மொரிஷியஸ் தீவு ஏன் தன் கிளிஞ்சல்களை இழந்துகொண்டிருக்கிறது?

Mauritius

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நோரா ஃபகிம்
    • பதவி, பிபிசி நியூஸ், மொரிஷியஸ்

நான் சிறுவயதில் விடுமுறை நாட்களில், குடும்பத்தினருடன் மொரிஷியஸுக்கு சென்றிருந்தபோது, கடற்கரைகளில் ஏராளமான கிளிஞ்சல்களைப் பார்ப்பேன்.

ஆனால், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைப் பற்றி செய்தி சேகரிக்க நான் அங்கு சென்றபோது, நீண்டு கடந்த இந்தியப் பெருங்கடலின் மென்மையான மணல் எதையோ இழந்துவிட்டது போல காட்சியளித்தது.

எனது தந்தை தனது இளம்வயதில் இங்கு நூற்றுக்கணக்கான வெவ்வேறு கிளிஞ்சல்களை சேகரித்தது, இப்போது சாத்தியமற்றதாக உள்ளது.

14 வயதான காலநிலை மாற்ற ஆர்வலர் அனேஷ் முங்கூருக்கு இது ஆச்சரியமான ஒன்றல்ல. அவர் தனது வாழ்நாளில் இதுவரை பெரிதாக கிளிஞ்சல்களை பார்த்ததில்லை என்று கூறுகிறார்.

"கிளிஞ்சல்கள் மறைந்து போவது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்." என்கிறார்.

Anesh Mungur
படக்குறிப்பு, "கிளிஞ்சல்களில்ன் முக்கியத்துவத்தையும், அவை எவ்வளவு பாதிக்கப்படுகின்றன என்பது பலருக்குத் தெரியாது என்று நான் நினைக்கிறேன்." - அனேஷ் முங்கூர்

 "இந்த தீவு உண்மையில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்படுவதாக நான் உணர்கிறேன். மேலும் நாம் தீவைப் பாதுகாக்க இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்." என்கிறார்.

மொரிஷியன் வாழ்க்கைமுறையில், கிளிஞ்சல்கள் எப்பொழுதும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 'மொனிடேரியா அன்யூலஸ்' என்று அழைக்கப்படும் ஒருவகை கிளிஞ்சல் அன்பின் அல்லது அதிர்ஷ்டத்தின் பரிசு என அறியப்படுகிறது.

மொரிஷியஸ் தீவில் 'மொனிடேரியா மொனெட்டா' (சில வகை கிளிஞ்சல்) மிகவும் பழக்கப்பட்டதாக இருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இதை ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் நாணய வடிவமாக பயன்படுத்தப்பட்டது.

வெப்பமாகும் நீர்நிலைகள்

கடந்த மூன்று தசாப்தங்களில், கிளிஞ்சல்களின் எண்ணிக்கை 60% குறைந்துள்ளதாக கடல்சார் ஆய்வாளர் வாசன் கவுப்பைமுத்தோ கூறுகிறார்.

Mauritius

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மொரிஷியஸில் உள்ள இளைஞர்கள் கிளிஞ்சல்களை கண்டுபிடிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டனர்.

இதற்கு காலநிலை மாற்றம், அதிகப்படியான மீன்பிடித்தல், சுற்றுலா மற்றும் கழிவு நீர் மற்றும் படகுகளால் ஏற்படும் மாசு போன்ற விஷயங்களே காரணம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை உலகில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் மொரீஷியஸ் ஒன்று.

இது கடல் மட்ட உயர்வு, வறட்சி மற்றும் சூறாவளிகளால் பாதிக்கப்படுகிறது.

Nora Fakim's father amassed an impressive collection of shells when he was growing up

பட மூலாதாரம், AALIA ABOOBAKER

படக்குறிப்பு, நோரா ஃபகிமின் தந்தை, அவர் வளர்ந்து வரும் போது, கிளிஞ்சல்கள் சேகரிப்பில் ஈடுபட்டார்.

கடல் நீரின் உயரும் வெப்பநிலை, மொல்லஸ்க்கள் என்று அழைக்கப்படும் ஒருவகை சிற்பியின் வாழ்விடம் உட்பட சுற்றுச்சூழலின் பெரும்பகுதியை பாதித்துள்ளது.

அதே நேரத்தில், வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பு "கடலில் அமிலத்தன்மையை உருவாக்குகிறது. இதனால் கிளிஞ்சல்கள் மெல்லியதாக மாறும்" என்கிறார் கவுப்பைமுத்தோ.

"இவை அனைத்தும் சங்கிலித் தொடர் விளைவைக் கொண்டிருக்கின்றன. மேலும், தீவைச் சுற்றியுள்ள பவளப்பாறைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு பேரழிவு தரும் விளைவுகள் ஏற்படுத்துகின்றன."

"மொல்லஸ்க்கள் இல்லாதபோது, அதனை வேட்டையாடும் விலங்கு இல்லை. பின்னர் பிற உயிரினங்கள் பெருகத் தொடங்குகின்றன. மேலும் இது வெப்பமண்டல தீவுவிலும், உலகம் முழுவதிலும் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது."

சிறிய மீன்களும் ஆக்டோபஸ்களும், கிளிஞ்சல்களை தங்களின் தங்குமிடமாகவும், பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்துகின்றன. மேலும் பல பறவைகள் தங்களின் கூடுகளை உருவாக்க கிளிஞ்சல்களின் பகுதிகளைப் பயன்படுத்துகின்றன.

ஃபிரைடேஸ் ஃபார் ஃபியூச்சர் மொரிஷியஸ் (Fridays For Future Mauritius) இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அனேஷ், 2020ம் ஆண்டு, தீவைத் தாக்கிய மிகப்பெரிய எண்ணெய் கசிவு போன்ற சுற்றுச்சூழல் பேரழிவுகளைத் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

The delicate ecosystem around Mauritius is under threat

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மொரிஷியஸைச் சுற்றியுள்ள நுட்பமான சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

ஜப்பானின் எம்.வி வகஷியோ (MV Wakashio) கப்பலில் இருந்து சுமார் 1,000 டன் எரிபொருள் எண்ணெய் கடலில் கசிந்தது. அது ஒரு பவளப்பாறையில் மூழ்கி, மொரிஷியஸ் தீவின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தியது.

"எங்கள் கடலின் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தீவில் நடந்தவை மூலம் பவளப்பாறைகள், மொல்லஸ்க்கள் மற்றும் பிற உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது சுமார் 300 மீ (1,000 அடி) பவளப்பாறைகளை சேதப்படுத்தியது. பல மீன்களை கொன்றது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்தது.

 இது உலகம் முழுவதும் ஒரு எச்சரிக்கை ஒலியை எழுப்புகிறது.

"கிளிஞ்சல்களின் முக்கியத்துவத்தையும், அவை எவ்வளவு பாதிக்கப்படுகின்றன என்பது குறித்தும் பலருக்குத் தெரியாது என்று நான் நினைக்கிறேன்."

சேகரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

கிளிஞ்சல்கள் சேகரிப்பவர்களும் கிளிஞ்சல்களின் அழிவுக்கு காரணம் என்று கவுப்பைமுத்தோ குற்றம் சாட்டுகிறார்.

In the 1970s people could get beautiful large shells for sale on the beach

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1970-க்களில் மக்கள் கடற்கரையில் விற்பனைக்கு அழகான பெரிய கிளிஞ்சல்களை பெறலாம்.

கடந்த 15 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட இரண்டு சட்டங்களின் மூலம், மக்கள் கிளிஞ்சல்கள் எடுப்பதையும் - சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவுப் பொருட்கள் விற்பனை செய்வதையும் நிறுத்த மொரிஷியஸ் அரசு முயற்சிக்கிறது.

கவுப்பைமுத்தோ கூறுகையில், "குறைந்த மற்றும் அதிக அலை அடையாளங்களைக் காணக்கூடிய கடற்கரைகளில் இருந்து 10 கடல் ஓடுகளை மட்டுமே இப்போது சட்டப்பூர்வமாக ஒரு நினைவுப் பொருளாக எடுக்க முடியும்." என்கிறார்.

Vassen Kauppaymuthoo
படக்குறிப்பு, "கடற்கரைகளில் இருந்து அவற்றை எடுக்காதே", கடல்சார் ஆய்வாளர் வாசன் கவுப்பைமுத்தோ என்கிறார்.

ஆனால், கிளிஞ்சல்கள் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது; அவற்றை ஏற்றுமதி செய்வது சட்டவிரோதமாக ஆக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் அழகான நினைவுப் பொருட்களை தங்கள் பைகளில் வைப்பதைத் தடுப்பது கடினம்.

"கடற்கரைகளில் இருந்து அவற்றை எடுக்க வேண்டாம்," என்று கவுப்பைமுத்தோ வலியுறுத்துகிறார், மேலும் கிளிஞ்சல்கள் கடலோர அரிப்பைத் தடுக்கின்றன.

அதிக கிளிஞ்சல்கள் இருப்பதால், காற்று, அலைகள் மற்றும் நீரோட்டங்கள் கரையோர வண்டலை நகர்த்துவது கடினமாகிறது.

அவர்களின் விடுமுறையை நினைவில் கொள்ள விரும்புவோருக்கு அவரது அறிவுரை என்ன?

 அவற்றை ரசித்து பாருங்கள், அவற்றைப் புகைப்படம் எடுங்கள் - இதன் மூலம் நீங்கள் இனிமையான நினைவுகளைப் பெறலாம், மேலும் நீங்கள் அவற்றின் பாதுகாப்பிற்கு உதவுகிறீர்கள் என்பதை அறிவீர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: