டிரம்ப் முதல் போரிஸ் ஜான்சன் வரை: வெளிநாட்டு தலைவர்கள் குஜராத் செல்வது ஏன்?

இந்தியாவில் பிரிட்டன் பிரதமர்

பட மூலாதாரம், GUJRAT INFORMATION Dept.

    • எழுதியவர், தேஜஸ் வைத்யா
    • பதவி, பிபிசி நியூஸ் குஜராத்தி

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வியாழக்கிழமை சந்தித்து பேசுகின்றனர்.

இந்த வார தொடக்கத்தில், ஜாம்நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தின் திறப்பு விழாவில் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜூகந்நாத் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஆகியோரையும் குஜராத் வரவேற்று உபசரித்தது.

இதற்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிற தலைவர்களும் குஜராத் சென்றுள்ளனர்.

2014 முதல், பல நாடுகளின் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெப்போதும் இருந்திராத அளவில் குஜராத் சென்றுள்ளனர். அதற்கு முன் பிற நாடுகளின் தலைவர்கள் பெரும்பாலும் டெல்லிக்கு வருவார்கள் அல்லது ஒரு சுற்றுலாப் பயணியாக தாஜ்மஹாலை பார்க்கச் செல்வார்கள். சில சமயங்களில் மும்பை அல்லது சென்னை போன்ற பிற நகரங்களுக்குச் செல்வார்கள்.

ஜின்பிங்கிலிருந்து போரிஸ் ஜான்சன் வரை - குஜராத் பயணம்

இந்திய பிரதமர் - அமெரிக்க முன்னாள் அதிபருடன்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்தபோது, அவர் முதலில் அகமதாபாத்துக்கும் பின்னர் டெல்லிக்கும் சென்றார்.

2017 ஆம் ஆண்டில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே செப்டம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் அகமதாபாத்திற்கு பயணம் மேற்கொண்டார்.

2018இல், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யவும் அகமதாபாத்திற்குச் சென்றார். அதைத்தொடர்ந்து, டெல்லி மற்றும் மும்பைக்கும் அவர் சென்றார்.

2020 பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது மனைவியும் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தனர். அவர்கள் முதலில் அகமதாபாத்தில் தரை இறங்கினர். அதைத் தொடர்ந்து ஆக்ரா மற்றும் டெல்லிக்கு சென்றனர்.

இப்போது, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று (வியாழக்கிழமை) அகமதாபாத்துக்கு வந்திருக்கிறார். அவர் அகமதாபாத்தில் சில நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். பின்னர் அவர் டெல்லி செல்வார்.

பாரம்பரியத்தில் மாற்றம்

இந்திய பிரதமருடன் வெளிநாட்டு தலைவர்கள்

பட மூலாதாரம், Getty Images

2014ஆம் ஆண்டுக்கு முந்தைய தலைவர்களின் வருகைகளைப் பார்த்தால், வெளிநாட்டுத் தலைவர்களின் பயணங்கள் பெரும்பாலும் தலைநகர் டெல்லியில்தான் நடக்கும் என்பது மரபு. மும்பை பொருளாதார தலைநகர் என்பதால் சில நாடுகளின் தலைவர்கள் அங்கும் செல்வார்கள்.

சில நேரங்களில் ஆனால் மிகவும் அரிதாக இந்த தலைவர்கள், மற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னை அல்லது கொல்கத்தாவுக்கு செல்வார்கள். நாட்டின் உயர்மட்டத் தலைமையுடனான சந்திப்புகள் டெல்லியில் மட்டுமே நடக்கும்.

இப்போது நிலைமை மாறிவிட்டது. நரேந்திர மோதி பல நாடுகளின் தலைவர்களை குஜராத்திற்கு அழைத்து வருகிறார்.

வெளிநாட்டு தலைவர்களை கவரும் வகையில் சாலைகளில் பிரமாண்டமான வரவேற்பு, வண்ணமயமான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2020ல் குஜராத் சென்றிருந்தபோது, 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதைத்தவிர விமான நிலையத்திலிருந்து விழா அரங்கம் வரை சாலையின் மார்க்கமும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் இந்திய பயணமும் குஜராத்தில் இருந்து தொடங்கியது. அந்த நேரத்தில் குஜராத்தில் '50 ஜப்பானிய நிறுவனங்கள்' இருந்ததால், அவரது குஜராத் பயணம் 'மிக முக்கியமானது' என்று நிபுணர்களால் விவரிக்கப்பட்டது.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் அவரது மனைவியும் 2014ஆம் ஆண்டு அகமதாபாத்துக்கு வந்தபோது, சபர்மதி நதிக்கரையில் நாட்டுப்புற நடனம் ஆடி கலைஞர்கள் அவர்களை வரவேற்றனர்.

'முன்னெப்போதும் நடந்ததில்லை'

மோதி - ஜான்சன்

பட மூலாதாரம், Getty Images

"இந்திய பிரதமர் ஒருவர், வெளிநாட்டு அதிபரையோ அல்லது பிரதமரையோ தனது சொந்த மாநிலத்தில் இதுபோல திரும்பத் திரும்ப அழைப்பது முன்னெப்போதும் நடந்ததில்லை," என்கிறார் டெல்லியைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் வினோத் ஷர்மா. இருப்பினும், சில தலைவர்கள் சமீப காலங்களில் தலைநகர் டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் சென்றுள்ளனர்.

2021 அக்டோபரில் டென்மார்க் பிரதமர் மாட் ஃபிரடெரிக்சன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.

2020 பிப்ரவரியில், மியான்மர் அதிபர் யு வின் மிண்ட் டெல்லி மற்றும் ஆக்ராவுக்குச் சென்றார்.

இலங்கை, புடான் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்தனர். அவர்களும் டெல்லிக்கு வருகை தந்தனர். 2019 அக்டோபரில், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோதி, தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் உள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற இடத்திற்கு சென்றனர்.

இத்தாலியின் பிரதமர் பாலோ ஜென்டிலோவும் 2017 அக்டோபரில் டெல்லிக்கு வந்தார்.

ஒரு உலகத்தலைவர் குஜராத்துக்கு வருகிறார் என்றால், அதன் காரணம் என்னவாக இருக்கும்? நரேந்திர மோதி பிரதமராக இருந்தும் மற்ற மாநிலங்களை விட குஜராத் மாநிலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

குஜராத்தைவணிக மாதிரிக்காகவா?

இந்திய பிரதமர் மோதி

பட மூலாதாரம், AFP

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நரேந்திர மோதி அந்த மாநிலத்தில் தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் முன்னெடுப்புகளை தொடங்கி வைத்தார். இது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து முதலீட்டாளர்களை ஈர்க்கிறது. குஜராத்தை 'வணிக மாதிரி' மாநிலமாக பாஜக முன்வைக்கிறது.

"வெளிநாட்டு தலைவர்களின் குஜராத் பயணம், தொழில் துறைக்கு பெரும் பலனை அளித்துள்ளது. இன்று உலக வரைபடத்தில் குஜராத் முக்கிய இடம் பிடித்துள்ளது," என்கிறார் குஜராத் வர்த்தக மற்றும் தொழில்துறை தலைவர் ஹேமந்த் ஷா.

"வெளிநாட்டு விருந்தினர் வந்தால், அவர்கள் மாநிலத்தைப் பற்றி புரிந்துகொள்கிறார்கள். இது நீண்ட கால பலன்களைக் கொண்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து முதலீட்டுத் திட்டங்களை அவர்கள் உருவாக்குகிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.

"பிரதமர் குஜராத்தைச் சேர்ந்தவர், குஜராத்திற்கு நன்மை ஏற்பட்டால், அது நல்லதுதான்."

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும், எழுத்தாளருமான கன்ஷியாம் ஷா இதை ஏற்கவில்லை.

நரேந்திர மோதி முதல்வராகவோ, பிரதமராகவோ இல்லாத நேரத்திலும், குஜராத்தில் அன்னிய முதலீடு இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

அகமதாபாத் அதன் ஜவுளி ஆலைகளுக்கு பெயர் பெற்றது. குஜராத்தின் வணிக பிம்பம் பாஜக அரசை விட பழமையானது என்கிறார் ஷா.

அரசியல் ஆதாயத்துக்காக பயணமா?

குஜராத்தில் வெளிநாட்டு தலைவர்கள்

பட மூலாதாரம், Getty Images

டொனால்ட் டிரம்ப், பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஷின்சோ அபே ஆகியோரின் வருகைகளின் போது ரோட்ஷோக்கள் நடத்தப்பட்டன. அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ரோட்ஷோக்களுக்காக சாலைகளில் கூடினர். இந்த நிகழ்ச்சிகளும் அப்போது விமர்சனங்களுக்கு உள்ளாயின.

இத்தகைய நிகழ்ச்சிகளை "அரசியல் ஆதாயம் பெறுவதற்கான முயற்சிகள்" என்று சில வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

டெல்லியைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் வினோத் ஷர்மா, "கூட்டாட்சி அரசியலில் அனைவருக்கும் சமமான இடம் இருப்பதால், ஒரு மாநிலத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கிடைத்தால் அது கேடு விளைவிக்கும்" என்கிறார்.

"நரேந்திர மோதி பிரதமரானபோது, 'டீம் இந்தியா' என்று கூறினார். அணி என்று வரும்போது, எல்லா வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.

அன்னிய முதலீட்டை ஈர்க்க எந்தெந்த மாநிலங்களில் வளங்கள் உள்ளன என்பதை மத்திய அரசு கவனிக்க வேண்டும்.

எந்த மாநிலம் அதிக அளவு அந்நிய நேரடி முதலீட்டை கொண்டு வருகிறது என்பதில் மாநிலங்களுக்கு இடையே ஆக்கப்பூர்வமான போட்டியை உருவாக்குவது மத்திய அரசின் பொறுப்பாகும். அதற்கு எல்லா மாநிலத்திற்கும் சம வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்.

"ஒரு வெளியுறவு அமைச்சர் குஜராத்தில் சிறப்பு முதலீடு செய்ய விரும்புகிறார் அல்லது அவருக்கு அப்படி ஒரு உறுதிப்பாடு இருந்தால் அது வேறு விஷயம்."

"நரேந்திர மோதி அளவுக்கு வேறு எந்த பிரதமரும் தனது மாநிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததாக நான் நினைக்கவில்லை. இதில் இரண்டு விஷயங்களை நான் பார்க்கிறேன். மாநிலத்தின் மீதான பிரதமரின் பற்று. மற்றொன்று குஜராத் வசதியான உணர்வை அளிக்கிறது," என்று மூத்த குஜராத்தி பத்திரிக்கையாளர் ரமேஷ் ஓஜா குறிப்பிட்டார்.

குஜராத்தை ஊக்குவிக்க திட்டம்?

நரேந்திர மோதி மற்றும் அத்வானி

பட மூலாதாரம், AFP

ஒரு தலைவர் வேறொரு நாட்டிற்குச் செல்லும்போது, அந்த நாட்டின் தலைநகருக்குச் செல்வது வழக்கம். சில சந்தர்ப்பங்களில், அவர்கள் நாட்டின் தலைநகரைத் தவிர மற்ற நகரங்கள் அல்லது மாநிலங்களுக்குச் செல்கிறார்கள்.

"இந்தியாவின் பிரதமராக இருப்பதற்கும், இந்தியாவின் குஜராத்தி பிரதமராக இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் நரேந்திர மோதியிடம் தெளிவாகத் தெரிகிறது," என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் குஜராத் கவுன்சிலின் முன்னாள் தலைவரும் தொழிலதிபருமான பாக்யேஷ் சோனேஜி கூறுகிறார்.

"மற்ற மாநிலங்களை விட குஜராத் முன்னணியில் உள்ளது என்பதே இதன் பின்னணியில் உள்ள நோக்கம். 2009 மக்களவைத் தேர்தலின்போது, பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பாஜகவின் பிரதமர் வேட்பாளராகவும், மோதி அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவராகவும் இருந்தார்," என்று கன்ஷ்யாம் ஷா கூறினார்.

அப்போது தனது உரையில், அத்வானியை குஜராத்தின் 'பிரதிநிதி'யாகவே மோதி காட்டிக் கொண்டிருந்தார். ஏனெனில் அத்வானி காந்திநகரில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார்.

குஜராத்தை மேம்படுத்தும் வாய்ப்பை நரேந்திர மோதி ஒருபோதும் தவற விடுவதில்லை. தேசிய அளவில் குஜராத் ஒரு முன்னோடி என்ற செய்தி இதன்மூலம் அளிக்கப்படுகிறது," என்று ஷா தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, இலங்கையில் இயற்கை உரத்தால் பிரச்னை ஏற்பட்டதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: