யூடியூப் பார்த்து ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி

பட மூலாதாரம், Getty Images
(இன்றைய (மார்ச் 6 ) நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
யூடியூப் பார்த்து ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள நங்லோய் என்ற இடத்தில் தனியார் வங்கியின் ஏ.எடி.எம். மையம் ஒன்று உள்ளது. நள்ளிரவில் இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுக்க முயன்றது. அப்போது அந்த தனியார் வங்கியின் தலைமையகத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. இது குறித்து வங்கி அதிகாரிகள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேரும் ஆளுக்கொரு திசையில் ஓட்டம் பிடித்தனர். எனினும் போலீசார் அவர்களை விரட்டிப்பிடித்து கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களில் ஒருவன் 18 வயது நிரம்பாத சிறுவன் என்பது தெரியவந்தது.
பின்னர் அவர்கள் போலீசாரிடம், தாங்கள் 3 பேரும் டெல்லியில் ஒரே அறையில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்ததாகவும், யூடியூப் வீடியோ பார்த்து ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் என தினத்தந்தி நாளிதழ் செய்தி கூறுகிறது.
தீ விபத்தில் இருந்து காப்பாற்ற ரயில் பெட்டியை தாங்களே தள்ளிச் சென்ற பயணிகள்

பட மூலாதாரம், Getty Images
உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூரில் இருந்து டெல்லியை நோக்கி வந்த விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ பிற பெட்டிகளுக்குப் பரவாமல் தடுக்க ரயில் பெட்டிகளை பயணிகளே ஒன்று சேர்ந்து இழுத்துச் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விடியோ இணையத்தில் வேகமாக பரவியது. சஹரன்பூரில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்ட விரைவு ரயில், தௌராலா ரயில் நிலையத்துக்கு காலை 7.10 மணிக்கு வந்தடைந்தது. அப்போது அந்த ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ பிடித்து எரிவது தெரியவந்தது. இதையடுத்து, பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதன் பின்னர் தீ பிடித்து எரிந்த பெட்டிகள் பிரிக்கப்பட்டன. தீ விபத்து ஏற்பட்ட ரயிலின் பிற பெட்டிகளை பயணிகளே ஒன்று சேர்ந்து தள்ளிச் சென்று நடைமேடைக்கு வெளியே 'சைடிங்' ரயில் பாதையில் கொண்டு சேர்த்தனர். இதன் பின்னர் ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. 'வழக்கமாக தீ விபத்தைக் கண்டால் பயணிகள் கூச்சலிட்டு பீதியடைவார்கள்.
ஆனால், இந்த ரயில் பயணிகள் எந்தவித பரபரப்பும் அடையாமல் ரயிலைவிட்டு இறங்கியதும், ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தவும் உதவினர். 'தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்று மீரட் நகர ரயில் நிலையத்தின் கண்காணிப்பாளர் ஆர்.பி.சர்மா கூறினார்.கரும்புகை வெளியேறி ரயிலில் இருந்து பயணிகளே பெட்டிகளை தள்ளிச் செல்லும் விடியோ இணையதளத்தில் வெளியாகியது. பயணிகளின் அந்த செயலுக்கு இணைய பயன்பாட்டாளர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர் தகவல் மையம் விரைவில் அமைக்கப்படும் - அமைச்சர்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, விளையாட்டு வீரர்களுக்கான தகவல் மையம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார் என 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவுரையின்படி, விளையாட்டுத்துறை மேம்பாடு, சர்வதேச தரம் வாய்ந்த நவீன வகையிலான விளையாட்டு அரங்கங்கள் உருவாக்குதல், மற்றும் வீரர், வீராங்கனைகள் நலன் குறித்த அலுவலர்களுடனான ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று சனிக்கிழமை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்க ஆய்வு கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் திரு. சிவ.வீ .மெய்யநாதன் அவர்கள் பேசியபோது "வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் ஏழை எளிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விடியலாக, அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற நல்ல நண்பனாக, தந்தையாக, தமிழினத்தின் தலைவராக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விளங்கி வருகிறார்.
தமிழகத்திலுள்ள ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டில் சர்வதேச அளவில் சாதனை படைக்க வேண்டும், விளையாட்டுத்துறையினை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைத்திட முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விடுதிகள் நல்ல முறையில் மேம்படுத்திடவும், பராமரித்திடவும், ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில, மாவட்ட அளவில் செயல்படுகின்ற விளையாட்டு அமைப்புகள், சங்கங்களுடன் தொடர்பு கொண்டு முறையான பதிவு செய்திடவும், வீரர்கள் நலனுக்கான ஒத்துழைப்பினை மேற்கொள்ளவும், உரிய பயிற்சிகள் வழங்கிடவும் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும். கிராம மற்றும் வட்டார அளவில் பொது இடங்கள் இருந்தால் அவற்றை கண்டறிந்து பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்களிப்புடன் சிறு விளையாட்டு மைதானங்களை உருவாக்கி , முறையான பயிற்சிகள் அளித்து, போட்டிகள் நடத்தி சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிட நடவடிக்கை எடுத்திடவேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விளையாட்டு நலசங்கங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் விளையாட்டு தொடர்பான தகவல்களை பெற்றிடவும், குறைகள் மற்றும் ஆலோசனைகள் தெரிவித்திடவும் தகவல் மையம் அமைத்திட அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதனடிப்படையில் சென்னை, நேரு விளையாட்டு அரங்க வளாகத்திலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் தகவல் மையம் உடனடியாக அமைக்கப்படவுள்ளது என்று தினகரன் நாளிதழ் செய்தி கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












