தமிழ்நாடு: பரிசுத் தொகுப்பை தொடர்ந்து வேட்டி, சேலை சர்ச்சை! தாமதத்தின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளிவராதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ` டெண்டர் அறிவிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது. விரைவில் வேட்டி, சேலை வழங்கப்பட்டுவிடும்' என்கிறார் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி. என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் 1983 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் விலையில்லா வேட்டி, சேலை திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் பொங்கல் பண்டிகை தினத்தன்று ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வந்தன. இதன்மூலம் மக்களுக்கு புத்தாடை கிடைப்பது மட்டுமல்லாமல், நெசவாளர்களின் துயர் துடைக்கவும் இத்திட்டம் பயன்பட்டு வந்தது.
ஆட்சிகள் மாறினாலும் விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதில் எந்தவிதத் தொய்வும் ஏற்பட்டதில்லை. 2021ஆம் ஆண்டில் 1.80 கோடி பெண்களுக்கும் 1.80 கோடி ஆண்களுக்கும் அரசால் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் கைத்தறி நெசவாளர்களில் 15 ஆயிரம் பேரும் விசைத்தறி நெசவாளர்களில் 54 ஆயிரம் பேரும் பலன் அடைந்தனர்.
அதேநேரம், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான சர்ச்சைகள் அணிவகுத்ததால் விலையில்லா வேட்டி, சேலைகள் குறித்து பெரிதாக விவாதம் எழவில்லை. இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
எப்படி நடக்கிறது கொள்முதல்?
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கட்டுப்பாட்டில் ஆறு மில்கள் இயங்கி வருகின்றன. அரசின் மில்களில் இருந்து 25 சதவிகித அளவுக்கு நூல்கள் வாங்கப்படுகின்றன. தனியாரிடம் ஒப்பந்தம் மூலம் நூல்கள் பெறப்படுகின்றன.
இந்த நூல்களை கோவை, ஈரோடு, சேலம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு நெசவாளர் சங்கங்கள் மூலம் விநியோகிக்கின்றன.
வேட்டி, சேலைகளை நெசவாளர்கள் நெய்து கொடுத்ததும் அதற்கான ஊதியத்தை கைத்தறித்துறை வழங்குகிறது. இந்த வேட்டி, சேலைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மூலம் வருவாய்த்துறைக்கு அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து தாலுகா வாரியாக பிரிக்கப்பட்டு வேட்டி, சேலைகள் அனுப்பப்பட்டு வருவது நடைமுறையில் உள்ளது.

பட மூலாதாரம், ANI
``ஆண்டுதோறும் வேட்டி, சேலைக்கு 409 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்கிறது. இதில் நூலுக்கு மட்டும் 250 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதில், எந்தெந்த கம்பெனிகளுக்கு டெண்டர் கொடுக்க வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள சொசைட்டிகளுக்கு எவ்வளவு நூல் கொடுக்க வேண்டும் என்பதில் ஏற்பட்ட குளறுபடியே விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்குக் காரணம்,'' என்கின்றனர் கைத்தறி, துணிநூல் வட்டாரத்தில்.
வேட்டி, சேலை விநியோகத்தில் ஏற்படும் தாமதம் தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``பொங்கலுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலைகளை வருவாய்த்துறை மூலமாக ரேசன் கடைகளில் விநியோகம் செய்வார்கள். பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கும்போதே இதனை சேர்த்துக் கொடுப்பது வழக்கம். தற்போது வரையில் இதனை முதலமைச்சர் தொடங்கி வைக்கவே இல்லை. நாளை மறுதினம் பொங்கல் பண்டிகை வரவுள்ளது. அதனால்தான் அரசின் கவனத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரும் துணைத் தலைவரும் இதனைக் கொண்டு சென்றுள்ளனர்,'' என்கிறார்.
``முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இது தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 1.80 கோடி ஆண்களும் இதே எண்ணிக்கையிலான பெண்களும் விலையில்லாத வேட்டி, சேலையால் பலன் அடைகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடந்த காலங்களில் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்த புகைப்படங்களைப் பார்த்தால் வேட்டி, சேலையும் அதில் இருக்கும்.
இத்திட்டத்துக்காக 409 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், என்ன காரணத்துக்காக இன்னும் விநியோகம் தொடங்கவில்லை எனத் தெரியவில்லை,'' என்கிறார் ஆர்.பி.உதயகுமார்.

பட மூலாதாரம், TNDIPR
இது தொடர்பாக, கைத்தறித்துறை இணை இயக்குநர் சண்முகசுந்தரத்திடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.
``ஒவ்வொரு தாலுகாவுக்கும் இலவச வேட்டி, சேலைகளை அனுப்பி வருகிறோம். தற்போது வரையில் 80 சதவிகிதம் அளவுக்குப் பொருள்களை அனுப்பிவிட்டோம்'' என்றார்.

``வேட்டி, சேலை விநியோகத்தில் தாமதம் ஏற்பட என்ன காரணம்?'' என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ``வேட்டி, சேலைகள் அனைத்தும் 70 சதவிகிதம் அளவுக்கு வந்துவிட்டன. டெண்டர் வேலைகளில் விலை சரியாக வராததால் மறு டெண்டர் வைக்கப்பட்டது. அவ்வாறு வைக்கும்போது 15 நாள் தாமதம் ஆகும். தவிர, நூல் விலையும் அதிகமாகிவிட்டது. முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் பொங்கலுக்குள் கொடுத்திருக்கலாம். அடுத்த ஓரிரு நாள்கள் அல்லது மாத கடைசிக்குள் விநியோகம் நடந்துவிடும்,'' என்கிறார்.
``டெண்டர் கோருவதில் தாமதம் ஏற்பட்டது ஏன்?'' என்றோம். ``கடந்த ஆண்டைவிட நூலின் விலை அதிகமாகிவிட்டது. இதனால் விலை சற்று அதிகமாக கோரப்பட்டது. இதைப் பற்றி நிதித்துறையிடம் கூறும்போது, `மறுடெண்டர் வைத்தால் விலை குறையும்' என்றனர். இதனால் சற்று தவறு நேர்ந்துவிட்டது. மறுடெண்டர் வைக்காமல் இருந்திருந்தால் இந்த 15 நாள் தாமதம்கூட ஏற்பட்டிருக்காது,'' என்கிறார்.
``நூல் விலை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேசிய பஞ்சாலைக் கழகத்திடம் (சிசிஐ) இருந்துதான் வாங்க வேண்டும். சிசிஐ போல தமிழ்நாட்டுக்கும் ஒன்றைத் தொடங்குவது தொடர்பாக முதல்வரின் ஒப்புதலோடு செயல்படுத்தும் திட்டம் ஒன்றும் உள்ளது. தவிர, தமிழ்நாட்டில் நூல் உற்பத்தியும் குறைவாக உள்ளது. அவ்வாறு தொடங்கப்பட்டால் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். நமது மில்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் பேல் தேவைப்படுகிறது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வாங்குகிறோம்'' என குறிப்பிடுகிறார் ஆர்.காந்தி,
``அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு இப்படியொரு துறை இருப்பதே தெரியாது. கைத்தறி, துணிநூல், கோஆப்டெக்ஸ் ஆகியவை ஒன்றாக இருந்தன. தற்போது தனித்தனியாக பிரித்து விட்டோம். இதனால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதில் எந்தவித ரகசியங்களும் கிடையாது. விரைவில் பொங்கல், வேட்டி சேலை விநியோகம் நடக்கும்,'' என்கிறார் காந்தி.
பிற செய்திகள்:
- சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்
- பசுப் பாதுகாவலர்களை நோக்கி சுவாமி விவேகானந்தர் கேட்கும் கடினமான கேள்விகள்
- பிரிட்டனில் 2,400 ஆண்டுகளுக்கு முந்தைய ரோமாபுரி வர்த்தக நகரம் கண்டுபிடிப்பு
- இலங்கை போலீஸாருக்கு இந்தி கற்றுக் கொடுக்கும் இந்தியா- பின்னணி என்ன?
- 'அடுத்த சில வாரங்களில் பாதி ஐரோப்பா ஒமிக்ரானால் பாதிக்கப்படும்' - உலக சுகாதார நிறுவனம்
- பாலியல் குற்றவாளிகளை அவர்கள் செலவிலேயே அசிங்கப்படுத்த சௌதி நீதிமன்றம் உத்தரவு
- சென்னை உள்பட 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்?
- காசுமில்லை, காகிதமும் இல்லை: இலங்கையில் பத்திரிகைகள் மூடப்படும் அபாயம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













