பெற்றோரால் பிரிக்கப்பட்ட லெஸ்பியன் ஜோடியை சேர்த்து வைத்த கேரள உயர்நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
பெற்றோரால் பலவந்தமாகப் பிரிக்கப்பட்ட லெஸ்பியன் காதல் ஜோடியைச் சேர்ந்து வாழ அனுமதித்து கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியின்படி, நீதிபதி கே. வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்த ஆட்கொணர்வு மனுவில் வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஆலுவா பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஆதிலா நசரினின் ஆட்கொணர்வு மனு விசாரணையில், முதலில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அவருடைய காதலியான ஃபாத்திமா நூராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, தனது காதலி அவரது குடும்பத்தினரால் கடத்திச் செல்லப்பட்டதாக ஆதிலா குற்றம் சாட்டியிருந்த காரணத்தால், ஃபாத்திமா நூரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மே 23-ஆம் தேதியன்று காவல்துறையில் ஃபாத்திமாவை அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுவிட்டதாக ஆதிலா புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் இருவரையும் சேர்த்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்த ஃபாத்திமா நூராவின் தாய், மே 24-ஆம் தேதியன்று அவரை அதிலாவின் வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
இதைத் தொடர்ந்து அதிலா நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைப் பதிவு செய்தார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் நீதிபதி கே.வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு, ஆதிலா நசரின் மற்றும் ஃபாத்திமா நூரா இணைந்து வாழ அனுமதித்து தீர்ப்பளித்துள்ளது.
வடமாநில தொழிலாளர்களின் தகவல்களைச் சேகரிக்க உத்தரவு
வடமாநிலஙகளில் இருந்து தமிழ்நாடு வந்து தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும்படி காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், "ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே கடந்த வாரம் கடல்பாசி சேகரிக்கச் சென்ற ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டதாக வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

பட மூலாதாரம், SYLENDRA BABU
இதேபோல அண்மையில் சென்னை மயிலாப்பூரில் தொழிலதிபரும் அவரது மனைவியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ஆயிரம் சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக நேபாளத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மற்றொருவர் என இருவர் கைது செய்யப்பட்டனர்.
எனவே, தமிழ்நாட்டில் தங்கியிருந்து வேலை செய்யும் வட மாநிலத்தவர்களின் முகவரி மற்றும் விவரங்கள் இருந்தால், அவர்களில் யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது எளிது என காவல்துறையினர் கருதினர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்க காவல்துறையினருக்கு தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளிமாநில ஆட்களை வைத்து வீடு கட்டும் உரிமையாளர்கள், பொறியாளர்கள், கட்டட ஒப்பந்ததாரர்கள், உணவக உரிமையாளர்கள், விடுதி நிர்வாகிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் தங்களிடம் பணியாற்றும் வட மாநிலத்தவர்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்," என்று கூறப்பட்டுள்ளது.
"பிறரை தரமின்றி விமர்சிக்க சிவாஜி பெயரைப் பயன்படுத்த வேண்டாம்"
பிறரை தரமின்றி விமர்சிப்பதற்கு, நடிகர் சிவாஜியின் பெயரைப் பயன்படுத்த வேண்டாமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசனுக்கு, சிவாஜியின் மகன் ராம்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன், பிரதமர் மோதியை விமர்சிக்கும்போது, தேவையின்றி தந்தை சிவாஜியின் பெயரை இழுத்திருக்கிறார். நடிகர் சிவாஜி கணேசன், பிரதமர் மோச்தி ஆகியோர், இடைவிடாத மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுடன், எங்கள் தந்தை நட்புடன் இருந்தவர். நெருக்கடியான காலங்களில், அவர்களுக்கு உதவியவர். தனது உடல், பொருள், புகழ் ஆகியவற்றை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாட்டுக்காக அர்ப்பணித்தவர்.
சிவாஜி இன்று இருந்திருந்தால், பிரதமர் மோதியையும் பாஜகவையும் ஆதரித்திருப்பார். உலக அரங்கில் மோதியால் பாரதம் தலைநிமிர்ந்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்திருப்பார்.
உங்களுடைய கருத்தில், இந்திய மற்றும் உலகப் பொருளாதாரம் குறித்த அறியாமை தெரிகிறது. பாஜக அளித்ததாக நீங்கள் குறிப்பிட்ட வாக்குறுதியை நம்பி, மக்கள் கடன் வாங்கவில்லை. உங்கள் கூட்டணிக் கட்சியான திமுக அளித்த வாக்குறுதி தான் மக்களைக் கடன் வாங்க வைத்தது. இவையெல்லாம் பொதுவெளியில் இருக்கும் தகவல்கள். 'அரைகுறை ஞானம் ஆபத்தானது' என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அதை உங்கள் அறிக்கை நிரூபிக்கிறது.
சிவாஜி கணேசனை பாராட்டுவதை வரவேற்கிறோம். ஆனால், பிறரைத் தரமின்றி விமர்சிப்பதற்கு அவரது பெயரைப் பயன்படுத்த வேண்டாம்," என்று சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் கணேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாக அந்தச் செய்தி கூறுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













