தமிழ்நாட்டில் 'கட்டாய' கொரோனா தடுப்பூசியில் இருந்து விலக்கு பெற முடியுமா?

தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. `உடல்நல பாதிப்பில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் விலக்கு கேட்டால், அதற்குரிய வழிகாட்டுதல்களை சுகாதார அலுவலர் தெரிவிப்பார்' என்கிறார் பொது சுகாதாரத்துறை இயக்குநர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது வரையில் இந்தியாவில் 115 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்த்ப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் மான்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றுபட்டு வெல்வோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்துவதில் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டிருந்த சுற்றறிக்கை ஒன்று விவாதப் பொருளானது.

சுகாதாரத்துறையின் சுற்றறிக்கை

அந்த அறிக்கையில், `கோவிட் 19 தொற்று நோயை அரசுக்குத் தெரிவிக்க வேண்டிய நோயாக அரசு அறிவித்துள்ளது. அந்நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் பெருந்தொற்று தடுப்புச் சட்டம் 1897ன்கீழ் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இடைவெளிவிட்டு பொதுமக்கள் நிற்பது, கைகளைக் கழுவுவது, முகக்கவசம் அணிவது போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.

மேலும், பொதுசுகாதாரத்துறை சட்டம் 1939ன்படி தனக்கு நோய் இருப்பதாகக் கருதும் நபர் தன்னிடம் உள்ள தொற்று நோயை பின்வரும் இடங்களுக்கு வருவதன் மூலம் அவற்றை மற்றவர்களுக்குப் பரப்பக் கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், அங்காடிகள், தொழிற்சாலைகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களையும் பட்டியலிட்டுள்ளனர். இந்த இடங்களின் உரிமையாளர்கள், `அங்கே வருகிறவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் வீட்டிலேயே இருக்கலாம்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இந்த சூழலில், `கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோரை தடுப்பூசி செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது' என உமர் பாரூக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் எனவும் அவ்வாறு தடுப்பூசி செலுத்த விரும்பாத ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்' எனவும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, `தீவிர நோய் உள்ளவர்கள், ஒவ்வாமை உள்ள பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருந்து விலக்கு பெற முடியுமா?' என மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்பதும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விலக்கு பெற முடியுமா?

தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

``தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருந்து விலக்கு பெற முடியுமா?'' என சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் இரண்டு விதிவிலக்குகளை அளித்துள்ளது. அதன்படி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு தடுப்பூசியால் பாதிப்பை ஏற்படுத்த முடியும். அடுத்ததாக, ஒவ்வாமை உள்ளவர்கள். இவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்கெனவே தடுப்பூசி போட்டு ஒவ்வாமை வந்திருந்தால் அவர்களுக்கும் விலக்கு அளிக்கலாம்.

இதுதொடர்பாக, `தங்களின் உடல்நலன் தொடர்பாக எதாவது ஒரு அலோபதி மருத்துவரிடம் சான்று பெற்று சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரியிடம் அளிக்கலாம்' எனக் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறு அலோபதி மருத்துவரால் அளிக்கப்பட்ட சான்றுகளை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் மறுக்கவில்லை. வேறு சில அதிகாரிகளோ, மாவட்ட ஆட்சியரையோ அரசு மருத்துவரையோ பார்க்கச் சொல்கின்றனர்'' என்கிறார்.

``தொடக்கத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதில் முன்னுரிமை அளித்தனர். அதிலும் இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை எனக் குறிப்பிட்டனர். பின்னர், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என மக்களுடன் நேரடியாக பணிபுரிகிறவர்களுக்கு தடுப்பூசியை கொண்டு வந்தனர். தற்போது தமிழ்நாட்டில் தடுப்பூசியை கட்டாயமாக்கும் வகையில் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகமே, `என்.ஜி.ஓக்களை பயன்படுத்தி தடுப்பூசி போடுவதை ஊக்குவியுங்கள்' என்றுதான் சொல்கிறது. இங்கு மட்டும்தான் கட்டாயப்படுத்தும் பணிகள் நடக்கின்றன'' என்கிறார் புகழேந்தி.

விலக்கு கேட்பது சரியான ஒன்றா?

``தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை நோய் தடுப்புச் சட்டம் 1939ன்படி தொற்று நோய்களைத் தடுப்பதற்கான முழு அதிகாரம் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதோ அல்லது தடுப்பூசியை கட்டாயமாக போடச் சொல்வதோ அதில் அடங்கும். இதுபோன்ற ஒரு சூழலில் பொது இடத்துக்கு வருகிறவர்கள், நோய் பாதிப்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். இதற்காக தடுப்பூசி போடாமல் விதிவிலக்குகளை கோரிக் கொண்டே இருந்தால் அதற்கு முடிவில்லாமல் போய்விடும்'' என்கிறார், தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி.

``உடல்ரீதியாக தங்களுக்கு பாதிப்பு உள்ளதால் விலக்கு கோரி யாரேனும் வந்தால் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி முடிவெடுக்கலாம்'' எனக் கூறும் குழந்தைசாமி, `` தடுப்பூசி விவகாரத்தில் தனிநபர் உரிமை என்பதே இல்லை. தொற்று நோயைப் பொறுத்தவரையில் விவாதிப்பதற்கும் இடம் இல்லை. அது யாரிடம் இருந்து வேண்டுமானாலும் பரவலாம். தடுப்பூசி போடாமல் இருந்தால் அது மற்றவர்களின் வாழ்க்கையும் சேர்ந்து பாதிக்கும். இதில் தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட பொது சுகாதாரத்துறை அதிகாரி முடிவெடுப்பார்'' என்கிறார்.

பொது சுகாதாரத்துறை சொல்வது என்ன?

தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

``உடல்ரீதியாக பாதிப்பு உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்க வழிவகை உள்ளதா?'' என தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை குறைபாடு இருந்தால் அவர்களுக்குத்தான் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தீவிர உடல்நலக் குறைவால் பாதிப்பில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதற்கு வழி உள்ளது.

ஆனால், அதைப் பற்றி நாம் பேசுவதைவிடவும் ஊசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை என்பது 1.5 கோடியாக உள்ளது. அதைத்தான் முதலில் பார்க்க வேண்டும். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறோம். ஒரு சில விதிவிலக்குகள் என்பது பெரிய விஷயம் அல்ல'' என்கிறார்.

மேலும், `` இந்த விவகாரத்தில் எந்த ஒன்றையும் எழுத்துப்பூர்வமாக நாங்கள் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. அவ்வாறு உடல்நலம் பாதிப்பில் உள்ளவர்கள் விலக்கு கேட்டு வந்தால் எங்களின் மருத்துவ அலுவலர், உரிய வழிகாட்டுதல்களை தெரிவிப்பார்'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :