பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக 19 வயது பெண் அளித்த போலி புகார்: கண்டுபிடிக்க அலை மோதிய 1000 போலீசார்

பாலியல் வல்லுறவு
படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்

தனது காதலரை மணக்கும் நோக்கத்தில், தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நாக்பூரைச் சேர்ந்த 19 வயதான பெண் ஒருவர் போலியாக புகார் அளித்துள்ளார் என்கிறது பிடிஐ செய்தி முகமை.

இந்தப் புகாரால் நாக்பூர் காவல் ஆணையர் அமிதேஷ் குமார் உட்பட காவலர்கள் 1000 பேர் இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் போலி புகார் அளிப்பதன் மூலம் அப்பெண் தமது காதலரை மணக்க எப்படி திட்டமிட்டிருந்தார் என்ற தகவலை காவல்துறை முழுவதுமாக வெளியிடவில்லை.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள கலாம்னா காவல் நிலையத்தில் நேற்று பகல் 11 மணியளவில், அப்பெண் இப்புகாரை அளித்துள்ளார்.

இதனையடுத்து, அங்குள்ள 250 சிசிடிவிகளின் காட்சிப்பதிவுகளை சரிபார்த்த பிறகு, அப்பெண் தான் கூட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டதாகப் போலியாகப் புகார் அளித்துள்ளார் என்று விசாரணை அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர்.

அதன் பிறகு நடந்த விசாரணையில், அப்பெண் தனது காதலரை மணக்க இவ்வாறு செய்ததாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார் என்று மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார். ஆனால், அப்பெண்ணின் முக்கிய நோக்கம் என்ன என்பது பற்றி அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

முன்னதாக, நாக்பூரிலுள்ள சிகாலி பகுதிக்கு அருகே தன்னை இருவர் கூட்டுப் பாலியல் வன்முறை செய்ததாக அவர் புகார் அளித்திருந்தார்.

ஒரு வெள்ளை நிற வேனில் வந்த இருவர் தான் காலை இசை பயிற்சி வகுப்புக்கு சென்றுக்கொண்டிருந்த வழியில், தன்னிடம் வழி கேட்டனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு, அவரை வலுக்கட்டாயமாக அந்த வேனுக்குள் இழுத்து, தன் முகத்தை துணியால் மூடினர் என்று தெரிவித்திருக்கிறார். பின், அவரை ஒதுக்கப்பட்ட பகுதிக்கு அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்திருந்தார் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

19 வயது பெண் அளித்த போலி புகார்: கண்டுபிடிக்க அலை மோதிய 1000 போலீசார்
படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்

இந்த சம்பவத்தின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு, காவல்துறை உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சீதாபுல்தி காவல் நிலையத்திற்கு காவல் ஆணையர் அமிதேஷ் குமார், கூடுதல் காவல் ஆணையர் சுனில் புளரி மற்றும் பல மூத்த அதிகாரிகள் விரைந்தனர்.

கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கொண்ட காவலர்கள் அடங்கிய 40 சிறப்பு படைகளை உருவாக்கி, நகரம் முழுவதும் உள்ள வேன்கள், சிசிடிவி காட்சி பதிவுகள் மற்றும் அப்பெண்ணின் நண்பர்களிடம் விசாரணை நடத்த ஆணையர் குமார் உத்தரவிட்டார் என்று அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், அப்பெண் மருத்துவ பரிசோதனைக்கு மாயோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று அந்த அதிகாரி கூறினார்.

ஆறு மணி நேரத்துக்கும் மேலாக, 50 பேரை விசாரித்த பின், அப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக உண்மைக்கு மாறான தகவலைச் சொல்லியுள்ளார் என்று காவல்துறை முடிவுக்கு வந்தனர்.

சிசிடிவி காட்சிப்பதிவில், அப்பெண் நாக்பூரில் உள்ள வெரைட்டி ஸ்கோயர் பகுதியில் காலை 9:50 மணியளவில் பேருந்திலிருந்து இறங்கியுள்ளர். பின், ஜான்சி ராணி ஸ்கோயரில் காலை 10 மணியளவில் நடந்து, ஆனந்த் டாக்கீஸ் ஸ்கோயரில் காலை 10:15 மணிக்கு ஆட்டோவில் ஏறியுள்ளார். அதன் பிறகு, மாயோ மருத்துவமனையில் 10: 25 மணியளவில் அதிலிருந்து இறங்கியுள்ளார் என்று அதிகாரி தெரிவித்தார்.

அதன் பின்னர், காலை 10: 54 மணியளவில் ஷேர் ஆட்டோவில் ஏறி, சிகாலி ஸ்கோயரில் இறங்கியுள்ளார். அவர் கலாம்னா காவல் நிலையத்திற்கு நடந்துவரும் காட்சி அருகிலுள்ள பெட்ரோல் பம்ப்பின் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களை சேகரித்த பின், அப்பெண் போலி என்று காவல்துறை விசாரித்துள்ளது. அதற்கு, அப்பெண் உண்மையை ஒப்புக்கொண்டு, தன் காதலரை திருமணம் செய்யவே இப்படி செய்ததாக கூறினார் என்று அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: