சித்ரா ராமகிருஷ்ணா கைது: பங்குச் சந்தை தரவுகளை தரகருக்கு திறந்துவிட்ட வழக்கு

பட மூலாதாரம், Getty Images
(இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம். )
தேசியப் பங்குச் சந்தையின் சர்வர் கட்டமைப்பு மூலம் சந்தைத் தரவுகளை முன்னுரிமையாக ஒரு தரகருக்குத் திறந்துவிட்டதாக 2018 மே மாதம் தொடரப்பட்ட ஒரு வழக்கில் தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளது தி ஹிண்டு ஆங்கில நாளிதழ்.
மத்தியப் புலனாய்வு நிறுவனம் சிபிஐ அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளது.
இதே வழக்கில் தேசியப் பங்குச் சந்தையின் குரூப் ஆபரேட்டிங் ஆபிசர் ஆனந்த் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டு சில நாள்களில் இந்த கைது நடந்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா தேசியப் பங்குச் சந்தையில் 1990களின் தொடக்கத்தில் இருந்து வேலை செய்துவந்தவர். அதன் மேலாண் இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக 2013ம் ஆண்டு முதல் டிசம்பர் 2016 வரை பதவி வகித்தவர். இந்த வழக்கில் மேலும் பல கைதுகள் விரைவில் நடக்கும் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.
சித்ரா, ஆனந்த் சுப்ரமணியன், முன்னாள் என்.எஸ்.இ. மேலாண் இயக்குநர் ரவி நாராயண் போன்றவர்களுக்கு பல்வேறு விதிமீறல்களுக்காகவும், ஆனந்த் சுப்ரமணியத்தை சீப் ஸ்ட்ரேடஜிக் ஆபிசராக நியமித்து, அவர் பதவியின் பெயரை பிறகு குரூப் ஆபரேட்டிங் ஆபீசர் என்று மாற்றியதில் நடந்த முறைகேடுக்காகவும் இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று நிறுவனமான செபி கடந்த பிப்ரவரி 11ம் தேதி அபராதம் விதித்தது என்று தி ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இதையடுத்து மும்பையிலும், சென்னையிலும் சித்ரா, ஆனந்த் சுப்ரமணியன் வீடுகளில் வருமான வரித்துறை தேடுதல் நடத்தியது. மேற்கண்ட மூவரையும் தேடுவதாகவும் நோட்டீஸ் வெளியிட்ட சிபிஐ, பிறகு இவர்களின் வாக்குமூலத்தையும் பதிவு செய்தது என்கிறது தி ஹிண்டு நாளிதழ் செய்தி.
சென்னை புத்தக கண்காட்சி: 18 நாள்களில் 12 கோடிக்கு நூல்கள் விற்பனை

பட மூலாதாரம், Getty Images
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 45வது சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் முடிந்த நிலையில், சுமார் 15 லட்சம் பார்வையாளர்கள் வந்தனர். இதுவரை ரூ.12 கோடிமதிப்பு புத்தகங்கள் விற்றுள்ளதாக, பபாசி சங்கம் தெரிவித்துள்ளது என்று தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 45வது புத்தகக் காட்சி பிப்ரவரி 16ம் தேதி தொடங்கியது. புத்தகக் காட்சியில் 800 அரங்குகள் இடம் பெற்றன. இவற்றில் சுமார் 1 லட்சம் தலைப்பில் புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. இது தவிர அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி, மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 10 அரங்குகள் இடம் பெற்றன.
தமிழகம் தவிர மும்பை, கேரளா, கர்நாடகா மற்றும் டெல்லியில் இருந்து புத்தக விற்பனையாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர். தமிழக அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஒன்றிய அரசின் சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், மற்றும் தொல்லியல் துறை ஆகிய நிறுவனங்களும் இந்த காட்சியில் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து 18 நாட்கள் நடந்த, இந்த புத்தக காட்சியை கண்டுகளிக்க பொதுமக்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்ததால், காட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே 40 ஆயிரம் பேர் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.
காட்சிக்கான அரங்கு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 3300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொருநை ஆற்றின் நாகரிக தொல்பொருள் கண்காட்சி அரங்கு காட்சி வளாகத்தை ஒட்டி அமைக்கப்பட்டு இருந்ததால் அதிக அளவில் பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். கடந்த 18 நாட்களாக நடந்த புத்தக காட்சிக்கு நேற்று வரை சுமார் 15 லட்சம் வாசகர்கள், பார்வையாளர்கள் வந்துள்ளனர். இதுவரை ரூ. 12 கோடி மதிப்பு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. நேற்றுடன் முடிவடைந்த இந்த புத்தக காட்சி, வரும் 18ம் தேதி முதல் திருவள்ளூரில் தொடங்க உள்ளது என்று தினகரன் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரிக் கரை மேம்பாடு - தேசியக் குழு ஆய்வு

பட மூலாதாரம், IndiaPictures
காவிரிக் கரையின் கரைப்பகுதிகளை மேம்படுத்துதல், ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுப்பது குறித்த திட்டத்தில் தேசிய நதிநீர் ஆணைய இயக்குநர் சபிதா மாதவி சிங் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார் என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. காவிரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்தல் மற்றும் முக்கிய இடங்களில் கரைப்பகுதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பில் நடந்தாய் வாழி காவிரித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக, தேசிய நதிநீர் ஆணையத்தின் இணை இயக்குநர் சபிதாமாதவி சிங் மற்றும் ஆலோசகர் பி.பி. பர்மன் ஆகியோர் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்ட சில இடங்களில் ஆய்வு செய்தனர். முன்னகதாக பஞ்சப்பூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மேலும் புதிய இடத்தில் நவீன முறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ளது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதி காவிரியாற்றையும் பார்வையிட்டு, அப்பகுதியில் கரையை மேம்படுத்துதல் தொடர்பாக ஆலோசனை செய்தனர்.தொடர்ந்து இக் குழுவினர், கரூர், ஈரோடு, பவானிகூடுதுறை ஆகிய பகுதிகளில் காவிரியாற்றுப் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது நீர்வள ஆதாரத் துறை கண்காணிப்புப் பொறியாளர் வேட்டைச்செல்வம். செயற்பொறியாளர் மணிமோகன், மாநகராட்சி நகரப் பொறியாளர் அமுதவல்லி. செயற்பொறியாளர் குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர் என்று தினமணி செய்தி தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












