புத்தாண்டு பரிசாக பெட்ரோல் விலையில் 25 ரூபாய் குறைப்பு: ஜார்கண்ட் மாநில முதல்வர் அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
புத்தாண்டு பரிசாக குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை
புத்தாண்டு பரிசாக ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது என்கிறது தினத்தந்தியின் செய்தி.
அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜார்கண்டில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 48 பைசாவாக இருந்து வருகிறது எனவே இந்த விலை குறைப்புக்கு பிறகு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், லிட்டருக்கு 73 ரூபாய் 48 பைசாவிற்கு விற்கப்படும். வரும் ஜனவரி 26ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சியை அச்சுறுத்தும் ஒமிக்ரான்
நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலிருந்து பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மீண்டு வரும் சூழலில், பணவீக்கம் அதிகரித்து வருவதுடன் ஒமிக்ரான் பாதிப்பும் மிகப்பெரிய சவாலாக அமையும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ரிசர்வ வங்கி புதன்கிழமை வெளியிட்ட இரண்டாவது நிதி நிலைத்தன்மை அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்துக்குப் பிறகு சர்வதேச சவால்கள் மற்றும் சமீபத்திய ஒமிக்ரான் பாதிப்புக்கு இடையிலும் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு வருகிறது. தனியார் முதலீடு மற்றும் நுகர்வும் வலுவான நீடித்த மீட்சியை பெற்று வருகிறது; இருந்தபோதும் பணவீக்கம் தொடர்ந்து கவலைக்குரிய நிலையில் இருந்து வருகிறது என அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒமிக்ரான் பாதிப்பால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் 6.9 சதவீதமாக இருந்த வங்கிகளின் வாராகக் கடன் விகிதம் 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் 8.1 முதல் 9.5 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார் என்கிறது அச்செய்தி.
மொத்தம் 196 கோடி ரூபாய்; 23 கிலோ தங்கம்: முடிவுக்கு வந்த வருமான வரி சோதனை
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த வருமான வரி சோதனை நேற்றுடன் நிறைவுப் பெற்றுள்ளதாக இந்து தமிழ் திசையின் செய்தி குறிப்பிடுகிறது.
இந்த சோதனையில் மொத்தம் 196 கோடி ரொக்கமும், 11 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ தங்கமும் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 600 கிலோ சந்தனை எண்ணெய்யும் வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்கிறது அச்செய்தி.
கடந்த 22ஆம் தேதி தொடங்கிய சோதனை நேற்று முடிவடைந்துள்ளது.
பிற செய்திகள்:
- மொரிஷியஸ் தீவு ஏன் தன் கிளிஞ்சல்களை இழந்துகொண்டிருக்கிறது?
- இந்திய தேர்தல் சீர்திருத்த மசோதா: ஆதாரை இணைத்தால் வாக்குரிமை பறிபோகும் - காரணங்களை பட்டியலிடும் சிசிஜி
- 2021இல் மனம் கவர்ந்த கதாபாத்திரங்கள்: சார்பட்டா `டான்சிங் ரோஸ்` முதல் டாக்டர் `பகத்` வரை
- இரானில் தண்ணீர் தட்டுப்பாடு: மனிதர்களை தாக்கும் முதலைகள் - அதிர்ச்சித்தகவல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












