அதிமுக ஓபிஎஸ் Vs இபிஎஸ்: டெல்லி செல்வது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

தமது மகன் ரவீந்திரநாத், அதிமுகவில் உள்ள தமது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் டெல்லி புறப்பட்டுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
இது தொடர்பாக வியாழக்கிழமை இரவு சென்னையில் இருந்து டெல்லி புறப்படும் முன்பாக அவரிடம் செய்தியாளர்கள் பேசினர். அப்போது, "அதிமுக நெருக்கடியான நிலையில் உள்ள போது திடீரென்று நீங்கள் டெல்லி செல்வது ஏன்?" என்று கேட்டனர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், நாளை மறுதினம் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மூ வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். அந்த நிகழ்வில் பங்கேற்கச் செல்கிறேன் என்று பதிலளித்தார்.
இதேவேளை, தமது டெல்லி பயணத்தின்போது அதிமுகவில் தற்போது எழுந்துள்ள பொதுக்குழு நிகழ்வுகள் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடும் என்றும் அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு நடவடிக்கை எடுத்தால் அதை சட்ட ரீதியாக எவ்வாறு அணுகுவது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஓராணியாகவும் ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும் செயல்பட்டபோது அந்த கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்திருந்தது. இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோதி தலையிட்டு இருவரும் ஓரணியாக செயல்பட அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஒன்றாக செயல்பட முடிவு செய்தனர். அப்போது நடந்த கட்சியின் பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் வேறு எவரையும் தேர்வு செய்யாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் செயல்பட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இரட்டைத் தலைமை என்பதற்கு பதிலாக ஒற்றைதை தலைமையே வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தை ஓ.பிஎஸ் தரப்பு அணுகி தடையாணை பெற்றிருக்கிறது. இருப்பினும், சென்னை வானகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத்தலைமைக்கு ஆதரவாக குரல் கொடுக்கப்பட்டது. மேலும், வரும் ஜூன் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் மீண்டும் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்றைய கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார்.
"அவைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை"
முன்னதாக, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்தார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும், பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை, தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பொதுக்குழுவே செல்லாது என்று கூறினார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், "23 தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், 23 தீர்மானங்களை அவர்கள் ரத்து செய்துவிட்டார்கள். அவர்களுக்கு அதனை ரத்து செய்ய உரிமை இல்லை. அவைத் தலைவர் தேர்வு செல்லாது. அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும், இதுதான் அதிமுகவில் இருந்த நடைமுறை. அங்கு கூடியிருந்தவர்கள் உறுப்பினர்கள் அல்ல. பணத்தை கொடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் என்று கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். அது உண்மையானது அல்ல," என்றார்.

இதன் மூலம், பொதுக்குழு உறுப்பினர்களே ரத்தாகிவிட்டார்கள். அதாவது பதவி வெறி சட்டத்தை மறந்து, நீதி அரசர்களின் உத்தரவை மறந்து, நடந்து கொண்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்து கேள்வி எழுந்தபோது,"வரும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடக்காது. நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறோம்.
பொதுக்குழு கூட்டம் என்பது புரட்சித் தலைவர், புரட்சி தலைவி இருந்த காலத்தில், அவ்வளவு அழகாக இருக்கும். அது மிகவும் கட்டுப்பாட்டாக இருக்கும். இன்று கட்டுப்பாடு இல்லாமல் காட்டுமிரண்டிதானமாக நடந்து இருக்கிறது.

இப்போது நடைபெற்ற பொதுக்குழு கூட்டமே செல்லாது," என்றார்.
இத்தகைய சூழ்நிலையில், பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் தயாராக உள்ளதா என்ற கேள்விக்கு, "பேச்சுவார்த்தைக்கு எப்போதும் ஒருங்கிணைப்பாளர் தயாராக இருக்கிறார். அதிமுக கட்சி எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்; ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கருத்து," என்றார்.
இந்த பொதுக்குழு கூட்டம் ஜனநாயக அடிப்படையில் நடக்கவில்லை என்றும், அவர் இது அரைமணி நேரத்தில் நடந்து முடிந்த ஓரங்க நாடகம் எனவும் வைத்திலிங்கம் கூறினார்.
ஓபிஎஸ், இபிஎஸ் உடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு

இந்த நிலையில், பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் சென்ற எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்கான மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலையும் உடனிருந்தார்.
இந்த இருவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசிய பிறகு, ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து தாங்கள் பேசவில்லை என்று அண்ணாமலை கூறினார்.
இதைத்தொடர்ந்து, பாஜக தலைவர்கள் இருவரும் குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்மூவுக்கு அதிமுகவின் ஆதரவை கேட்டு அதன் தலைவர்களிடம் பேச வந்ததாக அதிமுக மற்றும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












