சிக்கன் ஷவர்மா கடைகளில் நீடிக்கும் சோதனை - உணவுப் பாதுகாப்புத்துறை விடுத்த எச்சரிக்கை

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் ஷவர்மா கடைகளில் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிக்கன் ஷவர்மாவுக்கு தடை விதிப்பது தொடர்பான பேச்சுக்கள் எழுந்துள்ளதை உணவு வணிகர்கள் அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர். ' ஷவர்மா வியாபாரத்தை நம்பி பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அதனை தரமான முறையில் விநியோகிக்கிறார்களா என ஆய்வு நடத்தலாமே தவிர, தடை விதிப்பது எந்தவகையிலும் சரியானதல்ல' என்கின்றனர், உணவக உரிமையாளர்கள். ஷவர்மா விவகாரத்தில் என்ன நடக்கிறது?
ஷவர்மா கடைகளில் தொடரும் சோதனை
கேரள மாநிலம் காசர்கோட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, தமிழ்நாட்டிலும் ஷவர்மா கடைகளில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சோதனைகள் நடத்தப்பட்டன. தஞ்சாவூர், ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த 3 மாணவர்கள், அங்குள்ள உணவகம் ஒன்றில் சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கடையை சீல் வைத்தனர். தொடர்ந்து திருச்சி, சேலம் என பல மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரமான முறையில் இறைச்சியைக் கையாளாத உணவகங்களுக்கு உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006ன்கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து சில தினங்களாக சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதில் சேலத்தில் உள்ள அசைவ உணவகங்களில் இருந்து 113 கிலோ அளவுக்கு கெட்டுப்போன இறைச்சி வகைகளை பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாநகரம் மட்டுமல்லாமல் புறநகர்ப் பகுதிகளிலும் சோதனை நீண்டது. கடந்த 9 ஆம் தேதியன்று நடந்த சோதனையில் 19 கடைகளில் கெட்டுப்போன இறைச்சி இருந்தது கண்டறியப்பட்டது. இந்தக் கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் எச்சரிக்கை நோட்டீஸும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், விழுப்புத்திலும் 3 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இந்நிலையில், குடியாத்தம் நகராட்சிப் பகுதியில் ஷவர்மா விற்பதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ள செய்தி, உணவக உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய பருவநிலைக்கு உகந்த உணவா?
மேலும், ஷவர்மா தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ' மேலை நாடுகளில் இறைச்சியை சுருட்டி வைத்து அதில் மசாலாவை சேர்த்து தீயில் வாட்டி சமைத்துக் கொடுக்கின்றனர். அங்குள்ள பருவநிலைக்கு ஏற்ப பதப்படுத்திக் கொடுப்பது பொருந்தும். அங்குள்ள மைனஸ் டிகிரி குளிரில் இறைச்சியை வெளியில் வைத்திருந்தாலும் கெட்டுப் போகாது.

நமது நாட்டில் உள்ள பருவநிலையின்படி வெளியில் இறைச்சியை தொங்கவிட்டு சுரண்டிக் கொடுப்பது சரிவராது. அதனைப் பதப்படுத்துவதற்கான வசதியும் பல கடைகளில் இருப்பதில்லை. நமக்கான உணவு உண்போம். ஷவர்மா போல புதிய புதிய பெயர்களில் வரும் உணவுகளை உண்டு உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்'' என்றார். மேலும், ஷவர்மா கடைகளில் ஆய்வு தொடர்ச்சியாக நடக்க உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சிக்கன் ஷவர்மா தொடர்பான விவாதம் குறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனர் வி.எம்.எஸ்.முஸ்தபா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கேரளாவில் மரணம் அடைந்த பெண்ணின் உடலை உடற்கூராய்வு செய்தபோது ஷிகெல்லா வைரஸால் அந்தப் பெண் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை என பல பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கெட்டுப் போன இறைச்சியை பறிமுதல் செய்துள்ளனர்.

தரமற்ற பொருள்களால் உணவை தயாரிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஷவர்மா தொடர்பாக மக்களை பதற்றமடைய வைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தகவல் பரவுகிறது. சில இடங்களில் நடைபெறும் தவறுக்காக ஷவர்மா உணவை தடை செய்ய உள்ளதாக வெளியாகும் தகவல்கள் ஏற்புடையதாக இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.
' ஷவர்மா தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. இதனை திடீரென தடை செய்வதன் மூலம் இந்தக் குடும்பங்களின் நிலை என்னவாகும் என்பதை அரசு உணரவில்லை. இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஷவர்மா உணவின் மீது மக்களுக்கு இருக்கும் சந்தேகத்தைப் போக்க வேண்டும்' எனவும் வி.எம்.எஸ்.முஸ்தபா தெரிவித்துள்ளார்.
உணவு கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்
''ஷவர்மாவை தடை செய்யும் பணிகள் நடக்கிறதா?'' என உணவுப் பாதுகாப்புத்துறையின் (சென்னை மாவட்டம்) நியமன அலுவலர் சதீஷ்குமாரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். '' உணவை தடை செய்யும் பணிகள் நடக்கவில்லை. அதனை கெட்ட உணவு என்றும் சொல்லவில்லை. ஷவர்மாவை தயாரிக்கக் கூடிய வியாபாரிகள், அதனை சரியான முறையில் சமைக்காமல் இருந்தால் கேடு விளைவிக்கும். அதனை எவ்வளவு மணிநேரம் அனலில் வைக்க வேண்டும் என்ற அளவுகோல் உள்ளது. அவ்வாறு செய்யாமல் இருப்பதால் தவறான உணவாக மாறிவிடுகிறது. அப்படிப்பட்ட உணவுகளை கெட்டுப் போனவைகளாக வகைப்படுத்துகிறோம். இதுதொடர்பாக உணவக உரிமையாளர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன'' என்றார்.
மேலும், ''கடந்த சில நாள்களாக நடத்தப்பட்டு வரும் சோதனையில் கைப்பற்றப்பட்டவை என்ன?'' என்றோம். '' சென்னை முழுக்க 264 கடைகளில் ஆய்வு நடத்தியுள்ளோம். இதில் சந்தேகப்படும்படியான 25 கடைகளில் இருந்து இறைச்சி மாதிரிகளை சேகரித்துள்ளோம். இதுவரையில் 15 கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகித்துள்ளோம். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது'' என்கிறார் சதீஷ் குமார்.
பர்கர், பீட்சா மட்டும் ஆரோக்கியமா?
ஷவர்மாவை தயாரிக்கும் உணவகங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் 'இட்லி' இனியவன், ''ஷவர்மாவை சரியான முறையில் பதப்படுத்தி பாதுகாப்பாக விற்க முடியாத கடைகளின் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இதற்குத் தடை விதிப்பதாகவும் வெளியாகும் தகவல்களை ஏற்கவில்லை. அவ்வாறு செய்வதைவிடவும் சுகாதாரமான முறையில் ஷவர்மாவை தயாரித்துக் கொடுப்பதை உறுதி செய்வதுதான் சரியானதாக இருக்கும். உடல்நலத்துக்குக் கேடான உணவாக ஷவர்மா இருக்கிறது என்றால், பர்கர், பீட்சா போன்ற உணவுகள் மட்டும் ஆரோக்கியமானவையா?'' எனக் கேள்வியெழுப்புகிறார்.
மேலும், '' ஓர் உணவை சுகாதாரமான முறையில் கொடுப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். பெரிய முதலீடு இல்லாமல் சிறிய அளவில் ஷவர்மா கடைகளை நடத்துகிறவர்கள் இருக்கிறார்கள். அது பலரின் வாழ்வாதாரமாகவும் உள்ளது. அதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறப்படுவது சரியானதல்ல'' என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












