ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவர் கைது: பக்கத்து வீடு முன்பாக சிறுநீர் கழித்த விவகாரத்தில் நடவடிக்கை

ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவரும் புற்றுநோய் மருத்துவருமான சுப்பைய்யா என்பவரை சென்னை நகரக் காவல்துறை கைதுசெய்துள்ளது. வாகனம் நிறுத்துமிடம் தொடர்பான பிரச்னையில் அண்டை வீட்டின் முன்பாக சிறுநீர் கழித்த வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்தவர் சுப்பைய்யா சண்முகம். இவர் புற்றுநோய் மருத்துவராகவும் பணியாற்றிவந்தார். சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்து வந்த சுப்பையா சண்முகம், தனது பக்கத்து வீட்டுப் பெண்மணிக்குச் சொந்தமான கார் நிறுத்துமிடத்தில் தனது வாகனத்தை நிறுத்திக்கொள்ள அனுமதிக்கும்படி கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்தப் பெண்மணி அனுமதித்தாலும் அதற்கான வாடகையை செலுத்தும்படி கூறியுள்ளார். இதற்குப் பிறகு இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சுப்பையா சண்முகம் அப்பெண்ணின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்தது மட்டுமன்றி, அவர் பயன்படுத்திய முகக் கவசங்கள் மற்றும் குப்பைகளை அங்கு போட்டு விட்டுச் சென்றுள்ளதாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்தது. இது தொடர்பாக 2020 ஜூலை 11 ஆம் தேதி ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் அந்தப் பெண்மணி புகார் ஒன்றை அளித்தார்.
அதற்குப் பிறகு அந்த வழக்கில் மேல் நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில், தற்போது அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.
சுப்பைய்யா சண்முகம் அரசு மருத்துவமனை ஒன்றில் புற்றுநோய்ப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிவந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் அரியலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒரு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று ஏபிவிபி அமைப்பினர் சென்னையில் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்றனர். முற்றுகையில் ஈடுபட முயன்றவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களை சுப்பையா சந்தித்துப் பேசினார். இது அரசு ஊழியர்களுக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் ஆகாதா என சர்ச்சை எழுந்த நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மருத்துவர் சுப்பையா சண்முகம் 2017ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டுவரை ஏபிவிபியின் தேசிய தலைவராக இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020ஆம் ஆண்டு மருத்துவர் சுப்பையா சண்முகம், மதுரை எய்ம்ஸ் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












