திண்டுக்கல்: பள்ளி மைதானத்தில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த 5ஆம் வகுப்பு மாணவி

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மைதானத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மாணவியின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமி எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்று அந்த ஊர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

'மாணவியின் உடல் இருந்த இடத்தில் புற்கள் எதுவும் கருகவில்லை. பாலியல் வன்கொடுமையால் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்' என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலின் கீழ் உள்ள மலைப்பகுதியில் பாச்சலூர் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தோட்ட தொழிலாளிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூவரும் பாச்சலூரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தனர். இந்தப் பள்ளியில் 110 மாணவர்களே படித்து வருகின்றனர். இவர்களுக்கு வகுப்பெடுப்பதற்கு பத்து ஆசிரியர்கள் உள்ளனர்.

இதில் இரண்டாவது மகள், அந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை குழந்தைகள் மூவரும் பள்ளிக்குச் சென்றுள்ளனர். பள்ளி இடைவேளையின்போது சம்பந்தப்பட்ட மாணவி வெளியே வந்துள்ளார். சுமார் 2 மணிநேரமாக வகுப்பறைக்கு மாணவி திரும்பி வராததை ஆசிரியர்களும் கவனிக்கவில்லை.

இந்நிலையில், பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் உடல் எரிந்த நிலையில் மாணவியின் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள், தாண்டிக்குடி காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சீனிவாசன் விசாரணையை மேற்கொண்டார். அதேநேரம், மாணவியின் இறப்பில் மர்மம் உள்ளதாகக் கூறி பாச்சலூர் சாலையில் மாணவியின் பெற்றோர், உறவினர் உள்பட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

`மாணவி எரித்துக் கொல்லப்பட்டாரா?' என்ற நோக்கில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக, பள்ளித் தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்களிடம் தாண்டிக்குடி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

பள்ளி மைதானத்தில் எரிந்த நிலையில் கிடந்த 5ஆம் வகுப்பு மாணவியின் உடல்

பட மூலாதாரம், Getty Images

மாணவியின் உடல் வைக்கப்பட்டிருந்த திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாணவியின் பெற்றோர் உள்பட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் குவிந்தனர். அப்பகுதியில் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்ற சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து குடும்பம் வசிக்கும் அதே பகுதியில் உள்ள அப்பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகியும், மாணவியின் குடும்ப நன்பருமான திம்மையாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``மாணவியின் உடலை வேறு எங்கோ எரித்துக் கொன்றுவிட்டு மைதானத்தில் கொண்டு வந்து போட்டுள்ளதாகத் தெரிகிறது. காரணம், அந்த இடத்தில் புற்கள் எதுவும் கருகவில்லை. இது திட்டமிட்டு நடந்த சம்பவமாகத் தெரியவில்லை. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போய் மாணவியின் உடலை எரித்திருக்கலாம் எனக் கருதுகிறோம். குழந்தையின் கால் முட்டிக்குக்கீழ் எரியவில்லை. இது பாலியல் வன்கொடுமையாக இருக்கலாம் என மாணவியின் உடலைப் பார்த்த பெண்கள் கூறுகின்றனர்'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` மாணவி இறந்ததை அறிந்து சம்பவ இடத்தில் இருந்த ஆசிரியர்களில் சிலர் தப்பியோடிவிட்டனர்.மாணவி இறப்பில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்'' என்கிறார் திம்மையா.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சீனிவாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தற்போது பிரேதப் பரிசோதனை நடந்தபின் மரணத்துக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்'' என்று மட்டும் பதில் அளித்தார்.

உடற்கூறாய்வுக்குப் பிறகு இன்று மதியம் உயிரிழந்த மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :