தன்னம்பிக்கை கதை: கண் முன்னே மரணம்; வாட்டி வதைக்கும் புற்றுநோய் – ஆனால் மகிழ்ச்சிக்கு குறைவில்லை

ரவி பிரகாஷ்

பட மூலாதாரம், RAVI PRAKASH/BBC

    • எழுதியவர், ரவி பிரகாஷ்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக

வாழ்வுக்கும் சாவுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். வாழ்க்கையை வாழும்போது அந்த அனுபவத்தை நம்மால் விளக்க முடிகிறது.

ஆனால், மரண ஏற்பட்டபின் அந்த அனுபவத்தின் கதையை சொல்ல முடிவதில்லை.

மற்றவர்கள் நம் மரணத்தின் கதையைச் சொல்லலாம். ஆனால் இறந்த பிறகு என்ன நடக்கும், இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.

சில நேரங்களில் நம் சமூகம் இதுபோன்ற சில கதைகளை விவரிக்கிறது. ஒரு நபர் இறந்துவிட்டார், ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு அவரது சுவாசம் திரும்பியது என்றெல்லாம் கதைகள் உண்டு.

மரணத்திலிருந்து ஒருவர் மீண்டும் உயிர்பெற்றபோது, அவரது நகங்களில் அரிசி, சிவப்பு குங்குமம் மற்றும் செம்பருத்தி பூக்கள் இருந்தன என்பார்கள். பிகார் கிராமங்களில் இதுபோன்ற கதைகள் அடிக்கடி சொல்லப்படுகின்றன.

ஆனால், உயிர்த்தெழுந்ததாக சொல்லப்படும் யாரும் மரணத்தின் அனுபவத்தை கூறவில்லை என்பதுதான் உண்மை.

மரணம் பயத்தை தருகிறது. நாம் இறக்க விரும்புவதில்லை. வாழ நினைக்கிறோம். நீண்டகாலமாக. இந்தியா போன்ற ஒரு நாட்டில், பெரும்பாலான மக்கள் சராசரியாக 70 வயதை நிறைவு செய்கிறார்கள்.

அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வயது 50 வயதிற்கு குறைவாக இருந்து, மரணம் உங்களை வரவேற்று நின்றால்...கேட்கவே நெஞ்சம் பதறுவதுபோலதானே உள்ளது.

ரவி பிரகாஷ்

பட மூலாதாரம், RAVI PRAKASH/BBC

'உலகின் மிக பயங்கரமான நோய்களில் ஒன்று'

எனக்கு இப்போது 46 வயதாகிறது. 2021 ஜனவரியில் எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு, நான் எனது 45வது பிறந்தநாளை கொண்டாடினேன். லேசான இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தது.

மருத்துவரிடம் சென்றபோது, சில ஆரம்ப பரிசோதனைகளுக்குப் பிறகு, எனக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. CT ஸ்கேனில் உள்ள கறுப்புப் படங்களில் வெள்ளி நிற பளபளப்பான வடிவங்கள் இருந்தன.

அப்போது என்னை பரிசோதித்த ராஞ்சி மருத்துவர் நிஷீத் குமார், இது கடைசி கட்ட புற்றுநோயாக இருக்கலாம் என்றார். புற்றுநோய் கட்டிகள் மற்றும் நிணநீர் கணுக்கள் பரவிய நிலையில் காணப்பட்டன.

அதுவரை இதெல்லாம் படங்களில் மட்டுமே இருந்தது. புற்றுநோயையும் அதன் கட்டத்தையும் உறுதிப்படுத்த நான் பல பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டியிருந்தது. தேதி ஜனவரி 30. மகாத்மா காந்தியின் நினைவுநாள்.

புற்றுநோய் தொடர்பாக மருத்துவ அறிவியலில் தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல சிறந்த சிகிச்சைகள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும் இதுகுறித்த அச்சம் என்பது மேலோங்கியே உள்ளது.

நிலவு இல்லாத இரவின் இருள்

புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டால், அதன் சிகிச்சை சாத்தியமாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பலருக்கு வெற்றிகரமான சிகிச்சையும் கிடைத்துள்ளது.

ஆனால், நோய் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள், இதனால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை மற்றும் புற்றுநோய் சிகிச்சையின் போது ஏற்படும் பக்க விளைவுகள் பற்றிய பயம் மக்களுக்கு உள்ளது. இதில் உண்மையும் இருக்கிறது.

இந்த சிகிச்சைக்கான செலவு அதிகம். புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்ட மறுநாளே, நான் சிகிச்சைக்காக மும்பை வந்தபோது, என் கண்முன்னே அமாவாசை இரவு இருப்பதுபோல உணர்ந்தேன்.

அங்குள்ள பிரபல டாடா மெமோரியல் மருத்துவமனையின் (டிஎம்ஹெச்) டாக்டர் தேவயானி எனக்கு சில பரிசோதனைகளைச் செய்தார். மெல்லிய , தடிமனான ஊசிகள் உடலுக்குள் செல்ல ஆரம்பித்தன. நான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

raviprakash

பட மூலாதாரம், RAVI PRAKASH/BBC

அடுத்த சில நாட்களில் பயாப்ஸி உட்பட வேறு சில முக்கியமான சோதனைகளுக்குப் பிறகு, எனது புற்றுநோய் இறுதி அதாவது நான்காவது கட்டத்தில் இருப்பதாக மருத்துவர் கூறினார். நான் நுரையீரல் கார்சினோமா மெட்டாஸ்டேடிக் நோயாளி.

புற்றுநோய் செல்கள் அவற்றின் முதன்மை இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு பரவிய நிலை இது. இத்தகைய நிலையில் சிகிச்சையின் மூலம் நோயாளியை பெரும்பாலும் குணப்படுத்த முடியாது.

மீதமுள்ள வாழ்க்கை

நான்காவது ஸ்டேஜ், இறுதி அல்லது அட்வான்ஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. மருத்துவர்கள் நோயாளிக்கு பாலியேட்டிவ் கேர் ( வலி குறைப்பு ) சிகிச்சையை மேற்கொள்வார்கள்.

இதன் பொருள், நோய் குணமாகாது, ஆனால் நோயாளிக்கு ஏற்படும் துன்பம் குறையும். அவரது ஆயுட்காலம் முடிந்தவரையில் நாட்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் நீட்டிக்கப்படும்.

அத்தகைய சூழ்நிலையில், நோயாளி கேட்டால், அவர் உயிர்வாழக்கூடிய சராசரி காலத்தையும் மருத்துவர் அவரிடம் கூறுவார். இதனால் நோயாளி தனது திட்டங்களை வகுக்கமுடியும்.

ஒரு புற்று நோயாளி மரண பயத்திற்கு இடையில் தன் மீதமுள்ள வாழ்நாள் பற்றி நினைத்துப் பார்க்கும் காலம் இது. என்னைப் பொருத்தவரை, இது ஒரு சிறப்பான சூழ்நிலை. ஏனென்றால் நமக்கு என்ன நடக்கும் என்பது நமக்குத்தெரியும்.

இந்த நிலையை கடந்த ஒன்றேகால் வருடங்களாக நான் பார்த்து வருகிறேன். TMH இல் உள்ள மருத்துவர்கள்,நான் ஒருபோதும் குணமடைய முடியாது என்றும், புள்ளிவிவரங்களின்படி என்னிடம், சில மாதங்கள் அல்லது வருடமே உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

ரவி பிரகாஷ்

பட மூலாதாரம், RAVI PRAKASH/BBC

ஆனால், என் சிகிச்சையில் பல தெரப்பிகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் அவை என்னை நன்றாக வைத்திருக்கும்.

கீமோதெரபி மற்றும் இலக்கு சிகிச்சை

டாக்டர் தேவயானிக்குப் பிறகு மருத்துவ வாரியம், என் நோய்க்கான சிறப்பு மருத்துவர் குமார் பிரபாஸ் மற்றும் அவரது குழுவிடம் என்னை அனுப்பியது.

2021 பிப்ரவரி முதல் அவரது பரிந்துரைக்கப்பட்ட கீமோதெரபி மற்றும் டார்கெட்டட் தெரப்பி (இலக்கு சிகிச்சை)யை நான் மேற்கொண்டு வருகிறேன்.

இப்போது எனது தினசரி வழக்கத்தில் ஒவ்வொரு 21வது நாளிலும் கீமோதெரபி, பிறகு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதாவது கீமோதெரபியின் நான்கு அமர்வுகளுக்குப் பிறகு, மும்பையில் உள்ள எனது மருத்துவமனையின் OPD என்னை சோதனை செய்யும். அதன் அடிப்படையில் அடுத்த மூன்று மாதங்களுக்கான மருந்துகள் திட்டமிடப்படும்.

ஒவ்வொரு முறை நான் மும்பையிலிருந்து ராஞ்சிக்கு திரும்பும்போதும், எனது அடுத்த மும்பை பயணத்தைத் திட்டமிடத் தொடங்குவேன். மும்பையில் உள்ள மருத்துவமனை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் என் மூச்சின் குத்தகையை அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்.

ரவி பிரகாஷ்

பட மூலாதாரம், RAVI PRAKASH/BBC

இந்தத்குத்தகையை நீட்டிக்க நான் விரும்புகிறேன். இன்னும் சில வருடங்கள் நான் வாழ விரும்புகிறேன். இன்னும் சில வருட வாழ்க்கையில் என்னுடைய முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றிவிடுவேன் என்று நான் கருதுகிறேன்.

இப்படி நினைத்து நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

ஆதரவு அமைப்பு

இது 'முடிவு' மற்றும் 'நம்பிக்கை' ஆகியவற்றுக்கு இடையே உள்ள நிலை. நான் விரும்பினால், மரண பயத்தை பீதியாக மாற்றி என்னையும் என் குடும்பத்தையும் துன்பத்தில் ஆழ்த்தலாம்.

ஆனால், அச்சம் என்பதை அகராதியில் ஒரு வார்த்தையாக மட்டுமே எடுத்துக்கொண்டு, என் வாழ்நாள் முழுவதையும் மகிழ்ச்சியாகவும், மறக்கமுடியாததாகவும் மாற்றும் பாதையைத் என்னை தேர்ந்தெடுக்க வைத்ததற்காக, கடவுளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

என் மனைவி சங்கீதா, மகன் பிரதீக் மற்றும் எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்தப் பாதையில் என்னுடைய தோழர்கள். நான் இந்தப் பாதையில் தொடர்வதற்கு எனக்கு ஆதரவளிப்பவர்கள்.

சமீபத்தில் சிகிச்சைக்காக மும்பையில் இருந்தோம். 20 கீமோ மற்றும் ஒன்றேகால் வருட இலக்கு சிகிச்சைக்குப் பிறகு இது எனது ஐந்தாவது ஃபாலோ அப் ஆகும்.

CT ஸ்கேன் மற்றும் எனது OPD க்கு இடையில் நான்கு இரவுகள் மற்றும் ஐந்து பகல்கள் இடைவெளி இருந்தது. புற்றுநோய் கவலையில் இருந்து விலகி இந்த நாட்களை நான் கோவாவில் கழிக்க நினைத்தேன்.

உடலெங்கும் எண்ணற்ற காயங்கள்

இதை மனைவியிடம் சொன்னேன். CT ஸ்கேன் செய்தபிறகு, மருத்துவமனையில் இருந்து நேராக விமான நிலையத்தை அடைந்தோம். சில மணி நேரம் கழித்து நாங்கள் கோவாவில் இருந்தோம். ஏன் தெரியுமா? ஏனெனில், புற்றுநோய் பயம் என்னை ஆட்கொள்ள நான் விரும்பவில்லை.

மரணத்தின் நிதர்சனத்திலிருந்து தப்ப நினைப்பது சாத்தியமற்ற ஒன்று. நாம் பிறக்கும்போதே, இறப்பும் முடிவாகிவிட்டது. எது நிச்சயமோ அதைப்பார்த்து என்ன பயம்? இந்த பயத்தை தென்றலாய் மாற்ற நான் கோவா சென்றேன்.

இலக்கு சிகிச்சையின் பக்க விளைவுகளால் என் உடல் முழுவதும் எண்ணற்ற காயங்கள் இருப்பதை நான் அறிவேன். அதில் வலி இருக்கிறது. ஆனால் இந்த வலி என் மீது ஆதிக்கம் செலுத்துவதை நான் விரும்பவில்லை.

நாங்கள் நான்கு இரவுகளை கோவாவில் இனிமையாகக்கழித்தோம். மருந்துகளை சரியான நேரத்தில் சாப்பிடவேண்டும் என்பதை மறக்கவில்லை. இதைத் தவிர, என் புற்றுநோய் பற்றிய சிந்தனை எங்குமே இல்லை. தேவாலயங்கள் மற்றும் கோவில்களுக்கு சென்றோம்.

எல்லா கடற்கரைகளிலும் பொழுதை கழித்தோம். கடலில் குளித்தோம். இரவுகளின் பெரும்பகுதி கடற்கரையில் கழிந்தது. டிஸ்கோவிற்கு சென்றோம். நிறைய சாப்பிட்டோம்.

மரணம் சிரித்தபடி வந்தால்..

மும்பை திரும்பியதும் ஓ.பி.டியில் இருக்கும் டாக்டரிடம் என்ன பேசலாம் என்று சிரித்துக்கொண்டே திட்டமிட்டோம்.

கோவாவில் அரபிக்கடலின் நீல அலைகளுக்கு மேல் பாராசெயிலிங் (கடல் என்பதால் பாராசெயிலிங். மற்ற இடங்களில் பாராகிளைடிங் என்கிறோம்) செய்ய சென்றுகொண்டிருந்தபோது, "மேலே போகும்போது உங்கள் மூச்சு நின்றுவிட்டால் என்ன ஆகும்? என்று என் மனைவி கேட்டார். எனக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதால் அவர் அப்படி கேட்டிருக்கலாம்.

"சிரித்துக்கொண்டே அப்படி மரணம் வந்தால், அதைவிட சிறந்த மரணம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் நான் இப்போது சாகப் போவதில்லை. எனக்கு ஒன்றும் ஆகாது,"என்று நான் பதிலளித்தேன்.

நாங்கள் சிரித்துக் கொண்டே பாராசெயிலிங் செய்தோம்.

இப்போது நாங்கள் மலைப்பிரதேசங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம். ஏனெனில், மரணதிற்கு அனுபவம் இல்லை என்பது நமக்குத் தெரியும். அனுபவம் என்பது வாழ்க்கைக்கு மட்டுமே இருக்கும். இந்த அனுபவத்தின் கதையை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.

புற்றுநோயுடன் இப்படியும் வாழலாம் நண்பர்களே.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :