் பொருளாளர் பதவி கொடுக்கப்படலாம்.

பட மூலாதாரம், Getty Images
இனிவரும் நாள்களில் இரட்டை இலை சின்னத்துக்காக அவர் கையொப்பமிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அவருக்கு ஆதரவாக இருந்த மைத்ரேயன் உள்பட பலரும் எடப்பாடி பக்கம் வந்துவிட்டனர். இதனைத் தவிர்க்கும்வகையில், 'தனித்து நிற்போம்' என முடிவெடுத்தால் பன்னீர்செல்வத்துக்குத்தான் பாதிப்பு அதிகம். அவர் விரும்பினால் போட்டி அ.தி.மு.கவை நடத்தலாம், போட்டி பொதுக்குழுவை கூட்டலாம். மீண்டும் தேர்தல் ஆணையம் சென்றால், அங்கும் பா.ஜ.க ஆதரவு தேவைப்படும். அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை'' என்கிறார்.
'' தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் முறையிட்டால் எடப்பாடிக்கு சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதா?'' என்றோம். ''அதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை. தேர்தல் ஆணையம் எப்போதும் சின்னத்தை முடக்குவதில்லை. தற்காலிமாக அதன் பயன்பாட்டு உரிமையை ரத்து செய்யும். அதுவும் தேர்தல் நடந்தால்தான் நடக்கும். அதுவரையில் வழக்கு மட்டுமே நடந்து வரும். சட்டசபையில் உள்ள அ.தி.மு.க உறுப்பினர்களில் எடப்பாடிக்குத்தான் அதிக பெரும்பான்மை உள்ளது. கட்சியில் உள்ள செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவும் இ.பி.எஸ் பக்கமே உள்ளது."
தேர்தல் ஆணையம் தலையிடுமா?
"கட்சியின் விதிகள் என்பது சிவில் விவகாரம் என்பதால் அதில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை. அதற்கான சட்டப்புலமையும் தேர்தல் ஆணையத்தில் இல்லை. எனவே, அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியிருப்பதாக உறுதியாகக் கூறலாம். இதில், பன்னீர்செல்வம் பக்கம் போதிய பெரும்பான்மை இல்லாததால் பா.ஜ.கவும் தலையிடுவதற்கு வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில் தனக்குக் கிடைப்பதை வைத்து ஓ.பி.எஸ் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். நாளை நடக்கவுள்ள பொதுக்குழுவுக்கு அவர் செல்வதற்கும் வாய்ப்பில்லை'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
''தற்போது அ.தி.மு.கவின் பொருளாளராகவும் ஓ.பி.எஸ் இருக்கிறார். இந்தப் பதவிக்கு இடையூறு வருவதற்கு வாய்ப்புள்ளதா?'' என்றோம். ''அந்தப் பதவிக்கு இடையூறு ஏற்படுத்தப்படாவிட்டால் அவரே தொடர்வார். பொதுக்குழுவில் அ.தி.மு.கவின் உள்கட்சி விதி 20-ல் திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும். அதனைத் திருத்திவிட்டு பொதுக்குழு ஏகமனதாக ஏற்றுக் கொள்வதாக தனித்தீர்மானம் கொண்டு வரவேண்டும். அதனைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைத்தால் போதும்'' என்கிறார்.
தொடர்ந்து பேசிய ஷ்யாம், '' 1976 ஆம் ஆண்டில் கோவையில் அ.தி.மு.கவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது 'அனைத்திந்திய அண்ணா தி.மு.க' எனக் கட்சியை பெயர் மாற்றம் செய்ய உள்ளதாக எம்.ஜி.ஆர் அறிவித்தார். இதற்கு கோவை செழியன், ஜி.விஸ்வநாதன், பெ.சீனிவாசன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே, 'அனைவரும் வாக்களியுங்கள்' என எம்.ஜி.ஆர் கூறிவிட்டார். கூட்டத்தில் பங்கேற்றவர்களும் எம்.ஜி.ஆர் கூறியதை ஏற்று ஆதரவாக வாக்களித்தனர். கட்சியின் பெயரை மாற்றிய கையோடு, எதிர்ப்பு தெரிவித்தவர்களையும் கட்சியில் இருந்து நீக்கினார். அவர்களும் தனிக்கட்சியெல்லாம் தொடங்கிவிட்டு, பின்னர் மீண்டும் எம்.ஜி.ஆர் பக்கமே வந்தனர்."
"எடப்பாடிக்கும் சிக்கல்தான்"
"ஒரு கை உயரும்போது கட்சியும் சின்னமும் அங்கேதான் செல்லும். அதற்கு எதிராக எதுவும் செய்வதற்கு வாய்ப்பில்லை. அதேநேரம், ஒற்றைத் தலைமையாக வந்தாலும் செயல்பாடுகளால்தான் மக்களின் ஆதரவை தலைவர்களால் பெற முடியும். அ.தி.மு.கவின் வசீகர தலைமை என்பதெல்லாம் ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது. ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வருவதன் மூலம் சசிகலாவுக்கான கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன. பொதுவாக அரசியலில் உயர்வுக்குப் பின்னால் துரோகங்களும் குற்றங்களும் இருக்கும். அது இயல்பான ஒன்றுதான்'' என்கிறார் ஷ்யாம்.

பட மூலாதாரம், Getty Images
''இதன்பிறகு முக்குலத்தோர் வாக்குவங்கியை மையமாக வைத்து சசிகலா செயல்படலாம். மேற்கு மண்டலத்தில் உள்ள வேளாள கவுண்டர் சமூக வாக்குவங்கியை மையமாக வைத்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் செயல்பட்டு வருகிறார். இதனால் எடப்பாடிக்கும் சிக்கல்தான். அண்ணாமலையால் மேற்கு மண்டலத்தில் உள்ள அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும். இதனை அடிப்படையாக வைத்து வரும் தேர்தல்களில் அதிக இடங்களை அ.தி.மு.கவிடம் பா.ஜ.க கேட்பதற்கான சூழல் உருவாகும்'' என்கிறார் ஷ்யாம்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












