இயற்கை விவசாயம் என்ற பெயரில் டெல்டா மாவட்டங்களில் புதுவகை மோசடி புகார்

விவசாயம்
    • எழுதியவர், ஜோ. மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

இயற்கை விவசாயத்தில் முதலீடு செய்தால் 12 % லாபத்துடன் திரும்ப அளிக்கப்படும் என்று டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், பொருளாதாரக் குற்றப்பிரிவு என முதலீடு செய்த விவசாயிகள், பெண்கள் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ வழி வகுக்கும் மக்கள் நல முன்னேற்ற நல சங்கம். இது தஞ்சாவூரில் உள்ள ஓர் அமைப்பின் பெயர். சங்கத்தின் பெயர் வித்தியாசமாக இருந்தாலும் சங்கம் வந்த காரணம் வேதனையானது என்கிறார்கள் இதைத் தொடங்கியவர்கள்.

இயற்கை, இயற்கை விவசாயம், இயற்கை விவசாய உற்பத்திப் பொருட்கள் இவற்றின் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி, இயற்கை விவசாயத்தில் முதலீடு செய்தால், அதிக தொகை திரும்ப வழங்கப்படும் என்று ஒரு நிறுவனம் அறிவித்து முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. ஆர்வமாக இதில் முதலீடு செய்த பலரும் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காத நிலையில், பல முறை முறையிட்டும் பணம் கிடைக்காததால், மாவட்ட ஆட்சியர், காவல்துறை என்று புகார் அளித்துள்ளனர்.

போராட்டம்

இதில் முதலீடு செய்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த தேன்மதி என்பவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "ஆசிரியர் கல்வி பட்டப் படிப்பை முடித்து விட்டு, தகுதித் தேர்விற்கு தயாராகி வருகிறேன். இயற்கை விவசாயத்தில் முதலீடு, 5 ஆண்டுகளில் லாபத்துடன் திரும்ப கிடைக்கும் என்று அழைத்தனர். விவசாயக் குடும்பம் என்பதால் ஆர்வத்துடன் நானும் சேர்ந்தேன். நான், என் கணவர் என ரூ. 3.50 லட்சம் முதலீடு செய்துள்ளேன். என் மூலம்100 நபர்களைச் சேர்த்து, ரூ. 25 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர்."

"முதிர்வு காலம் வந்ததும் சுமார் 10 பேருக்கு மட்டும் பணத்தைத் திரும்ப கொடுத்தனர். மற்றவர்கள் 4 ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறோம். இதனால், குடும்பத்தின் பல்வேறு பிரச்னைகள். என் மூலம் முதலீடு செய்தவர்களிடம் கெட்ட பெயர், அவமானம் என மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். தொடர் மன அழுத்தத்தால், நிறைமாதத்தில் எனது குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது. இனி கட்டிய தொகை திரும்ப கிடைத்தாலும் நான் இழந்தவற்றை பெற முடியுமா, "என்று வேதனையோடு கேட்கிறார் தேன்மதி.

தேன்மதி

பட மூலாதாரம், THENMATHI

படக்குறிப்பு, தேன்மதி

தனியார் நிறுவனத்தின் முகவராகவும் பணியாற்றி முதலீடு செய்த, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கருப்பப்பட்டி பட்டியைச் சேர்ந்த சந்திரன் பிபிசியிடம் கூறுகையில், "நிலம் வாங்கி, இயற்கை விவசாயம் செய்து, உற்பத்தி பொருளை ஏற்றுமதி செய்ய உள்ளோம். இதில் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து அளிக்க உள்ளோம் என்று இருந்து என்னை தொடர்பு கொண்டார்கள். முதலீட்டை மாத தவணை, காலாண்டு தவணை, அரையாண்டு தவணை, ஆண்டு தவணை என பணம் கட்டலாம். முதலீட்டிற்கு 12.5 சதவீத லாபம். ஒரு முறை பணம் செலுத்தியிருந்தாலும் 5 ஆண்டுகளில் அதற்கேற்ப லாபத்துடன் திரும்ப கிடைக்கும்."

"ஐந்து ஆண்டுகளும் பணம் கட்டினால், 2 -4 % கூடுதல் லாபம் வழங்கப்படும் என்றனர். நான் மட்டும் ரூ. 1.80 லட்சம் முதலீடு செய்துள்ளேன். என் மூலம் 500 பேர் வரை சுமார் ரூ. 1.30 கோடி முதலீடு செய்துள்ளனர். எங்கள் பகுதியில் மட்டும் 2, 500 பேர் வரை முதலீடு செய்துள்ளோம். டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 10 ஆயிரம் பேருக்கு மேல் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். பலரும் கூலி வேலை, நூறு நாள் வேலை செய்து பணம் செலுத்தியுள்ளனர். நான்காண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறோம். பணம் கிடைக்கவில்லை` என்கிறார்.

குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள இந்த நிறுவனம் கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம், பண்ணை விவசாயம், முதலீடு பெருக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கம்பெனிகள் சட்டத்தின் கீழ் தொடங்க்கப்பட்டுள்ள பொது பங்களிப்பு நிறுவனம் என்று அறிவித்துள்ளார்கள். சென்னையை தலைமையிடமாக கொண்டு, நாகர்கோயில் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிளை அலுவலகங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

சந்திரன்

பட மூலாதாரம், CHANDRAN

படக்குறிப்பு, சந்திரன்

நிறுவனத்தின் பெயரில் பல்வேறு இடங்களில் நிலங்களும் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. நிர்வாக இயக்குநர் அன்பழகன் உள்ளிட்ட இயக்குநர்கள், மேலாளர்கள் என ஒருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்கிறார்கள் முதலீட்டாளர்கள்.

அன்பழகனிடம் விளக்கம் கேட்க பிபிசி தமிழ் முயன்ற போது, தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை. உரிய பதிலும் அளிக்கவில்லை. பிற இயக்குநர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை திரும்ப பெறுவதற்காகவே "வாழ வழி வகுக்கும் மக்கள் நல முன்னேற்ற நல சங்கம்" தொடங்கப்பட்டுள்ளது என்கிறார் சங்கத்தின் தலைவர் ஆர்.நாகராஜன்.

மேலும் அவர் கூறுகையில், "ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் தனியாக திரும்ப பணம் கொடுப்பது கடினம். ஒரு சங்கத்தை தொடங்குங்கள். அதில் பணத்தை செலுத்துகிறோம் என்று இந்த சங்கத்தை தொடங்க சொன்னதே இந்த நிறுவனத்தினர்தான். கடந்த ஜனவரியில் சங்கத்தை தொடங்கி, பத்திவு செய்துள்ளோம். ஆனாலும் பணம் இன்னும் கிடைக்கவில்லை. தொடர்பு கொள்ள அலுவலகங்களும் இல்லை. நிர்வாகிகளும் தலைமறைவாகி விட்டனர். இயற்கை விவசாயத்தின் பெயரில் இப்படி ஏமாந்து நிற்கிறோம். நிர்வாக இயக்குநர் அன்பழகன் விமானப் படையில் பணியாற்றியவர். மற்ற இயக்குநர்களும் மத்திய அரசுப் பணியில் பணியாற்றியவர்கள். ஆகையால் நம்பிக்கை வைத்து, விவசாயம் சார்ந்த முதலீடு என்று சேர்ந்தோம். இப்படி அலைந்து கொண்டிருக்கிறோம். மாவட்ட ஆட்சியர், காவல் துறை எஸ்.பி, பொருளாதார குற்றப்பிரிவு என புகார் அளித்துள்ளோம்," என்கிறார்.

ஜீவக்குமார்

பட மூலாதாரம், JEEVAKUMAR

படக்குறிப்பு, ஜீவக்குமார்

தனியார் நிறுவனத்தின் முகவரான ஜெயசுதா கூறுகையில், "நான் ரூ. 3 லட்சம் என் மூலம் ரூ. 5 லட்சமும் முதலீடு செய்தோம். எங்கள் மூலம் முதலீடு செய்தவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. முதலீட்டைப் பெற்ற நிர்வாகிகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னைப் போல பல பெண்கள் முதலீடு செய்து விட்டு முதலே கிடைக்காமல் தவிக்கிறோம்" என்கிறார்.

வெள்ளம், வறட்சி என பருவ நிலை சார்ந்த இடர்பாடுகளை விவசாயிகள் ஆண்டுதோறும் எதிர்கொண்டு வருகின்றனர்.

விவசாயம் சார்ந்த டெல்டா மாவட்டங்களில் இயற்கை விவசாயத்தின் பெயரில் இந்த மோசடி குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜீவக்குமார் கூறுகையில், "இயற்கை விவசாயம் லாபகரமானதாகவும் சந்தை வாய்ப்புள்ளதாகவும் ஆகியுள்ளது. இதையும் விவசாயிகளின் அறியாமையைப் பயன்படுத்தி இது போன்ற ஒரு மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இது போன்ற நிறுவனங்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து களைய வேண்டும்.இது போன்ற மோசடிகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றி, இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்," என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: