ஹாத்ரஸ் பாலியல் வல்லுறவு, கொலையின் ஓராண்டு - 'வீட்டுச் சிறையில்' இறந்த பெண்ணின் குடும்பம்

- எழுதியவர், தில் நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி இந்தி, ஹாத்ரஸிலிருந்து
"காவல்துறையை இந்த சாதிக்காரர்களின் வீட்டு வாசலில் உட்கார வைத்தால், இந்த தாக்கூர் சாதி மக்கள் எண்ணிக்கையில் குறைந்துவிடுவார்கள் அல்லது அதே எண்ணிக்கையில்தான் இருப்பார்கள்."
ஒரு கிராமத்துப் பெண்ணின் இந்த வாக்கியத்தில், உயர் சாதி என்று அழைக்கப்படுபவர்களின் பெருமை, தலித்துகள் மீதான வெறுப்பு மற்றும் இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டம் மீதான அக்கறையின்மை ஆகியவை மிகவும் தெளிவாக இருந்தன.
சாதியைக் குறிக்கும் வார்த்தைகளை வெகு இயல்பாக இந்தப் பெண் பயன்படுத்துகிறார். அது சட்டப்படி குற்றம் என்பதையும் அவர் அறியவில்லை.
கிராமத்தில் உள்ள தலித்துகளுடன் உட்கார்ந்து சாப்பிடமுடியுமா? என்று கேட்டபோது, அவர் சிரித்துக்கொண்டே, "நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்பதைப் பார்த்தால் நீங்கள் ஒரு தலித் என்று தோன்றுகிறது," என்று பதில் கூறினார்.
கடந்த ஆண்டு ஒரு தலித் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலையுண்டதையடுத்து, உத்தர பிரதேசத்தில் உள்ள ஹாத்ரஸ் விவாதப் பொருளானது. கிராமத்தின் உயர் சாதியினர் என்று அழைக்கப்படும் நான்கு குற்றவாளிகள் இந்தக் குற்றத்திற்காக சிறையில் உள்ளனர்.
இந்தச் சம்பவத்தை உள் நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகங்களும் வெளியிட்டன. இந்தியாவில் தலித்துகளின் நிலை குறித்து தீவிர விவாதம் நடந்தது. ஆனால் ஓர் ஆண்டு கழிந்த பின்னரும், இந்தக் கிராமத்தில் சாதிய வேர்கள் முன்பை விட ஆழமாகியிருப்பதாகத்தான் தெரிகிறது.
ஒதுக்கப்படும் பாதிக்கப்பட்ட குடும்பம்
தாங்கள் இன்னமும் சாதிப் பாகுபாட்டை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இறந்த சிறுமியின் சகோதரர் பிபிசியிடம் கூறுகையில், கிராமத்தில் முன்பை விட அவர்களின் குடும்பத்தின் மீது வெறுப்பு அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்.
"கிராமத்தின் உயர் சாதி மக்கள் எங்களை இழிவாகப் பார்க்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு என் சகோதரரின் மகள் பால் வாங்கச் சென்றுபோது அங்கிருந்த ஒரு கட்டிலில் உட்கார்ந்தாள். அவளைத் திட்டி எழ வைத்தார்கள்." என்று கூறுகிறார் அவர்.
இறந்த பெண்ணின் அண்ணி, தன் இளவயது மகள் பற்றிக் கூறுகிறார். "என் மூத்த மகளுக்கு ஐந்து வயது, இப்போது அவள் புத்திசாலியாக இருக்கிறாள், அவளுக்கு நல்லது கெட்டது புரிகிறது. சில நாட்களுக்கு முன்பு அவள் ஒரு சி.ஆர்.பி.எஃப் காவலர் ஒருவருடன் பால் பண்ணைக்குப் பால் வாங்கச் சென்றாள். அவர், அங்கே அவளைக் கட்டிலில் உட்கார வைத்தார். ஆனால் உயர் சாதி மக்கள் அவளை கட்டிலில் இருந்து எழுப்பிவிட்டனர். இந்த விஷயம் அவள் இதயத்தில் பதிந்துவிட்டது. அவள் இப்போது பால் வாங்கப் போவதேயில்லை. "

"மனிதனின் சிந்தனை மாறும் வரை சாதி வெறி முடிவுக்கு வராது. பல நூற்றாண்டுகளாக இது இங்கே நடக்கிறது. முன்பு போலவேதான் சாதிவெறி இன்றும் தலைவிரித்தாடுகிறது," என்கிறார் இறந்த பெண்ணின் அண்ணி.
கிராமத்தில் நாங்கள் சந்தித்துப் பேசிய அனைத்து உயர் சாதி மக்களும் தலித்துகளைச் சமமாகக் கருதவில்லை என்று தயங்காமல் சொன்னார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இதில் அடக்கம்.
மத்திய ரிசர்வ் காவல் படையின் பாதுகாப்பில் இருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பம்
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பாதுகாப்புப் பணியில் 135 சி.ஆர்.பி.எஃப் வீரர்களைக் கொண்ட பிரிவு ஈடுபட்டுள்ளது. குடும்பத்தினரைச் சந்திக்க வருபவர்கள் அனைவரும், பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு மெட்டல் டிடெக்டர் சோதனைக்கும் உட்பட்டுத்தான் செல்ல வேண்டும்.
பாதுகாப்பு நெறிமுறை காரணமாக, எந்தக் குடும்ப உறுப்பினரும் பாதுகாப்பு இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சித்தப்பா வீட்டு முற்றத்தில்தான் சி.ஆர்.பி.எஃப் தனது கூடாரத்தை அமைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு இன்னும் அச்சுறுத்தல் உள்ளது என்றும் தங்களுக்குப் பாதுகாப்பு தேவை என்றும் கூறுகிறார்கள், ஆனால் பாதுகாப்பு நெறிமுறை காரணமாக, குடும்பம் தங்கள் சொந்த வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் உணர்கிறார்கள்.
2020 செப்டம்பர் 14 அன்று நடந்தது என்ன?
ஓர் இருபது வயதுப் பெண், புல் வெட்டுவதற்காகத் தன் வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சென்றுள்ளார். அங்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த நால்வர் அவரிடம் தகாத முறையில் நடந்து, அவளிடம் கூட்டாகப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. தாயார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது அந்தப் பெண் காயமடைந்திருந்ததாகவும் அவரது ஆடை கிழிந்திருந்ததாகவும் கூறப்பட்டது.
அவரது தாய் மற்றும் மூத்த சகோதரர் உடனடியாக அவளை மோட்டார் சைக்கிளில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்த்பா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அலிகர் மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்குச் செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டது .

சுயநினைவு பெற்ற பிறகு, அப்பெண் அலிகார் மருத்துவக் கல்லூரியில் ஒரு வாக்குமூலம் அளித்தார், அதன் அடிப்படையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அலிகரில் இருந்து, செப்டம்பர் 28 ஆம் தேதி டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு குடும்பத்தினருக்கு முகத்தைக்கூடக் காட்டாமல் அந்தப் பெண்ணின் சடலத்தை இருட்டில் காவல்துறையினர் தகனம் செய்தனர், இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முதலில் உ.பி காவல் துறையினரால் செய்யப்பட்டது, பின்னர் உ.பி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் பின்னர் சிபிஐ-யால் விசாரணை செய்யப்பட்டது.
வழக்கின் இன்றைய நிலை என்ன?
2020 அக்டோபர் 11 அன்று இந்த வழக்கில் சிபிஐ, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து டிசம்பர் 18, 2020 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சிபிஐ நான்கு குற்றவாளிகள் மீது கொலை மற்றும் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது. அந்தக் குற்றப் பத்திரிகையில், உத்தர பிரதேச காவல்துறை போதிய அளவுக்கு செயல்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கில் இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கூறுகிறார். இந்த வழக்கு ஹாத்ரஸ் தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கடைசி விசாரணை செப்டம்பர் 9 அன்று நடந்தது. அடுத்த விசாரணை செப்டம்பர் 23 அன்று நடக்கும்.
இறந்த பெண்ணின் மூத்த சகோதரர், தான் குறிப்பிட்ட நாட்களில் தவறாமல் செல்வதாகவும் தற்போது சாட்சிகளின் சாட்சியம் மற்றும் அவர்களிடம் கேள்விகளும் கேட்கப்படுவதாகக் கூறுகிறார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சில சமூகத்தினர், இது பாலியல் குற்ற வழக்கு அன்று என்றும் கௌரவக் கொலை வழக்கு என்றும் குற்றம் சாட்டினர். அவர்கள் இறந்த பெண்ணின் மூத்த சகோதரர் மீதே கொலைக் குற்றம் சாட்டினார்கள்.
இறந்த சிறுமியின் சகோதரர், "சிபிஐ என்னிடம் எல்லா வகையான கேள்விகளையும் கேட்டது, நான் அவர்களுக்கு பதிலளித்தேன். சிபிஐ ஆதாரங்களைச் சேகரித்து அதன் குற்றப்பத்திரிகையை அளித்தது. குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பயப்படவில்லை. நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது," என்று கூறுகிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் பல முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் அது நிராகரிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தற்போது சிறையில் உள்ளனர்.
'வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது'
இறந்த பெண்ணின் இளைய சகோதரர் முன்னர் காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார். தற்போது, அவர் வேலையை இழந்துவிட்டார். மூத்த சகோதரரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இச்சம்பவத்திற்குப் பிறகு, அவரும் வேலையிழந்து வீட்டில் இருக்கிறார்.
மூத்த சகோதரர் கூறுகிறார், "எங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. எங்கள் வேலை முடங்கிவிட்டது. நாங்கள் எங்கும் செல்வதில்லை. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன், அதுவும் போய்விட்டது. நாங்கள் வீட்டுக் காவலில் உள்ளோம். நாங்கள் வீட்டுச் சிறையில் இருக்கிறோம். ஆண்டு முழுவதும் துன்பத்தில் கழிந்தது. இந்தச் சம்பவத்தை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். எங்கள் எதிர்காலம் குறித்து நாங்கள் பயப்படுகிறோம், அடுத்து எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. "
அந்தப் பெண்ணின் இளைய சகோதரர், "இப்போது நாங்கள் துன்பத்தில் வாழ்கிறோம், நாள் முழுவதும் இப்படித் தான் வீட்டில் இருக்கிறோம். என்னால் நண்பர்களைக் கூடச் சந்திக்க முடியவில்லை. இந்தக் கிராமத்தில் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. இந்தக் கிராமத்திலேயே இருந்தால் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் ஒரு தொழிலைச் செய்ய வெளியே செல்ல வேண்டும். ஆனால் பாதுகாப்பு காரணமாக எங்களால் வெளியே வர முடியவில்லை," என்று வேதனை தெரிவிக்கிறார்.
இந்தச் சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு, இறந்த பெண்ணின் அண்ணி, தனது மூன்றாவது மகளைப் பெற்றெடுத்தார். அவளுக்கு இப்போது ஒரு வயது ஆகிறது, நடக்க ஆரம்பித்திருக்கிறாள். அந்தத் தாய், "இவள் பிறந்தபோது அவள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாள். இப்போது அவள் இருந்திருந்தால், மடியில் வைத்துக் கொஞ்சியிருப்பாள். தன் கையால் உணவு ஊட்டியிருப்பாள். எங்கள் மகள் ஒருத்தி போய்விட்டாள், இப்போது எங்கள் மற்ற மகள்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்," என்று வருந்துகிறார்.
"எங்கள் மகள் போய்விட்டாள். முகத்தை கூட பார்க்க முடியவில்லை. அந்த வேதனை இன்னும் எங்கள் மனதில் அப்படியே உள்ளது. அவளை நாங்கள் மறக்கவில்லை. மறக்கவும் முடியாது" என்று அத்தாய் வேதனையுடன் கூறுகிறார்.
அரசிடம் கோபம், நீதித் துறையில் நம்பிக்கை
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசின் மீதும் கோபம் உள்ளது. சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கியதைத் தவிர, சகோதரருக்கு வேலை மற்றும் அரசு வீடு என்று அரசாங்கம் உறுதியளித்தது, ஆனால் இந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இறந்த சிறுமியின் சகோதரர், "அந்த நேரத்தில் அரசாங்கம் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தது, எங்கள் செலவுகள் அதிலிருந்து தான் நடக்கிறது. ஆனால் வேலை மற்றும் வீடு வழங்கும் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அந்தத் திசையில் எந்த முன்னேற்றமும் இல்லை" என்று கூறுகிறார்.
அவரது மனைவி, "இந்த விஷயத்தை மூடி மறைக்க, அரசாங்கம் முடிந்தவரை முயற்சித்திருக்கலாம் ஆனால் எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது, எங்கள் மகளுக்கு நீதி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று கூறுகிறார்.

அவர், "எங்களை மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக நினைத்துத்தான் இந்த அரசாங்கம் எங்கள் பெண்ணின் முகத்தைக் கூட எங்களுக்குக் காட்டாமல் இறுதிச் சடங்கு செய்தது. அதுதான் எங்களுக்கு மிகவும் வேதனையளிக்கும் விஷயம். இப்போது இது எங்கள் பெண்ணுக்கு மட்டுமான நீதிப் போராட்டம் இல்லை. இந்த நாட்டின் பெண்களுக்கான நீதி மற்றும் பாதுகாப்புக்கான போராட்டம். எங்களை ஒடுக்க முடியாது என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்," என்று உறுதியாகக் கூறுகிறார்.
அரசாங்கத்தின் செயல்பாடு குறித்துக் கூறும் அவர், "இப்போது தேர்தல் வரப்போகிறது, பெண்களின் பாதுகாப்பு குறித்து கோஷங்கள் எழுப்பப்படும் ஆனால் எதுவும் மாறப்போவதில்லை. எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர். பெண்கள் மரியாதையுடன் வாழ அரசாங்கம் எதையும் செய்யவில்லை. மாறாக, உயிர் போன பிறகும் மரியாதை இல்லாத நிலை தான் உருவாகி வருகிறது," என்று கொதித்தெழுகிறார்.
கிராமத்தை விட்டு வெளியேற விரும்பும் குடும்பம்
இந்த ஹாத்ரஸ் கிராமத்தில், தலித் சமூகமான வால்மிகி சமூகத்தினரின் நான்கு வீடுகள் உள்ளன. மீதமுள்ள மக்கள் உயர் சாதியினர் என்று அழைக்கப்படுபவர்கள், பெரும்பாலும் தாக்கூர் மற்றும் சில பிராமணக் குடும்பங்கள்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தங்களால் இந்தக் கிராமத்தில் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும் தங்களுக்கு இங்கு சிறப்பான எதிர்காலம் இல்லை என்றும் கூறுகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியே எங்காவது குடியேற விரும்புகிறார்கள்.
இறந்த சிறுமியின் மூத்த சகோதரர், "எங்களுடைய வாழ்க்கையை இங்கே திரும்பப் பெற முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் இந்த கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும், ஆனால் நாங்கள் எங்கு செல்வோம் என்றும் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் மறைந்து வாழ எங்கே போவோம்? இப்போது இந்த கிராமத்தில் எங்களுக்கு வேலை இல்லை, எதுவும் இல்லை. ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்தக் கிராமத்தை விட்டு வெளியேறத் தான் வேண்டும்," என்று கூறுகிறார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தின் நிலை
இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பங்கள் சம்பவத்திற்குப் பிறகிலிருந்தே தங்களுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றே கூறி வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவருக்குத் திருமணமாகிக் குழந்தைகள் உள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்பங்கள் ஊடகங்கள், நிர்வாகம் மற்றும் சமுதாயத்தின் மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றன, 'தங்கள் மகன்கள் சிக்கவைக்கப்பட்டுள்ளனர் என்று கூறிவருகின்றன.

இந்தக் குடும்பங்களின் நிதி நிலையும் மிகவும் சிறப்பாக இல்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களை இன்னும் உறவினர்களால் சிறைச்சாலையில் சந்திக்க முடியவில்லை. வழக்குத் தேதியில் அவர்களைப் பார்க்க நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் ஊடகங்கள் முன்னிலையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும் ஒரு நாள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவோம் என்று நம்புகிறோம் என்றும் கூறுகிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் மனைவி, "நான் கணவன் இல்லாமல் குழந்தைகளை வளர்க்கிறேன். என்னிடம் எதுவும் இல்லை, இரண்டு எருமைகள் இருந்தன, அவை விற்கப்பட்டன. கணவர் தொலைபேசியில் பேசும்போது, தான் குற்றமற்றவர் என்றும் ஒரு நாள் நீதிமன்றத்தால் விடுதலை பெறுவார் என்றும் தான் கூறுகிறார்," என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் தாயார், "எங்கள் குழந்தைகள் பொய் வழக்கில் சிக்கியுள்ளனர். ஆனால் எங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. எல்லாரும் அவர்கள் வீட்டுக்குத் தான் செல்கிறார்கள். அவர்களுக்கு நிறைய பணமும் கிடைத்தது. அதனால் அவர்கள் தங்கள் முழு பலத்தோடு வழக்கை எதிர்த்துப் போராடுவார்கள். எங்களுக்கு ஒன்றுமில்லை."
கிராமத்தில் நிலவும் அமைதி
இந்த ஹாத்ரஸ் கிராமத்தில் அமைதி நிலவுகிறது. சிலர் வயல்களில் வேலை பார்க்கிறார்கள். பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு அருகில் செல்லும் போது மக்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களின் வேகத்தை அதிகரிக்கின்றனர். இங்கே மக்கள் இன்னும் வெளிப்படையாகப் பேசவில்லை, ஊடகங்களைப் பார்த்தால் அவர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.
தலித் குடும்பத்தைத் தவிர மற்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என்று கருதுகின்றனர். நான்கு அப்பாவிச் சிறுவர்கள் பொய் வழக்கில் சிக்கியுள்ளனர்" என்று முணுமுணுக்கிறார்கள்.
சிறுமியின் இறுதிச் சடங்கு நடந்த இடம் கிராமத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ளது. இப்போது அங்கு புல் வளர்ந்துள்ளது. ஒருவரின் உடல் அங்கு எரிக்கப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை.
நாங்கள் அந்தப் பக்கம் நோக்கிச் சென்றபோது, கிராமவாசி ஒருவர், சற்று குரலை உயர்த்தி, "அங்கே என்ன பார்க்கப் போகிறீர்கள்? யார் வெளியில் இருந்து வந்தாலும் ஏன் அங்கே செல்கிறீர்கள்? இப்போது அங்கே எதுவும் இல்லை" என்றார்.
பிற செய்திகள்:
- டைனோசர்களை அழித்த விண்கல் தாக்குதலில் பாம்புகள் பிழைத்தது எப்படி?
- சீனாவை சீண்டும் 'ஆக்கஸ்' திட்டம்: அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஒன்று கூடுவது ஏன்?
- ஆரிய இனத்தைத் தேடி சென்னைக்கு வந்த ஹிட்லரின் விஞ்ஞானிகள்
- சீக்கியர்களுக்கு பிரிட்டிஷார் தலை வணங்குவது ஏன்?
- சூரியன் நிரந்தரமாக 'மறையும்': மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள்
- 'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












