நீதிபதிகளை சட்டமன்றத்தால் கைதுசெய்ய முடியுமா? உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு தொடர்பான பல வழக்குகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த முக்கியமான வழக்குகள் குறித்த சிறிய தொடரை வாரந்தோறும் புதன்கிழமை வழங்குகிறது பிபிசி தமிழ். அதன் ஒன்பதாம் பாகம் இது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளை கைதுசெய்து, மாநில சட்டமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென சபாநாயகர் உத்தரவிட்டால் என்ன ஆகும்? 1964ல் உத்தர பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் மிகப் பெரிய அரசியல் சாஸன நெருக்கடியையே ஏற்படுத்தியது. பிறகு உச்ச நீதிமன்றம் தலையிட்டு, தீர்ப்பளித்து நிலைமையை சரிசெய்தது. அது எந்த வழக்கு தெரியுமா?
சட்டமியற்றும் அவைகள் பெரிதா, நீதிமன்றங்கள் பெரிதா என்கிற விவாதம் இந்தியாவில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் ஒன்று. பல தருணங்களில் சபாநாயகர்கள் தங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக கருதி முடிவுகளை எடுத்ததும் உண்டு. அம்மாதிரி ஒரு விவகாரம்தான் கேஷவ் சிங் VS உத்தரப்பிரதேச சபாநாயகர் விவகாரம்.
1964ஆம் ஆண்டு. அப்போது உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியலிருந்தது. சுசேதா கிருபளானி முதலமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் கோரக்பூரைச் சேர்ந்த கேஷவ் சிங் என்பவர் சோஷலிஸ்ட் கட்சியில் இருந்துவந்தார்.
அவரும் இன்னும் இரண்டு பேரும் சேர்ந்து ஆளும் கட்சியின் எம்.எல்.ஏவான நர்சிங் நரேன் பாண்டே என்பவர் மீது ஊழல் புகார்களைச் சுமத்தி ஒரு துண்டுப் பிரசுரத்தைத் தயார் செய்தனர். அதை பல்வேறு இடங்களில் விநியோகித்தவர்கள், சட்டப்பேரவை வளாகத்திற்குள்ளும் அதனை விநியோகித்தனர்.
இதையடுத்து நர்சிங் பாண்டே சட்டப்பேரவையில் புகார் செய்தார். தன்னுடைய உரிமை இதனால் மீறப்பட்டதாகவும் சட்டப்பேரவை அவமதிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து இந்த விவகாரம் உரிமைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த உரிமைக் குழு கேஷவ் சிங், ஷ்யாம் நரேன் சிங், ஹப் லால் தூபே, மகாதம் சிங் ஆகிய நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதில் கேஷவ் சிங், ஷ்யாம் நரேன் சிங், ஹப் லால் தூபே ஆகிய மூவரும் அந்த துண்டுப் பிரசுரத்தை தயாரித்ததாகவும் மகாதம் சிங் அதனை சட்டப்பேரவை வாசலில் நின்று விநியோகித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, மகாதம் சிங்கைத் தவிர்த்து மற்ற மூவரும் அவையை அவமதித்துவிட்டதாகவும் அவர்களை கண்டிக்க வேண்டுமென்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவர்கள் சட்டப்பேரவைக்கு அழைக்கப்பட்டார்கள். இதில் ஷ்யாம் நரேன் சிங்கும் ஹப் லால் தூபேவும் 1964 பிப்ரவரி 19ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆஜராகி கண்டனத்தை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், கேஷவ் சிங் ஆஜராகவில்லை. பல முறை வரச்சொல்லியும், ரயில் பயணம் செய்ய தன்னிடம் காசு இல்லையெனக் கூறி வராமல் இருந்துவிட்டார் கேஷவ் சிங்.
இதையடுத்து, மார்ச் 13ஆம் தேதி அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவையின் மார்ஷல் கேஷவ் சிங்கை மார்ச் 14ஆம் தேதி கோரக்பூரில் கைதுசெய்து, சட்டப்பேரவையில் ஆஜர்படுத்தினார்.
சட்டப்பேரவையின் கண்டனத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் விஷயம் முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், அங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்ததோடு, சபாநாயகரை முகம்கொடுத்துப் பார்க்கவும் முடியாது எனச் சொல்லிவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில் அவர் மார்ச் 11ஆம் தேதி எழுதிய கடிதம் ஒன்று சபாநாயகருக்கு வந்தது. அதில், தான் காங்கிரஸ் எம்எல்ஏ மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் துல்லியமானவை என்றும் தனக்கு எதிராக பிடி வாரண்ட் விடுத்ததன் மூலம் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று அந்தக் கடிதத்தில் கேஷவ் சிங் குறிப்பிட்டிருந்தார்.
இதில் ஆளும் தரப்பு கடுமையாக கோபமடைந்தது. முதலமைச்சர் சுசேதா கிருபளானி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். தன்னுடைய கடிதத்தின் மூலம் கேஷவ் சிங் மீண்டும் சட்டப்பேரவையை அவமானப்படுத்தியதால் அவருக்கு ஏழு நாட்கள் சிறை தண்டனை வழங்கப்படவேண்டும் என்றது அந்தத் தீர்மானம். தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, லக்னௌ சிறையில் அடைக்கப்பட்டார் கேஷவ்.
இதையடுத்து தன்னை சிறையில் அடைக்க சட்டமன்றத்திற்கு உரிமையில்லை என்று கூறி மனு ஒன்றை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வில் தாக்கல் செய்தார் கேஷவ் சிங். வழக்கை நீதிபதிகள் நஸீருல்லா பெக் மற்றும் ஜி.டி. ஷெகல் ஆகியோர் விசாரித்தனர்.
கேஷவ் தரப்பில் டி.சாலமன் என்பவர் ஆஜரானார். அரசுத் தரப்பில் கே.என். கபூர் என்பவர் ஆஜராவதாக இருந்தது. ஆனால், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. ஆகவே, கேஷவ் சிங்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்ற விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டுமென்று மட்டும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், உத்தரப்பிரதேச சபாநாயகர் இதனை ஏற்கவில்லை. சபையின் அதிகாரத்தில் நீதிமன்றம் குறுக்கிட்டதாகக் கருதினார். கேஷவ் சிங், டி. சாலமன், நீதிபதிகள் நஸீருல்லா, ஜி.டி. ஷெகல் ஆகியோர் அவையின் உரிமையை மீறிவிட்டதாகக் கருதினார்.
இதையடுத்து கேஷவ் சிங்கை மீண்டும் சிறையில் அடைக்கவும் பிறகு அவைக்கு அழைத்து அவர் தாக்கல் செய்த மனு குறித்து கேள்வி எழுப்பவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கேஷவ் தரப்பு வழக்கறிஞர் சாலமன், இரண்டு நீதிபதிகளையும் கைதுசெய்து அழைத்துவந்து, அவர்கள் செயலுக்கான காரணத்தைக் கேட்கவும் அந்தத் தீர்மானம் முடிவுசெய்திருந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் இருவரும் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில் அரசியலமைப்புச் சட்டத்தின் 211வது பிரிவின்படி பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கக்கூடாது; ஆகவே சட்டப்பேரவையின் தீர்மானத்தை செயல்படுத்தக்கூடாது என அந்த மனுவில் கோரினர்.
இந்த மனுவை அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் மொத்தமாக அமர்ந்து விசாரித்தனர். சாலமனும் இதேபோல மனுவைத் தாக்கல் செய்தார் அவரது மனுவும் ஏற்கப்பட்டது. கேஷவ் இதேபோல மனுவைத் தாக்கல் செய்த போதும் அது ஏற்கப்படவில்லை. சட்டமன்றத்தின் தீர்மானத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இது ஒரு மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்த நிலையில், நீதிபதியும் வழக்குரைஞரும் கைதுசெய்யப்பட மாட்டார்கள்; ஆனால், சட்டப்பேரவைக்கு வந்து விளக்கமளித்தால் போதும் என்று கூறியது சட்டமன்றம்.
அப்போது பிரதமராக இருந்த நேருவின் கவனத்திற்கு இந்த விவகாரம் வந்தது. இதையடுத்து குடியரசுத் தலைவரின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்க முடிவுசெய்தது மத்திய அரசு. உயர் நீதிமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு இடையிலான உறவு எத்தகையது, அதிகார வரம்பு எத்தகையது என்பது குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கும்படி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 143 (1)ன் கீழ் குடியரசுத் தலைவர் கோரினார்.
இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் பதிலளிக்க வேண்டியிருந்தது. நீதியரசர் கஜேந்திரகட்கர் தலைமையில் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதை விசாரித்தது. எல்லா உயர் நீதிமன்றங்களும் சட்டப்பேரவைகளும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முடிவில், உயர் நீதிமன்ற நீதிபதிகளை சட்டமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியது. கேஷவ் சிங்கின் வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, ஜாமீன் வழங்கியது சரி என்றும் கூறியது. இதன் மூலம் நீதிபதிகளோ, வழக்கறிஞரோ எந்த உரிமை மீறலையும் செய்யவில்லையெனக் கூறியது உச்ச நீதிமன்றம். நீதிபதி சர்க்கார் மட்டும் இந்தக் கருத்திலிருந்து மாறுபட்டார். பலர் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை விமர்சித்தார்கள். நாடாளுமன்றமும் சட்டமன்றமும் இந்தத் தீர்ப்பின் மூலம் சிறுமைப்படுத்தப்பட்டதாகக் கூறனார்கள்.
கேஷவ் சிங்கிற்கு என்ன ஆனது?
இதற்குப் பிறகு கேஷவ் சிங்கின் வழக்கை தொடர்ந்து விசாரித்த நீதிமன்றம், அவர் சட்டமன்றத்தால் உரிமை மீறலுக்காக தண்டிக்கப்பட்டது சரி எனக் கூறியது. அவர் மீதமுள்ள ஒரு நாள் தண்டனையை அனுபவிக்க மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
பிற செய்திகள்:
- ஐபோன் ஹேக்கிங் சர்ச்சை: இஸ்ரேலிய நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆப்பிள் நிறுவனம்
- தமிழ்நாட்டில் 'கட்டாய' கொரோனா தடுப்பூசியில் இருந்து விலக்கு பெற முடியுமா?
- ஆறு வழிகளில் உலகை மாற்ற முயற்சிக்கும் சிறு செயற்கைக்கோள்கள்
- திரிபுரா வன்முறைக்கு உண்மையில் என்ன காரணம்? களத்தில் பிபிசி - சிறப்புச் செய்தி
- விண்கல்லில் மோதி உலகைக் காக்கப் போகும் விண்கலம்
- தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வுக்குக் காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












