உத்தரப்பிரதேசத்தில் குழந்தைகளை தாக்கும் `மர்மக் காய்ச்சல்` - ஏராளமான உயிரிழப்பு

- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியாவை உலுக்கிய கொரோனா வைரசின் இரண்டாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதா, மூன்றாவது அலை தொடங்கிவிட்டதா என்றே புரிந்துகொள்ளவிடாமல் தினசரி தொற்று எண்ணிக்கை கண்ணாமூச்சி காட்டிவருகிறது.
இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் குழந்தைகளிடையே தோன்றும் ஒரு வகை மர்மக் காய்ச்சலுக்கு பல குழந்தைகள் பலியாகி வருகின்றனர்.
பல குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சலும், அதில் சிலருக்கு மூட்டு வலி, தலைவலி, குமட்டல் ஆகியவையும் ஏற்பட்டன. சிலருக்கு கை, கால்களில் தடிப்புகள் ஏற்பட்டன.
உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் குறைந்தது 50 பேர் குறிப்பாக குழந்தைகள், இந்த காய்ச்சலால் உயிரிழந்தனர். பல நூறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் உயிரிழந்த யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை.
அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்தில் பரவி வரும் இந்த "மர்ம காய்ச்சல்" குறித்த செய்திகள் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா, மதுரா, மயின்பூரி, எட்டா, காஸ்கன்ச் மற்றும் ஃபிரோசாபாத் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சில மாவட்டங்களில் உள்ள மருத்துவர்கள் இந்த உயிரிழப்புக்கு காரணம் கொசுவால் ஏற்படும் டெங்குவாக இருக்கலாம் என நினைக்கின்றனர்.
டெங்கு அறிகுறி
பல நோயாளிகள் 'ப்ளேட்லட்' எனப்படும் தட்டணுக்கள் குறைந்து மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்பட்டனர். ரத்தத்தில் இருக்கும் இந்த ப்ளேட்லட்கள்தான் ரத்தம் உறைய உதவி செய்யும். இந்த ப்ளேட்லட் எண்ணிக்கை குறைவு என்பது தீவிர டெங்குவின் அறிகுறி.
"மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் குறிப்பாக சிறுவர்கள் மருத்துவமனையில் வெகு வேகமாக உயிரிழக்கின்றனர்" என ஃபிரோசாபாத் மாவட்டத்தின் மூத்த சுகாதார அதிகாரியான மருத்துவர் நீத்தா குல்ஷ்ரேஸ்தா தெரிவிக்கிறார்.
இந்த மாவட்டத்தில் கடந்த வாரம் 32 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர்.
பெண் கொசுக்களால் இந்த டெங்கு நோய் பரவுகிறது. இந்தியாவில் பலநூறு ஆண்டுகளாக இந்த நோய் பாதிப்பு உள்ளது. 100 நாடுகளுக்கும் மேல் இந்த நோய் பரவியுள்ளது. ஆனால் அதில் 70 சதவீதம் ஆசிய நாடுகள். நான்கு டெங்கு வைரஸ்கள் உள்ளன. பெரியவர்களை காட்டிலும் குழந்தைகள் இரண்டாவது முறையாக டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டால் ஐந்து மடங்கு விரைவில் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது.
`ஏடிஸ் ஈஜிப்டி` என்று அழைக்கப்ப்டும் இந்த வகை கொசுக்கள், நன்னீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் உற்பத்தியாகும். "இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கான இடத்தை மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள் எனவே அவர்கள்தான் அதை கட்டுப்படுத்த வேண்டும்" என கொசுக்களால் பரவும் வைரஸ்கள் தொடர்பான உலகின் முக்கிய நிபுணர்களில் ஒருவர் ஸ்காட் ஹால்ஸ்டீ தெரிவிக்கிறார்.
தீவிர ரத்தப் போக்கு, உறுப்புகள் செயலிழப்பு என தீவிரமான டெங்கு நோய்க்கு கிட்டதட்ட சுமார் 10 கோடி பேர் உலகம் முழுக்க ஆண்டு தோறும் பாதிக்கப்படுகின்றனர். "கொரோனா மற்றும் டெங்கு இரண்டும் இணைந்து ஏற்படுத்தக்கூடிய ஆபத்து மிக மோசமானதாக இருக்கும்" என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு டெங்குதான் காரணமா என்று தெரியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
20 கோடி பேர் உள்ள ஒரு மாநிலம் உத்தரப் பிரதேசம். அங்கு ஏற்கனவே மோசமான கழிவுநீர் வசதிகள், குழந்தைகள் மத்தியில் அதிகப்படியான ஊட்டச்சத்து குறைபாடு, மோசமான சுகாதார கட்டமைப்பு ஆகிய காரணங்களால் மழைக்காலங்களில் "மர்மக் காய்ச்சல்" குறித்த செய்திகள் வருடந்தோறும் வந்து கொண்டுதான் இருக்கும்.
`ஜப்பானிஸ் என்செஃபாலிடிஸ்` என்று சொல்லப்படும் கொசுக்களால் பரவும் மூளை காய்ச்சல் உத்தர பிரதேசத்தில் முதன்முதலாக 1978ஆம் ஆண்டு தோன்றியதிலிருந்து இதுவரை அங்கு 6,500 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நோய் கோரக்பூர் மற்றும் நேபாள எல்லைப்புற மாவட்டங்களில் பரவியது. இந்த மாவட்டங்கள் இமாலய அடிவாரத்தில் உள்ளதால் அடிக்கடி வெள்ளம் ஏற்படக்கூடிய ஆபத்தும் உள்ளது. எனவே இங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து வைரஸ் பரவ செய்கின்றன.
2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தடுப்பு மருந்து இயக்கத்தால் இந்த நோயின் தாக்கம் குறைந்தாலும் குழந்தைகள் தொடர்ந்து உயிரிழந்து கொண்டுதான் இருக்கின்றனர். கோரக்பூரில் இந்த வருடம் இதுவரை 17 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். மேலும் 428 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
என்செஃபாலிடிஸ் மற்றும் மைகோகார்டிடிஸ் (இதய தசைகளில் வீக்கம்) தொடர்பாக 2014ஆம் ஆண்டு கோரக்பூரில் 250 குழந்தைகளை சோதித்துப் பார்த்தனர். அதில் 160 பேருக்கு `ஸ்கரப் டைபஸ்` என்னும் நோயை உருவாக்கக்கூடிய பாக்டீரியாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் (எதிர்ப்பான்கள்) இருப்பது தெரியவந்தது.
ஸ்க்ரப் டைபஸ் என்பது ஒருவகை பூச்சிகளால் வரக்கூடிய பாக்டீரியா தொற்று
இந்த பூச்சிகள் மழைக்காலங்களில் தாவரங்களில் காணப்படும். அதேபோன்று வீடுகளில் சேமித்து வைக்கப்படும் விறகு கட்டைகளிலும் இந்த பூச்சிகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஸ்க்ரப் டைஃபஸால் இந்த விறகு கட்டைகளை கையாளும் குழந்தைகளும் வெளியில் மலம் கழிக்கும் சிறுவர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
2015, 2019 காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஆறு மாவட்டங்களில் மழைக்கு பிறகு பிறகு தோன்றிய காய்ச்சலுக்கு ஸ்க்ரப் டைபஸ் மற்றும் டெங்கு இரண்டுமே காரணம் என வேறு ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மற்றொரு ஆபத்தான பாக்டீரியா தொற்றான லெப்டோஸ்பைரோசிஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவு கிறது. அதே போன்று கொசுக்களால் ஏற்படும் சிக்கன் குன்யா போன்றவையும் காய்ச்சலுக்கான காரணமாக இருந்தன.
"மழைக்காலம் முடிந்த பிறகு அந்த பகுதியில் பல காய்ச்சல்கள் ஏற்படும். இந்த நோய்களை கண்காணித்து சிகிச்சை அளிக்க முறையான கண்காணிப்பு தேவை" என்கிறார் தேசிய மனநல, நரம்பியல் அறிவியல் கழகத்தின் (NIMHANS) வைரலாஜி பேராசிரியர் வி.ரவி.
முன்னதாக 2006ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் உள்ள குழந்தைகளிடம் "மர்மக் காய்ச்சல்" ஒன்று தென்பட்டு குழந்தைகள் உயிரிழந்தனர். மாநிலத்தின் மேற்கு பகுதியில் அபரிமிதமாக விளையும் காசியா கொட்டைகளை குழந்தைகள் உண்டதே இதற்கு காரணம் என கண்டறிந்தனர்.
வறுமை, வறுமையால் ஏற்பட்ட பசி, போதிய விழிப்புணர்வு இல்லாமை, குழந்தைகளுக்கு விளையாட சரியான பொம்மைகள் கிடைக்காதது மற்றும் அந்த செடிகள் கிடைத்தது ஆகியவையே இதற்குக் காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அதேபோன்று மேலும் ஒரே ஒரு ஆய்வு மற்றும் மரபணு சோதனை சமீபத்திய மர்ம காய்ச்சல் டெங்குவால் மட்டும் ஏற்பட்டதா அல்லது பிற நோய்களின் கலவையா என்பதை தெரியப்படுத்திவிடும். இதற்கு உள்ளூர் கிளினிக்குகள் நோய்வாய்ப்பட்டவர்களின் மாதிரியை சேகரித்து சோதனைக்காக அனுப்ப வேண்டும்.
அதேபோன்று இந்த காய்ச்சல் எப்படி தொடங்கியது மற்றும் எப்படி பரவுகிறது என தெளிவாகத் தெரியவில்லை.
அதேபோன்று அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் நீண்ட மோசமான பயணம் இந்த நோய் மேலும் தீவிரமாவதற்கு காரணமாக அமைந்துள்ளதா அல்லது பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு காசநோய் போன்று வேறு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என தெரியவில்லை.
இந்த மர்மக் காய்ச்சல் வெறும் டெங்குவால் மட்டுமே ஏற்பட்டது என்றால் அரசாங்கத்தின் மோசமான கொசு ஒழிப்பு திட்டங்கள் குறித்து கேள்வி எழும். இந்த தொற்றின் தீவிரம் சீரோ சர்வே என்று அழைக்கப்படும் எதிர்ப்பான் சோதனையால் மட்டுமே கண்டறியப்படும் என்று தெரிவிக்கிறார் மருத்துவர் ஹல்ஸ்டீட்
அதேபோன்று இதை உடனடியாக ஆராய்ந்து தடுக்கவில்லை என்றால் இந்த மர்மம் தொடர்ந்து நீடிக்கும் என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத வைரலாஜிஸ்ட் ஒருவர்.
பிற செய்திகள்:
- இந்தியாவில் இஸ்லாமியராக இருப்பது ஒரு குற்றமா? தொடர்ந்து தாக்கும் இந்து கும்பல்கள்
- ஆப்கானிஸ்தானில் தாலிபன் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றிவிட்டதா? கள நிலவரம் என்ன?
- Money Heist சீசன் 5 (முதல் பாகம்) விமர்சனம்
- கூலித் தொழில் செய்துகொண்டே மது ஒழிப்பு பிரசாரம் செய்யும் 75 வயது காந்தியவாதி
- விர்ஜின் கேலக்டிக் விண்வெளிப் பயணங்களுக்கு தடை: பயணத் தடத்திலிருந்து விலகியதாக புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












