தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

தக்காளி
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் சில்லறை விலையில் தக்காளி கிலோ 140 ரூபாயைத் தொட்டிருக்கிறது. மழை, வரத்துக் குறைவு என பல காரணங்களைச் சொல்கிறார்கள் வியாபாரிகள். எப்போது விலை குறையும்?

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவங்கிய காலத்தில் சில்லறை விற்பனைக் கடைகளில் 20 முதல் 25 ரூபாய்க்கும் சிறு சந்தைகளில் 10 ரூபாய்க்கும் தக்காளி விற்பனையாகிவந்தது. ஆனால், மழைக் காலம் துவங்கியதும் தக்காளியின் விலை மெல்ல மெல்ல அதிகரிக்கத் துவங்கி, தற்போது கோயம்பேடு மொத்த விற்பனைக் கடைகளிலேயே கிலோ 100 ரூபாய்க்கு விற்கத் துவங்கியுள்ளது. இதனால், சில்லறை விற்பனைக் கடைகளில் 140 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை தக்காளி விற்பனையாகிறது.

இதற்கு என்ன காரணம்?

"கோயம்பேட்டிற்கு பொதுவாக ஒரு நாளைக்கு 80 லாரி தக்காளி வரும். ஆனால், இப்போது 30 லாரிகளே வருகின்றன. இதனால் மொத்த விற்பனைக் கடைகளிலேயே 100 ரூபாய் முதல் 110 ரூபாய்வரை தக்காளி விற்பனையாகிறது. நேற்றும் இன்றும் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தக்காளி லாரிகள் வர ஆரம்பித்திருக்கின்றன. மகாராஷ்டிராவிலிருந்து வரத்து தொடர்ந்தால் விலை குறைய வாய்ப்பிருக்கும் இல்லாவிட்டால் இதே விலை நீடிக்கும்" என்கிறார் சென்னை கோயம்பேட்டில் உள்ள பெரியார் காய்கறி கனி மலர் அங்காடி வியாபாரிகள் சங்கத் தலைவரான தியாகராஜன்.

தக்காளி மட்டுமல்லாமல் உருளைக்கிழங்கு, பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகளின் விலையும் பெருமளவில் உயர்ந்துள்ளது. அவரைக்காய் 100 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. கத்திரிக்காயின் விலை 50 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை 30 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. உருளைக்கிழங்கின் விலை 25 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக விற்கிறது. இஞ்சி மட்டும்தான் விலை மிகவும் குறைந்து கிலோ 30 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

சுமார் ஒரு கோடி மக்கள் தொகையைக் கொண்ட சென்னை பெருநகரப் பகுதி, புறநகர் பகுதிகள் உட்பட சுமார் 100 கி.மீ. சுற்றளவுக்கு கோயம்பேட்டிலிருந்துதான் காய்கறிகள் செல்கின்றன. விவசாயிகள் நேரடியாக காய்கறிகளைக் கொண்டுவந்து விற்பதும் உண்டு. விவசாயிகளிடம் காய்கறிகளை வியாபாரிகள் வாங்கி விற்பதும் உண்டு.

"ஆனால், தக்காளியை விற்பனை செய்யும் மொத்த விற்பனைக் கடைகளிலேயே பாதிக் கடைகளுக்கு சரக்கு கிடைப்பதில்லை. 40 கடைகள் இருக்கிறதென்றால் 20 கடைகளுக்குத்தான் தக்காளி கிடைக்கிறது" என்கிறார் தியாகராஜன்.

தமிழ்நாட்டில் திருப்பத்தூர், வாணியம்பாடி, மாதனூர், தேனி, வத்தலகுண்டு, ஆண்டிப்பட்டி, தர்மபுரி, காளிக்கவுண்டனூர் போன்ற ஊர்களில் தக்காளி பயிரிடப்படுவதுண்டு என்றாலும் அங்கிருந்து சென்னைக்கு தக்காளி வருவதில்லை. சென்னையைப் பொறுத்தவரை ஆந்திரப்பிரதேசம், கா்நாடக ஆகிய மாநிலங்களில் இருந்துதான் 90 சதவீத தக்காளி வருகிறது. மீதமுள்ள 10 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், ராயக்கோட்டை பகுதிகளில் இருந்து வந்து சேர்கிறது.

காய்கறி

பட மூலாதாரம், AFP

இந்த விலை உயர்வு எப்போதுவரை நீடிக்கும்? "அதைச் சொல்ல முடியாது. தக்காளி வரத்து அதிகரித்தால் விலை குறையும். ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் சில லாரிகளை அனுப்பினால் சட்டென விலை குறையும். இல்லாவிட்டால் இதே விலை நீடிக்கும். மாறாக, லாரிகள் வரத்து குறைந்தால் இன்னும் விலை அதிகரிக்கும்" என்கிறார் தியாகராஜன்.

இந்த விலை உயர்வைப் பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் தாக்காளியைப் பதுக்க முடியுமா? "அது சாத்தியமே இல்லை. காலையில் 2 மணிக்கு வரவேண்டிய லாரி ஐந்து மணிக்கு வந்தாலே 50 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரமாகிவிடும். இன்னும் லேட்டாக வந்தால் அவ்வளவுதான். ஒரு நாளில் அழுகிவிடும் காய்கறிகளை எப்படி சேமித்து வைக்க முடியும்? இங்கே உள்ள சில்லரை விற்பனைக் கடைகள் 200 - 300 சதுர அடியில் செயல்படுகின்றன. மொத்த வியாபாரிகள் 600 சதுர அடி உள்ள கடைகளில் இருக்கிறார்கள். அன்றன்றைக்கு வரும் காய்கறிகளை வைத்து விற்பனை செய்யவே இந்த இடம் பத்தாது. இதில் எப்படி அடுத்த நாள் விற்க முடியும்? தவிர, அடுத்த நாள் கூடுதலாக லாரிகள் வந்து, விலை குறைந்துவிட்டால் என்ன ஆகும்? ஆகவே பதுக்கலுக்கு வாய்ப்பே இல்லை" என்கிறார் தியாகராஜன்.

இதற்கிடையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை வேளாண் துறை துவங்கியுள்ளதாக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :