இந்திய தேர்தல் சீர்திருத்த மசோதா: ஆதாரை இணைத்தால் வாக்குரிமை பறிபோகும் - காரணங்களை பட்டியலிடும் சிசிஜி

தேர்தல் சீர்திருத்தம்
படக்குறிப்பு, கோ. பாலச்சந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய அரசின் தேர்தல் சீர்திருத்த மசோதாவில் உள்ள பாதகங்களைப் பட்டியலிட்டு முன்னாள் ஆட்சிப்பணி அதிகாரிகள், திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர். `வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் ஆறு பாதகங்கள் உள்ளன. இது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைத்துவிடும்' எனவும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு உயர் பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகளால் சிசிஜி எனப்படும் `அரசியலமைப்புச் சட்டத்தின்வழி நடக்க வலியுறுத்தும் குழு' (Constituition Conduct group) என்ற அமைப்பு நடத்தப்பட்டு வருகிறது.

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம், லட்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை, உத்தரபிரதேசத்தில் நடக்கும் ஆட்சிமுறை ஆகியவை குறித்து சிசிஜி எழுதிய கடிதங்கள், விவாதப் பொருளாக மாறின.

இந்நிலையில், இந்திய அரசின் தேர்தல் சீர்திருத்த மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்து சிசிஜி அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர்.

140 பேர் கொண்ட இந்தக் குழுவில் மேற்கு வங்க மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரன் என்பவரும் ஒருவர். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிசிஜி சுட்டிக்காட்டிய விஷயங்கள் குறித்து அவரிடம் பிபிசி தமிழ் நடத்திய நேர்காணல். அதில் இருந்து...

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பது தொடர்பான சட்டத்துக்கு சிசிஜி அமைப்பினர் சில பாதகங்களைப் பட்டியலிட்டுள்ளனரே?

``ஆமாம். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இந்த சட்டத்தின் மூலம் ஏற்படக் கூடிய விளைவுகள் மிக மிக ஆபத்தானவை. இன்றுள்ள நிலையில் நீதிமன்றங்கள் தலையிட்டால் தவிர இந்த விவகாரத்தில் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. 'குடியரசு' என்ற தத்துத்துவத்துக்கு எதிரானதாக இந்தச் சட்டம் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.''

பல இடங்களில் ஒரே நபரிடம் முறையில்லாமல் வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. `ஆதாரை இணைப்பதன் மூலம் தவறுகள் சரிசெய்யப்படும்' என பா.ஜ.க சொல்கிறதே?

``அப்படிப் பார்க்க முடியாது. நாங்கள் எழுதிய மடலில் ஆறு காரணங்களைக் குறிப்பிட்டுள்ளோம். வாக்காளர் அடையாள அட்டை என்பது ஒருவர் இந்த நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில்தான் கொடுக்கப்படுகிறது. ஆனால், ஆதார் அட்டை என்பது ஒருவருடைய அடையாளத்தைக் குறிப்பதாக மட்டுமே அமைகிறது. ஒருவர் இந்த நாட்டின் குடிமகன் என்பதற்கான அடையாளமாக ஆதார் அட்டை இல்லை. இந்த நாட்டின் குடிமகனாக இல்லாத ஒருவர்கூட, ஆதார் அட்டையைப் பெற முடியும்.

ஆதார் சட்டம் 2016ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதில் ஒன்பதாவது பிரிவில், ஆதார் என்பது ஒருவர் வசிக்கும் இடத்தின் ஆதாரமாகவோ, அவரது வயதின் ஆதாரமாகவோ அவருடைய பாலினத்தின் ஆதாரமாகவோ, அவர் இந்த நாட்டின் குடிமகன் என்பதற்கான ஆதாரமாகவோ உபயோகப்படுத்தக் கூடாது என மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் அட்டையை வைத்து வாக்காளரை பரிசோதித்துக் கொள்ளலாம் என்பது சரியானதல்ல. இது முதல் காரணம்.''

ஆதார் எண்

பட மூலாதாரம், MANSI THAPLIYAL

படக்குறிப்பு, ஆதார் பதிவுக்காக சேகரிக்கப்படும் கைரேகை மற்றும் கண் கருவிழிகளின் தரவு மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதாக இந்திய அரசு கூறுகிறது.

அடுத்து என்னென்ன காரணங்கள்?

``ஆதார் அட்டையை ஒருவர் பெற வேண்டும் என்றால் அவர் தன்னிடம் உள்ள ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், வாக்காளர் அடையாள அட்டையை ஒருவர் பெறுவதற்கு முன்னர், ஒன்றிய அளவில் உள்ள அதிகாரி, அந்த நபரின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்த வேண்டும். இது விதிமுறை. இதற்கான அதிகாரம் பெற்றுள்ள அதிகாரி, வாக்காளர் அட்டை பெறுவதற்கான விதிமுறைகள் சரியாகப் பின்பற்றுள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும்; மற்றும் அவர் சான்றொப்பம் அளிக்க வேண்டும் என்பதும் விதியாக உள்ளது.

ஆனால், ஆதார் பெறுவதற்கு இப்படிப்பட்ட விதிமுறைகள் இல்லை. வாக்காளர் அடையாள அட்டை தரப்படுவதற்கு முன்னால் அதற்கான நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டால் மட்டுமே இந்த நாட்டின் குடிமகனுக்கு ஒரே ஒருமுறை வாக்காளர் அடையாள அட்டையை வழங்க முடியும். இதனை வழங்குவதில் சில தவறுகள் இருக்கலாம். ஆனால், இந்த நடைமுறைகள் எதுவுமே இல்லாத ஆதார் அட்டையை வாக்களிப்பதற்கான ஆதாரம் பெறுவதற்காக வாக்கு அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் எனக் கூறினால் அது மிகத் தவறான போக்கு. ஏற்கெனவே உள்ள விதிமுறைகள் மிகச் சிறப்பாக உள்ளன. அதனைச் சரிபார்ப்பதற்கான கருவியாக ஆதாரை பயன்படுத்துவது சரியானதாக இருக்காது.

`வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமல்ல' என அரசு சொல்கிறதே?

``இந்தச் சட்டத் திருத்தத்தின்படி அவர்கள் சொல்வது சரியல்ல. இந்தச் சட்டத்தில் பிரிவு 23ன்கீழ் உட்பிரிவுகள் 4,5,6 மற்றும் 28ஆவது பிரிவு 2ல் உள்ள HHHA, HHHB என்ற திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது கட்டாயமல்ல என மேலோட்டமாகக் கூறிக் கொண்டாலும் இந்த உட்பிரிவுகளின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட திருத்தங்களைப் பார்க்கும்போது ஆதாரை இணைப்பது கட்டாயம் என்பது புலப்படுகிறது.

ஏனென்றால், தற்போது புகுத்தப்படும் உட்பிரிவின்படி ஒரு வாக்காளர் தன்னுடைய ஆதார் அட்டையை கொடுக்காவிட்டால் அவர் வாக்களிக்கும் உரிமை பறிபோகாது என அரசு கூறுகிறது. ஆனால், பிரிவு 23ன்கீழ் உட்பிரிவு 6 உள்ளது. அது என்ன சொல்கிறது என்றால், வாக்காளராக தன்னை இணைத்துக் கொள்ள விரும்பும் ஒரு நபர் தன்னுடைய ஆதார் அட்டையை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டால் அதன் காரணமாக அவர் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து எடுக்க முடியாது எனவும் அவர் ஆதார் அட்டையை தகுந்த காரணங்களால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டால் அவர் பெயரை நீக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, மேலோட்டமாகப் பார்க்கும்போது ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமல்ல என்று தோன்றும். ஆனால், ஒரு சட்டம் இயற்றும்போதும் அதனை அமல்படுத்தும்போதும் அதன் நகல் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். ஆனால், அதனை அமல்படுத்துவதற்கான விதிகள் எதுவும் நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்படுவதில்லை. அதன் காரணமாக, அரசு உருவாக்கும் விதிகள், ஆதார் அட்டையை இணைப்பதைத் தவிர என்ற நிலையை ஏற்படுத்த முடியும் என்பதுதான் சிக்கல்.

அப்படி ஒரு நிலைமை வரும் என்றால் ஆதார் அட்டையைக் கொடுக்காத காரணத்தால் பல்லாயிரக்கணக்கானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை இழக்க நேரிடும். தவிர, ஆதார் சட்டத்தில் பிரிவு 23 உட்பிரிவு (ஜி) என்ன சொல்கிறது என்றால் ஆதார் அட்டையை கொடுக்கும் UIDAI அமைப்புக்கு ஆதார் அட்டையை செயலிழக்க வைப்பதற்கு உரிமை உண்டு என்கிறது. அப்படியென்றால், ஆதார் அட்டையை எந்தவொரு காரணத்துக்காகவோ செயலிழக்க வைத்தால் அதன் காரணமாக வாக்களிக்கும் உரிமை பறிபோகும் அபாயம் உள்ளது.''

ஆதார் எண்

பட மூலாதாரம், RONNY SEN

படக்குறிப்பு, ஆதார் தரவுகளின்படி பார்த்தால் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள இவர்கள் ஜனவரி 1ஆம் தேதி பிறந்தவர்கள்.

அரசின் நலத்திட்டங்களில் ஆதார் எண் இணைக்கப்பட்டதால் பொதுவிநியோக திட்டத்தில் ஏராளமான முறைகேடுகளைக் களைய முடிந்ததே?

``அப்படிச் சொல்லப்பட்டதும் சில தவறான பெயர்கள் நீக்கப்பட்டதும் உண்மைதான். ஆனால், ஆதாரை வைத்து ஏற்கெனவே இருக்கின்ற ஒழுங்கீனங்களை நீக்கப் போவதாகத் தெரிவித்தனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பொதுவிநியோகத் திட்டம் ஆகியவற்றில் உள்ள குறைகளைக் களையப்போகிறோம் என அரசு தெரிவித்தது. ஆனால், ஆயிரக்கணக்கான தகுதிபெற்ற பயனாளர்கள் தங்களின் பெயர் நீக்கப்படும் அவலத்தைக் கண்டனர். ஒரு நபரின் பெயர் பல்வேறு இடங்களில் உள்ளதாக எந்தவித நோட்டீஸும் கொடுக்கப்படாமல் அவர்களின் பெயர்களை நீக்கினர். இது ஏற்கெனவே நடந்த சம்பவம். இதே தவறுகள் ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும்போது நடக்காது என்பதற்கு எந்தவித உத்தரவாதங்களும் இல்லை.

ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும்போது எந்தப் பெயரெல்லாம் தவறாக இணைக்கப்பட்டதோ அவையெல்லாம் நீக்கப்பட வேண்டும் என்பது நடைமுறை. நான் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணிபுரிந்திருக்கிறேன். வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே உள்ள நபர் அந்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதை அறிந்து அந்தப் பெயர் நீக்கப்படும். இது சரியான நடைமுறை. ஆனால், ஆந்திரா, தெலுங்கானாவில் அண்மையில் நடைபெற்ற விஷயம், அவர்களிடம் ஆதார் தொடர்பான மென்பொருளானது, மாநில குடியுரிமை தகவல் மையத்தில் (State resident data hub) வைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு தனியார் நிறுவனம் நிர்வகிக்கிறது. இங்குள்ள மென்பொருளைப் பயன்படுத்தி இரண்டு மாநில அரசுகளும் போலியான வாக்காளர்கள் என மாநில தலைமை தேர்தல் அலுவலரிடம் கூறியதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள், தங்கள் வாக்குரிமையை இழந்தனர். ஒருவர் தவறு செய்துள்ளார் என்பதை நிரூபிக்கும் வரையில் வாக்குரிமையை இழக்க வைக்கக் கூடாது என்பது விதியாக இருக்கும்போது, அரசின் இந்தச் சட்டத்தால் எத்தகைய ஆபத்து உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.''

`ஆதாரில் செல்போன் எண் இருப்பதால் இலக்கு வைத்து அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய முடியும்' என சிசிஜி குறிப்பிடுகிறதே? அது பற்றி கூற முடியுமா?

`` உண்மைதான். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கிறீர்கள் என்றால் அதில் சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண்ணும் சென்று சேர்கிறது. இதனைத் தவிர்க்க முடியாது. இதனால் சமூக ஊடகங்களுடன் எளிதில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆவணங்களை பொதுவெளியில் வைக்க முடியும். இதில் உள்ள ஆபத்து என்னவென்றால், ஒருவர் டெல்லியில் பயணம் செய்யும்போது எங்காவது நின்றால், அடுத்த சில நிமிடங்களில் உங்களுக்கு அதேபோல் விருப்பமான இடங்கள் எது என்ற விவரத்தை உங்கள் செல்போனில் காட்டும். அதாவது, பயனாளர்களின் விருப்பத்தை அறிந்து அவை திறமையாக இயங்குகின்றன.

ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தால் வாக்காளரின் ஆர்வத்தினை எளிதில் கண்டுகொள்ள முடியும். தரவுகளை ஒழுங்குபடுத்தும் முறைகள் என்பது மிகச் சரியாக உருவாக்கப்படவில்லையென்றால், இலக்கு வைத்து பிரசாரம் செய்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. உதாரணமாக, 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் அதிபர் தேர்தல் பிரசாரம் நடந்தபோது, `கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா' என்ற மோசடி வெளியுலகுக்கு வந்தது. வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கும் மனநிலையில் உள்ளனர் என்பது அறியப்பட்டால், ஒரு வேட்பாளருக்கு இந்த விவரங்கள் எளிதில் வந்து சேர்கிறது என்றால் அந்த வேட்பாளர் அல்லது குறிப்பிட்ட ஒரு கட்சியால் தங்களுக்கு ஆதரவான நிலையை நோக்கி வாக்காளரை மடைமாற்ற முடியும்.

இது தேர்தல் நடைமுறையையே சந்தேகத்துக்குள்ளாக்குகிறது. இதன் மூலம் தேர்தல் நாணயமாக நடக்கும் என்ற நம்பிக்கையைக் குலைக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் பி.என்.பானர்ஜியை தலைவராகக் கொண்டு, தரவுகளைப் பாதுகாப்பதற்கான நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர், `வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது ஆபத்தான சூழலை உருவாக்கும்' என்றார். தேர்தல் சரியாகவும் நேர்மையாக நடப்பதை மாற்றும் வல்லமை கொண்டதாக அவை மாறிவிடும்''.

ஆதார் எண்

பட மூலாதாரம், Ronny Sen

படக்குறிப்பு, ஜாமா சிங் என்ற இந்த முதியவரின் வயது 102 என இருப்பதால் அவரால் இந்த எண்ணை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசை சந்தேகிப்பது சரியானதா?

``ஆதார் அட்டையின் அடிப்படை நோக்கம், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களில் சரியான பயனாளிகளைத் தேர்வு செய்ய முடியும் என்பது மட்டுமே. அந்த நோக்கத்துக்காக மட்டுமே ஆதார் அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. தனியார் நிறுவனங்கள் எந்தவொரு சேவையை அளிக்கும்போதும் மக்களிடம் ஆதார் எண்ணைக் கேட்கின்றனர். வருமான வரியைத் தாக்கல் செய்யும்போது பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்கச் செய்தனர். இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது.

தெளிவான நடைமுறைகளின்படியே வாக்காளர் அடையாள அட்டை தரப்படுகிறது. எந்தவித ஆய்வும் இல்லாமல் ஒருவர் சமர்ப்பிக்கும் ஆதாரங்களை வைத்து ஆதார் அட்டையைக் கொடுக்க முயல்கின்ற இந்தச் சட்டம் எந்தவித விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எங்களுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது. இதனை அமல்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையம் தீவிரமான எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும். இந்தச் சீர்திருத்தமானது தேர்தல் ஆணையத்தின் நேர்மைத்தன்மை மற்றும் சுதந்திரத்தன்மையைக் கட்டுப்படுத்துகிறது என்பதுதான் உண்மை. இந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்''.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: