ராமர் பாலத்தை புராதனச் சின்னமாக அறிவிக்க வழக்கு: என்னதான் பிரச்னை?

ராமசேது

பட மூலாதாரம், NASA

    • எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவின் நெடுங்கால விவாதங்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தால் ராமர் பால விவகாரத்துக்கு அதில் நிச்சயம் இடமுண்டு. அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான வாதப்பிரதிவாதங்களால் அரசியலாக மாறி நிற்கும் இந்த விவகாரம் தற்போது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.

காரணம், சர்ச்சைக்குரிய, 'ராமர் பாலம்' என்று சொல்லப்படுகிற மணற்திட்டுகளை, வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கு இன்று (09.03.2022) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், இந்த வழக்குக்கான பின்னணியை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ராமர் பாலம் என்று சொல்லப்படும் பகுதி

இந்தியாவின் இராமேஸ்வரம் தீவுக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட மன்னார் வளைகுடாக் கடலில் காணப்படும் மணற்திட்டுகள்தான் 'ராமர் பாலம்' என்று சொல்லப்படுகிறது.

இந்துமத நம்பிக்கையின்படி, இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க, ராமனின் வானரப்படை இலங்கை செல்வதற்கான வழியாக இந்த பாலம் கடல்மீது உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

மறுபுறம், அறிவியல் ரீதியான ஆதாரங்கள் ஏதுமில்லாத நிலையில், இதை ஒரு மனிதன் கட்டிய கட்டுமானம் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பி மறுத்து வருகின்றனர்.

உண்மையில், இரு தரப்புக்குமே தங்கள் கருத்துகளை ஆணித்தரமாக நிறுவ ஆதாரப்பூர்வ சான்றுகள் ஏதுமில்லை.

மிதக்கும் கற்கள்

இன்றும் நீங்கள் ராமேஸ்வரத்திற்கு சென்றால், அங்கு நிறைய இடங்களில் தண்ணீரில் மிதக்கும் கற்களைப் பார்க்க முடியும். அத்துடன், ஏதாவதொரு ராமாயணக் கிளைக்கதையையும் கேட்க முடியும். ஆனால், அதற்கான ஆதாரங்கள் குறித்த விவரம் ஏதும் இல்லை.

"பவளமும், சிலிக்கா கல்லும் சூடாக இருக்கும்போது அதில் காற்று சேர்ந்தால், அது லேசாகி மிதக்கத் தொடங்கும். அதுபோன்ற கல்லைத் தேர்ந்தெடுத்து கட்டப்பட்டது இந்த பாலம்" என்று முன்பு ராமர் பாலம் தொடர்பாக பிபிசி தமிழுடன் பேசியபோது குறிப்பிட்டிருந்தார் தொல்பொருள் துறை பேராசிரியர் மாக்கண்லால்.

ராமர் பாலத்தின் புனிதத்தைக் காக்க வேண்டும் என்றும் இது இந்துமத நம்பிக்கை உணர்வுகளோடு தொடர்புடையது என்றும் கூறித்தான் ராமர் பால வழக்கு தொடரப்பட்டது. அப்படியென்றால், ராமர் பாலத்தின் புனிதத்துக்கு என்னதான் பிரச்னை வந்தது? யாரிடமிருந்து காக்க வேண்டும்? அதுதான் சேது சமுத்திரத் திட்டம்.

சேது சமுத்திர திட்டம்

கப்பல் போக்குவரத்துக்காக கடலை ஆழப்படுத்தும் திட்டம்தான் சேது சமுத்திரத் திட்டம். அதாவது, மன்னார் வளைகுடாப் பகுதி வழியாக கப்பல் செல்லும் வகையில் அந்தக் கடல் பகுதியை சுமார் 300 மீ அகலமும் 12 மீ ஆழமும் கொண்ட 167 கி.மீ கடல்பாதையாக மாற்றும் திட்டம் அது.

இந்தத் திட்டம் நிறைவேறினால், இலங்கையைச் சுற்றிக் கொண்டு கப்பல்கள் செல்லவேண்டியதில்லை. சுமார் 36 மணிநேரப் பயணம் குறைக்கப்படும் என்று சேது சமுத்திர திட்டத்தின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அங்குதான் பிரச்னையே. ஆழப்படுத்தும் பணியை மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படும் இடம் ராமர் பாலம் இருக்கும் பகுதி என்றும் அது சேதமாகிவிடும் என்றும் கூறி பாஜக, இந்து அமைப்புகள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Map Screengrab

பட மூலாதாரம், Screengrab

இப்படித்தான் தொடங்கியது இந்தப் பிரச்னை. 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தத் திட்டம் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் தொடங்கப்பட்டது. எனினும், ஆங்கிலேயர்களின் காலத்திலிருந்தே இந்த எண்ணம் அவ்வப்போது முன்மொழிவுகளாகவும், திட்டங்களாகவும் பேசப்பட்டுக்கொண்டே இருந்தது.

மதம் மட்டும்தான் காரணமா?

சூழலியல் உள்பட பல்வேறு காரணங்களுக்காகவும் சேது சமூத்திர திட்டத்திற்கான எதிர்ப்புகள் எழுந்தன.

குறிப்பாக, மன்னார் வளைகுடா பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட உயிர்கோளக் காப்பகமாகவும் கடல்சார் தேசிய பூங்காவும் அறிவிக்கப்பட்ட பகுதி. இங்கு மீன்பிடிக்கக் கூட அனுமதி கிடையாது. ஏராளமான தனித்துவம் வாய்ந்த கடல் உயிரிகள் இந்தப் பகுதியில் வாழ்வதால் இந்தபல்லுயிர் சூழலை பாதுகாக்கும் நோக்கிலும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிர்ப்பு உண்டு.

ஆனால், மதத்தைக் காரணம் காட்டி சொல்லப்பட்ட ராமர் பாலம் என்னும் காரணத்தில் மட்டும்தான் இன்னும் அரசியல் நெருப்பு கனன்றுகொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், ராமர் பாலத்தை உண்மை என்று நிரூபித்து, அதன் தொன்மையை ஆராய்ந்து புராதான நினைவுச்சின்னமாக அறிவித்துவிட்டால் நினைவுச்சின்னங்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி, அந்த இடத்தில் எந்தத்திட்டங்களின் பெயராலும் ஏதும் செய்ய முடியாது.

எனவே,ராமர் பாலம் இருப்பதாக நம்பப்படும் இடத்தில் எந்தவிதமான சேதப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது என்று ஒரு பொது நலவழக்குப் பதிவு செய்தார் சுப்ரமணியன் சுவாமி.

சுப்ரமணியன் சுவாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுப்ரமணியன் சுவாமி

மாற்று வழி இருக்கிறதா?

ராமர் பாலம் இருப்பதாக சொல்லப்படும் இடத்தைத் தொடாமல் வேறு ஏதும் வழி இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து பார்க்க குழு அமைத்தது உச்ச நீதிமன்றம். சுற்றுச்சூழல் துறை நிபுணர் பேராசிரியர் ஆர்.கே. பச்சோரியின் தலைமையிலான அந்தக்குழு, சர்ச்சைக்குரிய ராமர் பாலம் இருப்பதாகச் சொல்லப்படும் இடத்தின் அல்லாமல் அதற்கு இணையாக வேறு ஒரு வழியின் மூலம் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்தது.

அதன்படி 2012ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், "தனுஷ்கோடிக்கும் இலங்கையின் மன்னாருக்கும் இடையில் காணப்படும் மணற் திட்டுக்கள் வழியினூடாக அல்லாமல் மாற்றுப் பாதையில் கடலை ஆழப்படுத்தும் சேதுக் கால்வாய் திட்டத்தை முன்னெடுப்பது பொருளாதார ரீதியிலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ரீதியிலும் பலன் தராது " என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆர்.கே. பச்சோரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்.கே. பச்சோரி

இருந்தும் பிரச்னை முடிந்தபாடில்லை. தொடர்ந்து கொண்டே இருந்த வழக்கில், 2018ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க ஒரு முடிவை உச்சநீதிமன்றம் சொன்னதாக ட்விட்டரில் பதிவிட்டார் சுப்ரமணிய சுவாமி.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இதற்குப்பின்னர், சேது சமுத்திர திட்டம் கிடப்பிலேயே கிடந்த நிலையில், ராமர் பாலம் என்று நம்பப்படும் இடத்தை புராதான நினைவுச் சின்னம் என்று அறிவிக்கக் கோரிய வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அதன்படி உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, "இந்த வழக்கை எனக்குப் பின் வரும் தலைமை நீதிபதியான என்.வி.ரமணா விசாரிப்பார்" என்று தெரிவித்துவிட்டு பணி ஓய்வு பெற்றார்.

இந்தநிலையில், இன்று 2022, மார்ச் 9ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது.

இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படும் இந்த விவகாரம் புராண நம்பிக்கைக்கும் அறிவியல் நம்பிக்கைக்கும் இடைப்பட்ட விவகாரமாகவும் மாறிவிட்டது. அரசியல் தலைவர்களின் கருத்துப்போரைக் கடந்து சட்டப்போராட்டமாக மாறியிருக்கும் இந்த விவாகரத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: