குழந்தை வளர்ப்பு மன அழுத்தம் தருகிறதா? பரிணாமவியல் சொல்வது என்ன?

குழந்தை வளர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

எறும்புகளும் கீரிப்பூனைகளும் நமக்கு குழந்தை வளர்ப்பு குறித்துக் கற்றுத்தருவது என்ன? தொன்மையான சமூக உள்ளுணர்வுகள் இன்றும் நம் குடும்பங்களை எப்படி வடிவமைக்கிறது என்பதைப் பற்றி வெளிக்கொண்டு வந்துள்ளார், பரிணாமவியல் உயிரியலாளர் நிகோலா ரைஹானி.

என்னுடைய குழந்தைகளிடமிருந்து போராடி ரிமோட்டை வாங்கிக்கொண்டு, சோபாவில் சாய்ந்து, வரப்போவதை எதிர்கொள்ளத் தயாரானேன். இது மார்ச் 2020-ல் நடந்தது. ஆபத்தான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க வேகமாக உயர்ந்துகொண்டிருந்தது. ஊரடங்கு குறித்து பிரதமர் அறிவிக்க இருந்த நேரம். பள்ளிகளும் நர்சரிகளும் மூடப்பட இருந்தன. மற்ற லட்சக்கணக்கான பெற்றோர்களைப் போலவே, என்னுடைய இளம் குழந்தைகளுக்கு ஒரு நடைமுறை ஆசிரியராக நான் மாறவேண்டியிருந்தது. அதைப் பற்றிச் சிந்தித்தபோதே எனக்குள் அச்சம் தொற்றிக்கொண்டது.

அப்படி உணர்ந்தது நான் மட்டுமல்ல. பெற்றோருக்கான பள்ளி வாட்ஸ் அப் குழுவில் வந்து கொட்டிய குறுஞ்செய்திகளின் எண்ணிக்கையால் என்னுடைய மொபைல் தொடர்ந்து சலசலத்துக் கொண்டிருந்தது. அதில், தங்கள் அன்றாட வேலைகளைச் செய்வதோடு, எப்படி வினையுரிச் சொற்கள் போன்ற பாடங்களையும் கருத்தில் எடுத்துக் கவனிப்பது என்று தங்கள் குழப்பத்தை பெற்றோர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அடுத்து வந்த மாதங்களில், பல பெற்றோர்கள் அவர்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியம் இதனால் பாதிக்கப்படுவதாக உணர்ந்தார்கள். ஊரடங்கு மற்றும் பள்ளிகள் மூடியிருப்பது தொடரவே, பெற்றோர்களுடைய மன அழுத்தம், மனச்சோர்வு, ஆகியவையும் கவலையளிக்கும் வகையில் அதிகரித்தது. இது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறதென்று பலரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டனர்.

வெளியுலக உதவியின்றி, நம் குழந்தைகளை நாமே வளர்ப்பதில் இயற்கையாகவே நமக்குத் திறன் இருக்க வேண்டுமல்லவா? கடந்த காலத்தில், பள்ளிகள், பகல்நேர குழந்தை பராமரிப்பு மையங்கள் ஆகியவற்றின் உதவியின்றி பெற்றோர்கள் சமாளிக்கவில்லையா?

ஒரு பரிணாமவியல் உயிரியலாளராக, பெருந்தொற்றுப் பேரிடர்க்கால குடும்பப் பிரச்னைகள் அனைத்திற்கும் என்னிடம் பதில் இல்லை. இருப்பினும் என்னால் ஒன்றை உறுதியாகச் சொல்லமுடியும். ஓர் உயிரினமாக, தனிமையில் குழந்தைகளை வளர்ப்பதைப் பொறுத்தவரை ஆச்சர்யமளிக்கும் வகையில், மனிதர்களுக்குப் போதிய திறன் கிடையாது.

மீர்கட்

பட மூலாதாரம், Getty Images

பரிணாமவியல் பார்வையில், நாம் இவ்வளவு அதிகமாக நெருக்கப்படுவது போல் உணர்வது ஆச்சர்யமில்லை. இன்றைய நவீன குடும்ப வாழ்க்கை, சிறியதாகவும் சுதந்திரமானதாகவும் இருந்தாலும்கூட, நடைமுறையில் குழந்தைகளை வளர்ப்பதில் நாம் மற்றவர்களின் உதவியின் மூலம் பல நன்மைகளைப் பெறமுடியும். மனித வரலாறு நெடுக, விரிவுபட்டிருந்த குடும்பங்கள் அந்த உதவியைச் செய்தன. குறுகிய குடும்பங்களே அதிகமாக இருக்கும் சமகால தொழில்மயமாகிவிட்ட சமூகங்களில், ஆசிரியர்கள், குழந்தை பராமரிப்பாளர்கள், குழந்தை பராமரிப்பு மையங்கள் அக்கறை கொண்ட நண்பர்கள், உறவினர்கள் போன்றோர் முந்தைய தொன்மையான குடும்ப அமைப்பில் கிடைத்த உதவிகளைச் செய்கிறார்கள்.

குழந்தை வளர்ப்பிலுள்ள இந்த கூட்டுப் பங்களிப்பு, நம்மை ஓராங்குத்தான் போன்ற மனிதக் குரங்குகளிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது. இந்த முறை "கூட்டுறவு வளர்ப்பு" என்றழைக்கப்படுகிறது. இது, தோற்றத்தில் நம்மிடமிருந்து பெரிதும் வேறுபட்டுள்ள எறும்புகள், தேனீக்கள் மற்றும் கீரிப்பூனைகள் ஆகியவற்றுடைய வாழ்க்கைமுறையோடு ஒத்ததாக உள்ளது. மேலும், இது நமக்கு முக்கியமான பரிணாம நன்மைகளைத் தந்துள்ளது.

கூட்டுறவு குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் உயிரினங்கள், பெரிய குழுக்களாக வாழ்கின்றன. அந்த அமைப்பில், பல்வேறு தனிநபர்கள் ஒன்றிணைந்து தம் குழந்தைகளை வளர்க்கிறார்கள். ஆச்சர்யப்படும் விதமாக, சிம்பன்சி போன்ற குரங்குகளிடையே இத்தகைய வளர்ப்பு முறை இல்லை. மனிதர்கள், சிம்பன்சிகள் ஆகிய இரண்டு உயிரினங்களுமே உறவினர்கள் மற்றும் உறவினர் அல்லாதவர்களை உள்ளடக்கிய, கூட்டுச் சமூகமாக வாழ்ந்தாலும், இரண்டையுமே நெருக்கமாக ஆய்வு செய்தது சில தெளிவான வேறுபாடுகளை வெளிக்கொண்டுள்ளது.

சிம்பன்சி தாய்மார்கள் தம் குட்டிகளைத் தனியாக வளர்க்கிறார்கள். மிகச் சிறிய உதவியையோ அல்லது யாருடைய உதவியும் இல்லாமலேயோ தான், அவை தம் குட்டிகளை வளர்க்கின்றன. அவ்வளவு ஏன், இதில் தந்தையின் உதவிகூடக் கிடையாது. ஓராங்குத்தான், போனோபோ ஆகிய மற்ற மனிதக்குரங்கு இனங்களிலும் இதே நிலைமைதான். மேலும், பெண் குரங்குகளின் உடலில் மாதவிடாய் நிறுத்தம் நிகழ்வதில்லை. அவை, வாழ்நாள் முழுவதுமே குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனோடு வாழ்கின்றன. இதன்விளைவாக, தாயும் மகளும் தத்தம் குட்டிகளை ஒரேநேரத்தில் வளர்ப்பது அவற்றிடையே மிகச் சாதாரணமாக நிகழும். தன்னுடைய குட்டிகளைப் பராமரிக்கவே நேரம் சரியாக இருப்பதால், தன் பேரப்பிள்ளைகளை வளர்ப்பதில் மகளுக்கு உதவ தாய்க்கு நேரம் கிடைப்பதில்லை.

நாம் முற்றிலும் இதிலிருந்து வேறுபட்டுள்ளோம். பூமியில் வாழ்ந்த பெரும்பாலான காலகட்டத்தில், மனிதர்கள் விரிவுபடுத்தப்பட்ட குடும்ப அமைப்புகளாகவே வாழ்ந்துள்ளோம். அதில், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடமிருந்து தாய்மார்களுக்கு உதவி கிடைக்கும். சமகால மனித சமுதாயத்திலும்கூட, இதுதான் நிலைமை. நம்மிடையே தந்தைவழி பங்களிப்பு பல்வேறு சமூகங்களில் வேறுபட்டாலும்கூட, குழந்தைகளை வளர்ப்பதில் தந்தைளும் ஈடுபடுகிறார்கள். மேலும், பல்வெறு உறவினர்கள், மூத்த சகோதரர்கள், மாமாக்கள், அத்தைகள், தாத்தா, பாட்டி என்று பலதரப்பட்டவர்களின் பங்களிப்பும் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. இளம் குழந்தைகளே கூட, அவர்களைவிடச் சிறிய குழந்தையை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறார்கள். இத்தகைய அமைப்பில் இருக்கும்போது, குழந்தைகளை முழுக்க ஒருவரே பராமரிக்கும் நிலை அரிதாகவே ஏற்படுகிறது.

தேனி

பட மூலாதாரம், Getty Images

ஆபி பேஜ் என்ற ஓர் உயிரியல் மானுடவியலாளர், பிலிப்பைன்ஸ் நாட்டில் வாழும் அக்டா என்ற வேட்டைச் சமூகத்தின் மத்தியில் ஆய்வு செய்தவர். மனிதர்களிடையே உள்ள இத்தகைய பாரம்பர்யத் தொடர்புகளை நாம் இப்போதுதான் முழுமையாகப் புரிந்துகொள்ளவே தொடங்கியுள்ளோம் என்று அவர் கூறுகிறார். உதாரணமாக, அக்டா இன மக்களிடையே, குழந்தைகள் நான்கு வயதை அடைந்ததிலிருந்தே தங்களுடைய பங்களிப்பை குடும்பத்திற்காகச் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

"குழந்தைகளுடைய பங்களிப்பு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை" என்று கூறுகிறார் பேஜ். கடந்த காலத்தில், எது வேலை, எது விளையாட்டு, என்பன பற்றிய விளக்கம் கடுமையாக வரையறுக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக, ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில், அப்படியே புதரிலிருந்து பழங்களைப் பறிப்பதை ஆய்வாளர்கள் கவனிக்கவில்லை. அவர், "வேட்டையாடுவது மற்றும் பொருள் சேகரிப்பதில் ஈடுபட்டிருந்த சமுதாய முறையில், குழந்தைகள் நிச்சயம் தங்கள் பங்களிப்பைச் செய்துக்கொண்டிருந்தார்கள்" என்று கூறுகிறார்.

அக்டா இனத்தைச் சேர்ந்த குழந்தைகள், தங்களுடைய இளம் சகோதரர்களை ஆபத்திலிருந்து பாதுகாப்பதன் மூலம் தம் பங்களிப்பைச் செய்கிறார்கள். அங்கிருந்த ஒரு அக்டா குடும்பத்தின் குடிசையில் நான்கு வயது சிறுவன் மற்றும் சிறு குழந்தையான அவனுடைய தங்கையோடு அமர்ந்திருந்தபோது, நிகழ்ந்ததை பேஜ் நினைவு கூறினார்.

அவர்கள் மூவரும் தரையில் அமர்ந்திருந்தபோது ஒரு தேள் குடிசைக்குள் நுழைந்தது. அந்தநேரத்தில் அவருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிவிட்டார். "நான் கொஞ்சம்கூட உதவிகரமாக இருக்கவில்லை. ஆனால், நல்லவேளையாக சிறுவனுக்கு என்ன செய்யவேண்டுமென்று தெரிந்திருந்தது. உடனடியாக குதித்தெழுந்து, நெருப்பிலிருந்த ஒரு குச்சியை எடுத்து, தேளை அடித்ததோடு, அதன்மீது சிலமுறை ஏறி மிதித்தான். இதுவொரு சிறிய செயல்தான், இருப்பினும் அந்தச் செயல் அவனுடைய தங்கையைக் காப்பாற்றிவிட்டது."

அர்த்தமுள்ள குழந்தைப் பராமரிப்பு என்பதன் விளக்கத்தைப் புரிந்துகொள்ள இந்த அனுபவம் உதவியது. மேற்கே, குழந்தை பராமரிப்பு என்றால், வயது வந்த பொறுப்புணர்வு மிக்க ஒருவர், பெரும்பாலும் பெற்றோர், குழந்தையைப் பார்த்துக்கொள்வதோடு, தொடர்ந்து தீவிர ஈடுபாடு மற்றும் தூண்டுதலை வழங்குவது என்று கருதப்படுகிறது. வேலைப்பளு போன்ற காரணங்களால் பெற்றோர் அதைச் செய்யத் தவறும் சூழலில், தாம் போதாமையில் இருப்பதாக நினைத்து அவர்கள் குற்றவுணர்வு கொள்கிறார்கள். ஆனால், பேஜ் மேற்கொண்ட ஆய்வு, பெற்றோருடைய தீவிர கவனம் மட்டுமின்றி, இன்னும் பல வழிகளில் குழந்தைகளைப் பராமரித்து, செழிப்பாக வளர்க்கமுடியும் என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது.

குரங்கு

பட மூலாதாரம், Getty Images

உண்மையில், உடன்பிறந்த மூத்தவர்கள் தங்களுடைய இளைய உடன்பிறப்புகளை வளர்க்க உதவுவது, கூட்டுறவு வளர்ப்பு முறையின் ஒரு குறிப்பிடத்தக்கப் பண்பாக வரையறுக்கப்படுகிறது. கீரிப்பூனைகள் உணவு தேடிக் கொண்டுவரும்போது, அதை இளைய உடன்பிறப்புகளோடு பகிர்ந்துகொள்கின்றன மற்றும் தம் வளையிலுள்ள இளம் குட்டிகளையும் பராமரிக்கின்றன. மேலும், ஆபத்தான இரைகளை எப்படிப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும் என்பதையும் தம் வளையிலுள்ள குட்டிகளுக்குக் கற்றுக்கொடுக்கின்றன. தன் தங்கையை தேளிடமிருந்து காப்பாற்றிய சிறுவனைப் போலவே, குட்டிகளை ஆபத்துகளில் இருந்து மற்றும் வேட்டையாடும் உயிரினங்களிடம் இருந்து பாதுகாப்பது இவற்றின் குழந்தைப் பராமரிப்பு வழிமுறைகளில் முக்கியமான ஓர் அம்சமாக இருக்கிறது.

தனிமைப்பட்டு குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் முறையைவிட, கூட்டுறவு குழந்தை வளர்ப்பு முறை ஒரு முக்கியமான நன்மையைக் கொண்டுள்ளது: இது ஓர் இனத்தை மேலும் நெகிழ்திறன் உடையதாகவும் இன்னல்களை எதிர்கொள்ளும் திறனோடும் உருவாக்கும்.

பூமியின் வெப்பம் மிகுந்த, வறட்சியான பகுதிகளில்தான் கூட்டுறவு இனப்பெருக்க முறையைப் பின்பற்றும் உயிரினங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் மனிதர்களும் உணவு கிடைக்கச் சிரமமாக இருந்த கடுமையான நிலப்பரப்புகளில், உணவைச் சேகரிப்பது, வேட்டையாடுவது போன்ற கடுமையான வேலைகளில் ஈடுபட்டே வாழ்ந்தனர். இந்தச் சூழலில், ஒன்றிணைந்து செயல்படுவது உயிர் பிழைத்திருக்கத் தேவையானதாக இருந்தது.

மனிதக் குரங்குகள், பெரியளவிலான அபாயங்கள் இல்லாத, நிலையான சூழலில்தான் வாழ்ந்தன. அவற்றுக்குத் தேவையான உணவு நிலையாகக் கிடைக்கும் இடமாகவே அவை குடியேறின. ஆகவே, அங்கு உயிர் பிழைத்திருப்பதற்கான கூட்டுறவு முறை தேவைப்படவில்லை. மனிதர்கள் உயிர்பிழைத்திருந்த மேற்கூறிய கடுமையான சூழலியல் அமைப்புகளில், மனிதக் குரங்குகளின் தொல்லெச்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இவற்றுக்கு முரணாக, இவ்வளவு காலம் உயிர் வாழவும் செழிக்கவும் நம்மை அனுமதித்த இந்தக் கூட்டுறவுப் போக்கு, உளவியல் மற்றும் நடைமுறைக் கண்ணோட்டத்தில் இப்போதைய நெருக்கடியை மேலும் கடினமானதாக மாற்றியிருக்கலாம். தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, பள்ளி, நர்சரி, விளையாட்டுக் குழுக்கள் போன்ற அனைத்துமே நம்முடைய தொன்மையான மனிதக் குழு அமைப்புகளைப் பிரதிபலிக்க உதவின. ஊரடங்கின்போது, நமக்கு உதவியாக இருந்த இத்தகைய அனைத்து தொடர்புகளிலிருந்தும் நாம் துண்டிக்கப்பட்டோம்.

அதுமட்டுமின்றி, இது ஓர் உள்ளுணர்வாகச் செய்யப்படுவது போல், நாம் நம்முடைய சிறு குடும்ப அலகுகளுக்குள் திரும்புவோம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. நம்மில் பலருக்கும் இது சாத்தியமற்ற ஒன்றாகத் தோன்றியதோடு, ஏன் அப்படித் தோன்றியது என்பதற்குரிய உண்மையான விளக்கமும் இல்லை.

எறுப்பு

பட மூலாதாரம், Getty Images

அனைத்திற்கும் மேலாக, குடும்பம் பற்றிய நமது மேற்கத்திய கருத்து தாய்வழி கவனிப்பிற்கு மிகவும் முதன்மைத்துவம் கொடுக்கிறது. அதோடு பிற குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பின் மீதான முக்கியத்துவம் மிகக் குறைவாக உள்ளது. தாய் மற்றும் தந்தை அல்லது தாய் மட்டுமே பராமரிப்பாளராக இருப்பது போதுமானது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் ட்ராபிகல் மெடிசினை சேர்ந்த பரிணாமவியல் மக்கள்தொகை பேராசிரியரான ரெபேக்கா சியர் கருத்துப்படி, தன்னிறைவு பெற்ற தனிக்குடும்பம் பற்றிய இந்தச் சிந்தனை வரலாற்று எதார்த்தத்தைவிட மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களின் அனுபவங்களையும் உலகக் கண்ணோட்டஙக்ளியும் பிரதிபலிக்கிறது. குடும்பத்திற்கு உணவு வழங்கும் ஓர் ஆணிடமிருந்து தொடங்கிய இந்த தனிக்குடும்பம் குறித்த சிந்தனை, போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் வேரூன்றியது, "கல்வித்துறை பணக்காரர்கள், வெள்ளையர்கள், மேற்கத்திய மனிதர்களால் நிரம்பியிருந்தது. அவர்கள் தங்கள் சொந்த குடும்பங்களையே திரும்பிப் பார்த்துக்கொண்டு, அப்படித்தான் எப்போதுமே இருந்தது என்று நினைத்துக்கொண்டார்கள்" என்று சியர் கூறுகிறார்.

"தனிக்குடும்பம்" என்ற வரையறை 1920-களில் தான் வளரத் தொடங்கியது. பெற்றோர்களை மையமாகக் கொண்டு, குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள், என்று அந்தக் குடும்ப அமைப்பு இருந்தது. இது, தொழிற்புரட்சியோடு தொடர்பு கொண்டிருந்தது. விவசாயத்திலிருந்து உற்பத்திக்கு மாறத் தொடங்கியபிறகு, அதிகளவில் தனிப்பட்ட முறையிலான சுதந்திர வாழ்க்கைமுறை வளரத் தொடங்கியது. இதற்கு ஒரு மாற்று விளக்கம் என்னவெனில், இடைக்காலத்தில் மேற்கத்திய திருச்சபையின் கொள்கைகள், உறவினர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களிடையே திருமணங்களைத் தடை செய்தது.

இதனால், குடும்ப அளவு சுருங்கத் தொடங்கியது. ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் மேற்கத்திய ஆய்வு, எண்ணற்ற புனைவுகள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உட்பட பிரபலமான கலாச்சாரத்தில் தனிப்பட்ட குடும்பம் என்ற கருத்து எங்கும் நிறைந்திருந்தது. இருந்தாலும், மேற்கு நாடுகளில்கூட அது உண்மையில் முரண்பாடானது என்று சியர் விளக்குகிறார்.

"பெற்றோர் மற்றும் குழந்தைகளின் கூட்டுக் குடியிருப்பு உலகம் முழுவதுமே ஒப்பீட்டளவில் அரிது" என்கிறார் சியர். மேலும், "உலகளவில் குடும்ப அமைப்புகளில் நிறைய மாறுபாடுகள் உள்ளன. ஆனால் பொதுவாக, சந்ததிகளை வளர்ப்பதில் பெற்றோர்களிடம் உதவி பெறுகிறார்கள். அது மேற்கத்திய நடுத்தர வர்க்கங்களில் கூட உண்மையாக இருக்கிறது."

குரங்கு

பட மூலாதாரம், Getty Images

அவருடைய விளக்கப்படி, மனிதர்களுக்குரிய பொதுவான ஏற்பாடு, தங்கள் குழந்தைகளைத் தனிமையில் வளர்ப்பதல்ல. அதற்கு மாறாக, குழந்தைகளை வளர்ப்பதில் நமக்கு உதவி தேவைப்படுகிறது மற்றும் அந்த உதவியைப் பெறுகிறோம். வரலாற்று மற்றும் சமகால சமூகங்களில், பெண்கள் தங்கள் குடும்பங்களுக்காக உற்பத்தி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறார்கள். அவர்களும் குடும்பத்திற்கான உணவைச் சம்பாதிக்கிறார்கள்.

மனித குடும்பத்தைப் பற்றிய இந்த வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்த்திருந்தால், தொற்றுநோய்களின்போது பெற்றோரைப் பற்றிய நம் எதிர்பார்ப்புகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்கள் தான் பாரத்தைச் சுமக்க வேண்டும் என்று கருதுவதற்குப் பதிலாக, மற்ற குடும்ப உறுப்பினர்களும் தங்களுடைய முக்கியப் பங்கை ஒப்புக்கொண்டிருக்கலாம்.

குழந்தைகளை வளர்ப்பதற்கு நாம் ஒருவரையொருவர் எவ்வளவு சார்ந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், நாம் சிரமப்படும்போதும் மற்றவர்கள் சிரமப்படும்போதும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்திருக்கலாம்.

மனிதர்கள் சிம்பன்சிகளைப் போல குழந்தை வளர்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, ஓர் எறும்பை அதன் காலனியிலிருந்து தனிமைப்படுத்துவதைப் போன்றது. நாம் அதற்கானவர்கள் இல்லை. அது பெரும்பாலும் சரியாகப் போவதில்லை.

நமக்கு மற்றவர்களின் உதவி தேவை என்பதை ஒப்புக்கொள்வது தோல்வியின் அடையாளம் அல்ல. அதுதான் நம்மை மனிதராக்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :