சைலேந்திர பாபு ஐபிஎஸ்: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி காவல்துறையில் கடந்து வந்த பாதை

Sylendra babu

பட மூலாதாரம், Sylendra babu

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக சி.சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு இன்று மாலை பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே இவர் டிஜிபி அந்தஸ்தில் ரயில்வே பிரிவு டிஜிபி ஆக பணியாற்றி வருகிறார்.

ஜூலை 1ஆம் தேதி முதல் காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் படையின் தலைமை அதிகாரியாக செயல்படுவார். இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகும்.

இந்திய காவல் பணியில் 1987ஆம் ஆண்டில் சேர்ந்த சைலேந்திர பாபுக்கு தமிழ்நாடு காவல் பிரிவு ஒதுக்கப்பட்டது.

1962ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் பிறந்த இவர், தமிழக விவசாய கல்லூரியில் பிஎஸ்சி வேளாண் படிப்பும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மக்கள்தொகை ஆய்வுப்பிரிவில் முதுகலை மேல்படிப்பும் முடித்தார்.

'காணாமல் போன குழந்தைகள்' என்ற தலைப்பில் பகுப்பாய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்ற இவர், பின்னாளில் மனித ஆற்றல் பிரிவில் முதுகலை பட்டமும் (எம்பிஏ) பெற்றார்.

கட்டுக்கோப்புடன் உடலை வைத்திருப்பது, வறிய நிலையில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடுவது, இடைவிடாது உடற்பயிற்சியில் ஈடுபடுவது என தொடர்ச்சியாக தன்னை எப்போதுமே மும்முரமாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் மிக்கவராக இவர் அறியப்பட்டு வருகிறார்.

நீச்சல், தடகளம், துப்பாக்கி சுடுதல், நீண்ட தூர மிதிவண்டி ஓட்டுதல் போன்ற விளையாட்டிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. 2013ஆம் ஆண்டில் தமிழ்நாடு கடலோர காவல் படை தலைமை அதிகாரியாக இருந்தபோது கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான 890 கி.மீ தூர சைக்கிள் ஓட்டத்தை வழிநடத்தி கடலோர குடியிருப்புவாசிகளிடையே கடலோர காவல் படை பணியின் சிறப்புகளை விளக்கிய நடவடிக்கை மாநில அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்திய காவல் பணியில் 1987ஆம் ஆண்டு சேர்ந்த இவருக்கு தமிழக காவல் பிரிவு ஒதுக்கப்பட்ட பிறகு, தருமபுரி, கோபிசெட்டிபாளையம், சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் உதவி கண்காணிப்பாளர் ஆக பணியாற்றினார். பிறகு பதவி உயர்வு பெற்று கண்காணிப்பாளராக செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றினார்.

பின்னர் ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பாளராக 2000ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2001ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இவர் பணியாற்றினார்.

இதைத்தொடர்ந்து காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) ஆக பதவி உயர்வு பெற்று விழுப்புரம் சரகத்திலும் வட சென்னை , தென் சென்னை ஆகிய காவல் சரகத்தில் இணை ஆணையாளராகவும் பின்னர் திருச்சி சரக டிஐஜி ஆகவும் இவர் பணியாற்றினார்.

சைலேந்திரபாபு

பட மூலாதாரம், Sylendra Babu

பின்னர் கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர், அங்கு டிஐஜி அந்தஸ்தில் இருந்து ஐ.ஜி ஆக பதவி உயர்வு பெற்ற பிறகும் அதே அலுவலகத்தில் பணியைத் தொடர்ந்தார்.

காவல்துறை தலைவர் (ஐ.ஜி) ஆக பதவி உயர்வு பெற்றதும், 2008 முதல் 2010ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை தலைவர் ஆக சைலேந்திரபாபு பணியாற்றினார்.

இதைத்தொடர்ந்து கோவை நகர காவல்துறை ஆணையாளராகவும் பின்னர் தமிழ்நாடு காவல்துறையின் வடக்கு மண்டல காவல்துறை தலைவராகவும் இவர் பணியாற்றினார்.

இதன் பிறகு 2012ஆம் ஆண்டில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்றதும் தமிழ்நாடு கடலோர காவல் படையின் தலைமை அதிகாரியாக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.

பின்னர், காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் டிஜிபி ஆக ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே பணியாற்றிய இவர், மீண்டும் கடலோர காவல் படை கூடுதல் டிஜிபி ஆக நியமிக்கப்பட்டு அந்த பதவியில் சரியாக ஒரு ஆண்டு, ஒரு மாதம் நீடித்தார்.

இதன் பின்னர் சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆக 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்ட இவர், அதே ஆண்டு அக்டோபர் மாதம் ரயில்வே கூடுதல் டிஜிபி ஆக நியமிக்கப்பட்டார். அதே பிரிவில் இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு டிஜிபி அந்தஸ்தில் சைலேந்திர பாபு பணியைத் தொடர்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :