"இந்தி வேண்டாம்" - அமைச்சர் பொன்முடி; "இந்தியை திணிக்கவில்லை" - ஆளுநர் ரவி: ஒரே மேடையில் வாதம்

பொன்முடி
படக்குறிப்பு, க.பொன்முடி

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியும் ஒரே மேடையில் இந்தி மொழி திணிப்பு விவகாரம் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இருவரும் தத்தமது முறை வரும்போது, இந்தித் திணிப்பு தொடர்பான தங்கள் கருத்துகளை முன்வைத்து வாதிட்டனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை (மே 13) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டனர். முன்னாள் இஸ்ரோ தலைவர் க.சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது 2,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

நேற்று வியாழக்கிழமை தினம் ஆளுநர் பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளின் முதல்வர்களை உயர்கல்வி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் சந்தித்தது சர்ச்சைக்குள்ளாகி இருந்தது.

நீலகிரியில் ஆளுநர் நடத்திய துணை வேந்தர்கள் மாநாடு, துணை வேந்தர் நியமன அதிகார பறிப்பு மசோதா மற்றும் நேற்றைய கல்லூரி முதல்வர்கள் சந்திப்பு என தொடர் சர்ச்சைகளுக்குப் பிறகு ஆளுநரும் உயர்கல்வி துறை அமைச்சரும் ஒரே மேடையில் தோன்றினார்.

உயர் கல்வி சேர்க்கையில் முன்னிலையில் உள்ள தமிழ்நாடு

பட்டமளிப்பு விழாவில் முதலில் உரையாற்றிய தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி பேசுகையில், "கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்றார் பாரதியார். ஆளுநர் பாரதியாரை அடிக்கடி மேற்கோள் காட்டுவார். தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் உயர்கல்வியையும் ஆளுநர் புகழ்வார். உயர்கல்வியில் 53% மாணவர் சேர்க்கையுடன் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இது தான் திராவிட மாடல்.

இஸ்ரோ சிவன் மற்றும் நானுமே தமிழ் வழியில் தான் படித்தோம். தமிழ் மொழியில் படித்து தான் இந்திய அளவில் சிவன் உயர்ந்துள்ளார், நான் முனைவர் பட்டம் வரை பெற்று இன்று அமைச்சராக உள்ளேன்.

ஆளுநரே நாங்கள் எந்த மொழிக்கும் குறிப்பாக இந்தி மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. மொழி கற்பது வாய்ப்பாக தான் இருக்க வேண்டுமே தவிர கட்டாயமாக இருக்கக்கூடாது.

நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். ஆங்கிலம் சர்வதேச மொழி, தமிழ் உள்ளூர் மொழி. உலகத்தோடு உரையாட ஆங்கிலமும், எங்களுக்குள் உரையாட தமிழும் போதும் என்கிற போது இந்தி எதற்கு.

ஆர்.என்.ரவி
படக்குறிப்பு, ஆளுநர் ரவி

இரண்டு மொழிகள் போதுமானது. மூன்றாவது மொழி படிப்பது விருப்பமாக தான் இருக்க வேண்டும். அண்ணா மொழி கொள்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது பூனைக்கு தனி வழி, எலிக்கு தனி வழி எதற்கு பூனை செல்கிற வழியிலே எலியும் செல்லாமல். உலகத்தோடு உரையாடும் ஆங்கிலத்திலே நாங்கள் மற்ற மாநிலங்களுடன் உரையாடலாம் என்றார்.

இந்தி மொழி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் நம் ஊரில் பானி பூரி விற்பவர்கள் இந்தி பேசுபவர்களாக தான் இருக்கிறார்கள்.

புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டிற்கு என தனி கல்வி கொள்கையும் மொழி கொள்கையும் இருக்க வேண்டும்.

அதற்காக தான் தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை வகுக்க குழு அமைத்துள்ளார் முதல்வர். மாநில அரசின் குரலாக இதை நான் இங்கு பதிவு செய்கிறேன். ஆளுநர் மாநிலத்தின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும், புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.

தமிழ், ஆங்கிலம் தான் இங்கு கட்டாயம். இந்தி இங்கு கட்டாயம் இல்லை. மூன்றாவது மொழியாக மலையாளம், கன்னடம் என எது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அதற்கான வாய்ப்புகளை தான் நாம் உருவாக்கி தர வேண்டும். ஆனால் இந்த மொழியை தான் படிக்க வேண்டும் என திணிக்கக்கூடாது.

கல்வியில் ஏற்ற தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காக தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் தொழில் படிப்புகளிலும் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

பட்டம் பெற காத்திருந்த மாணவர்கள்.

ஆளுநர் தமிழ்நாட்டின் உணர்வுகளை புரிந்து கொண்டு எங்களுக்கு உதவுவார் என நம்புகிறேன். மாநிலத்தின் உணர்வுகளை ஒன்றிய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.' என்றார்

அதன் பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், 'சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் நம்முடைய வேற்றுமைகளை வித்தியாசங்களாக பார்க்கும் அணுகு முறைதான் இருந்து வந்தது. இந்தியாவை ஒன்றாகப் பார்க்காமல் பகுதி பகுதியாக பார்த்து வந்துள்ளோம். தற்போது துடிப்பான தலைமையின் கீழ் இந்த அணுகுமுறை மாறியுள்ளது.

இந்தியாவில் சாதிகள் இருமடங்கு ஆகியுள்ளன உள்ளன, பல்வேறு சமூகங்கள் உருவாகியுள்ளன. இந்தியாவை ஒரே குடும்பமாக பார்க்க வேண்டும். தேசிய அளவில் அந்த பார்வை வந்துவிட்டது

இந்தியா 1947-ல் உருவானது அல்ல. அரசியலமைப்பு சட்டமே இந்தியா அதாவது பாரதம் என்று தான் சொல்கிறது. பாரதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இருக்கிறது.

மத்திய அரசு 'ஒரு பாரதம் உன்னத பாரதம்' 'தற்சார்பு பாரதம்' போன்ற திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

தமிழ்நாடு ஒரு முற்போக்கான மாநிலம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை விடவும் தமிழ்நாடு பல துறைகளில் முன்னணியில் உள்ளது. இந்தியாவை முன்னெடுத்து செல்வதில் தமிழ்நாடு தலைமை வகிக்க வேண்டும்.

மத்திய அரசு ஒரு மொழியைத் திணிக்கவில்லை - ஆளுநர் ரவி

மத்திய அரசு ஒரு மொழியை திணிப்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால் அது உண்மைக்கு புறம்பானது. தேசிய கல்வி கொள்கை என்பது பள்ளி கல்வியிலிருந்து பட்டப்படிப்பு வரை பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கிறது.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தலைமை நீதிபதிகளின் மாநாட்டிலும் பிரதமர் மோடி உயர்நீதிமன்றங்களில் அந்த மாநில மொழிகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
படக்குறிப்பு, பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

பிராந்திய மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். தமிழ் பழமையான, வளமான மொழி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியில் வளமான இலக்கியங்கள் உள்ளன.

மத்திய அரசு தொடர்ந்து தமிழை வளர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற மாநிலங்களிலும் தமிழ் மொழிக்கு இருக்கைகளை உருவாக்க ஆலோசித்து வருகிறோம். பல மாநிலங்களும் இதற்கு இசைவு தெரிவித்து முன்வந்துள்ளன. மற்ற மாநிலங்கள் மட்டுமல்லாமல் தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் பிற நாடுகளிலும் தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்க முயற்சித்து வருகிறோம்.

மாநில அரசும் இதற்கு முன் வரவேண்டும். பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் தத்துவத்தின் வளமையை கொண்டு சேர்க்க வேண்டும்.

எந்த ஒரு மொழியையும் குறிப்பாக இந்தி மொழியை திணிப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அனைத்து மொழிகளிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மிகவும் பழமையான மொழி,' என்றார் ஆளுநர் ரவி.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: