தீபிகா, அனுஷ்கா: பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் அதிக வருமானத்தை எதில் முதலீடு செய்கின்றனர்?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், பராக் சோப்கர்
- பதவி, முத்த பத்திரிக்கையாளர், பிபிசி ஹிந்திக்காக
பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் தொழிலதிபர்களாக மாறுவது புதிதல்ல.
பல தசாப்தங்களாக சினிமா நட்சத்திரங்கள் நிலம் மற்றும் சொத்துக்களில் தங்கள் முதலீடுகளைச் செய்து வருகின்றனர், அவர்களில் பலர் வெவ்வேறு வணிகங்களில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நட்சத்திரங்களின் ஸ்டார்ட்அப் மோகம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான பிரபல நட்சத்திரங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து, அவர்களும் பலனடைந்துள்ளனர்.
பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் ஸ்டார்ட்அப்பில் ஒன்று முதல் ஐந்து கோடி அல்லது அதிகபட்சம் 10 கோடி வரை முதலீடு செய்வார்கள். நிறுவனங்களில் முதலீடு செய்வது அவர்களுக்கு புதிய விஷயம் அல்ல, ஆனால் முன்பு அது வெளிப்படையாகப் பேசப்படவில்லை.
ஆனால், 'தற்சார்பு பாரதம்' என்ற திட்டத்தின் கீழ் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அதிக ஊக்கம் அளிக்கப்படும் நிலையில், நட்சத்திரங்கள் ஸ்டார்ட்அப்கள் மீதான ஆர்வத்தை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், அதைப் பற்றி வெளிப்படையாகவும் பேசத் தொடங்கியுள்ளனர்.
ஸ்டார்ட் அப்களில் முதலீடு
முதலீட்டுக்கான வாயிலாக இருப்பதுடன் ஸ்டார்ட் அப்களைத் தங்கள் பிம்பத்தை மேம்படுத்தும் ஒரு கருவியாகவும் நட்சத்திரங்கள் கருதத் தொடங்கியுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை உயர்த்தக்கூடிய பொருட்களின் தயாரிப்புகளில் அவர்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.
நட்சத்திரங்கள், பொழுதுபோக்கு வணிகத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பான ஒப்பந்தமாக கருதுவதில்லை, பல்வேறு வகையான ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்வதன் மூலம் உறுதியான வருமானத்தை அவர்கள் பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் நான்கைந்து படங்களில் வேலை செய்து சம்பாதிப்பதில் முதலிடத்தில் இருக்கும் அக்ஷய் குமார், சுமார் ஒரு டஜன் நிறுவனங்களை விளம்பரப்படுத்தினாலும், ஸ்டார்ட்அப் முதலீட்டிற்கு ஒரு ஃபிட்னஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
2014 இல் உருவாக்கப்பட்ட, மும்பையை தளமாகக் கொண்ட ஹெல்த்-டெக் ஸ்டார்ட்அப்பில் அக்ஷய் குமார் முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனம் மக்களின் இரத்த அழுத்தம் மற்றும் நிகழ்நேர இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் உடற்பயிற்சி சாதனங்களை உருவாக்குகிறது.
டிக்டாக்கின் தடைக்குப் பிறகு, இந்தியாவின் உள் நாட்டுச் செயலிக்கு நிறைய ஊக்கம் கிடைத்தது, அதனால்தான் சல்மான் கான் இந்த நிறுவனத்தில் பெரிய முதலீடு செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
மாற்றம் எப்படி, எப்போது நிகழ்ந்தது?
பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது எல்லா பாலிவுட் நட்சத்திரங்களின் முதல் தேர்வாக இருந்து வருகிறது. பழைய நட்சத்திரங்கள் முதல் புதிய நட்சத்திரங்கள் வரை ஆடம்பரமான கட்டடங்கள், விலாக்கள், பண்ணை வீடுகள் மற்றும் நிலங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இன்றைய நட்சத்திரங்களும் இந்தப் பாரம்பரிய முறையைத் தான் பெரும்பாலும் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.
ஆனால் எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் நட்சத்திரங்களைப் போல ஒரே தொழிலில் முதலீடு செய்ய இவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் முதலீடு செய்ய விரும்பவில்லை. அவரது முதலீடுகள் பல துறைகளில் நடக்கத் தொடங்கியுள்ளன.
குழந்தைகள் பொழுதுபோக்கு பூங்காக்கள் முதல் பல்வேறு விளையாட்டுகளுக்கான பிரீமியர் லீக் அணிகளை வாங்குவது முதல் உணவகங்கள் வரை, அவர்கள் பணத்தை முதலீடு செய்கிறார்கள், அதனால்தான் பாலிவுட் நட்சத்திரங்கள் ஸ்டார்ட்அப்களில் அதிக முதலீடு செய்கின்றனர்.
பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஊட்டியில் ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்த காலம் இருந்தது, அதுவே இன்று அவருக்கு மிகப்பெரிய வருமான ஆதாரமாக உள்ளது.
அதனால் இன்றைய நடன நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷனும் ஃபிட்னஸ் ஸ்டார்ட்அப்களில் ஆர்வம் காட்டியுள்ளார். சல்மான் கானின் Being Human பிராண்ட் மிகவும் பிரபலம்.
அமிதாப் பச்சனும் 1995 இல் ஏபிசிஎல் என்ற நிறுவனத்தை உருவாக்கினார், ஆனால் மிஸ் வேர்ல்ட் நிகழ்வின் போது, அவர் திவாலானார்.
பாலிவுட் முன்பு இருந்ததை விட இப்போது அதிக கார்ப்பரேட் தனமாகியுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு பாலிவுட்டின் பணக்கார நட்சத்திரங்கள் இன்று போல் அன்று வருமானம் மற்றும் வரி கணக்கு இல்லை என்பதால் முதலீட்டிற்காக ஹோட்டல் அல்லது கட்டுமானத் தொழிலில் முதலீடு செய்தார்கள். இப்போது அப்படி இல்லை.
எடல்வாய்ஸ் இன் நிர்வாக துணைத் தலைவர் ரோஹித் மேத்தா கூறுகிறார், "பாலிவுட் நடசத்திரங்களிடம் நிறைய பணம் இருக்கிறது. இப்போது சில முதலீடுகள் மூழ்கினாலும், அது பெரிய இழப்பாவதில்லை. இவர்கள் நல்ல லாபத்தை நோக்கிச் செல்கிறார்கள். அவர்களின் நிதி மேலாளர் தான் இந்த முதலீடுகளைச் செய்விக்கிறார்கள். " என்றார்.
ஸ்டார்ட்அப் ஃபண்டிங்கில் நிச்சயமாக நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இப்போது எல்லோரும் இதைச் செய்கிறார்கள் என்றும், ஒரு நட்சத்திரம் 25-50 கோடிகளை வைத்து ஐந்து முதல் பத்து ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்தால், அது அவருக்கு முழுமையான லாபத்தைத் தருகிறது என்றும் ரோஹித் கூறுகிறார்.

பட மூலாதாரம், HINDUSTAN TIMES
அக்ஷய் மட்டுமல்ல முதலீட்டாளர்
தீபிகா படுகோனின் ஸ்டார்ட்அப் மோகம் அக்ஷய்யை விட அதிகம். பல ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளார். தீபிகா சமீபத்தில் சில்லறை நுகர்வோர் பொருட்களை விற்கும் ஸ்டார்ட்அப்பில் பணத்தை முதலீடு செய்தார்.
இது தவிர பர்னிச்சர் பிராண்டுகள், அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றிலும் முதலீடு செய்துள்ளார். தீபிகா எரிசக்தி சேமிப்பு தொழில்நுட்பத்துடன் மின்விசிறிகளை உருவாக்கும் நிறுவனத்திலும் பணத்தை முதலீடு செய்துள்ளார்.
பாம்பே ஐஐடி மாணவர்கள் இந்த ஸ்டார்ட்அப்பை ஆரம்பித்துள்ளனர், இதில் வீட்டு மின்சாரத்தில் 65 சதவீதம் வரை சேமிக்கும் வகையில் மின்விசிறிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவரது கணவர் ரன்வீர் சிங்கும் எட்டெக் துறையில் முதலீடு செய்துள்ளார்.
ஆல்டர்நேட்டிவ் மீட் ஸ்டார்ட்அப்பில் அனுஷ்கா சர்மா முதலீடு செய்துள்ளார். அவரது கணவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியும் இந்த ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்து பெங்களூரை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார்.
பிரபல நடிகர் பங்கஜ் திரிபாதி ஆரம்பத்திலிருந்தே விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர். அவர் அக்ரிடெக் தளத்தில் முதலீடு செய்துள்ளார். இந்நிறுவனம் 30 லட்சம் விவசாயிகளைக் கொண்டுள்ளது. பங்கஜ் திரிபாதி, ஆரம்பத்திலிருந்தே பிராண்டிங் மற்றும் விளம்பரத்தில் தேர்ந்தெடுத்து ஈடுபடுபவர்.
பங்கஜ் திரிபாதி, "கரக்பூர் ஐஐடி மாணவர்கள் இருவர் என்னைச் சந்தித்து, விவசாயிகளுக்கு விவசாயம் தொடர்பாக பல கேள்விகள் இருப்பதாகவும், அதற்கான பதில்கள் அவர்களைச் சென்றடையவில்லை என்றும், அவர்கள் ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் வேலை செய்வதாக சொன்னார்கள். நானும் ஒரு விவசாயிதான். நானும் விவசாயிகளைப் பற்றியும் விவசாயம் பற்றியும் அக்கறை கொண்டவன். எனவே எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, நான் விவசாயத்தை தேர்ந்தெடுத்தேன்." என்றார்.
மேலும் அவர், "முன்பு நிதியுதவி செய்யும் அளவுக்கு எனது நிலைமை இல்லை, ஆனால் இப்போது முடியும். நான் என் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்தேன். சமூக நலன் சார்ந்த, சுற்றுச் சூழல் சார்ந்த துறைகள் இருந்தாலும் அதிலும் முதலீடு செய்ய விரும்புகிறேன். ஆன்லைனில் நடிக்க கற்றுக்கொடுக்கும்படி பலர் என்னிடம் பலமுறை கேட்கிறார்கள் ஆனால் அது சரியல்ல என்று நினைக்கிறேன்." என்றார்.

பட மூலாதாரம், ANI
ப்ரியங்கா சோப்ரா முதல் ஆமிர் கான் வரை
ஹிருத்திக் ரோஷனின் ஸ்டைலிங்கிற்கு உலகமே பைத்தியமாகியுள்ளது. அவர், ஆடை மற்றும் அணிகலன்களில் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நிறுவனம் ஒன்றில் தொடக்கத்தில் அவர் முதலீடு செய்திருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
நிக் ஜோனாஸைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட பிரியங்கா சோப்ரா, பல வித்தியாசமான ஸ்டார்ட்அப்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். முதலில் கல்லூரிக் கல்வி நிறுவனத்தில் முதலீடு செய்து பின்னர் டேட்டிங் ஆப்களில் பெரிய முதலீடு செய்தார்.
ஆமிர் கான் ஆன்லைன் வாடகை தளபாடங்கள் தளத்தில் முதலீடு செய்துள்ளார். தவிர, அவர் ஒரு பேமெண்ட் கேட்வே ஸ்டார்ட்அப்பின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்துள்ளார்.
ஆலியா பட் 2017 இல் இந்தியாவின் முதல் ஆன்லைன் ஸ்டைலிங் தளமாக கருதப்படும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தார். சில காலத்திற்கு முன்பு அவர் ஐஐடி கான்பூருடன் தொடர்புடைய ஸ்டார்ட்அப் நிறுவனத்திலும் முதலீடு செய்தார். இந்த நிறுவனம் சைக்கிள்களில் பூக்களை அலங்கரிப்பதில் வேலை செய்கிறது.
ஷ்ரத்தா கபூர் கடந்த ஆண்டுதான் அழகு சாதனப் பிராண்டில் முதலீடு செய்துள்ளார். 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், ஆன்லைன் அழகு சாதனப் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்குகிறது.
தனது சொந்த ஒப்பனை பிராண்டை அறிமுகப்படுத்திய கரீனா கபூர் கான், சமீபத்தில் ஐபிஓ கொண்டு வரும் ஃபேஷன் மற்றும் பியூட்டி பிராண்டில் முதலீடு செய்துள்ளார்.
அவரது சகோதரி கரிஷ்மா கபூர் ஆன்லைன் குழந்தைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் போன்ற ஸ்டார்ட்அப்களிலும், கரீனாவின் தோழி மலைக்கா அரோரா பழச்சாறுகள் மற்றும் பிற தயாரிப்புகளிலும் முதலீடு செய்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது தாயுடன் சேர்ந்து முதலீடு செய்த ஸ்டார்ட்அப் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமாகும், இது காற்றின் தரத்தை அளவிடும் இயந்திரங்களைத் தயாரிக்கிறது.
ஆயுஷ்மான் குரானா ஆண்களுக்கான முழுமையான அழகுபடுத்தும் தயாரிப்புகளை உருவாக்கும் ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்துள்ளார். 2015 இல் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் குருகிராமில் உள்ளது.
ஃபிட்னஸை நோக்கிய ஆர்வம்
முறைகேடு குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் உடனான நட்பின் காரணமாகச் செய்திகளில் வலம் வரும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஒரு ஜூஸ் தயாரிப்பில் முதலீடு செய்துள்ளார்.
அசைவ பிரியர்களுக்கான விளம்பரம் மூலம் தனது சித்தப்பா அனில் கபூருடன் இணைந்து, பிரபல நடிகர் அர்ஜுன் கபூர், ஹோம் ஃபுட் டெலிவரி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
சுனில் ஷெட்டி ஆன்லைன் உடற்பயிற்சி சமுதாய ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்துள்ளார். கொரோனா காலத்தில் லாக்டவுனின் போது சுனில் அரோக்கியப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விழிப்புணர்ச்சியைப் பரப்பினார்.

பட மூலாதாரம், Getty Images
"இந்திய உணவு முறை தான் உலகில் ஆரோக்கியமானது என்று உலகம் நம்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தன்னிறைவான இந்தியா என்றால், நமது பொக்கிஷங்களை உலகின் முன் எடுத்துச் சென்று நமது பாரம்பரிய பொருட்களின் மகத்துவத்தைக் காட்டுவதுதான்" என்று சுனில் கூறுகிறார்.
வழக்கமான யோகா பயிற்சியாளரான ஷில்பா ஷெட்டி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பராமரிப்பு ஸ்டார்ட்அப்பில் சுமார் 1.5 கோடி முதலீடு செய்திருந்தார்.
கோவிட் காலத்தில் ஏழைகளின் ஹீரோவாக மாறிய சோனு சூட், கிராமப்புற ஃபின்டெக் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளார்.
இந்த நிறுவனம் நாட்டின் ஒரு கோடி கிராமப்புற தொழில்முனைவோரை நிதி ரீதியாகவும் டிஜிட்டல் ரீதியிலும் மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது.
நட்சத்திரங்களுக்கு முதலீட்டுக்கு நல்ல ஸ்டார்ட்அப் ஆப்ஷன் கிடைத்துள்ளது. இப்போது அதை பற்றி வெளிப்படையாக பேச ஆரம்பித்திருப்பது சிறப்பு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













