பழைய ஓய்வூதிய திட்டம்: பிடிஆர் தந்த விளக்கம், தமிழ்நாடு அரசை எச்சரிக்கும் ஜாக்டோ-ஜியோ - முழு விவரம்

பட மூலாதாரம், P THIAGARAJAN
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிக செலவாகும் எனக்கூறி மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள விளக்கம், தமிழ்நாடு அரசு ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ' முதலமைச்சருடன் பேசுவதற்கு அனுமதி கோரியுள்ளோம். அவர் கூறும் வார்த்தைகளைப் பொறுத்தே எங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்' என்கின்றனர் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மனிதவள மேலாண்மைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ' பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி தனிநபர் ஒருவருக்கு 2 லட்ச ரூபாய் செலவாகிறது. அதேநேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி தனிநபர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய்தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது. இந்த விவகாரத்தில் முதல்வரும் அவை முன்னவரும் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன்' எனத் தெரிவித்தார்.
இரண்டு காரணங்கள்
'அமைச்சரின் கருத்து அவரது சொந்தக் கருத்தா.. தமிழக அரசின் கருத்தா என்ற ஐயம் எழுந்துள்ளது' எனக் குறிப்பிடும் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பதற்கு அமைச்சர் முன்வைத்துள்ள காரணங்கள் இரண்டுதான். அதில் முதலாவதாக புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசின் சார்பிலும் பணியாளர் சார்பிலும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்ட நிதியை பொதுவருங்கால வைப்பு நிதி உள்பட வேறு நிதியங்களுக்கு மாற்றுவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. இரண்டாவதாக, பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற வேண்டும் என்றால் அரசுக்கு அதிக செலவாகும் என்பது. இவை இரண்டும் ஏற்க முடியாதவை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
' ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்ட நிதியை பொதுவருங்கால வைப்பு நிதிக்கு மாற்றுவதில் சட்ட சிக்கல் இருப்பது உண்மைதான். அண்மையில், நிதி மாற்றம் தொடர்பாக ராஜஸ்தான் அரசு விடுத்த வேண்டுகோளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிராகரித்துவிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு நினைத்தால் மத்திய அரசிடம் பேசி சிக்கலுக்குத் தீர்வு காண முடியும். அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் அமைச்சர் கூறுவது என்பது கடமை தவறல் ஆகும்' எனத் தெரிவித்துள்ள ராமதாஸ்.
' நிதி சுமை காரணமாகத்தான் 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை ஜெயலலிதா அரசு ரத்து செய்தது. நிதி சுமை அதிகரிக்கும் என்ற உண்மையை அறிந்துதான் 2006, 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வாக்குறுதியாக தி.மு.க அளித்தது. தற்போது நிதிச் சுமையை காரணம் காட்டி நிராகரிப்பது என்பது நகை முரண் ஆகும்' எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக சென்னையில் கடந்த 11 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், 'பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தாவிட்டால் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை' எனத் தெரிவித்தனர்.
அரசு அழைத்துப் பேசட்டும்
''சட்டமன்ற தேர்தலின்போது, 'பழைய ஓய்வூதிய திட்டமே மீண்டும் கொண்டு வரப்படும்' என தி.மு.க வாக்குறுதி கொடுத்தது. அதனை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டிலும் முதலமைச்சர் உறுதிப்படுத்தினார். ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, மூன்று ஆண்டுகளாக ஜாக்டோ ஜியோ நடத்திய பல்வேறு போராட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் பங்கேற்று, 'கழக அரசு வந்தால் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்' எனக் கூறி எங்களின் போராட்டங்களையும் வாழ்த்திப் பேசினார். அந்த அடிப்படையிலேயே தற்போது முதல்வரை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளோம்'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான அன்பரசு.

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN
மேலும், ''இந்த மாத இறுதிக்குள் சங்க நிர்வாகிகளிடம் பேசி முதலமைச்சர் தீர்வு கொடுக்கவில்லையென்றாலும்கூட எதார்த்த நடைமுறை என்னவோ அதனைப் பகிர்ந்து கொண்டால் மறுபரிசீலனை செய்வோம். இல்லாவிட்டால் எங்களின் உயர்மட்டக் குழுவில் உள்ள 150 சங்கங்களைக் கூட்டி உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். அரசின் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு செல்லும் வகையில் அரசுக்கு இணைப்புப் பாலமாக இருப்பதையே ஜாக்டோ-ஜியோ விரும்புகிறது. எங்களை அழைத்துப் பேச வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம்'' என்கிறார்.
''நிதி சுமை காரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என நிதி அமைச்சர் பேசியுள்ளாரே?'' என்றோம். '' இந்தப் பேச்சு, அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசின் ஓராண்டு நிறைவின்போது பள்ளிகளில் காலை சிற்றுண்டியை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை வரவேற்கக் கூடிய சூழலில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு எதிரான மனநிலையில் அமைச்சர் பேசியுள்ளார். அவர் அமைதியாக இருந்திருந்தால் கூட பரவாயில்லை, சாத்தியமில்லை எனக் கூறுவது சரியான ஒன்றல்ல.
திராவிட மாடல் பொருளாதாரமா?
தமிழ்நாட்டில் 'திராவிட மாடல் பொருளாதாரம்' அமல்படுத்தப்படுவதாக முதல்வர் கூறுகிறார். நிதியமைச்சரோ, உலக நாடுகளை ஒப்பிட்டு 'கார்ப்பரேட் பொருளாதாரம்' என்கிறார். அரசுக்குள்ளேயே இருவேறு முரண்பாடுகள் இருப்பது வெளிப்படுகிறது. உலகப் பொருளாதாரத்தைச் சொல்லி தி.மு.க ஆட்சிக்கு வரவில்லை. பா.ஜ.க கையாளக் கூடிய ஓய்வூதியத் திட்டம்தான் சரி என நிதியமைச்சர் பேசுகிறார் என்றால் இது தி.மு.கவின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தும். 'இதுவரையில் இல்லாத அளவுக்கு நேர்மையான அரசாக தி.மு.க எதாவது செய்யும்' என லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் நம்புகின்றனர். அதற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் நிதியமைச்சர் பேசி வருகிறார்'' என்கிறார்.
'' பழைய ஓய்வூதிய திட்டத்தால் அதிக செலவாகும் என்கிறாரே?'' என்றோம். ''இதனை திட்ட செலவீனமாகப் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தின்படி உணவுக்கு மட்டும் பணம் கொடுப்பதில்லை. அந்த உணவைப் பரிமாறுகிறவர்களுக்கும் சேர்த்துத்தான் பட்ஜெட் போடப்படுகிறது. இதனை பிரித்துப் பார்த்து மோதவிடுவது என்பது கார்ப்பரேட் பார்வையாகத்தான் பார்க்கிறோம். மேற்கு வங்கத்தில் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. இங்கு கொண்டு வருவதில் என்ன சிக்கல்'' என்கிறார்.

பட மூலாதாரம், @PTRMADURAI, TWITTER
மேலும், '' நிதியை மாற்றுவதில் எந்தவித சிக்கலும் இல்லை. நிதியமைச்சருக்கு கல்வியறிவு மட்டுமல்லாமல் சமூகரீதியான அனுபவ அறிவும் அவருக்கு தேவைப்படுகிறது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்படி என்னுடைய பணத்தை பொதுநிதியில் வைப்பதற்கு என அரசு ஊழியர்கள் யாரும் கையொப்பமிடவில்லை. பி.எஃப் என்பது தன்னாட்சியான அமைப்பு. அந்தப் பணத்தை பொதுநிதியில் வைத்திருக்குமாறு எங்களைக் கேட்காமல் தமிழக அரசு கூறுவதை யார் ஏற்பார்கள்?'' என கேள்வி எழுப்புகிறார்.
''தனி நபர் பணத்தை அரசு எடுக்க முடியாது என்பது ஏமாற்று வேலை. இதுவரையில் பங்களிப்பு ஓய்வூதிய முறையில் 25 ஆயிரம் பேர் ஓய்வுபெற்றுள்ளனர். அவர்களிடம், 'பென்சன் கேட்க மாட்டேன் என எழுதி கொடுத்தால்தான் பணம் கொடுக்கப்படும்' என்கின்றனர். அவ்வாறு எழுதிக் கொடுத்துப் பலரும் பணத்தை வாங்கியுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கடந்த 19 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதனால் 25,000 பேர் தெருவில் நிற்கின்றனர். இறந்த ஓர் அரசு ஊழியரின் குடும்பத்திடம் எழுதி வாங்குவது என்பது நல்ல அரசு செய்யக் கூடிய வேலை அல்ல. ஓய்வூதியம் என்பது யாசகம் அல்ல, எங்களுடைய உரிமை. அதைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை'' என்கிறார் அன்பரசு.
தி.மு.கவின் பதில் என்ன?
அரசு ஊழியர்களின் குமுறல்கள் தொடர்பாக தி.மு.கவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்குரைஞர் ராஜீவ்காந்தியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ''ஓய்வூதிய திட்டத்திலேயே, 'சிலர் புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம்' என்கின்றனர். சில சங்கங்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தை வரவேற்கின்றனர். தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில், 'பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்' எனக் கூறப்பட்டது. இதனை பேச்சுவார்த்தையின் மூலம்தான் தீர்க்க முடியும். பழையது, புதியது எனப் பிரித்துப் பார்த்து முடிவெடுக்க முடியாது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து அரசு முடிவெடுக்கும். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் மூலமாக சுமூகமான தீர்வு எட்டப்படும். இதில் எந்தவிதக் குழப்பங்களும் இல்லை'' என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













